“ஒத்தக்காளை” …. பாகம்  – 6 :  குறு நாவல்!

-ராஜேந்திரன்

பத்து நிமிட வாசிப்பு….

வள்ளியின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. அவளால், படுக்கையில் இருந்து எழக்கூட முடியவில்லை. படுத்த படுக்கையாகி  விட்டாள்.

வேலாயுதத்தால் கம்பு இல்லாமல் நடக்க முடியவில்லை. எப்படியோ, தாங்கித் தாங்கி நடந்து கொண்டே, அவளுக்கு பணிவிடை செய்துகொண்டு இருந்தார்.

அந்த நிலையில்தான்.. ஒருநாள் இரவு, அவள் மூச்சுக்கூட விட முடியாமல் துடித்தாள். எங்கே இவளையும் இழந்து விடுவோமோ என்று அவர் “ஒ” வென்று சத்தம் போட்டு அழுது விட்டார்.

அவரது அழுகை சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம், ஓடி வந்து, வண்டி கட்டி, பக்கத்தில் இருக்கும் டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ரொம்ப நேரம் சோதித்து பார்த்த டாக்டர், ஏதோ ஒரு ஊசியை போட்டார்… லேசாக கண் திறந்து பார்த்தாள் வள்ளி. அப்போதுதான்  லேசாக நிம்மதி ஏற்பட்டது அவருக்கு. ஆனால், அந்த நிம்மதியும் நீடிக்க வில்லை.

அவங்க இருதயம் ரொம்ப பலவீனமா இருக்கு. அதுல ஏதோ அடைப்பு இருக்குற மாதிரி தெரியுது. அதனால, தாமதிக்காம, பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிடுங்கன்னு சொல்லி விட்டார் டாக்டர்.

அப்போது, அவருக்கு ஏற்பட்ட தவிப்பை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால், அதே வண்டியில் வள்ளியை போட்டுக்கொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு சென்றது வண்டி.

வள்ளியின் கண்கள் விழித்திருக்கின்றன. ஆனாலும், கணவர் படும் வேதனையை நினைத்து, அதில் இருந்து தொடர்ந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. அவளால் எதுவும் பேசுவதற்கு கூட தெம்பு இல்லை.

*************

டவுன் பெரிய ஆஸ்பத்திரி. ஆடு மாடுகளை அடைத்து வைக்கும் பட்டியை போல, அங்கே ஏழைகள் கட்டிலில் அருகருகே படுத்து இருக்க, வெறும் ஆள் துணை என்ற பேரில், அந்த கட்டிலுக்கும் கீழே அவர்களின் உறவினர்களும் படுத்து இருந்தனர்.

குடிசை வீட்டில் கூட கயித்துக் கட்டிலில் படுத்து இருந்தவள் வள்ளி. ஓட்டு வீடு கட்டிய பிறகு, தனி அறையில், இலவம் பஞ்சு மெத்தையில், அமைதியாக உறங்கியவள். குளிக்கிறதுக்கு கூட, கீத்து தட்டியால் அவளுக்கு தனி அறை அமைத்து கொடுத்து இருந்தார் வேலாயுதம். இன்று, நூத்துல ஒருத்தவளா, கண் விழித்து பார்க்க கூட தெம்பு இல்லாமல் அமைதியாக உறங்கி கொண்டிருந்தாள்.

எவ்வளவு வறுமையிலும், வள்ளிய ஒரு மகா ராணி மாதிரி வச்சிருந்த நாம, இன்னைக்கி இப்படி ஒரு நெலைமையில விட்டுட்டோமேன்னு நெனைக்கும்போது.. அவரால அழுறத தவிர வேற எதுவுமே முடியல.

வள்ளி எப்போது கண் திறந்து பார்ப்பாள்?, எப்போது கண் மூடி உறங்குவாள்? என்பது கூட யாருக்கும் தெரியாது. மருந்து, மாத்திரைகள குடுக்குற நர்சுங்களுக்கும், டாக்டருக்கு மட்டும்தான் அது தெரியும்.

எப்போதாவது, அவளே கண் விழித்து, அருகில் இருக்கும் கணவனை பார்த்தால்… அழ ஆரம்பித்து விடுவாள். அந்த அழுகை அவள் நெஞ்சு சளியை இன்னும் அதிகமாக்கியது.

