“ஒத்தக்காளை” …. பாகம்  – 3 :  குறு நாவல்!

-ராஜேந்திரன்

பத்து நிமிட வாசிப்பு….

புலி பாயத் தயாராவதற்குப் பதுங்குவது போல, வேலாயுதம் அமைதியாக இருந்து, காளைகள பந்தயத்துக்கு தயார் தயார்படுத்தி விட்டான். அவனும் தயார் ஆகி விட்டான். எப்போ அழைப்பு வருதோ அப்போ, கலந்துக்க வேண்டியதுதான் பாக்கி.

ஐயா சொன்ன கல்யாண தேதி வந்திடுச்சி. அன்னிக்கு முதல் நாள் முழுக்க, வேலாயுதம் தூங்கவே இல்ல. அடுத்த நாள், பந்தயத்துல ஜெயிச்சி, ஐயாவ தல நிமிர வச்சாதான் அவன் நிம்மதியா தூங்குவான்.

சரியா, காத்தால நாலர மணிக்கே, ஐயா வீட்டு வாசல்ல கொண்டு போயி, வண்டிய நிறுத்துனான்.

அடுத்த அரை மணி நேரத்துல, ஐயாவும், பட்டு வேட்டி, ஜிப்பா, அங்க வஸ்திரத்தோட, ஜவ்வாது வாசன கமகமக்க, வண்டியில ஏறி உட்கார்ந்தாரு.

ஐயா, போகலாம்னு, உத்தரவு குடுத்த உடனே, “ஹேய்” னு ஒரு சத்தம் குடுத்து, காளைகளோட முதுகுல தட்டிக் குடுத்தான். அடுத்த நொடியே, காளைங்க சீறிப்பாய ஆரம்பிச்சிடுச்சி.

அப்படியே வந்த வண்டிய, ஊர் எல்லை வந்ததும் நிறுத்தினான் வேலாயுதம்.

எண்டா வண்டிய நிறுத்துறே’ன்னு கேட்டார் ஐயா.

இன்னும், அவரு வண்டி வரலையே’ன்னு சொன்னான் அவன்.

அவன் வந்தா என்ன? வரலேன்னா என்ன? நீ பாட்டுக்க வண்டிய ஒட்டிக்கிட்டு போ’ன்னார்.

அதைக்கேட்டு அவன் முகம் மாறிப்போனது. அப்படியே… திரும்பி.. ஐயாவின் முகத்தை ஏக்கத்துடன் கெஞ்சுவது போல பார்த்தான்.

அவன் அப்படி பார்த்தது அவருக்கு சங்கடமாக இருந்தது. சரி.. சரி.. நடத்து என்றார்.

அப்பாடா’ன்னு நிம்மதி பெருமூச்சு விட்ட அவன், அப்படியே, பங்காளி வண்டி வரும் வரை, காத்துக்கொண்டு நின்றான்.

ஒரு கால் மணி நேரம் கழித்து, அதே காளைகள் பூட்டப்பட்ட வண்டியில, பழைய தோரணையில, ஐயாவோட பங்காளி வந்தார்.

போகட்டும், போகட்டும் என்று சொல்வது போல, அந்த வண்டியை முன்னே செல்ல விட்டான். அது ஒரு கொஞ்ச தூரம், முன்னே போன பிறகு, தன்னோட காளைகளோட முதுகுல செல்லமா.. ஒரு தட்டு தட்டுனான்.

ஐயா உத்தரவ, வேலாயுதம் எதிர் பார்த்த மாதிரி, வேலாயுதம் உத்தரவ எதிர்பார்த்த, காளைங்க ரெண்டு, நாலுகால் பாய்ச்சலுல பாய ஆரம்பிச்சுது.

வேலாயுதம் வண்டி வேகமா சீறி வர்றதப் பாத்த, பங்காளி வண்டி இன்னும் வேகம் எடுத்துச்சி. அந்த வண்டியில பூட்டப்பட்ட காளைங்க, வாயு வேகத்துல பறக்க ஆரம்பிச்சுது.

இருந்தாலும், விடுவானா வேலாயுதம், காளைங்க ரெண்டையும், இப்போ முன்னைவிட அதிகமா வெரட்டுனான். இதுங்களும் அந்த காளைகளுக்கு ஈடு குடுத்து, மின்னல் வேகத்துல பாய ஆரம்பிச்சிடுச்சி.

