“ஒத்தக்காளை” …. குறு நாவல்!

-ராஜேந்திரன்

பத்து நிமிட வாசிப்பு…

வள்ளியக் காப்பாத்துறதுக்கு, இதத்தவர வேற வழியே இல்லன்னு ஒரு நெலம வந்தப்போ, கழுத்தறுபட்ட கோழி போல துடித்தது வேலாயுதத்தின் மனசு. இப்படி ஒரு துன்பத்த அனுபவிக்கிறதுக்கு பதில், என்னோட உசுர எடுத்துக்க கடவுளே’ன்னு கண்ணீர் விட்டு கதற ஆரம்பிச்சிட்டாரு.

வாழ்க்கையில இதுவரைக்கும் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கலேன்னு அவரு ஒரு நாளும் நெனைச்சது இல்ல. வள்ளி தன்னோட பொண்டாட்டின்னு சொன்னா, அந்த ஒரு சோடி காள மாடுங்க தனக்கு பெத்த புள்ளைங்களாச்சே.

அறியா வயசிலேயே அம்மா, அப்பாவ இழந்த வேலாயுதத்துக்கு, கூடப்பொறந்த ஒரே ஒரு அக்காதான், பெத்த அம்மா ஸ்தானத்துல இருந்து வளத்தவ. தாய் மாமனான அவளோட புருசன்தான், அப்பாவோட பொறுப்ப ஏத்துக்கிட்டவன்.

அவங்களுக்கு பொறந்த ஒரே பொண்ணு வள்ளிய, இவன் கையில புடிச்சி குடுத்துட்டு அவங்க ரெண்டு பேரும் கண்ண மூடிட்டாங்க.

இப்போ, மரணப்படுக்கையில இருக்குற  பொண்டாட்டி வள்ளியையும், கண்ணுங்க பழுதாயி, எழுந்து நிக்கக் கூட தெம்பு இல்லாம தளந்து போன, அந்த ஒத்தக் காளையையும் தவிர, வேலாயுதத்துக்கு வேற  யாருமே இல்ல.

அது, ஐயாவோட கவுரவத்தையும், என்னோட உயிரையும் காப்பாத்துன தெய்வம். உசுரோட இருக்குற வரைக்கும், அது பாட்டுக்க இருந்துட்டு போவட்டும். சாவுறப்போ என்னோட தொழுவத்துலியே செத்து போவட்டும். மனுசனுங்களுக்கு செய்யற மாதிரியே எல்லா சடங்கையும் செஞ்சிதான், அத அடக்கம் பண்ணுவேன்’னு சொன்ன, தன்னோட வாக்கு பொய்யா போயிடுமோ?’ன்னு, நெனைக்கிறப்பவே, அவருக்கு இதயத்துல ஈயத்த காய்ச்சி ஊத்துன மாதிரி இருந்தது.

இப்போ வேற வழியே இல்ல. ஒன்னு வள்ளிய இழக்கணும் இல்லேன்னா அந்த ஒத்தக் காளைய இழக்கணும். ரெண்டு கண்ணுல, எத இழக்கிறது? எத காப்பாத்துறது? நாடித்துடிப்பு எகிறிக்கிட்டே  இருந்தது வேலாயுதத்துக்கு.

வள்ளிங்குறது அக்கா பொண்ணு, பொண்டாட்டி’ங்குற ஸ்தானத்தோட முடிஞ்சி போறவ இல்ல. அம்மா அப்பா இல்லாத, தனக்கு, அந்த ஏக்கமே தெரியாம வளத்த ரெண்டு சீவனோட வாரிசு.

அவள தன்னோட கையில புடுச்சி குடுக்குறப்பவே, இவ சீக்காளி, இவள ஒன்னோட பொண்டாட்டியா பாக்காம, ஒனக்கு பொறந்த புள்ளையா நெனச்சி பாத்துக்க’ன்னு சொல்லியே ஒப்படைச்சவ அக்கா.

தன்ன நம்பி ஒப்படைச்சவள, தன்னோட பொண்டாட்டி வள்ளிய காப்பாத்த முடியாம போயிட்டா, அதுக்கு பிறகு, இந்த உசுர  வச்சிக்கிட்டு எப்படி வாழுறது… அவரோட “இயலாமை” அவர கழுகு போல, கொத்தி கொத்தி தின்னுக்கிட்டே இருந்தது.

