“ஒத்தக்காளை” …. பாகம்  – 5 :  குறு நாவல்!

-ராஜேந்திரன்

பத்து நிமிட வாசிப்பு….

தாயாக, தந்தையாக, குருவாக, கடவுளாக… யாதுமாக இருந்த ஐயாவின் இழப்பை, வேலாயுதத்தால் இன்னும் ஏற்க முடியவில்லை. இனி, என்ன செய்வது? ஏது செய்வது? என்றே அவனுக்கு புரியவில்லை.  இருப்பதா? இருப்பதா? என்ற கேள்வியே அவன் உள்ளத்தை குடைந்து கொண்டு இருந்தது.

ஐயாவின் காரியங்கள் முடியும் வரை.. அவரது பிள்ளைகள் பட்டணத்துக்கு போகவே இல்லை. ஊரிலேயே தங்கி, காரியத்தை எல்லாம் குறைவின்றி முடித்தனர்.

அடுத்த நாள், ஊரில் உள்ள ஐயாவின் சொந்தக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்களை வீட்டுக்கு அழைத்திருந்தனர், அவரது பிள்ளைகள். ஐயாவின் பிள்ளைகள், இனி ஊரில் இருக்கப் போவதில்லை. வேறு என்ன? சொத்துக்களை விற்பனை செய்வது பற்றி ஆலோசனை செய்வதற்காகத்தான் எல்லோரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் ஐயாவின் மூத்த மகன் பேசினார். எங்க அப்பா.. கடைசி வரைக்கும் ரொம்ப கவுரவமா வாழ்ந்தவரு. அதே போல, அவரு கொடுத்த வாக்க, எப்படியாவது காப்பாத்துறது அவரோட பிறவிக்குணம். அவரு சொன்ன சொல்ல மொதல்ல நாங்க காப்பாத்தி ஆகணும். அவரு உயிரோட இருக்குறப்பவே, தனக்கு பிறகு, இந்த சொத்துல இருந்து, ரெண்டு ஏக்கர் நெலத்த வேலாயுதம் பேருல எழுதி வைக்கணும்’னு, எங்ககிட்ட சொல்லி இருக்காரு. அதனால, மொதல்ல, இருக்குற நிலத்திலேயே நல்லா வெளையுற நிலத்துல ரெண்டு ஏக்கர, நாங்க வேலாயுதம் பேருல எழுதி கொடுக்கறோம். அதன் பிறகுதான், மற்றதெல்லாம் என்று சொன்னார்.

அது கேட்டு வேலாயுதம்… நெகிழ்ந்து போயிட்டான்…

செத்த பிறகும் ஐயா இப்படி வந்து கடவுளா காப்பாத்துறாரே’ன்னு, சந்தோஷமும், துக்கமும் மாறி மாறி அவனை எதுவும் பேச விடாமல் ஊமையாக்கி விட்டது. கடைசியா, புள்ளைங்களோட அவரு பேசிக்கிட்டு இருக்கும்போது, தன்னை ஏன் வெளியில போக சொன்னாரு? என்பதற்கான விடை இப்போது கிடைத்து விட்டது அவனுக்கு. அதை  நினைத்து, நினைத்து, அவன் உருகிக்கொண்டு இருந்தான்.

கூடி இருந்த ஊர் பெரியவர்கள் கூட, அந்த செய்தி கேட்டு, ஐயாவின் பெருந்தன்மையை நினைத்து ஒரு கணம் கலங்கித்தான் போனார்கள். ஐயாவுக்கு நிகர் ஐயாதான் என்று அவர்கள் நெக்குருகி போயினர்.

அந்த நல்ல வேலையை முதலில் செய்யுங்க தம்பி.. அப்போதான் ஐயாவோட ஆத்மா சாந்தி அடையும் என்று எல்லாருமே ஒரே குரலில் சொன்னார்கள்.

அடுத்து ஐயாவின் சின்ன மகன் பேச ஆரம்பித்தார். எங்க அப்பா, வேலாயுதத்த புள்ள மாதிரி வளர்த்ததால அவரு சொன்ன மாதிரியே ரெண்டு ஏக்கர் நிலத்தை அவன் பேருல எழுதி தந்துடுறோம். அதே சமயம், நாங்க அவன தம்பியா எத்துக்கிட்டதால, இன்னும் அவன் விருப்பட்டு எதையெல்லாம் கேக்குறானோ.. அதையும் குடுக்குறதுக்கு தயாரோ இருக்கோம் என்றார்.