ரெண்டு வண்டியோட காளைங்களும், பாய்ஞ்சி, பாய்ஞ்சி ஓடுன வேகத்துல, அந்த பாதையில பறந்த புழுதி, மேக மூட்டம் மாதிரி மாறி, கண்ணையே மறைச்சுது.

இருந்தாலும் கொஞ்ச நேரத்துலயே, வேலாயுதம் வண்டி பங்காளி வண்டிய நெருங்கிடுச்சி. அடுத்து அதை முந்தி, முன்னாடி போறதுக்கு முயற்சி பண்ணுனான் வேலாயுதம்.

எப்படியும், வேலாயுதம் நம்ம வண்டிய முந்திடுவான்னு முடிவுக்கு வந்த பங்காளி வண்டிக்காரன், இவனுக்கு பக்கவாட்டுல வழி விடாம, முந்துறத தடுத்துக்கிட்டே இருந்தான்.

இப்படியே ரெண்டு மைல் தூரத்துக்கு இந்த போராட்டம் நீடிச்சிது. வேலாயுதம், எவ்வளவோ முயற்சி பண்ணியும், முன்னாடி இருக்குற வண்டிக்காரன், சைடு குடுக்காமலே ஒட்டுறத, பார்த்து வெறுத்து போயிட்டான்.

இனியும், இப்படியே போனா சரி வராதுன்னு நெனச்ச வேலாயுதம், உட்கார்ந்து ஒட்டாம, எழுந்து நின்னு, வேகமா சத்தம் குடுத்து ஓட்ட ஆரம்பிச்சான்.

அவ்வளவுதான், கொஞ்சம் விட்டா.. அப்படியே அந்த வண்டிய, அலேக்கா தாண்டி, முன்னாடி போய் குதிக்கிற அளவுக்கு, காளைங்க சீறிப் பாய்ஞ்சிதுங்க.

இனி, வேற வழி இல்லன்னு நெனச்ச, வண்டிக்காரன், லேசா ஒதுங்கினான். இதுதாண்டா, சமயமுன்னு, முண்டி அடிச்சி முன்னால போனான் வேலாயுதம்.

அதுக்கு பிறகு, அவன் வண்டி ஒட்டுறதாவே நெனைக்கல, ஏரோ பிளேன் ஓட்டுற மாதிரியே நெனச்சிக்கிட்டு ஓட்ட ஆரம்பிச்சான்.

அந்த சந்தோஷத்துல, ஐயாவோட மனசு, உற்சாக மிகுதியில, காளைங்கள விட, வேகமா துள்ளிக் குதிச்சிருக்கும். இருந்தாலும், அத கொஞ்சம் கூட வெளியில காட்டிக்காம அப்படியே, எந்த உணர்ச்சியும் இல்லாத மாதிரி உட்கார்ந்திருந்தாரு.

வேலாயுதம் அதோடு விடுவான்னு பார்த்தா, விடுற மாதிரி தெரியல. முன்னைய விட இப்போதான், இன்னும் வேகமா வண்டிய ஓட்டுனான். அடுத்த கால் மணி நேரத்துல, கல்யாண வீடு வந்து நின்னது வண்டி.

ஐயா எதுவுமே சொல்லல. அப்படியே எறங்கி, நேரா கல்யாண பந்துலுல நுழைஞ்சிட்டாரு.

அவனும், வண்டிய ஓரமா கொண்டுட்டு போயி, ஒரு மரத்தடி நெழல்ல விட்டுட்டு, மாடுகள அவுத்து, மரத்தடியில் கட்டி போட்டுட்டு, வண்டி கவணையில இருந்த வைக்கோல அள்ளிப்போட்டான்.

இருந்தாலும், உற்சாகம் தாங்க முடியாதவனா, அந்த ரெண்டு மாட்டையும் கழுத்துல கைய குடுத்து, கட்டிப்புடிச்சி, ஒவ்வொன்னுக்கும் ஒரு முத்தம் குடுத்தான்.

