“ஒத்தக்காளை” …. பாகம்  – 2 : குறு நாவல்!

-ராஜேந்திரன்

பத்து நிமிட வாசிப்பு….

ஐயா அடிச்ச அடியும், காலால எத்துன எத்தும் அவனுக்கு கொஞ்சம் கூட வலிக்கவே இல்ல. ஆனா, ஐயாவுக்கு தன்னால, ஒரு தல குனிவு ஏற்பட்டிடுச்சே. அதுக்கு நாம காரணமா ஆயிட்டோமேங்குற, குற்ற உணர்ச்சி அவன் மனச புழிய ஆரம்பிச்சிடுச்சி. அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலைமோதி அவனை சின்னா பின்னமாக்கிக் கொண்டிருந்தன.

பத்து பன்னண்டு வயசுல இந்த பண்ணைக்கு வந்ததுல இருந்து, ஐயா ஒரு வார்த்த கூட நம்மகிட்ட கடுமையா பேசுனது கெடையாது. அப்படிப்பட்டவரு ஆத்தரப்பட்டு பேசி, வண்டிய விட்டு கீழ எறங்கி நடக்குற அளவுக்கு, அவரு கவுரவத்து பங்கம் ஏற்படுத்திட்டோமே. இப்போ என்ன செய்யிறது?

எது நடக்கக் கூடாதுன்னு நெனச்சொமோ… அது நடந்து போச்சு. நம்ம கையில என்ன இருக்கு?. எல்லாம் ஆண்டவன் விட்ட வழி. வழக்கமா, எந்த வண்டியாவது, ஐயா வண்டிய முந்துச்சின்னா, ஒன்னு வண்டிக்காரன் வேலைய விட்டு போவான். இல்லேன்னா.. மாடுங்க தொழுவத்த விட்டு போகும்.

ஆனா, நம்மல பொறுத்த வரைக்கும், ஐயாவுக்கு எந்த கஷ்டத்தையும் குடுக்காம, நாமலே வேலைய விட்டு நின்னுடனும்.

ஐயாவுக்கு வண்டி ஓட்டுற தகுதி எனக்கு இல்ல. அவருக்கு தல குனிவ உண்டாக்குன நான், இனிமே எந்த வண்டியிலேயும் உட்காரவும் கூடாது. ஓட்டவும் கூடாது.

நாம வேலைய விட்டு நின்னுடலாம். ஆனா நமக்கு, பண்ணை, ஐயா, ஆடு மாடுங்க, வண்டிய விட்டா வேற எதுவும் தெரியாதே.

இருக்கட்டும் அதனால என்ன? உன்னைய நம்பி வண்டியில ஏறி உட்கார்ந்த ஐயாவுக்கு, இப்படி ஒரு தல குனிவ ஏற்படுத்துன ஒனக்கு, தண்டனை வேணாமா?

இப்படி அவன் மனது, ஆயிரம் எண்ண அலைகளின் தாக்குதலால் நிலை குலைந்து போய் இருந்தது.

மாட்டின் தலக்கயித்த புடிச்சி நடந்தே கொண்டு வந்த வண்டி, பண்ணைக்கும் வந்துடுச்சி.

மாடுங்கள  வண்டியில இருந்து அவுத்து, தண்ணி காட்டி, கவணையில் கொண்டு போய் கட்டி, வைக்கோல் அள்ளி போட்டான். வண்டியை கொண்டு போய், கொட்டாய் நிழலில விட்டான்.

அப்படியே, கொஞ்ச நேரம், அந்த பண்ணையோட தொழுவத்த சுத்தி, கண்ணீர் சிந்த, அவனோட கண்கள்  துழாவி, துழாவி பார்த்தன.

இதுதான், உனக்கும் பண்ணைக்கும் ஏற்பட்ட உறவோட கடைசி நாள். நல்லா பாத்துக்க. இனி, உனக்கு இங்கே இடமே கெடையாதுன்னு, அவன் உள் மனசு சொல்லிக்கிட்டே இருந்தது.