பெருந்தன்மை என்பது.. பாரம்பரியம் இல்லையா? பாரு… ஐயாவோட புள்ளைங்களும்.. ஐயாவுக்கு சளைச்சவங்க இல்லன்னு எல்லாரும் பெருமையா பேச ஆரம்பிச்சாங்க.

அடுத்து, அங்கு வந்த பெரியவர் ஒருவர் பேசினார்… வேலாயுதம், ஐயாவோட புள்ளைங்க எல்லாம் பட்டணத்துல இருக்குற புள்ளைங்க. உனக்கு என்னென்ன தேவைன்னு அவங்களுக்கு தெரியாது.. அதனால, நீயே ஒனக்கு என்ன தேவை”ன்னு சொல்லு என்றார்.

ஆனால், வேலாயுதத்துக்கு பேச்சே வரவில்லை.. துக்கமும்.. ஆனந்த கண்ணீரும் சேர்ந்து, அவனுடைய தொண்டையை அடைத்தது. அப்படியே… சிலையாக நின்றான்.

கேளு வேலாயுதம்… என்று அனைவருமே அவனை வற்புறுத்த ஆரம்பித்தனர்.

பிறகுதான்.. லேசாக தயங்கி, தயங்கி பேச ஆரம்பித்தான். எனக்கு எதுவும் வேணாம் அண்ணா. ஐயாவுக்கும், எனக்கும் புடிச்ச அந்த காள மாடுங்கள மட்டும் கொடுங்க அண்ணா. அதுங்கள சாகுற வரைக்கும், யாருக்கு விக்காம என்னோடே வச்சிக்கிட்டாதான் ஐயாவோட ஆத்மா சாந்தி அடையும்’னு, எப்படியோ தயக்கத்த விட்டு, தட்டுத் தடுமாறி சொல்லி விட்டான்.

இதுக்கு போயி… ஏன் இந்த தயக்கம். வெறும் காள மாடுங்கள் வச்சி நீ  என்ன பண்ணுவ. அதுனால, அந்த பார வண்டியையும் சேர்த்து எடுத்துக்கோ என்றனர் ஐயாவின் பிள்ளைகள்.

அப்படியே… அங்கு வந்திருப்பவர்களுக்கும், ஐயாவின் பிள்ளைகளுக்கும் ஒரு கும்பிடு போட்டான். அவன் கண்கள் நீர் சொறிவதை இன்னும் நிறுத்தவே இல்லை.

ஐயாவோட புள்ளைங்க’ன்னு அவங்க காட்டிட்டாங்க. நானும் ஐயாவோட புள்ளை’ங்குறத நிரூபிக்கணும். அதுக்காக, ஐயா நேசிச்ச இந்த காள மாடுங்க ரெண்டையும், சாகுற வரைக்கும் விக்கக்கூடாது”ன்னு மறுபடியும் ஒரு சங்கல்பம் எடுத்துக் கொண்டான் வேலாயுதம்.

**********************

செத்த பிறகும் மத்தவங்க மனசுல வாழுறவங்க கடவுள் இல்லையா? வேலாயுதத்தை பொறுத்தவரைக்கும், ஐயா இருக்கும் போதும் கடவுள்தான், செத்த பிறகும் கடவுள்தான். அவனுக்கு கோயில் குளம் எல்லாம் ஐயாவை தவிர வேறு எதுவும் இல்லை.

ஐயா குடுத்த ரெண்டு ஏக்கர் நிலம், ஒரு சோடி மாடு, வண்டி என அவன் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்க ஆரம்பித்தது. பொண்டாட்டி வள்ளி கூட, இப்போது சில நாட்களாக எந்த சீக்கு செவாப்பும் இல்லாம ஆரோக்கியமாவே இருந்தாள்.

ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்து குளிச்சி சாப்பிடுறதுக்கு முன்னாடி, வீட்டுல இருக்குற ஐயா படத்துக்கு கற்பூரம் ஏத்தி, அவர கும்பிட்ட பிறகுதான் வேலாயுதம் வெளியிலேயே கிளம்புவான். அதே மாதிரி, வேலை முடிஞ்சி வீட்டுக்கு வந்து, ஐயா படத்த கும்புடாம அவன் சாப்புடுறதே இல்ல.

இதுவரை, பண்ணையில இருந்த வேலைகள மட்டுமே செய்துகிட்டு இருந்த வேலாயுதம், இப்போ ஐயா குடுத்த தன்னோட வயல்ல கடுமையாக உழைத்தான்.

மாடுகள கொண்டு மத்தவங்க வயலுங்களுக்கும ஏர் உழுது குடுத்தான். வண்டி சவாரிக்கு போயி, நெல் மூட்டை ஏத்துறது, எரு அடிக்கிறது’ன்னு அவனும், அவனோட மாடுங்களும் ஓய்ச்சல், ஒழிச்சல் இல்லாம உழைக்க ஆரம்பிச்சாங்க.