**************

ஐயாவ தலை நிமிர வைக்கணும்’னு எடுத்த சபதம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும்’னு அவன் கனவுல கூட நெனச்சி பார்க்கல. இனிமே, செத்தாலும், என்னோட கட்ட நிம்மதியா வேகும்னு.. தனக்குத்தானே சொல்லிக்கிட்டான். அப்படியே.. வண்டியில படுத்துக்கிட்டு சந்தோஷத்துல மிதந்துகிட்டு இருந்தான்.

கல்யாணம் முடிஞ்சி, காலை சாப்பாட்டையும் முடிச்சிக்கிட்டு, ஐயா வந்தாரு. இவனும், வண்டிய பூட்டி ஐயாவ ஏத்திக்கிட்டு ஊருக்கு திரும்பினான்.

வர்ற வழி முழுக்க ஐயா எதையாவது பேசுவாருன்னு நெனச்சிக்கிட்டே இருந்தான். ஆனா, அவரு எதுவுமே பேசவே இல்ல.

இப்படி ஒரு ஜெயிப்பு ஜெயிச்சி குடுத்துருக்கிறோம்… ஐயா வாயில இருந்து, பாராட்டுற மாதிரி ஒரு வார்த்த கூட வராதது, அவனுக்கு ரொம்ப சங்கடமா இருந்துது.

என்ன நடந்தா என்ன? நாம ஒன்னும் ஐயாவ விட நல்லது கெட்டது தெரிஞ்ச ஆளு இல்ல. நாம் எடுத்த சபதத்த நெறைவேத்திட்டோம்.  அதுவே பெரிய சந்தோஷம்’னு மனசுக்குள்ள புளங்காகிதம் அடைஞ்சான்.

ஆனாலும், ஐயா அதப்பத்தி ஒரு வார்த்த கூட பேசாதது, அவன் மனசுக்குள்ள என்னென்னவோ, குழப்பத்தையோ உண்டாக்கிக்கிட்டு இருந்துது.

ஓடிக்கிட்டு இருந்த வண்டி, ஐயா வீட்டு வாசல்ல வந்து நின்னது. ஐயா சொல்லாம, கொள்ளாம வண்டிய விட்டு எறங்கி வீட்டுக்குள்ள போயிட்டாரு. வண்டிதான் நின்னுச்சே தவிர, இவன் மனசுல ஓடுன குழப்பம் இன்னும் நிக்கவே இல்ல.

ஆயிரம் இருந்தாலும், நாம ஒரு வண்டிக்காரன் தானே? நம்மல எல்லாம் முதலாளிங்க பாராட்டனும்’னு அவசியம் இல்லையேன்னு தனக்குத் தானே பேசிக்கொண்டான்.

எதை எதையோ நெனச்சி, மனசு ஒரு பக்கம் கொழம்பிக்கிட்டே இருந்தாலும், மறுபக்கம், தன்னோட வேலைய செஞ்சிக்கிட்டே இருந்தான் வேலாயுதம்.

நேரா வண்டிக் கொட்டாயில போயி வண்டிய நிறுத்திட்டு, மாடுகள அவுத்து, தண்ணி காட்டி தொழுவத்து கவணையில கொண்டு போயி, கட்டி, வைக்கோல் அள்ளி போட்டான்.

பந்தயத்துல ஜெயிச்சும், இப்படி சந்தோஷப்பட முடியாம போயிடுச்சேன்னு, அவனுக்குள்ள ஒரு வெறுப்பு, லேசா தல காட்ட ஆரம்பிச்சது.

அந்த நேரம் பார்த்து, ஐயாவுக்கு சமச்சி கொடுக்குற வேம்பு அங்கே வந்தாள்.

என்ன ஆத்தா.. இவ்வளவு தூரம்’னு கேட்டான்.

ஒண்ணுமில்ல. ஐயா, உன்னைய, இங்கயே காத்திருக்க சொன்னாரு’ன்னு சொல்லிட்டு, பொசுக்குன்னு கிளம்பினாள்.

ஐயா எதுக்காக இங்க காத்திருக்க சொன்னாருன்னு அவகிட்ட கேட்டான்.

எங்கிட்ட எதுவும்.. சொல்லலடா தம்பி.. இத மட்டும்தான் சொல்ல சொன்னாருன்னு சொன்னாள் வேம்பு.