இத்தன வருசமா, யாருக்காகவும், எதுக்காகவும் உதவி கேட்டு தாழாத அவரோட கை.. வள்ளிய எப்படியாவது காப்பாத்தியே ஆகணும்’ங்குற துடிப்புல, கண்ணுல தென்படுற அத்தன பேர்கிட்டேயும், தாழ்ந்து போயிடுச்சி.

இப்பல்லாம், சுய கவுரவத்த விட, தன்ன நம்பி, தனக்கு வாக்கப்பட்டு வந்த, வள்ளிய காப்பாத்தணும்’ங்குற சுயநலப் போராட்டம்தான் அவர ஆட்டிப் படைச்சிக்கிட்டு இருக்கு. அதுக்காக அவரு, எந்த அவமானத்தையும் தாங்கிக்கிற மனநிலைக்கு வந்துட்டாரு.

வாழுறதா? சாவுறதா? இல்ல கைவிடுறதா? அப்படீங்குற விரக்தி எண்ணங்கள், புது வெள்ளத்துல உருவாகுற சுழல் மாதிரி, அவரு மனசுல மாறி, மாறி சுத்திக்கொண்டே இருந்தன.

தூக்கம் வரவும் இல்ல. துக்கம் போகவும் இல்ல. கண்ணுல தென்படுற யாராவது ஒருத்தவங்க, சோறு போட மாட்டாங்களா?ன்னு, போற வர்ற எல்லாரையும் ஏக்கத்தோட பாக்குற ஒரு தெரு நாயோட தவிப்பு அவருக்கு.

வாய் பேசுற வள்ளி ஒரு உசுருன்னா, வாயில்லா சீவன், அந்த ஒத்தக்காளையும் ஒரு உசுருதானே. இதுல எந்த ஒரு உசுரையும், இழக்குற அளவுக்கு அவரோட மனசுல தெம்பு இல்ல.

குழப்பம், துக்கம், விரக்தி, இயலாமை’ன்னு எல்லாம் சேர்ந்து ஒரே நேரத்துல, கொஞ்சம் கூட இடைவெளி குடுக்காம தாக்குனா, அவரால என்ன செய்ய முடியும்?

இப்படி ஒரு நிலமையில சிக்கி தவிக்கிறதுக்கு பதில், செத்து போறதே மேலு’ன்னு அவரோட உள் மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சி.

 

**********

வேலாயுதத்தின் வாழ்க்கைப் பாதை, பூக்களால் நிரப்பப்பட்டதோ, போர்க் களத்தால் சிதைக்கப்பட்டதோ அல்ல. வான் வெளிகளே வீதி, மரக்கிளைகளே கூடு, கிடைக்கும் தீனியே அமிர்தம் என்று வாழும், ஒரு சிட்டுக் குருவியின் உலகம் அது.

தாய் தந்தையை இழந்து, அக்கா மாமாவின், கதகதப்பான  அரவணைப்பில் இருந்து, லேசாக விடுபடும் போது அவருக்கு பத்து பனிரண்டு வயது இருந்திருக்கும்.

ராமானுஜம் பண்ணையில், மாசம் ரெண்டு மூட்டை சம்பளம் பேசி வேலைக்கு சேர்க்கப்பட்டான். ஆடு மாடு மேய்க்கும் வேலை அவனுக்கு கொடுக்கப்பட்டது.

ஆடு, மாடுகளை, தம்பி தங்கைகளாக, கூட்டாளிகளாக காத்து அரவணைக்கும் பெருந்தன்மை அவனுக்கு அந்த வயதிலேயே இருந்தது ஆச்சரியம்தான்.

சிறு வயதிலேயே வேலாயுதத்துக்கு இருந்த அந்த பெருந்தன்மைதான்,  பண்ணை முதலாளி ராமானுஜம் ஐயாவிற்கு, அவனை மிகவும் பிடித்துப் போக காரணமாக ஆகி விட்டது.

பண்ணையில் பத்து பதினைந்து பேர் வேலை செய்தாலும், ஐயாவின் கவனம் அனைத்தும், வேலாயுதத்தின் பக்கமே திரும்பியது.

தொழுவத்தில் ஆடு மாடுகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருந்தன. அவை அனைத்தும் கொழு கொழுவென வளர்ந்தன. பால் பாக்கியம் பெருகியது.