அடுத்த ரெண்டு மூணு வருஷத்துலேயே, அவனோட கூரை வீடு, ஓட்டு வீடா மாறியது.  குதுரு, பத்தாயம் எல்லாம், நெல்லு, உளுந்து பயிருன்னு நிரம்பி வழிஞ்சிது.

தொழுவத்துல பசு மாடுங்களும் நெறைய ஆரம்பிச்சுது. பால், தயிர், வெண்ணை’ன்னு பால் பாக்கியம் பஞ்சம் இல்லாம இருந்தது.

முன்ன மாதிரி, வள்ளியும் இப்போ சீக்கு வந்து படுக்கிறது இல்ல. நானும் ஒன்னோட வயலுக்கு வந்து வேலை செய்வேன்னு வேற அடம் பிடிக்க ஆரம்பிச்சா.

உண்மையான விசுவாசமம், அயராத உழைப்பு, ஐயாவோட கருணை எல்லாம் சேர்ந்து அவன ஒரு நல்ல நெலமைக்கு கொண்டு வந்திடுச்சி. சொந்த பந்தத்துலேயும், வேலாயுதம், வள்ளின்னு சொன்னாலே ஒரு தனி மரியாதை.

என்னதான் ஆரோக்கியமா இருக்குற மாதிரி தெரிஞ்சாலும், பொண்டாட்டி வள்ளி சீக்காளிதான். ஆனாலும், அவளுக்கு மருந்து மாத்திர வாங்குறதுக்காக கடன் வாங்க வேண்டிய நெலைமை இதுவரைக்கும் வரல.

வள்ளிக்கு புத்திர பாக்கியம் இல்லேன்னு தெரிஞ்சாலும், தொழுவத்துல இருக்குற ரெண்டு காளைங்களும் அவங்களுக்கு புள்ளைங்களாத்தான் தெரிஞ்சிது.

அதுனால், சாவுற வரைக்கும், இந்த வாழ்க்கை இப்படியே இருந்தா போதும்’னு வேலாயுதமும் வள்ளியும் ரொம்ப மன நிறைவா வாழ பழகிக்கிட்டாங்க.

*****************

இந்த உலகத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அதிகாரம் காலத்திற்கு மட்டுமே உண்டு. அதனால், எப்போது எது நடக்கும்? என்பதை, காலம் மட்டுமே அறியும்.

கிட்டத்தட்ட, ஒரு தசாப்தம் வரை எந்த வித இடையூறும் இல்லாமல்தான், அந்த வாழ்க்கை சென்றது. ஆனால் யார் கண் பட்டதோ, அவை அனைத்தும் மாறத்தொடங்கின.

வழக்கம் போல, வண்டி நிறைய வைக்கோலை நிரப்பி கட்டிக் கொண்டு, ஒரு மேட்டில் ஏறும் போது, அந்த வண்டி அப்படியே, நிலை தடுமாறி குடை சரிந்தது.

வண்டி மேல் உட்கார்ந்திருந்த வேலாயுதம் அப்படியே தூக்கி வீசப்பட்டான். இடுப்பில் ஏதோ, களுக் என்று ஒரு சத்தம். வலித்த வலி உயிரே போவது போல இருந்தது.

அருகில் வேலை செய்தவர்கள் எல்லாம் ஓடி வந்து, வண்டியை நிமிர்த்தி விட்டு, வைக்கோல் கட்டுகளை எல்லாம் கீழே அவிழ்த்து போட்டனர்.

வேலாயுதம், தாமாக எழுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தான். முடிய வில்லை. எல்லோரும் சேர்ந்து அவனை கைத்தாங்கலாக தூக்கி, அதே வண்டியில் போட்டுக்கொண்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

வழி எங்கும் அவன் வலி தாங்க முடியாமல் துடித்தான். இது வரை அவன் அப்படி துடித்து யாருமே பார்த்தது இல்லை. அவன் அருகில் இருந்த அனைவரும் கலங்க ஆரம்பித்தனர்.

ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எல்லாம் எடுத்து பார்த்த டாக்டர்கள், அவனுடைய இடுப்பு எலும்பு முறிந்து விட்டதாக சொல்லும்போது… அவன் மனது நொறுங்கிப் போனது.

மாதக்கணக்கில் அவனுக்கு வைத்தியம் தொடர்ந்தது. கொஞ்சம் தேறி வந்தான். ஆனாலும், அவனுக்கு லேசாக கொம்பு ஊன்றி மட்டுமே நடக்க முடியும். முன்னைப்போல வேலைகள் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது.

