“ஒத்தக்காளை” …. பாகம்  – 4 :  குறு நாவல்!

-ராஜேந்திரன்

பத்து நிமிட வாசிப்பு….

பந்தயத்துல ஜெயிச்ச மாடுங்க மேல அவனுக்கு பாசம் ஏற்பட்டது இயல்பான ஒன்னுதான். இருந்தாலும், அந்த ரெண்டு மாட்டையும், அதுங்க சாவுற வரைக்கும், யாரிடமும் விற்காமல், காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வரும் அளவுக்கு அடுத்து ஒரு சம்பவம் நடந்தது.

அது, பொங்கல் சமயம். அவங்கவங்க தோட்டத்துல வெளைஞ்ச கரும்பு வாழைன்னு, எல்லாரும் சந்தையில கொண்டு போய் வித்து, காசு பாத்துக்கிட்டு இருந்தாங்க.

அப்போதான், நம்ம பக்கத்து ஊரு சந்தையில விக்கிறத விட, இருவது மைல் தள்ளி இருக்குற, பெரிய டவுனு சந்தையில வித்தா, நம்ம வாழத்தாருகளுக்கு நல்ல வேலை கெடைக்கும்’னு ஐயா சொன்னாரு.

அவரு சொன்ன மாதிரியே, வாழத்தாருகள வண்டி முழுக்க ஏத்தி, கீழ விழுந்துடாம நல்லா வரிஞ்சி கட்டிக்கிட்டு, ராத்திரி பத்து மணிக்கே வண்டியில புறப்பட்டான் வேலாயுதம்.

தன்னோட காளைங்க வேகமா போவும்’னு அவனுக்கு தெரியும். அதனால, ஹேய்…னு ஒரு சத்தத்த குடுத்துட்டு, லேசா ஒரு தட்டு மட்டுமே தட்டிக் கொடுத்தான்.

பெரிய டவுனுக்கு போற மெயின் ரோடு, வந்த பிறகு, வண்டிய இடது பக்கமா கொஞ்ச தூரம் கவனமா ஒட்டிக்கிட்டு போனான். ஒரே ரோடுதான், எங்கயும், வளையவோ, திரும்பவோ வேண்டாம்… அதனால,  மாடுங்கள அதுங்க போக்குக்கு விட்டுட்டு அப்படியே வண்டியில உட்கார்ந்து இருந்தான்.

ரோட்டுல எதுக்க வர்ற பஸ்சு, லாரி, எதையும் சட்ட பண்ணாம, அதுக்கு இடைஞ்சலும் இல்லாம, இடது பக்க ஓரமா வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருந்தது.

மாடுங்க  நிதானமா போனதுல, அவன் பெருசா எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாம போனது. அதனால், அப்படியே வண்டி மேலேயே, தன்ன அறியாமலே வேலாயுதம் தூங்கிட்டான்.

அதுவரைக்கும், எந்த குலுங்களும் இல்லாம போன வண்டி, திடீருன்னு, கடக்குன்னு ஒரு சத்தத்தோட அப்படியே, கொட சாயிற மாதிரி ஒரு குலுங்கு குலுங்குச்சி.

அடுத்த நொடி, ஒரு மாட்டோட பின்னங்காலுக்கும், வண்டி சக்கரத்துக்கும் இடையில நிலை தடுமாறி விழுந்தான் வேலாயுதம். அவனுக்கு என்ன நடந்ததுன்னு சுதாரிக்க கூட நேரம் இல்ல.

அப்படியே வண்டி நின்னு போச்சு. துடிச்சி போயி எழுந்த வேலாயுதம் அப்படியே வண்டி, எதிரே ஓடிப்போயி பார்த்தான்.  குலை நடுங்கி போச்சி அவனுக்கு.

நல்ல உயரமான மேடு ஒண்ணுல ஏறி இறங்கி இருக்கு வண்டி. அப்படி ஏறி எறங்கும்போது, வண்டி குலுங்குன குலுங்கல்ல, மேலே தூங்குன வேலாயுதம் கீழே விழுந்திருக்கிறான்.