அவனுக்கு இன்னும் கொழப்பம் அதிகமாயிடுச்சி. என்னவா இருக்கும், சமைக்கிற ஆத்தா ஏன் இப்படி சொல்லிட்டு போவுதுன்னு, யோசிக்கும்போதே.. ஐயா முன்னாடி வர, ஐயா பின்னாடி வேம்பு ஆத்தா இடுப்புல ஒரு கூடைய சொமந்துக்கிட்டு வந்தாள்.

ஐயா.. அப்போதான் வேலாயுதம் மொகத்த நேரடியா பாத்தாரு… லேசா சிரிச்சாரு.. இவனும் சிரிச்சான்.

வண்டிய கொட்டாயில இருந்து இழுத்துட்டு வந்து மாடுங்கள பூட்டுடா’ன்னு சொன்னாரு ஐயா.

அவன் மறு வார்த்தை எதுவுமே பேசல. ஐயா சொன்ன மாதிரியே செஞ்சான்.

ம்.. வண்டியில ஏறி உக்காருன்னு சொன்னார். வண்டி ஓட்டுறதுக்கு தயாரா உட்கார்ந்தான்.

கொஞ்ச தூரம் எட்டி நின்னுக்கிட்டு இருந்த, சமையல் ஆத்தாவ பாத்தாரு. எறக்கி வச்ச கூடைய மறுபடியும் ஆத்தா எடுத்துட்டு வந்து ஐயா பக்கத்துல வச்சிது.

கூட மேலே இருந்த துணிய வெலக்குன ஐயா, அதுல இருந்து ரெண்டு அட்டப் பெட்டிய கையில எடுத்தாரு. அந்த ரெண்டையும் பிரிச்சி, ஒவ்வொண்ணுல இருந்தும், ஒவ்வொரு லட்டு எடுத்தாரு. வண்டிய ஓட்டுறது மாதிரி உட்கார்ந்து இருந்த வேலாயுதம்கிட்ட வந்து, வாய திறக்க சொன்னாரு.

அவன் வாய தெறந்ததும், அவரே அந்த ரெண்டு லட்டையும் ஒன்னு ஒண்ணா அவன் வாயில ஊட்டி விட்டாரு. ஐயா செய்யிற வேலைய பாத்து அவனுக்கு தல கால் புரியல.

அடுத்தது, ஒவ்வொரு பெட்டியையும் எடுத்து ஒவ்வொரு மாட்டுக்கும் குடுத்தாரு. மாடுங்க ரெண்டும், அந்த இனிப்புகள, ரொம்ப ரசிச்சி சாப்பிட்டுச்சி.

உடனே, ஒரு தாம்பாளத்துல கற்பூரத்த ஏத்தி, வேலாயுதம், மாடுங்க, வண்டின்னு மூனுத்துக்கும் சேர்த்து, அப்படியே சுத்தி திஷ்டி கழிச்சாறு.

வேலாயுதம், தன்னோட வாழ்நாள்லியே இப்படி ஒரு சந்தோஷத்த அனுபச்சிருக்க மாட்டான். அதுவும், ஐயாவே குடுக்குற பாராட்டு இல்லையா அது.

அந்த நேரம், ஐயாவ உத்து பாத்த வேலாயுதத்துக்கு, அவர் மொகத்துல ஆயிரம் நிலவுங்க ஒன்னு சேர்ந்து வெளிச்சம் பாச்சுன மாதிரி பிரகாசமாவும், குளிர்ச்சியாவும் இருந்துது.

அடுத்து என்ன நெனச்சாரோ தெரியல. அப்படியே ரெண்டு மாட்டுக்கும் அதுங்களோட கன்னத்துல முத்தம் குடுத்தார்.

காள மாடுங்களோட தவத்த மெச்சி, சிவனே நேரடியா வந்து தரிசனம் குடுத்த மாதிரி நெனச்சிதுங்களோ என்னவோ, மாடுங்களும் அப்புடியே அசையாம நின்னு, ஐயா குடுத்த முத்தத்த ஏத்துக்கிச்சிங்க.

சரி.. வண்டிய அவுத்து விட்டுட்டு சீக்கிரமா வீட்டுக்கு வாடா’ன்னு சொல்லிட்டு ஐயா கெளம்பிட்டாரு.

வண்டியில இருந்த, மாடுகள அவுத்து கவணையில மறுபடியும்  கட்டிக்கிட்டு இருந்தான் வேலாயுதம்.