அதனால், அவளை எழுப்பாமலே… அருகில் இருந்து அவ்வப்போது.. மூக்கில் மூச்சு வருகிறதா? என்று மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பார் வேலாயுதம்.

அவள் இருதயத்தில் அடைப்பு இருக்கிறது. அதை ஆபரேஷன் செய்தால்தான் சரியாகும். ஆனால், இப்போது அவள் உடல் இருக்கும் நிலையில், ஆபரேஷனை தாங்குவாளா? என்று தெரியவில்லை என்றார் அவளை பரிசோதித்த டாக்டர்.

அவளுக்கு உடம்புல தெம்பு தெம்பு எதுவும் இல்ல. அதனால, மொதல்ல அவளோட ஒடம்ப, ஆப்பரேஷனுக்கு தயார் படுத்தனும். அதுக்கு பிறகுதான் ஆப்பரேஷன பத்தி யோசிக்கணும் என்று டாக்டர் சொன்னதை கேட்டு, அறுந்து விழுந்த பல்லியின் வாலைப் போல துடித்தது வேலாயுதம் மனசு.

ராத்திரி முழுக்க, வள்ளி படுத்து இருந்த கட்டிலுக்கு பக்கத்துலேயே, துண்ட விரிச்சி தூங்கும் வேலாயுதம், காலையில் எழுந்து வீட்டுக்கு போய், சமச்சி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார்.

இப்படியே நாலஞ்சி மாசம் ஓடியதே தவிர, அவள் உடம்பு இன்னும் ஆப்பரேஷனுக்குஏத்த அளவுக்கு தயார் ஆகவில்லை. இருந்தாலும், முன்னைய விட கொஞ்சம் முன்னேறி இருக்கிறதா, டாக்டர் நம்பிக்கையாக சொன்னார்.

வருமானம் எதுவுமே இல்லாத வேலாயுதம், குத்தகைக்கு விட்டிருந்த நிலத்து மேல கொஞ்சம், கொஞ்சமா வாங்கி, வாங்கி செலவு செஞ்சிக்கிட்டே வந்ததுல, இப்போ அந்த நிலத்தையே பணம் குடுத்தவனுக்கு மாத்தி குடுக்க வேண்டிய நிலைமை வந்திடுச்சி. பார்த்து, பார்த்து கட்டுன ஒட்டு வீடு மேல வாங்குன கடனும், வீட்ட எழுதிக் குடுக்குற அளவுக்கு வந்திடுச்சி.

நல்ல வேல, யாரு செஞ்ச புண்ணியமோ, நீங்க உயிரோட இருக்குற வரைக்கும், அந்த வீட்டுலேயே இருங்க. அதுக்கு பின்னால, நான் அந்த வீட்ட அனுபவிச்சிக்கிறேன்னு சொன்னான் வீட்ட வாங்குனவன்.

இப்போ, எப்படியாவது வள்ளிக்கு ஆப்பரேஷன் பண்ணி, அவள வீட்டுக்கு கொண்டு வந்துடனும். அவளுக்காக கட்டுன இந்த வீட்டுலதான், அவளோட உசுரு போகணும்னு நெனச்சி, எப்படி எல்லாம் பணம் திரட்டி செலவு செய்ய முடியுமோ, அப்படி எல்லாம் கெஞ்சி கூத்தாடி முடிஞ்சா வரைக்கும் பணத்த திரட்டி, அவளுக்கு செலவு செஞ்சிக்கிட்டு இருந்தாரு வேலாயுதம்.

அவரால, இனிமேல் யாருகிட்டேயும் பணம் வாங்க முடியாத நிலை. வாங்கிய கடனையும் திருப்பி குடுக்க முடியாத நிலை வந்திடுச்சி. அடுத்து என்ன செய்வது? என்று யோசிக்க கூட முடியாத நிலையில் மனம் கிடந்து அல்லாடியது.

**********

அன்றும் எப்படியோ, சாப்பாடு, பழங்கள் எல்லாம் ஏற்பாடு செய்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனார் வேலாயுதம். சாயங்கால நேரம். கண் விழிக்காமலே படுத்திருந்த வள்ளி, லேசாக கண் விழித்து வேலாயுதத்தை பார்த்து சிரித்தாள். ஆனாலும் மீண்டும் அழுதாள்.