அவன், விழுந்தத பாத்த மாடுங்க, நுகத்தடி, கழுத்த இறுக்குற வலிய தாங்கிக்கிட்டு அப்படியே, ஒரு அடி கூட எடுத்து வைக்காம, நின்னுகிட்டே இருந்துச்சி.

அவனுக்கு மனசு கெடந்து துடிச்சுது.

மாடுங்க, ஏறக்கத்துல எறங்குன கழுத்து வலி தாங்க முடியாம, ஒரு அடி எடுத்து வச்சிருந்தா கூட, அவன் உடம்புல வண்டி சக்கரம் ஏறி, அங்கியே செத்து  போயிருப்பான்.

தன்னோட உயிரை காப்பாத்துன அந்த மாடுங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே, தெரியாம தவிச்ச வேலாயுதம், லேசா நொகத்தடிய, கைத்தாங்களா தாங்கி, மாடுங்கள, கழுத்து வழியில இருந்து விடுவிச்சான்.

அவனுக்கு, அந்த மாடுங்கள நெனச்சி, ரொம்ப பெருமையா இருந்துச்சி. மாடுங்களுக்கு அஞ்சு அறிவுன்னு சொல்றாங்க… அதெல்லாம் மத்த மாடுங்களுக்குதான். ஆனா, என்னோட மாடுங்களுக்கு ஆறு அறிவுன்னு அவன் மனசு ஆனந்தப்பட்டது.

மாடுங்க மட்டும் கழுத்து வலி தாங்காம ஒரு அடி எடுத்து வச்சிருந்தா கூட, இவ்வளவு நேரம் உசுரு போயிருக்கும். ஆனா, அதுங்க தெய்வம் மாதிரி நம்மள காப்பாத்தி இருக்குன்னு நெனச்சி.. கொஞ்ச நேரம் அப்படியே நின்னுட்டான்.

மீண்டும் ஒரு தடவை, இரண்டு காளைகளையும், கட்டித்தழுவி அழுத்தமாக அதன் கன்னங்களில் முத்தம் கொடுத்தான்.

வானத்த பார்த்தான், பொழுது பளபளன்னு விடிஞ்சிக்கிட்டு இருந்தது. இன்னும் அரை மணி நேரத்துல, டவுனு சந்தைக்கு போயிடலாம்னு மீண்டும் வண்டியை ஓட்டினான்.

சந்தைக்கு கொஞ்ச தூரம் முன்னாடியே இருந்த ஒரு டீக்கட வாசல்ல வண்டிய நிறுத்திட்டு, ஒரு டீய குடிச்சான். அப்படியே, அந்த கடைய ஒரு நோட்டம் விட்டான். இனிப்பு போண்டா தயாரா இருந்தது. அப்படியே ஒரு பத்து போண்டா வாங்கிட்டு வந்து, ஒவ்வொரு மாட்டுக்கும் சரி சமமா பிரிச்சி குடுத்தான். அதுங்க ரெண்டும், விரும்பி தின்னுச்சி.

அடுத்து கொஞ்ச நேரத்துல, சந்தைக்கு வந்து சேர்ந்துது வண்டி. அங்கே மாடுங்கள அவுத்து தண்ணி காட்டி, பக்கத்துல இருக்குற மரத்துல கட்டி வைக்கோல் அள்ளி போட்டான்.

வண்டியில போயி எறங்குன அத்தன வாழத்தாருங்களையும், யாரோ ஒரு பெரிய ஏவாரி நல்ல வெல குடுத்து வாங்கிட்டதால, வேலாயுதத்துக்கும் வேல சீக்கிரமா முடிஞ்சிது.

அந்த பணத்துல, கை செலவுக்கு தேவையான பணத்த மட்டும், சட்டைப் பையில வச்சிக்கிட்டு, மத்தத டவுசர் பையில பத்தரமா வச்சிக்கிட்டு வண்டிய கட்டுனான்.