இவன் என்ன கிருஷ்ணனா? அல்லது நகுலன், சகாதேவனா? என்று சொல்லும் அளவுக்கு ஆடு மாடுகளின் மீது அவனும், அவன் மீது ஆடு மாடுகளும் நேசம் கொண்டிருந்தன. அதுவே அவனை ஐயாவுக்கும் செல்லப்பிள்ளையாக மாற்றி விட்டது.

பண்ணையில் ஆடு மாடுகள் வளர்ந்தது போல, வேலாயுதமும் வளர்ந்து இளைஞன் ஆகிவிட்டான்.

ஐயாவுக்கும் அவன் மீது அன்பு பெருகி விட்டது. இனி நீ ஆடு மாடுங்கள மேய்க்க வேண்டாம். எனக்கு வண்டி ஓட்டுற வேலைய பார்த்தா போதும்னு சொல்லி விட்டார்.

ஐயா, ரொம்ப வெரசான மனுஷன்.  துடிப்பான ஆளு. அவருக்கு சமமா சொத்து வச்சிருக்குற பலபேரு அந்த ஊருல இருந்தாங்க. ஆனா, ஐயாதான் எல்லாத்துலேயும் முதன்மையா இருப்பாரு.

அந்த காலத்துலியே பதினொன்னாம் கிளாசு வரைக்கும் படிச்சவரு. ஐயா இங்கிலீசுல சரளமா பேசுற மாதிரி, அந்த ஊருலயே யாரும் பேச முடியாது.

எம்.எல்.ஏ, அரசாங்க அதிகாரின்னு யாரு ஊருக்கு வந்தாலும், ஐயாவத்தான் மொதல்ல சந்திச்சி பேசுவாங்க. அந்த அளவுக்கு செல்வாக்கான ஆளு.

ஊருல நல்லது கெட்டது எது நடந்தாலும், மொதல் ஆளா வந்து நின்னு எலாத்தையும் கவனிக்கிறது ஐயாதான். அதுனால, ஊருல இருக்குற அத்தன பேருக்கும் ஐயா மேல அப்படி ஒரு மரியாதை.

மாடு வாங்கும் போது கூட, ஒசத்தியான மாடுங்கள தான் வாங்குவாரு. அதோட வெலைய கேட்டா நமக்கே வெடவெடத்து போயிடும். அந்த அளவுக்கு அதிகமா இருக்கும். தொழுவத்துல கட்டி கிடக்குற அத்த மாடுங்களும் அப்படிப்பட்ட மாடுங்கதான்.

ஐயாவுக்கு, ரொம்ப இரக்க சுபாவம். யாருக்கு எந்த கஷ்டம்னாலும் ஓடிப்போயி, தன்னால முடிஞ்ச அத்தன உதவிகளையும், அவங்க கேட்காமலே செஞ்சி கொடுப்பாரு.

இருந்தாலும், அவருகிட்ட ஒரு கெட்ட கொணமும் கூடவே  இருந்துச்சி. அது என்னன்னா? அவரு வண்டியில போகும்போது, அவரு  வண்டிய, எந்த வண்டியாவது, முந்தி போயிடுச்சுன்னா அவ்வளவுதான். அதுக்கு பிறகு அவர் எதுக்க யாரும் நிக்க முடியாது.

மறுபடியும், அந்த வண்டிய முந்தி ஓட்டிட்டு போகணும். முடியலேன்னா, ஒன்னு வண்டி ஓட்டுறவன் வீட்டுக்கு போகணும். இல்லேன்னா அந்த மாடுங்க தொழுவத்த விட்டு போயிடும்.

இதுக்கு முன்னாடி, ஐயா பண்ணையில் இப்படி பல தடவ நடந்திருக்கு. ஆனா, இப்போ ஐயாவுக்கு வண்டி ஓட்டுறவன், அவருக்கு செல்ல புள்ளையான வேலாயுதமாச்சே.

சின்ன புள்ளையா இருக்குற காலத்துல இருந்தே… பண்ணையில வளந்தவன் வேலாயுதம். அதனால, அவன தன்னோட புள்ளைங்க மாதிரியேதான் அவரு பாத்துக்கிறாரு. அவனுக்கு ஒண்ணுன்னா, ஐயா  துடிச்சி போயிடுவாரு.