இவரும் அழுதுகொண்டே… அழாதே சளி பிடிக்கும் என்று எச்சரித்தார். ஒரு வழியாக தமது அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள் வள்ளி.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

அப்போது அங்கு வந்து நர்ஸ், டாக்டர் உங்களை கூப்பிட்டு வர சொன்னார் என்று சொன்னாள்.

டாக்டர் என்ன சொல்லப் போகிறாரோ? என்ற அச்சத்துடன் தான், அவரது அறைக்கு சென்றார் வேலாயுதம்.  ஒரு வித படபடப்பு அவரை தொற்றிக்கொண்டு இருந்தது.

வாங்க வேலாயுதம்.. உங்கள பாக்கும்போது, செத்துப்போன எங்க அப்பாவ பாக்குற மாதிரியே இருக்குது என்று ஆரம்பித்தார்.

லேசான புன்னகையுடன், கூனிக் குறுகியபடி சொல்லுங்க ஐயா.. என்றார்.

உங்க சம்சாரம் உடம்பு இப்போ ஓரளவு ஆப்பரேஷன் செய்யுற அளவுக்கு தேறி வந்திடுச்சி. நீங்கள் அவங்கள நல்லா கவனிச்சிக்கிட்டீங்க. கவலைப்படாதீங்க. இன்னும் ரெண்டு நாளுல, அவங்களுக்கு ஆப்பரேஷன் பண்ணிடலாம். ஆனா, அவங்களுக்கு தேவையான சில மருந்து மாத்திரைங்க இப்போ இல்ல. எப்போ வரும்னு தெரியாது. அதனால, மருந்து மாத்திர வாங்குறதுக்கு மட்டும் ஒரு ஐநூறு ரூவா தயார் பண்ணிக்கோங்க.. மத்தத நான் பார்த்துகிறேன் என்று நம்பிக்கையாக சொன்னார்.

அவர் கையை தொட்டு கும்பிட்ட வேலாயுதம்.. நான் எப்பாடு பட்டாவது, பணத்த தயார் பண்ணிடுறேன் ஐயா.. என்னோட வள்ளிய எப்படியாவது காப்பாத்த்திடுங்க ஐயா’ன்னு சொல்லிக்கொண்டே அழுதார்.

ஐயா.. அழாதீங்க.. அவங்கள என்னோட அம்மா மாதிரியே.. நான் பாத்துக்கிறேன் என்றார் டாக்டர்.

அதற்கு பிறகு, பேச்சு எதுவுமே வரவில்லை. அப்படியே டாக்டருக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு அங்கிருந்து வெளியே வந்தார் வேலாயுதம்.

பொண்டாட்டி வள்ளிய டாக்டர் எப்படியாவது காப்பத்திடுவார்’ன்னு நம்பிக்கை வந்திடுச்சி அவருக்கு. இருந்தாலும், மருந்து மாத்திரை வாங்குறதுக்கு ஐநூறு ரூவா எப்படி தயார் பன்றது?ங்குற கவலை, அவரை புதிதாக வாட்ட தொடங்கியது.

ராத்திரி எல்லாம், வள்ளி படுத்திருந்த கட்டிலுக்கு கீழே தூக்கம் வராமல் எதை, எதையோ யோசித்துக் கொண்டிருந்தார் அவர்.

பொழுது விடிந்ததும் முதல் வேலையாக, பக்கத்தில் படுத்து இருந்த, நோயாளி ஒருவரின் உறவினரிடம் விஷயத்தை சொல்லி விட்டு, நான் பணம் தயார் பண்ணிக்கிட்டுதான் இங்கே வருவேன். அதனால, இன்னைக்கி ராத்திரி வரைக்கும் என்னோட சம்சாரத்த பாத்துக்கோங்க என்று வேண்டினார்.

நான், என்னோட அக்கா தங்கச்சி மாதிரி பாத்துக்கிறேன் ஐயா. என்னோட சம்சாரமும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவா.. அவளும், நானும் சேர்ந்து பாத்துக்கிறோம் ஐயா. நீங்க கவலைப்படாம போயி, செய்ய வேண்டியதுக்கு ஏற்பாடு செய்யுங்க ஐயா என்று நம்பிக்கையுடன் சொன்னார் அவர்.