வர்ற வழியில, எந்தெந்த கடையில டீ குடிக்க வண்டிய நிறுத்துனானோ, அந்த கடையில இருக்குற அத்தன திண் பண்டங்கள எல்லாம் ரெண்டு மாடுங்களுக்கும் வாங்கி குடுத்துக்கிட்டே ஊரு வந்து சேர்ந்தான்.

அந்த மாடுகள எண்ணி அவன் மனசு நெகிழ்ந்து போச்சி. அன்னைக்கி ஐயாவோட கவுரவத்த காப்பாத்துன மாடுங்க, இன்னைக்கி என்னோட உயிரை காப்பாத்தி இருக்குன்னு பாக்குறவங்க எல்லாரு கிட்டையும், மாடுங்க புராணத்தையே பாடிக்கிட்டு இருந்தான்.

ஐயாவோட மானத்தையும், தன்னோட உயிரையும் காப்பாத்துன, அந்த ரெண்டு மாடுங்களையும் எக்காரணம் கொண்டும் வித்துடக் கூடாது. அதுங்க உயிரோட இருக்குற வரைக்கும், நல்லபடியா வச்சி காப்பாத்தணும்’னு அவன் உள்மனசு சொல்லிக்கிட்டே இருந்தது.

****************

ஐயாவோட புள்ளைங்க ரெண்டு பேரும், பெரிய படிப்பெல்லாம் படிச்சி முடிச்சிட்டு, பட்டணத்துல பெரிய, பெரிய வேலையில இருக்குறாங்க. அவங்களுக்கு பட்டணத்துலேயே சொந்த வீடு, காருன்னு எல்லா வசதியும் இருக்கு. புள்ளைங்களும் பெரிய பள்ளிக்கொடத்துல படிக்கிறாங்க.

அதனால, அவங்க திரும்பவும் வந்து, இந்த நெலம் நீறு எல்லாத்தையும் பைச்சல் பண்ணப்போறது இல்ல.

மனைவிய இழந்த ஐயா, புள்ளைங்களோட போயி, பட்டணத்துல இருக்குறதுக்கு விருப்பம் இல்லாமலே இருந்தாரு. புள்ளைங்க எவ்வளவோ, வற்புறுத்தி பாத்தும், அது நடக்கல. அதனால, ஐயா இருக்குற வரைக்கும் கிராமத்துலயே இருக்கட்டும்னு விட்டுட்டாங்க.

வருசத்துக்கு ஒரு தடவ, ரெண்டு தடவ குடும்பத்தோட வந்து, ஐயாவோட ரெண்டு மூணு நாளு, தங்கி இருந்துட்டு போறத வழக்கமா வச்சிருந்தாங்க.

ஒவ்வொரு தடவையும் ஊருக்கு வரும்போதும், வேலாயுதம்… நீதாண்டா ஐயாவுக்கு எல்லாம். உன்னைய நம்பித்தான், நாங்க ஐயாவ விட்டுட்டு போறோம். நீதான் பத்தரமா பாத்துக்கனும்னு அடிக்கடி சொல்லுவாங்க.

சில நேரத்துல, நாங்க ரெண்டு பேருதான், ஐயாவுக்கு புள்ளைங்கன்னு நெனச்சிக்காத, நீதான் ஐயாவோட செல்லப்புள்ள. எங்கள விட ஐயாவுக்கு, உன் மேலதான் பிரியம் அதிகம்னு சொல்லும்போது, அவனுக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சி போகும்.

ஒவ்வொரு தடவையும், அவங்க பட்டணத்துல இருந்து ஊருக்கு வரும்போது, வேலாயுதத்துக்கும், தனியா துணிமணி, இனிப்பு, பழம்னு  வாங்கிட்டு வந்து குடுப்பாங்க.

ஐயாவோட பேரன் பேத்திங்களும், வேலாயுதத்த சித்தப்பா.. சித்தப்பான்னுதான் கூப்புடுவாங்க. எப்படி பார்த்தாலும், வேலாயுதம், ஐயா குடும்பத்தோட தவிர்க்க முடியாத ஒருத்தனாவே ஆயிட்டான். அதனால, ஐயா சொல்றது மாதிரியே, ஐயாவோட புள்ளைங்க சொல்றதும், அவனுக்கு வேத வாக்கு.