அப்போ சூரியன் உச்சியில இருந்து பிரகாசமா சுட்டு எரிச்சாலும், அவனுக்கு என்னவோ, இந்த உலகமே இருண்டு போன மாதிரி இருந்தது.

பண்ணையில வேலை செஞ்சிக்கிட்டு இருந்த யாரும், அவன்கிட்ட பேசவே இல்ல.

மனச, முழுசா அங்கேயே விட்டுட்டு அப்படியே, அவன அறியாம, யாரு கிட்டேயும் சொல்லாம கொள்ளாம, அவனோட கால்கள் வீட்டை நோக்கி நடந்தன.

**********

பண்ணையில இருந்து வீட்டுக்கு வந்த வேலாயுதத்துக்கு, அடுத்து என்ன செய்வது? என்றே தெரியவில்லை.

அன்னிக்கி முழுக்க அவன் சாப்பிடவும் இல்ல. தூங்கவும் இல்ல. எதையோ பறிகொடுத்தது போல, அப்படியே வீட்டோட விட்டத்த, வெறிக்க வெறிக்க பார்த்துக்கிட்டே உட்கார்ந்து இருந்தான்.

மறு பக்கம், ஐயா சாப்புட்டாரா? இல்லையா? அவர் மனசு என்ன துடி துடிக்கும்?னு நெனச்சும் அவன் புழு மாதிரி, நெளிந்து கொண்டே இருந்தான்.

பண்ணையில வேலைக்கு சேர்ந்த நாள்ல இருந்து, இப்படி ஒரு வெறுமையை, இதுநாள் வரைக்கும் அவன் சந்திச்சதே இல்ல.

ஐயா விரல் நீட்டுற திசை எல்லாம் வேங்க மாதிரி பாய்ஞ்சி நின்னுதான் வேலாயுதத்துக்கு பழக்கம். இனி என்ன செய்யிறதுன்னு ஒரே குழப்பம்.

ஐயாவோட அந்த கம்பீரமான  குரல இனி கேட்க முடியுமா? அவர் மொகத்துல இனி எப்படி முழிக்க முடியும்? நாம குடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைக்கும்போதே அவனோட இதயம் அப்படியே நின்று விடுவது போல இருந்தது.

பங்காளி வண்டிய முந்த முடியாம, தோத்துப் போன மாடுங்கள வித்துடலாம். வண்டிய ஓட்டுன நானும் தானாவே வேலைய விட்டு நின்னுட்டேன்.

ஆனா, இதெல்லாம் ஐயாவோட தல குனிவ, நிவர்த்தி செஞ்சிடுமா’ங்குற கேள்வி, இப்போ வேலாயுதத்த ஆட்டிப்படைக்க தொடங்கிடுச்சி.

வேற வழி இல்லாம, வீட்டு தரையில துண்ட விரிச்சி படுத்தான். படுத்த ஒடனே தூங்கி பழக்கப்பட்ட அவனுக்கு, அன்னிக்கி ராத்திரி முழுக்க தூக்கமே வரல.

அப்படியே, புரண்டு, புரண்டு படுத்தான்… ஐயாவும்.. இப்படித்தான, தல குனிவு உண்டானதால, தூக்கம் இல்லாம தவிப்பாருன்னு அவன் நெனைச்சான்.

ஐயா, இது வரைக்கும் எத்தனையோ தடவ, நீயும் என்னோட புள்ள’தான்னு, வாய் நிறைஞ்சி சொல்லி இருப்பாரு. எனக்கு என்னென்ன தேவை’ன்னு தெரிஞ்சி, ஒவ்வொன்னா பாத்து பாத்து வாங்கி கொடுப்பாரு.