உழைக்க தயாரா இருந்தும்.. ஆண்டவன் இப்படி முடக்கி போட்டுட்டானே என்று வேலாயுதம் கலங்கினார். வள்ளியும் கலங்கினாள்.

சிட்டுக்குருவி போல, சிறிது நேரம் கூட ஒரு இடத்தில் நிக்காமல், ஓடி, ஓடி உழைக்கும் வேலாயுதத்துக்கு இந்த தண்டனை தேவையா? அவன் யாருக்கு என்ன பாவம் செய்தான் என்று ஊரே கலங்கியது. ஆனாலும், அந்த கலக்கம் அவனை சரி செய்து விடுமா என்ன?

எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யும் வேலாயுதம், இன்று நடப்பதற்கு கூட கொம்பு தேட வேண்டி இருந்தது. தன்னுடைய நிலை இப்படி ஆனதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

எவ்வளவு நாள் இப்படியே அழுது கொண்டிருப்பது? அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்று யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அவர்.

ஐயா கொடுத்த ரெண்டு ஏக்கர் நிலத்தையும், இன்னொருத்தருக்கு சாகுபடி செய்ய கொடுத்து விட்டார் . அதில் இருந்து வரும் நெல்லும், உளுந்து பயிருமே இப்போதைக்கு அவரது வருமானம்.

அந்த வருமானம் வயித்துக்கும் வாயிக்கும் சரியாக இருந்தது. ஆனாலும், ஐயா ஞாபகமாக இருக்கும் காளைகள மட்டும், எக்காரணம் கொண்டும் விக்கக்கூடாது. இறுதி வரைக்கும் அதக் காப்பாத்தி, மனுசங்களுக்கு செய்யிற சடங்கு எல்லாம் செஞ்சிதான் அடக்கம் பண்ணனும் என்கிற வைராக்கியம் மட்டும் அவரு மனச விட்டு போகவே இல்ல.

ரெண்டு காளைகளும், வைக்கோல தின்னு, கழனி தண்ணிய குடிச்சி, எப்பவும் தொழுவத்துலேயே கெடக்கும். எப்பவாவது அவுத்து விட்டா, அவரு கொல்லையிலே கொஞ்ச நேரம் புல்லுகள மேயும்.

ஒரு காலத்துல ஐயாதான் உலகம்னு இவரு நெனச்ச மாதிரி, அந்த ரெண்டு காளைகளும், இப்போ வேலாயுதம்தான் உலகம்னு நெனச்சிக்கிட்டு இருக்கும்.

***********

பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மட்டும் அது கண்டிப்பாக பொருந்தியே தீரும்.

முன்னெப்போதையும் விட, வள்ளி இப்போது அடிக்கடி சீக்கு வந்து பாயில் படுத்து விடுகிறாள். அவளுக்கு வைத்தியம் செய்வதற்கு, போதுமான அளவுக்கு வருமானம் இல்லாமல் போய் விட்டது.

நில குத்தகை மூலம் வரும் வருமானம், சாப்பாட்டுக்கும் கை செலவுக்கு மட்டுமே சரியாக இருந்தது. வள்ளி வைத்திய செலவுக்கு கடன் வாங்குறத தவிர வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.

நல்ல நேரம் ஆரம்பிக்கும் போது, நல்ல காரியம் எல்லாம், அடுத்தடுத்து நடக்கிற மாதிரி, கெட்ட நேரம் ஆரம்பிக்கிறப்போ, கெட்ட காரியம் எல்லாம் அடுத்தடுத்து நடக்க ஆரம்பிச்சிடுது.

இவ்வளவு கஷ்டத்துலேயும், ஏதோ ஒரு வகையில நம்மல அறியாமலே நமக்கு சந்தோஷத்த கொடுத்த விஷயங்களும், இந்த நேரம் பார்த்து துக்கத்த கொடுக்க தொடங்கிடுது.

அப்படித்தான், யாரும் எதிர் பார்க்காத வேளையில, வேலாயுதம் கேட்டு வாங்கின காள மாட்டுல ஒன்னு, பாம்பு கடிச்சி, தொழுவத்துலேயே செத்து போயிடுச்சி. அந்த துக்கத்த வேலாயுதத்தால தாங்கிக்கவே முடியல. ஐயா மரணிச்ச அன்னிக்கு அவரு எப்படி அழுதாரோ, அதே போல, அந்த காள மாடு செத்து போனதா நெனச்சி, நெனச்சி, தலையில அடிச்சிக்கிட்டு, தரையில விழுந்து புரண்டு, புரண்டு அழுதார் வேலாயுதம். அது அவரு பொண்டாட்டி வள்ளியையும் ரொம்பவே பாதிச்சிடுச்சி.