ஐயாவுக்கு பணிவிட செய்றதுக்காகவே, தான் பிறவி எடுத்தவன்னே நெனச்சிக்கிட்டு, ஐயாவ விழுந்து, விழுந்து கவனிப்பான். அதனால், ஐயாவும் எந்த கொறையும் இல்லாம இருந்தாரு. வேலாயுதம் இருக்குற தைரியத்துல, ஐயாவ நெனச்சி அவங்க புள்ளைங்க எந்த கவலையும் இல்லாம இருந்தாங்க.

ஆனா, திடீர்னு ஒரு நாளு, ஐயாவோட ரெண்டு புள்ளைங்களும், குடும்பத்தோட, ரயில் நிலையம் வந்து இறங்கி, அங்கிருந்து வாடகை காருல, வீட்டுக்கு வந்தது, அவனுக்கு ரொம்ப சங்கடமா போச்சு.

எப்பவும், இவன்தான், ரயில்வே ஸ்டேஷனுக்கு வண்டி கட்டிக்கிட்டு போயி, அழைச்சிக்கிட்டு வருவான். ஆனா, இந்த தடவ, அவங்க வர்றத பத்தி எதுவுமே சொல்லல. அது, அவனுக்கு கொஞ்சம் உறுத்தலா இருந்தது. இருந்தாலும், அவங்க ரெண்டு பெரும் குடும்பத்தோட வந்த சந்தோஷத்துல, அந்த உறுத்தல் இருக்குற இடம் தெரியாம போயிடுச்சி அவனுக்கு.

ஊருலேருந்த அண்ணனுங்க வர்றத ஐயா நம்மகிட்ட சொல்லலையே’ன்னு ஒரு வருத்தம் இருந்தாலும், ஐயா எது செஞ்சாலும், அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு அவன் தனக்கு தானே சமாதானம் செஞ்சிக்கிட்டான். அவங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள செய்துகிட்டு இருந்தான்.

அவங்க எல்லாரும் குளிச்சிட்டு வந்து ஒண்ணா உட்கார்ந்து சாப்புட்டாங்க. சாப்பாடு முடிஞ்சதும், பேரன், பேத்திங்க வீட்டு முற்றத்துல வெளையாடிக்கிட்டு இருந்தாங்க.

நாற்காலியில உட்கார்ந்துக்கிட்டு, அந்த புள்ளைங்கள அப்படியே, ஐயா பாத்துக்கிட்டே இருந்தாரு. அவரு மனசுல அப்போ கண்டிப்பா அம்மாவோட ஞாபகம்தான் ஓடிக்கிட்டு இருக்கும்னு வேலாயுதம் நெனச்சான்.

கொஞ்ச நேரம் கழிச்சி, ரெண்டு புள்ளைங்களையும் கூப்புட்டார் ஐயா. அவங்க ரெண்டு பெரும், கீழே போட்டுருந்த பாயில உட்கார்ந்தாங்க. மருமகள்களையும் உட்கார சொன்னாரு ஐயா. அவங்க கொஞ்ச நேரம் தயங்குனாங்க. பிறகு.. உட்கார்ந்தாங்க.

ஐயாதான் பேச ஆரம்பிச்சாரு…

எனக்கு என்னவோ.. ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு மனசுல தோனுதுன்னு ஐயா சொல்லி முடிக்கிறதுக்குள்ள…

அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாதுன்னு, ஐயாவோட ரெண்டு புள்ளைங்களும் சொன்னாங்க. வேலாயுதமும் ஓடிப்போயி அவரு பக்கத்துல நின்னுகிட்டு, ஐயா அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாதுங்க ஐயா’ன்னு வருத்தப்பட்டு நின்னான்.