அவருக்கும், ஒரு கும்பிடு போட்டு நன்றி சொல்லிவிட்டு நேராக வீட்டுக்கு புறப்பட்டார் வேலாயுதம்.

அந்த ஐநூறு ரூபாய்க்கு என்ன செய்யிறது?. வாங்க கூடாதவங்க கிட்ட எல்லாம் வாங்கியாச்சு. கேட்க கூடாதவங்க எல்லார் கிட்டேயும் கேட்டாச்சு. இனி யார்கிட்ட போயி பணம் கேக்குறது?. விக்கிறதுக்கோ, அடகு வைக்கிறதுக்கோ வீட்டுல எதுவுமே இல்ல. ஆனாலும் வள்ளிய எப்படியாவது காப்பாத்தியே ஆகணும். சுழலில் சிக்கிய மரக்கட்டை போல, சுற்றி சுற்றி அடித்தது நெருக்கடி.

வெட்கம், சுய மரியாதை எல்லாத்தையும் விட்டு, ஒரு பிச்சைக்காரன் போல, கண்ணில் தென்படுகிறவர்கள் எல்லாரிடமும் கையேந்தினார். தங்களால் முடிந்த வரை அவரவரும் உதவி செய்தனர். ஆனாலும், முன்னூறு ரூபாய்க்கு மேல் அவரால் ஒரு சல்லிக்காசு கூட புரட்ட முடியவில்லை.

கடைசியாக ஒரே ஒரு ஆளை மட்டும் பார்க்க வேண்டும். அவர்தான் மாட்டு தரகர் ரங்கசாமி. அவர் ஆரம்ப காலத்தில் கஷ்டப்படும்போது, மாடு வாங்கி விற்க பண உதவி செய்தவர் வேலாயுதம். அதை மனசுல வச்சி, ரங்கசாமியும் எவ்வளவோ உதவிகள் திருப்பி செஞ்சிருக்காரு. இருந்தாலும், வேறு வழி இல்ல. அவரையும் ஒரு வார்த்தை கேட்டு பாத்துடலாம் என்று நினைத்து, அவர் வீட்டுக்கு கம்பு ஊன்றிக்கொண்டே சென்றார் வேலாயுதம்.

வேலாயுதத்தை பார்த்த ரங்கசாமிக்கு, மனசெல்லாம் திக்.. திக் என்று அடித்தது. இருந்தாலும், வாங்க மாமா.. அக்கா எப்படி இருக்காங்க.. என்று பரிவுடன் கேட்டார்.

துக்கம் தொண்டையை அடைக்க எல்லா விஷயத்தையும் சொன்ன வேலாயுதம்.. கடைசியாக இருநூறு ரூவா பணத்துக்காக, அவர் தவிப்பதை சொன்னார்.

ஐயோ.. என்ன மன்னிச்சிடுங்க மாமா.. இப்போ ஒங்களுக்கு உதவி செய்ய, விக்கிறதுக்கு ஒரு ஆட்டுக்குட்டி கூட எங்கிட்ட இல்லையே… என்று எதுவும் செய்ய இயலாத நிலையை எண்ணி வருந்தினார் ரங்கசாமி.

ஆனாலும், ஏதாவது எப்படியாவது செய்துவிட வேண்டும் என்று அவர் துடியாய் துடித்தார். எதுவும் இல்லாதவர் துடித்து என்ன ஆகப்போகிறது?.

அதைக்கேட்டு வேலாயுதம் அழ.. ரங்கசாமியும் அழ ஆரம்பித்து விட்டார்.

கொஞ்ச நேரம் கழித்து… ரங்கசாமிக்கு ஒரு யோசனை உதித்தது. மாமா, இருநூறு ரூவா புரட்டுறதுக்கு ஒரு வழி இருக்கு. நீங்க கோபப்படலேன்ன நான் சொல்றேன். இத நீங்க நிச்சயமா ஏத்துக்க மாட்டீங்க. இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல என்றார்.

ஏதோ வழி காட்டுறது மாதிரியும் இருக்கு. ஆனாலும் பயமுறுத்துற மாதிரியும் இருக்கு என்று புரியாமல் விழித்தார் வேலாயுதம். (தொடரும்).