இருந்தாலும், வேலாயுதம் வண்டி ஓட்டும்போது, வேற யாரோட வண்டியாவது அத முந்தி போயிட்டா, அவரு வேலாயுதத்தை வீ ட்டுக்கு அனுப்பாவாரா? இல்ல விட்டுடுவாரா?ன்னு பண்ணையில எல்லாரும் பேசிக்கிறது வேலாயுதம் காதுல விழாம இல்ல.

இதெல்லாம் தெரிஞ்சிதான், வேலாயுதம் அவருக்கு வண்டி ஓட்டுற சாரதி வேலையை ஏத்துக்கிட்டான்.

அவனுக்கு ஒண்ணுன்னா, ஐயா எப்படி தாங்க மாட்டாரோ, அது மாதிரி ஐயாவுக்கு ஒண்ணுன்னா, வேலாயுதமும் தாங்க மாட்டான்னு எல்லாருக்கும் தெரியும்.

இந்த பாசப் பிணைப்புல தான், ஐயாவுக்கு அவன் ஓட்டுன வண்டி சக்கரம் சொழண்டுகிட்டு இருந்துச்சி.

ஆனாலும், அதுக்கும் ஒரு சோதன வராலமா போயிடும்.

 

**********

ஐயாவுக்காக வேலாயுதம் ஓட்டும் வண்டியை, வேறு எந்த வண்டியாவது முந்தி விட்டால் என்ன நடக்கும்? என்று பண்ணையில் வேலை செய்தவர்கள் எல்லாம் பட்டிமன்றம் நடத்தாத குறையாக நடத்திய விவாதங்களுக்கு, இவ்வளவு சீக்கிரம் பதில் கிடைக்கும் என்று யாரும் எதிர் பார்க்கவே இல்லை.

அன்று மாலை வேலாயுதத்தை கூப்பிட்டார் ஐயா.

அவனும் பவ்யமாக, அவர் எதிரில் நின்று கொண்டு சொல்லுங்க ஐயா என்றான்.

நாளைக்கு காலைல, பக்கத்து டவுனுல ஒரு கல்யாணத்துக்கு போகணும். நீ வண்டி, மாடுங்கள தயார் பண்ணி வை. அதோட, காத்தால அஞ்சி மணிக்கே பண்ணைக்கு வந்துடுன்னு சொன்னார்.

அவனும் வீட்டுக்கு போய், ஐயாவுக்கு வெளியூர் வண்டி ஓட்டும்போது, தான் போட்டுக்குற வேட்டி, சட்டை, துண்டு எல்லாத்தையும் தயாரா எடுத்து வச்சிட்டு படுத்தான்.

ஐயா கெளம்புறதுக்கு முன்னாடியே, நாம தயாரா நிக்கனும்னு நெனச்ச வேலாயுதம், நாலர மணிக்கே, தயார் ஆகி, ஐயா வீட்டு வாசல்ல கொண்டு போயி வண்டிய நிறுத்தினான்.

கொஞ்ச நேரத்துல ஐயா வந்து வண்டியில் ஏறி உட்கார்ந்தார். வண்டி புறப்பட்டது. காலையிலேயே வண்டிய வேகமா ஓட்ட வேணாம்னு நெனச்ச வேலாயுதம், கொஞ்சம் சீராவே ஓட்டுனான்.

ஊர் எல்லைய நெருங்கிக்கிட்டு இருந்துச்சி வண்டி. அப்போ திடீர்னு பார்த்தா பின்னால, இன்னொரு வண்டி வர்ற சத்தம் கேட்டுச்சி. ஐயாவோட பங்காளி வண்டிதான் அது.

அந்த வண்டியில பூட்டி இருந்த ரெண்டு மாடும், என்னா வாட்ட சாட்டமா இருந்துச்சி. அதப்பாத்தா மாடு மாதிரியே தெரியல. ரெண்டும், தேசிங்குராசன் குதுர மாதிரியே இருந்துச்சி. நல்ல சாதி மாடு போல இருக்கு. ஐயாவ விட அதிகமா வெல குடுத்து வாங்கி வந்திருப்பார் போல. அப்படியே சிங்கம் மாதிரி தெருப்புழுதிய கெளப்பி விட்டுக்கிட்டு சிட்டாட்டம் பறந்து வந்த அந்த மாடுங்கள பாத்து, வேலாயுதத்துக்கே கொஞ்சம் பொறாமையாத்தான் இருந்துச்சி. அதுங்க கழுத்துல கட்டி இருக்குற சலங்கை சத்தம், அதுங்களுக்கு இன்னும் உற்சாகத்த குடுத்தது போல, இருக்க, இருக்க வேகமாக ஓட ஆரம்பிச்சுது அந்த ரெண்டு மாடுங்களும்.