அப்படிப்பட்ட சாமி.. எப்படி எல்லாம் தூக்கம் இல்லாம.. தவிக்கிதோ’ன்னு நெனச்சி, நெனச்சி.. விடியிற வரைக்கும் தூங்கவே இல்ல.

அந்த மனப்போராட்டத்தின் ஊடே பொழுதும் விடிந்து விட்டது.

நினைவு தெரிஞ்ச நாளுல இருந்து, ஐயாவையும், பண்ணையையும் விட்டு அவன் தனிச்சி இருந்ததே இல்ல. ஐயாவும், பண்ணையும்தான் அவனோட உலகம்.

அவனால, அந்த உலகத்த பிரிஞ்சி இருக்குற கொடுமை என்ன?ன்னு அவன் இப்போ உணர ஆரம்பிச்சிட்டான்.

பண்ணையில வேலை செய்யிற ஆள் யாராவது வந்து, எதையாவது சொல்ல மாட்டாங்களா?ன்னு ஒரு எதிர்பார்ப்பும் அவனுக்கு இருந்தது.

ஆனா, யாருமே பண்ணையில இருந்து அவன பாக்குறதுக்கு வரவே இல்ல.

இப்படியே, ரெண்டாவது நாளும் இருட்டி விட்டது.. இன்னைக்கும்  தூக்கம் வராமலே புரண்டு, புரண்டு படுத்தான். நேற்றைய ராத்திரி போலவே, இன்றைய ராத்திரியும் ஐயாவின் நினைவு அவனை தூங்க விடாமல் செய்தது.

ராத்திரி மூணு மணி வரைக்கும், அவன் புரண்டு, புரண்டு படுத்தான். அதன் பிறகு அவன் எப்படியோ.. அசதியில் தூங்கி இருக்கிறான்.

காலை ஆறு மணி இருக்கும்… வேலாயுதம்.. வேலாயுதம் என்று ஐயா  கூப்பிடுவது போலவே இருந்தது அவனுக்கு.

மல்லாந்து படுத்த மேனிக்கு, அப்படியே விழித்து பார்த்தான் யாரும் இல்லை. நிச்சயம் இது மன பிரம்மையாகத்தான் இருக்கும் என்று மீண்டும் கண் மூடினான்.

திரும்பவும் வேலாயுதம்.. வேலாயுதம் என்று ஐயா கூப்பிடுவது போலவே இருந்தது.

நிச்சயம் இது ஐயாவின் குரல்தான்.. என்று அப்படியே அடித்து பிடித்து வெளியே வாசலுக்கு ஓடி வந்தான்.

அங்கே ஐயா.. தலை குனிந்து, எதையோ பறிகொடுத்தது போல நின்று கொண்டிருந்தார்.

அவரை அந்த கோலத்தில் பார்த்த வேலாயுதத்துக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை.. மூச்சே நின்று விடும் போல இருந்தது…

அப்படியே… ஓடிப்போய், அவர் காலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்தான். ஐயா.. என்னைய மன்னிச்சிடுங்க ஐயா… நான் ஒங்களுக்கு அவமானத்த தேடி தந்திட்டேன் என்று கலங்கி துடித்தான். அவனைக் கண்டு, அவருடைய… கண்களும் கலங்கின.

அடுத்து அவர் கேட்ட கேள்விதான்… அவனை சுக்கு நூறாக  உடைத்துப் போட்டு விட்டது..

எண்டா வேலாயுதம்… உன்னைய பார்க்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியலையே… ஒன்னால மட்டும் எப்படிடா முடியுது?ன்னு  சொல்லி, தாயை பிரிந்த ஒரு சிறு குழந்தையை போல, அவர், தேம்பி.. தேம்பி அழுதார்.

ஐயா அழுததைப் பார்த்து… அவனுக்கு ஈரக் குலையே நடுங்கியது போல இருந்தது.

ஐயா.. நான் ஒரு பாவி ஐயா… உங்க மனச புரிஞ்சிக்க முடியாத முட்டாள்.. என்ன மன்னிச்சிடுங்க என்று மீண்டும் காலில் விழுந்து கெஞ்சினான்.