அப்போ, அங்க நின்ன சமையல்கார வேம்பு ஆத்தா, அம்மா இறந்த பிறகு, ஐயா மொகத்துல இப்படி ஒரு சந்தோஷத்த இன்னிக்கிதான்  பாக்குறேன்,னு, கண் கலங்க சொன்னப்போ, வேலாயுதமும் கொஞ்சம் கலங்கித்தான் போனான்.

***********

சொல்லாம செய்யிறதுதான் பெரிய மனுஷனுக்கு அழகுங்கிறத ஐயா நிரூபிச்சிட்டாரு. ஐயா ஒரு வார்த்த பாராட்டி இருந்தா கூட, அது வேலாயுதத்த பொறுத்தவரைக்கும் பெரிய வெகுமதிதான். ஆனா இப்படி, கற்பூரம் எல்லாம் ஏத்தி, சுத்தி போடுவாருன்னு அவன் கொஞ்சம் கூட நெனைக்கல.

இப்போ வீட்டுக்கு வேற வா’ன்னு சொல்லிட்டு போறாரே, இன்னும் என்னென்ன செய்யப் போறாரோன்னு, அவன் திக்கு முக்காடிக்கிட்டு இருந்தான்.

அளவுக்கு அதிகமா வருத்தப்பட்டாலும் கண்ணுல தண்ணி வரும். அளவுக்கு அதிகமா சந்தோஷப்பட்டாலும் கண்ணுல தண்ணி வரும். இப்போ, அவனுக்கு ரெண்டாவது வகையில வந்த ஆனந்த கண்ணீரு.

அந்த ஆனந்த கண்ணீரோட, ஐயா வீட்டுக்கு போனான் வேலாயுதம். அங்க ஐயா குடுத்த இன்ப அதிர்ச்சியில இருந்து, அவனால மீளவே முடியல.

ஒரு தாம்பாளத்துல பட்டு வேட்டியும், பட்டு துண்டும் வச்சி  வேலாயுதத்துக்கு குடுத்தாரு ஐயா.

அதப்பாத்து, அவனுக்கு கை காலு எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சி. ஐயா இதெல்லாம் வேணாம் ஐயா. என்னோட காலம் உள்ள வரைக்கும், உங்க காலடியிலேயே நான் கெடந்தா போதும் ஐயா’ன்னு, அவரு குடுத்தத ஏத்துக்க மறுத்தான்.

ஐயாவ எதுத்து பேசுற அளவுக்கு ஒனக்கு தைரியம் வந்துச்சா?ன்னு சொல்லிக்கிட்டே..  முறைத்தபடி ஒரு பார்வை பாத்தாரு. அவ்வளவுதான், அவரு குடுத்த தாம்பாளத்த வாங்கி, பக்கத்துல வச்சிட்டு அப்படியே, அவரு காலுல நெடுஞ்சான் கெடையா விழுந்தான்.

பாதம் பணிஞ்ச வேலாயுதத்தோட தோள் மேல கைய வச்சி, அப்படியே தூக்குன ஐயா, அப்படியே அவன் முதுகுல தட்டிக்கொடுத்தாரு.

ஐயா கை மேல படுறப்போ, அம்மா, அப்பா, அக்கா எல்லாரும், அவன சின்ன புள்ளையா இருக்குறப்போ தூக்கி கொஞ்சுனது மாதிரியே ஒரு உணர்வுல, அவன் ஒடம்பு அப்படியே சிலிர்த்து போனது. உடலில் லேசான ஒரு நடுக்கம் ஏற்படுவதையும் உணர்ந்தான்.

அவனுக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல… நல்லா வெளஞ்சி முத்திப்போன கதிரு அறுவடைக்கு தயாரா.. ஒரு பக்கம் சாய்ஞ்சி நிக்கிற மாதிரி, புகழ் மயக்கத்துல நின்னான் அவன்.

அவன் செஞ்ச சாதனைக்கி, குடுத்த பரிசும் மரியாதையும் போதாதுன்னு, ஐயா நெனச்சாரோ என்னவோ தெரியல.

அடுத்து, ஜிப்பாவின் விலா பக்கம் இருந்த பையில, கைய விட்டு ஒரு தங்க சங்கிலிய எடுத்து, அப்படியே, வேலாயுதம் கழுத்துல போடப் போனாரு.