ஆகா.. ஐயாவுக்கு கோபம் வர்றதுக்குள்ள, நம்ம வண்டிய முன்னாடி ஓட்டனும்’ங்குற, எண்ணத்துல, தன்னோட காலைகள வெரட்டு வெரட்டுன்னு விரட்டினான் வேலாயுதம்.

அந்த வேகம், ஒரு மைல் தூரம் வரைக்கும்தான் தாக்கு புடிச்சிது. அதுக்கு மேல வெரட்ட முடியல.

ஆனா, அதுக்குள்ள, பின்னாடி வெரட்டிக்கிட்டே வந்த பங்காளியோட வண்டி, வேலாயுதம் வண்டிய முந்திடுச்சி.

இருந்தாலும் விடாப்பிடியா… வெரட்டு வேரட்டுன்னு எவ்வளவோ வெரட்டி பார்த்தான் வேலாயுதம். என்ன முயற்சி பண்ணுனாலும், அந்த வண்டிய இவனால முந்தவே முடியல.

திரும்பி ஐயா மொகத்த பார்க்கவே பயந்து நடுங்கிக்கிட்டு மீண்டும், மீண்டும் மாடுகளை அடித்து விரட்டினான்… இனி அதை முந்துவதற்கு சாத்தியமே இல்ல’ங்குறது அவனுக்கு தெரிஞ்சி போச்சி.

ஏன்னா… முந்திகிட்டு போன பங்காளி வண்டி, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவே இல்ல. பயத்தில் கை கால் எல்லாம் உதறல் கண்டது வேலாயுதத்துக்கு.

அடுத்த நொடியே… ஆவேசமா வேலாயுதம் முதுவுல ஓங்கி ஒரு அறை விட்ட ஐயா, நிறுத்துடா வண்டிய என்று வெறித்த்தனமா கத்தினாரு.

ஐயா கத்துன கத்துல, அவனுக்கு மூத்திரமே வந்து விட்டது. அடுத்து ஒரு அடி கூட வண்டி நகரவே இல்ல.

வண்டியில் இருந்து திடீர்’னு கீழ குதிச்ச ஐயா, இனிமே நான் இந்த வண்டியில் உட்கார மாட்டேன்னு.. கோபமா கத்திக்கிட்டே.. அப்படியே, வந்த வழியே விறு விறுன்னு நடக்க ஆரம்பிச்சிட்டாரு.

நடுங்கிப்போன வேலாயுதம், அப்படியே வண்டியில இருந்து குதிச்சி, ஓடிப்போய், ஐயாவோட கால கட்டிக்கிட்டு, மன்னிச்சிடுங்க ஐயா’ன்னு சொல்லி எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி பார்த்தான்.

ஐயா கொஞ்சம் கூட மசியுற மாதிரி தெரியல. அவருக்கு வந்த ஆத்தரத்துல.. அப்படியே நின்ன மேனிக்கு அவன எட்டி விட்டாரு ஒரு உதை. அந்த உதையில அப்படியே, கோடு மாடா மல்லாக்க போயி விழுந்தான் வேலாயுதம்.

ஆனாலும் சுதாரிச்சி எழுந்த வேலாயுதம், ஐயா இப்படி நடந்து போறாரே’ங்குற வேதனை தாங்காம துடிச்சி போயிட்டான். இனி அவர யாராலையும் சமாதானம் செய்ய முடியாதுன்னு அவனுக்கு தெரியும்.

வேற வழியே இல்ல. ஐயா உட்காராத வண்டியில, அவனால மட்டும் எப்படி உட்கார முடியும். அப்படியே, ரெண்டு மாட்டோட தலக் கயித்தையும் புடிச்சிக்கிட்டு, வேலாயுதம் முன்னாடி நடக்க, மாடுங்க பின்னாடி நடக்க, பண்ணையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது   வண்டி. (தொடரும்)