இவ்வளவு கஷ்டத்துலேயும், இதுநாள் வரைக்கும் ஒன்ன பட்டினி போடாடாம காப்பாத்துன எனக்கு, அந்த பாம்புகிட்ட இருந்து காப்பாத்த முடியலயே’ன்னு சொல்லி, சொல்லி ஒரு குழந்தைய போல தேம்பி, தேம்பி அழுதாரு வேலாயுதம்.

வேற வழி இல்ல. தன்னோட கொல்லையிலே ஒரு குழிய வெட்டி, அதுல செத்து போன காள மாட்ட, பூவெல்லாம் தூவி, கற்பூரம் எத்தி, மனுசன போலவே அடக்கம் பண்ணினாரு.

அதுக்கு பிறகு, அந்த இடத்துல ஒரு செம்பருத்தி செடிய நட்டு வச்சாரு. ஏன்னா ஐயாவுக்கு செம்பருத்தி பூவ ரொம்ப புடிக்கும். அந்த செடிக்கி தினமும் தண்ணி ஊத்த ஆரம்பிச்சாரு. ஒவ்வொரு தடவ தண்ணி ஊத்துற போதும், அதுல அவரு கண்ணீரு ஒரு சொட்டாவது கலக்காம இருக்காது.

அந்த மாட்டோட இறப்ப, ஐயா இறப்பு போல, அவரால ஏத்துக்கவே முடியல. அடுத்த ஒரு மாசம் வரைக்கும், வேலாயுதத்தால, சரியா சோறு, தண்ணி கூட சாப்புட முடியல.

முதுமை அடையும் போது மனசு பக்குவப்படுகிறது. ஆனா, உடல் உறுப்புகள் எல்லாம் பலவீனப்பட்டு, தன்னம்பிக்கையும் குறைய ஆரம்பிச்சிடுதே.

ஐயாவோட இறுதிக் காலத்துல, அவர விட்டு பிரியாம, வேலாயுதம் எப்படி கூடவே இருந்தாரோ.. இப்போ வள்ளிய விட்டு கொஞ்சம் கூட விலக முடியாத நிலைமைக்கு ஆளானார் அவர்.

குழந்தை பாக்கியத்த குடுக்க முடியாத வள்ளி, இவருக்கு பொண்டாட்டியாவா இருந்தா? அவளும் ஒரு கொழந்தையாத்தானே இருந்தா.

இத்தன வருஷத்துல, எனக்கு இது வேணும், அது வேணும்’னு ஒரு நாளும் அவ எதையும் கேட்டதே இல்ல. இவருக்கு எது புடிக்குமோ, அதுதான் அவளுக்கு புடிக்கும். அதை தவிர அவளுக்கு எதுவுமே தெரியாது.

மாமாவுக்கு பணக் கஷ்டத்தையம், மனக் கஷ்டத்தையும் குடுக்காத அளவுக்கு, என்னோட உடல்நிலை இருந்தா போதும்’னு மட்டும்தான், அவ எப்போதும் கடவுள்கிட்ட வேண்டுவா? கடவுள் என்ன வேண்டுறத எல்லாம் கொடுத்திடுவாரா என்ன?

வள்ளி’ங்குற நான், வள்ளியம்மா’ன்னு சொல்ற அளவுக்கு ஒரு புள்ளைக்கி தாய் ஆகணும் என்பதுதான் அவளோட ஆசை. ஆனா, அவளோட கருப்பைய ஆப்பரேஷன் பண்ணி வெளியில எடுத்தாதான், அவ உசுரோடயே இருப்பான்னு டாக்டருங்க சொன்னதால, அத கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லேயே எடுத்தாச்சி.

அத நெனச்சி அவ இன்னும் அழுதுகிட்டே இருப்பாள். தன்னோட, அப்பா அம்மா வம்சம் இப்படி வாரிசே இல்லாம அழிய போவுதேங்குற கவலைதான் அவள ரொம்ப பீடிச்ச கவலை.

விடு வள்ளி, நமக்குதான் சிங்கக்குட்டி போல, ரெண்டு காளை கண்ணுங்க இருக்கே என்று அவ்வப்போது, வேலாயுதம் அவளை தேற்றுவார்.

ஆனால் இப்போ, அதுலயும் ஒன்னும் செத்து போயிடுச்சே’ன்னு ரெண்டு பேருமே அழது கொண்டே இருந்தனர். (தொடரும்)