டேய் வேலாயுதம்… நீ கொஞ்ச நேரம், புள்ளைங்கள் வெளியில அழைச்சிக்கிட்டு போயி, வெளையாட்டு காட்டு… என்று ஒரு மொறைப்பு  மொறைச்சார் ஐயா.

அவன் முகம் அப்படியே மாறிப் போனது. ஐயாவின் சொல்லை மீற முடியாமல், பேரப்பிள்ளைகள அழைச்சிக்கிட்டு வெளியில போனான்.

அதன் பிறகு ரொம்ப நேரம் ஐயாவும், அவரது பிள்ளைகளும் பேசிக்கொண்டே இருந்தனர். அந்த பேச்சு வார்த்தையில் என்னென்ன நடந்தது? என்று வேலாயுதத்திற்கு தெரியாது. இருந்தாலும், ஐயா ஏதோ மனசளவுல தளர்ந்து போயிருக்கருன்னு மட்டும் அவனுக்கு தெரியும்.  ஐயாவோ, அவரோட புள்ளைங்களோ சொல்லாத வரைக்கும், நாம எதையும் கேட்க கூடாதுன்னு அவன் நெனைச்சான்.

ஏன்னா.. ஐயா எது சொன்னாலும், செஞ்சாலும், அதுக்கு பின்னால ஒரு நியாயம் இருக்கும்னு அவனுக்கு தெரியும்.

அதுக்கு பிறகு, ரொம்ப நேரம் கழிச்சிதான், வேலாயுதத்தை வீட்டுக்குள் அழைத்தனர். அவனும் குழந்தைகளோடு உள்ளே வந்தான்.

ஆனாலும், ஐயாவுக்கும் அவர் பிள்ளைகளுக்கு நடந்த உரையாடல் பற்றி யாரும் மூச்சு விடவே இல்லை. அன்று மாலை வரை ஒரு இறுக்கமான மன நிலையே தொடர்ந்தது.

ஐயாவோட புள்ளைங்க ரெண்டு பேரும் குடும்பத்தோட, அன்னைக்கு ராத்திரியே ரயில் ஏறி, பட்டணத்துக்கு கெளம்பிட்டாங்க. வேலாயுதம்தான், ரெண்டு பேரையும் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு போய், ரயில் ஏத்தி விட்டு வந்தான்.

போகும் வழியில், ஐயா புள்ளைங்க ஏதாவது சொல்லுவாங்க என்று வேலாயுதத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும், அவர்கள் எதுவும் சொல்லவே இல்லை. ஐயாவ பத்தரமா பார்த்துக்க என்று ஒரு வார்த்தையை தவிர, அவர்கள் வாயில் இருந்து எதுவுமே வரவில்லை.

**************

ஐயாவோட புள்ளைங்க எப்போ பட்டணத்துல இருந்து வந்துட்டு போனாலும், ஐயாவோட மொகம் அடுத்த சில நாட்கள், ரொம்ப பொலிவா இருக்கும். ஆனா, இந்த தடவ என்னவோ ஐயாவோட மொகத்துல அந்த பொலிவு இல்ல. இருந்தாலும், வழக்கத்த விட, ஐயாவ கொஞ்சம் கூடுதலாவே   கவனிக்க ஆரம்பிச்சான் வேலாயுதம்.

பண்ண வேலைங்க எல்லாத்துக்கும், தனித்தனியா ஆளு இருக்குறதால, ஐயாவ விட்டு பிரியாம, கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டான் வேலாயுதம்.

நீ ஏண்டா என்னையே சுத்தி, சுத்தி வர்றே… நான் நல்லாத்தானடா இருக்கேன். நீ போயி, ஒன்னோட வேலைய கவனின்னு ஐயா எவ்வளவோ சொல்லி பாத்தாரு. ஆனால், அவன் எதையும் கேக்குறதா இல்ல.