ஐயா.. வேணாம்னு… சொல்ல அவன் வாய், துடியா துடிச்சுது.

ஆனா, அவரு கண்ண பாத்த வேலாயுதம், அந்த கண்ணு போட்ட உத்தரவ முடியாம, மழை அமிர்தத்த விழுங்குன சிப்பி மாதிரி, அப்படியே ஏத்துக்கிட்டான்.

எதுலயும் மொதல் ஆளா இருக்கணும்னு விரும்புற ஐயா, தனக்காகத்தான், அந்த எண்ணத்த மாத்திக்கிட்டு இருந்திருக்காரு’ன்னு நெனைக்கும்போது அவன், ஐயாவ நெனச்சி ரொம்ப பெருமைப்பட்டான்.

அதே சமயம், பங்காளி வண்டிய முந்துன விஷயத்துல, அவரு மனசு, ஒரு கொழந்த மாதிரி சந்தோஷப்படுறத நெனச்சி அவனுக்கு, ரொம்ப பெருமையாவே இருந்தது.

தல குனிய வச்ச ஐயாவ, மீண்டும் தல நிமுர வச்சதுல, அந்த காள கண்ணுங்களுக்குதான் முக்கிய பங்கு இருக்கு. நாம ஒட்டுனதோட சரி’ன்னு நெனச்ச வேலாயுதத்துக்கு, அந்த காள மாடுங்க மேல ரொம்ப பாசம் வந்துடுச்சி.

சாதாரணமாவே ஆடு மாடுகங்க மேல ரொம்ப பிரியமா இருக்குற வேலாயுதம், அந்த சம்பவத்துக்குப் பிறகு, அந்த ரெண்டு காள கண்ணுங்க மேல மட்டும் இன்னும் அதிகமா பாசம் செலுத்த ஆரம்பிச்சான்.

புண்ணாக்க ஊற வச்சி, கழனி தண்ணியில, தவுட்ட கொட்டி கிளறிவிட்டு , மாடுங்களுக்கு தீனி போடும் போதெல்லாம், அந்த ரெண்டு மாடுங்களுக்கு மட்டும், ரெண்டு மடங்கு புண்ணாக்க போட ஆரம்பிச்சான்.

ரொம்ப நாளு வரைக்கும் அந்த ரெண்டு மாட்டையும், பாரம் எத்துற  வண்டியிலயோ, ஏர் கலப்பையிலேயோ கட்டாம, ஐயாவோட சவாரிக்கு மட்டுமே வச்சிக்கிட்டான்.

மாட்டு தொழுவம் பக்கம் எப்பல்லாம் போறானோ, அப்பல்லாம், அந்த ரெண்டு மாடுங்க மேலதான், இவனோட கண்ணுங்க போகும்.

வாழப்பழம், பொரி உருண்ட, கடல முட்டாயி, தேங்கா, பொட்டுக்கடலை, வேர்க்கடல, பொரி அரிசி’ன்னு, எத திங்கிறானோ, அதுல ஒரு பங்க, அந்த மாடுங்களுக்கு குடுக்காம அவன் திங்க மாட்டான்.

ஐயாவும் அப்படித்தான், எப்போவாவது மாட்டுத் தொழுவம் பக்கம் வந்தா, அந்த ரெண்டு மாட்டுக் கிட்டயும் போயி அதத் தடவிக் கொடுப்பாரு.

தன்ன மாதிரியே ஐயாவும், அந்த மாடுங்கள கவனிக்கிறத பாத்து அவனுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

இருந்தாலும், கொஞ்ச நாள் கழிச்சி, அந்த மாடுங்களையும், ஒழவுக்கு பயன்படுத்துற மாதிரி ஆயிடுச்சி. அதுங்களும், வேலாயுதம் மாதிரியே வஞ்சனை இல்லாம உழைக்க ஆரம்பிச்சிதுங்க.

அதனால், அது ரெண்டும் அவன பொறுத்த வரைக்கும் மாடுங்க இல்ல. அவனோட தம்பிங்க. கூட்டாளிங்க. அப்படித்தான், அவன் அதுங்க கிட்ட நடந்துக்கிட்டான்.

ஐயா – வேலாயுதம் – மாடுங்க’ன்னு அந்த முக்கோண உறவு ரொம்ப வலுவாவே இருந்தது. (தொடரும்)