அதற்குள், வாசலில் கூட்டம் கூடி விட்டது. ஐயாவின் கண்கள் கலங்குவதற்கு, நாம் காரணமாகி விட்டோமே என்று நினைத்து விம்மி, விம்மி அழுதான்.

அவர் ஒன்றுமே பேசவில்லை…

நீ இப்போ.. என்னோட வருவியா? மாட்டியா? என்ற ஒரு வார்த்தை மட்டுமே அவர் வாயில் இருந்து வந்தது.

என்னய்யா இப்படி கேக்குறீங்க… நான் ஒங்க காலையே சுத்தி, சுத்தி  வர்ற நாய் குட்டி ஐயா. ஒங்க நெழல் ஐயா, நீங்க இல்லாம நான் எப்படி ஐயா நிம்மதியா இருக்க முடியும்? நான் உயிரோட இருக்குற வரைக்கும், ஒங்கள விட்டு என்னால பிரிய முடியாது ஐயா.. என்று தாய்ப் பசுவை தழுவிச் செல்லும், கன்றுக் குட்டியைப்போல, அவரை பின் தொடர்ந்து சென்றான் வேலாயுதம்.

********

காணாமல் போன கன்று மீண்டும் கிடைத்த நிம்மதியில், நெகிழ்ந்து போன தாய்ப் பசுவாகவே மாறினார் ஐயா. இந்த கன்றுக்குட்டி எப்போதும் தன்னை விட்டு போகாமல் கூடவே இருக்க வேண்டும் என்று அவர் மனது விரும்பியது.

ஐயாவோடு சென்ற வேலாயுதம், மீண்டும் வழக்கம் போல, பண்ணையில் தன்னுடைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.

பங்காளி வண்டி முந்திச் சென்றது, வண்டியில் இருந்து அவர் நடந்தே வீட்டுக்கு சென்றது, வேலாயுதம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்தது என்று எதைப்பற்றியும் ஐயா அவனோடு பேசவில்லை. பண்ணையில் வேலை செய்பவர்களும் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.

ஆனாலும், ஐயா அவமானப்படுவதற்கு காரணமாக இருந்த நாமே, ஐயாவை மீண்டும் தலை நிமிர வைக்க வேண்டும் என்று, அவன் உள்ளுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டான். அந்த சங்கல்பம் அவன் உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது.

அந்த நேரத்தில்தான், பண்ணை தொழுவத்தில் பிறந்த காளைக்கன்று, நன்றாக வளர்ந்து வேலைக்கு தயாராகும் பக்குவத்தை எட்டி இருந்தது. அதற்கு ஜோடியாக, இன்னொரு காளைக்கன்றும் வாங்கி வரப்பட்டு, தயாராக இருந்தது அவன் கண்ணில் பட்டது.

இந்த காளைக்கன்றுகளை வைத்துத்தான், தமது சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.

அடுத்த இரண்டு மாதம், அந்த காளைகள் இரண்டுக்கும், தீனி மேல் தீனி போட்டு, பயிற்சி மேல் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான்.

இரவு பகல் பாராமல், காளைக் கன்றுகளுக்கு அவன் அளித்த பயிற்சியால்,  அவை இரண்டும் குதிரைகள் போல, மின்னல் வேகத்தில் பாய்ந்தோட ஆரம்பித்தன.

அவன் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறான் என்று ஐயா பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அவனிடம் அது பற்றி அவர், ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. கண்டும் காணாதது போலவே இருந்தார்.

திடீரென ஒரு நாள், ஐயாவின் எதிரில் போய் நின்றான் வேலாயுதம். அவன் எதையோ சொல்லத்தான் வந்திருக்கிறான் என்பதை அறிந்த  ஐயா, என்னடா வேலாயுதம் என்றார்.