இப்போ எல்லாம், ராத்திரியில படுக்குறதுக்கு கூட, அவன் வீட்டுக்கு போறது இல்ல. ஐயா படுக்கை அறை பக்கத்துல இருக்குற, முற்றத்துலேயே துண்டை விரிச்சி படுத்துக்கிட்டான். எப்போல்லாம் முழிப்பு வருதோ, அப்பல்லாம் ஓடிப்போயி, பக்கத்துல போயி, ஐயா மூச்சி எல்லாம் நல்லா விடுறாரா?ன்னு பாத்துக்கிட்டே இருந்தான்.

எந்த பிரச்சினையும் இல்லாம நல்லாதான் போயிக்கிட்டு இருந்தது. ஆனா, அமாவாச அன்னிக்கி மொதல் நாள், காலையில அஞ்சி மணிக்கெல்லாம், வேலாயுதம், வேலாயுதம்னு ஐயா கூப்புடுற குரல் கேட்டது.

அந்த குரல் கேட்டு, அடிச்சி புடிச்சி எழுந்து ஐயா அறைக்கு ஓடினான். அங்க போயி பாத்தா, ஐயா தூக்கத்துல கத்திக்கிட்டு இருக்கிறது தெரிஞ்சுது.

அப்படியே ஐயாவ லேசா தட்டி எழுப்பி… ஏன் ஐயா,   தூக்கத்துல இப்படி வேலாயுதம், வேலாயுதம்னு.. கூப்புடுறீங்க’ன்னு கேட்டான்.

அப்போதான், அவருக்கே கனவு கண்ட ஞாபகம் வந்தது. அடடா.. நான் கனவு கண்டு கத்தி இருக்கேண்டா.. நீ போயி தூங்குன்னு சொல்லிட்டு சிரிச்சாரு ஐயா.

அவனும் சிரித்துக் கொண்டே….  அப்படியா ஐயா… கனவுல என்ன நடந்துச்சின்னு சொல்லுங்க என்றான் ஆர்வமாக.

அதுவா? அம்மா திடீர்னு கனவுல வந்து, ஏன் இப்படி எளச்சி போயிட்டீங்க?ன்னு கேட்டா.. யாரும் உங்கள சரியா கவனிக்கிறது இல்லையா?ன்னும் கேட்டா. இல்லையே.. நான் நல்லா தானே இருக்கேன். என்னயதான் வேலாயுதம் நல்ல கவனிச்சிக்கிறானே’ன்னு சொன்னேன். அப்படியா அவனை கூப்புடுங்க, நான் அவன்கிட்ட பேசணும்’னு அம்மா சொன்னா. அதான் உன்னைய கூப்பிட்டேன்’ன்னு சொல்லிட்டு ஐயா மீண்டும் சிரித்தார்.

அதைக்கேட்டு அவனும் சிரிக்க ஆரம்பிச்சான். இருந்தாலும், செத்துப்போன அம்மா, ஐயா கனவுல வந்தாங்கன்னா.. ஐயாவ கூப்புட வந்திருப்பாங்களோ’ன்னு நெனைக்கும் போதே.. அவனுக்கு நடுக்கம் வந்துடுச்சி. அந்த நடுக்கத்தை, ஐயாகிட்ட காட்டிக்காம, அப்படியே அங்கிருந்து வெளியில வந்துட்டான். அதுலேருந்து, அவனுக்கு ஒரு பயம் தொத்திக்கிச்சு.

அதனால், அன்னைக்கி முழுக்க ஐயாவ விட்டு அவன் கொஞ்சம் கூட நகரவே இல்ல. அவன் ஏற்கனவே சொன்னது போல, நாய்க்குட்டி மாதிரியே, அன்னிக்கி முழுக்க ஐயாவ சுத்தி, சுத்தி வந்தான்.

இப்படியே, ராத்திரி ஒன்பது மணி வரைக்கும்,  ஐயாவ தனியா விடாம, அவரு கூடவே ஒட்டிக்கிட்டே இருந்தான். அவரு போயி படுத்த பிறகுதான் வெளியில வந்தான்.

