“கடிகாரம்” … சிறுகதை!

– கீழையூர் சுடர்மணி

மூன்று நிமிட வாசிப்பு…..

(மயிலாடுதுறை மாவட்டம் 6. கீழையூர் என்ற ஊரை சேர்ந்த சுடர்மணி, நல்ல சிந்தனையாளர். கவிஞர். சொல்ல வரும் விஷயத்தை நறுக்கென்று, அழகாக, சுவையாக, சுருக்கமாக சொல்லும் தன்மை உடையவர். அவரை, “விர்கோ நியூஸ்” இணைய தளம் வாயிலாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.)   

வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு போன்ற வளர்ப்பு பிராணிகளையும் தன் குடும்ப அங்கத்தினராகவே பாவிக்கும் பண்பு கிராமத்தினருக்கே உரித்தானது. உயிருள்ள விலங்குகளை விடுங்க, ஒரு கடிகாரத்தை தம் குடும்ப உறுப்பினர் போல கொண்டாடியது என்றால் அது எங்கள் வீடாகத்தான் இருக்கும்.

உங்க அப்பாவுக்கும் இந்த கடிகாரத்துக்கும் ஓரே வயசுடா…. என ஆத்தா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அக்கடிகாரத்திற்கென செய்த மரப் பெட்டியில் , இருபக்கம் சாவி கொடுக்கும் துவாரங்களுடன் , பெண்டுலம் ஆடியவாறு சுவற்றில் அது மாட்டப் பட்டிருக்கும். அதிலும் ஒரு கம்பீரம் இருக்கும்.

பதினோறு மணிக்கு பதினொன்று முறை மணி அடிக்குதா பண்ணிரெண்டு மணிக்கு பண்ணிரெண்டு முறை மணி அடிக்குதா என எண்ணுவது என் பால்ய கால மகிழ்வுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.

மணி ஆறு அடிச்சிட்டு இன்னும் என்ன தூக்கம்? என்ற அப்பாவின் கண்டிப்பும் ஒம்போது அடிச்சிட்டு இன்னுமா தூக்கல…. என்ற அம்மாவின் பாசமும் கலந்தே ஒலித்தன அக்கடிகார மணிகள்.

கரண்டு பில் அட்டையோ, முக்கியமான கடிதங்களோ பத்திரமாக வைப்பதற்கு தோதான இடமாக தாத்தாவும் அப்பாவும் பயன் படுத்தியது அக்கடிகாரப் பெட்டியைத் தான்.

ஒருமுறை சாவி கொடுத்தால் எத்தனை நாட்கள் ஓடும், மீண்டும் எப்போது சாவி கொடுப்பது என்பது அப்பாவுக்கு மட்டுமே கை வரப் பெற்ற காலக் கணிதம்.

ஒவ்வொரு வருடமும் பொங்களின் போது ஒட்டடை அடித்து வீடு சுத்தம் செய்யும் போதெல்லாம் அக்கடிகாரத்தை சுத்தம் செய்வது பணிகளில் எல்லாம் பெரும் பணியாக இருந்திருக்கிறது.

சில சமயங்களில் அது ரிப்பேர் ஆகி ஓடாமல் நின்று விடும் சமயங்களில் உடல் நிலை சரியில்லாத பிள்ளையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதைப் போல கவனமாக கொண்டு சென்று சரிசெய்து எடுத்து வந்த நாட்கள் இன்றும் நினைவில் நிழலாடுகின்றன.

அஞ்சாம் வாய்ப்பாடு படி, மணி பார்க்க ஈஸியா சொல்லித் தாரேன் என்றதும் அஞ்சாம் வாய்ப்பாடை ஒப்பித்துக் காட்டி மணி பார்க்கக் கற்றுக் கொண்டதும், என பள்ளிக் கால நினைவுகள் அக்கடிகாரத்தின் பெண்டுலம் போல இப்போதும் மனதில் ஆடிக் கொண்டிருக்கின.

ஒரு சுப நிகழ்வுக்கு மாமா அன்பளிப்பாக தந்த பேட்டரி கடிகாரம் வந்த பின் நிகழத் தொடங்கியது அதற்கும் எங்களுக்குமான விலகல். அது ஓடாமல் நின்று விட்ட பின்னும் அகற்ற மனமின்றி வெறுமனே தொங்கிக் கொண்டிருந்த நாட்கள் அதிகம்.

கடந்த கால நினைவுகளை அசை போட்ட படி இதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மணி என்ன ? என்று மகளைக் கேட்கிறேன்…..

அவளோ மாட்டியிருக்கும் சுவர் கடிகாரம் தாண்டி ஓடுகிறாள்,

அலைபேசி எடுக்க……