ஒன்னும் இல்ல ஐயா, என்னால ஒங்களுக்கு ஏற்பட்ட தல குனிவ நானே சரி செஞ்சாதான், எனக்கு நிம்மதியா தூக்கம் வரும். அதனால, எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கணும் என்று தைரியமாகவே கேட்டு விட்டான்.

அவன் சொல்வதைக் கேட்டு, ஐயாவுக்கு சிரிப்புதான் வந்தது.  போடா… போய் வேலையை பாரு. நான் எதுலயும் மொதல் ஆளா இருக்கனுன்னு ஆசைப்பட்டது என்னமோ உண்மதான். ஆனா, அந்த எண்ணத்த எல்லாம், நான் மாத்திக்கிட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சி. இப்போ எனக்கு அதெல்லாம் முக்கியம் இல்ல. எல்லாத்த விடவும் எனக்கு நீதான் முக்கியம். அதனால், அதுக்கெல்லாம் இப்போ அவசியமே இல்லன்னு சொன்னாரு அவரு.

ஐயா வாயில இருந்து அப்படி ஒரு பதில் வரும்னு அவன் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல. ஐயாவோட மனசுல, அவரு கவுரவத்த விட, நாம முக்கியமா ஆயிட்டோமேன்னு அவனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

ஆனாலும், ஐயாவோட தல குனிவ சரி செய்யாம, இந்த கட்ட வேகாது’ங்குறது அவன் எடுத்த சங்கல்பம் இல்லையா?. அதனால, மனச தைரியப்படுத்திக்கிட்டு, தன்னோட மனசுல உள்ளத.. அப்படியே மீண்டும் ஒரு தடவ ஐயாவிடம் சொன்னான் அவன்.

ஐயா.. உங்க பேச்சுக்கு மறு பேச்சு பேசுகிறேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க. எனக்காக இன்னொரு தடவ ஒரு வாய்ப்பு குடுங்க’ன்னு கெஞ்சினான்.

அவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு ஐயாவுக்கு தெரியல. மீண்டும் சிரிச்சிக்கிட்டே… சரி… சரி, அடுத்த மாசம் பக்கத்து டவுனுல ஒரு கல்யாணம் இருக்கு. அதுக்கு நான் எப்படியும் போய்த்தான் ஆகணும். நீதான் வண்டி ஒட்டி ஆகணும். அப்போ பாத்துக்கலாம். ஆனா ஒரே ஒரு நிபந்தனை. ஒரு வேள நம்ம வண்டி தோத்துப்போயி, பின் தங்கிடுச்சின்னா, நான் வண்டிய விட்டு கீழ எறங்கி, நடந்து போக மாட்டேன். நீயும் சொல்லாம கொள்ளாம வீட்டுக்கு போயிடக் கூடாதுன்னு சொன்னார்.

அதைக்கேட்டு அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. அவரும் சிரித்தார்

அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது ஐயா. ஜெயிச்சாலும், தோத்தாலும், நான் உயிரோட இருக்கிற வரைக்கும் ஒங்கள விட்டு போக மாட்டேன். ஆனாலும், அந்த வண்டிய ஜெயிக்கிற வரைக்கும் நான், தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டேதான் இருப்பேன்னு சொன்னான்.

சரிடா வேலாயுதம்.. ஒனக்கு என்ன தோணுதோ, அத செய்யின்னு சொல்லிட்டு புன்முறுவல் பூத்தார் ஐயா.

ஐயாவோட புன்முறுவல விட அவனுக்கு சந்தோஷம் குடுக்குற வேற ஏதாவது உண்டா என்ன?

காள கண்ணுங்களுக்கு இன்னும் ரொம்ப நேரம் பயிற்சி குடுக்க ஆரம்பிச்சான். அத்தோட, ஒடம்பு பெருக்காம, வலுவ மட்டும் கூட்டுற தீனிங்கள அதிகம் போட்டான்.

(தொடரும்).