ஆனாலும், இன்னைக்கி, அவரோட படுக்கை அறை வாசல் கதவ ஒட்டியே துண்ட விரிச்சி தூங்குனான். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ, போயி, போயி, ஐயா நல்லா தூங்குறாரா? நல்லா மூச்சு விடுறாரா?ன்னு பாத்துக்கிட்டே இருந்தான். எந்த பிரச்சினையும் இல்ல. அதனால ராத்திரி மூணு மணிக்கும் மேல, அவனும் அப்படியே அசந்து தூங்கிட்டான்.

உடம்பு அசதியில், அவன் ஆறு மணி ஆகியும் எழுந்திரிக்கவே இல்ல. வீடு வாசல் பெருக்கி, கோலம் போடுறவ வந்து, கதவ தட்டுன சத்தத்துலதான் அவன் ஓடிப் போயி, வாசல் கதவ திறந்தான்.

என்ன இவ்வளவு நேரம் தூக்கம். ஐயா இவ்வளவு நேரம் காலையில் தூங்க மாட்டாரே… ஏதாவது ஒடம்பு சரியில்லையா? ஐயாவுக்கு என்ன ஆச்சுன்னு அவள் கேட்டதுதான் தாமதம். அப்படியே தாண்டி குதிச்சி, ஐயா படுக்கை அறைக்கு ஓடிப்போயி பார்த்தான். அந்த காட்சிய பாக்குற அளவுக்கு அவனுக்கு தைரியமே இல்ல.

கண்ணு ரெண்டும் திறந்த நிலையில, வாயும் மூடாம, அவர் மூச்சு நின்று போய் படுக்கையில் கிடந்தார்.

ஐயையோ…  மோசம் போயிட்டேனே’ன்னு, தலையில் அடித்துக்கொண்டு, அந்த அறை முழுக்க விழுந்து புரண்டு,  சத்தம் போட்டு அழ ஆரம்பித்து விட்டான். அவனோட அழுகைய,  அவளால கட்டுப்படுத்தவே முடியல. அந்த சத்தத்துல, தெரு ஜனமே ஐயா வீட்டுக்கு வந்துடுச்சி.

அவன் அழுகைய நிறுத்த எல்லாருமே என்னென்னவோ செஞ்சி பார்த்தாங்க. எதுவும் முடியல. ஒரு கட்டத்துல, அவன் துக்கம் குறையிற வரைக்கும் அழட்டும். அவன விட்டுடுங்க’ன்னு சொல்லிட்டாங்க.

அதுக்கு பிறகுதான், நீயே இப்படி அழுதா எப்படி? ஐயாவோட புள்ளைங்களுக்கு எல்லாம் செய்தி சொல்லணும். ஐயாவ எந்த கொறையும் இல்லாம அடக்கம் பண்ணனும். நீ இப்படி அழுது, அழுது துடிச்சிக்கிட்டு இருந்தா.. நாங்க என்ன செய்யிறதுன்னு சொல்லி, கொஞ்சம், கொஞ்சமா அவனோட அழுகைய கட்டுப்படுத்துனாங்க.

ஐயா ரொம்ப நல்ல மனுசன்டா. நல்லா வாழ்ந்து எல்லாருக்கும் செய்ய வேண்டியது எல்லாத்தையும் செஞ்சி, எல்லாரு மனசுலயும் நிறைஞ்சி, நல்லா வாழ்ந்தவரு. அதனாலதான், படுக்கையில கெடந்து துன்பப்படாம, எந்த தொந்தரவும் இல்லாம, அவரு தூக்கத்துலே ஆண்டவன் கிட்ட போயிருக்காரு.

அவருக்கு எந்த குறையும் இல்லாம நிறைவா அடக்கம் பண்றது நம்ம கடமை. அதுவும் அவரோட புள்ளையாவே வளர்ந்த நீ,  இப்படி செய்யலாமான்னு ஒரு வழியா அவன தேத்துனாங்க.

அதுக்கு பிறகுதான் அவன் கொஞ்சம் இயல்பான நிலைக்கு வந்தான். நடக்க வேண்டிய காரியங்களை செய்ய ஆரம்பித்தான். (தொடரும்)