தமிழுக்கும் மலரென்று பேர் – 8 :  சூடும் மலர்கள் – அணியும் மாலைகளுக்கு இத்தனை பெயர்களா?

-ராஜேந்திரன்

தனிப்பூக்களாகவும், தொடுத்த பூக்களாகவும் ஆண்களும், பெண்களும் மலர்களை தலையில் சூடிக் கொண்டுள்ளனர். அன்று முதல் இன்று வரை, சுப–அசுப நிகழ்வுகள் என அனைத்துக்குமே பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நாம் அனைத்தையும் மேலோட்டமாகவே, பூக்கள் அல்லது மாலைகள் என்று சொல்லி விடுகிறோம். ஆனால், அவை தொடுக்கப்படும் விதம், சூட்டப்படும் விதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சங்க இலக்கியங்கள் அவற்றுக்கு வெவ்வேறு பெயர்களை சூட்டியுள்ளன.

பூக்களை இரண்டு இரண்டாக, இடைவெளி விட்டு தொடுத்து, தலையில் சூடிக்கொள்வதற்கு கண்ணி என்று பெயர். இது ஆண்களுக்கு உரியது.

அதையே மகளிர் சூடிக்கொண்டால் அதற்கு கோதை என்று பெயர். தலையை “கோதி” பெண்கள் சூடிக்கொள்வதால், கோதை என்று அழைக்கப்பட்டது.

பெண்கள் கொண்டை உச்சியில் சுற்றிச் சூடுவதற்கு சிகழிகை என்று   என்று பெயர். அதேபோல், ஆண்கள் தங்கள் குடுமியில் சும்மாடு போன்று சூடிக்கொள்வது இண்டை என்று கூறப்பட்டது. பெண்களும், குழந்தைகளும் தலையில் இருந்து, நெற்றியின் நடுவில் படுமாறு பூச்சூடுவதற்கு சூட்டு என்று பெயர்.

மேற்கண்ட கண்ணி, கோதை, சிகழிகை, இண்டை, சூட்டு ஆகிய ஐந்தும் தலையில் அணியப்படுவதாகும்.

ஆனால், பூக்களை அடுக்கி நீண்ட நாரிழையால் வளைவாக கட்டுவதும், மார்பில் அணிவதும் மாலை ஆகும். திரண்ட தேர் உருள்போல, பருத்ததாக மார்பு நிறைந்து புரள்வது தார் ஆகும். முனைகள் இணைக்கப்படாமல் தொங்கி அசைவது தொங்கல் ஆகும்.

பூக்கள் கட்டப்படும் முறைகளைப் பொறுத்தும் அவற்றின் பெயர்கள் மாறுபடும். தழைத்த பெரு மலர்களால் கட்டப்படுவதற்கு ஒலியல் என்று பெயர். “ஆர்” என்னும் வண்டி உருளைக்கால் போல, வட்டமாக இணைத்து அணியப்படுவது ஆரம் ஆகும்.

தனித்தனி பூக்களாக கோர்க்கப்படுவது கோவை ஆகும். அதை அடர்த்தியாக, செறிவாக கோர்த்தால் அதன் பெயர் வாசிகை. நுண்ணிய மலர்களால் மேல்மட்டம் செம்மையாக அமைவது, பூண் வடிவமாக கட்டப்படுவதற்கு இழை என்று பெயர்.

தோள் மாலை போல தொடுக்கப்படுவது தொடையல். இது தொடலை என்றும் அழைக்கப்படும். மலர்க்காம்பு இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்து பின்னிப் பிணைந்து கட்டுவதற்கு பிணையல் என்று பெயர். தெரிந்தெடுத்த மலர்களால் பளிச்சென்று தெரியுமாறு அமைந்தால் அதற்கு பெயர் தெரியல்.

விரிந்த மலர்களால் ஆகி, விரிவாக தோன்றுவது விரியல் என்று அழைக்கப்படும். பல நிறப் பூக்களால் கட்டப்படுவது கத்திகை அல்லது கதம்பம்.

விண்மீன்கள் மின்னுவது போன்ற ஒளி பொருந்திய மலர்களை கொண்டு கட்டுவது சுக்கை. விரிவானதாக கட்டி சுருக்கி செறியச் செய்வது சுருக்கை.

மலர்களை வெவ்வேறு பத்தியாக வட்டப்படுத்தி, இடையில் ஒரு பெரும் பூவை தாமரை போல கட்டி முடிப்பதற்கு தாமம் என்று பெயர்.

ஒரு பக்க பார்வையாக கட்டப்படும் மாலை ஒருபுற மாலை ஆகும். பல மலர்கள் சூழ்ந்திருக்க நடுவில், வெளி கொண்ட மாலைக்கு சூழியல் மாலை என்று பெயர். அலர்களை மாலையாக்கி, அதன் மீது வெள்ளி மற்றும் பொன்னிழை போர்த்தல் அலங்கல் எனப்பட்டது.

உடலில் அணியப்படும் மாலைகள் அனைத்துக்குமே அணியல் என்று பெயர். மனம் மிக்க பச்சிலைகளால் ஆனது படலை ஆகும்.

பூக்களைப் பற்றி, சங்க இலக்கியத்தில் தேட ஆரம்பித்தால், நாம் அங்கே வண்டுகளைப் போல மயங்கிக்கிடக்க நேரும். அதனால், ஒரு சில தகவல்களை மற்றும் சுருக்கமாக அறிய முயல்வோம்.

அந்த வகையில், தமிழனின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த மலர்கள் சிலவற்றை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். (தொடரும்).