தமிழுக்கும் மலரென்று பேர் 9 : தமிழனின் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மலர்கள்!

-ராஜேந்திரன்

தமிழனின் வாழ்வில் காதலை சொல்லவும், வாழ்க்கையை தொடங்கவும், அன்றாட வாழ்விலும் பூக்களே முக்கிய பங்கு வகித்துள்ளன.

ஒரு காளை, ஒரு கன்னிக்கு தரும் முல்லை பூவை, அவள் பெற்றுக் கொண்டாலோ, சூட்டிக் கொண்டாலோ, அவனுடைய காதலை அவள்  ஏற்றுக் கொண்டாள் என்பது பொருள்.

ஒரு காளை, தான் அணிந்திருந்த முல்லைப்பூவை ஒரு கன்னிக்கு சூட்டினால், அவள் அவனுக்கு உரியவள் ஆகிறாள். இது முல்லை நிலத்துக்கு உரிய வழக்கமாக இருந்துள்ளது.

ஒரு பெண் பெதும்பை பருவம் கடந்து மங்கை பருவம் அடையும்போது, தாய்மைக்கு தயாராவாள். அப்போது அவள் ஒரு முல்லைக் கொடியை நடுவாள். முல்லை அரும்பி பூப்பதைக் கொண்டே அவள் பூப்படைந்தாள் என்பது அறிவிக்கப்படுகிறது.

வாழ்த்தும் போது, நெல்லையும் அரும்பவிழ்த்த முல்லையையும் தூவுவது தமிழர் மரபாகும்.

நெய்தல், குவளை, ஆம்பல், காவி ஆகிய நான்கு மலர்களை தனித்தனியாகவும், சேர்த்துக் கட்டி மாலையாகவும், தழை  ஆடையாகவும் உழத்தியர் அணிந்தனர். எளிய மக்கள் அவற்றின் தண்டுகளை, கைக் காப்புகளாக கட்டிக்கொண்டனர்.

அல்லி மலரின் பொகுட்டில் உள்ள சிறுகடுகு போன்ற அரிசியை மக்கள் உணவாக உண்டனர். அதில் நெய் மற்றும் கொழுப்பு தன்மை இல்லாததால், உடல் உணர்ச்சிகளை அதிகம் தூண்டாமல் இருக்கும். அதனால், அல்லி அரிசியை கைம்பெண்கள் அதிகம் உணவாக கொண்டனர்.

போர் வீரர்களுக்கு அவ்வப்போது போருக்குரிய பூக்கள் சூட்டப்படும். அந்த பூக்களை மன்னன் வழங்குவான். இது “பூக்கோள் நிலை” எனப்படும்.

திணை விதைக்க நிலத்தை உழத் தொடங்குவோர், பொன்னேர் பூட்டும் முதல் உழவின் போது, நொச்சித் தழை மாலையை சூடிக்கொள்வர்.

போரில் காயம்பட்ட வீரன் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டால், அவனை நோய் தரும் நுண்ணுயிரிகள் தாக்காமலும், பேய் பிசாசுகள் அண்டாமலும் இருக்க வீட்டின் முகப்பில் வேப்பிலையை செருகுவர்.

புன்னை மரம் கடற்கரையில் வளரும் மரமாகும். புன்னை மலரின் மணம் நாற்புறமும் பரவுவதால், அங்கு வீசும் புலால் நாற்றத்தையும் அகற்றி விடும். புன்னைக் காயில் இருந்து எண்ணையும் எடுக்கப்பட்டது.

தாழை மலரின் தாது, மணம் வீசும் துகளாகப் பயன்படுத்தப்பட்டது. மகளிர் ஊஞ்சல் ஆட, தாழை விழுதுகளை புனைந்து பயன்படுத்தினர். தாழை விழுதுகள் வீட்டிற்கு வண்ணம் அடிக்கும் துகிலிகையாகப் பயன்பட்டது.

பித்திகை பூவின் முகை, அதாவது வாய் திறப்பதற்கு முந்தைய பருவத்தில் கூர்மையாக இருக்கும். முடங்கல் (கடிதம்) எழுதுவோர் அதை எழுத்தாணியாக பயன்படுத்துவார்கள்.

பித்திகை பூ அந்தியில் மலரும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களை உள்ளடக்கிய கூதிர் பருவத்தில், பகல் பொழுதிலேயே வானம் இருண்டு விடும். அதனால், பகல் பொழுதிலேயே, பித்திகை பூவை பறித்து ஒரு தட்டில் வைத்து விடுவார்கள். அந்தியில் அது மலர தொடங்கும்போது, இரவு தொடங்கப்போவதை அறிந்து பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவர்.

பாதிரிப்பூ என்பது தண்ணீருக்கு மணம் ஏற்றும் தன்மை கொண்டது. அதனால், பானையில் தண்ணீரை நிரப்புவதற்கு முன், இம்மலரை பானையில் போட்டு வைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

வேழப்பூ என்பது நாணல் மற்றும் கரும்பு போன்ற ஒரு தாவரத்தில் பூக்கும் பூ. பரத்தையர், இரவில் இந்தப்பூவை கையில் வைத்துக் கொண்டே, தமக்கு இசைவான நபரை தேர்ந்தெடுப்பர்.

மூங்கில் பூவில் இருந்து உருவாகும் மூங்கில் அரிசியை, மலைப்பகுதியில் வசித்த மக்கள், உணவாக உட்கொண்டனர். வேரல் எனப்படும் சிறு மூங்கில் அரிசி விரும்பி உட்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளிலோத்திர மலரின் சருகை சாந்தாக அரைத்து, அலங்காரத்திற் காக மகளிர் பூசிக்கொள்வார்கள்.

தமிழருக்கும் மலர்களுக்கு உள்ள உறவை, சங்கப்புலவர்கள் ஆங்காங்கே உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அந்த வரிசையில், மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மலர்களை, அடுத்த அத்தியாயத்தில் காண்போம். (தொடரும்)