தமிழுக்கும் மலரென்று பேர் – 7.  பூக்களின் குடும்பம், இதழ் மற்றும் பூங்கொத்து வகைகள்!

-ராஜேந்திரன்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குடும்பம் உண்டு. சில நேரங்களில் குழுவில் தனிமையாகவும், தனிமையில் குழுவாகவும் அடையாளம் காணப்படுகிறான். அவனுடைய வசிப்பிடமும், வாழ்வியல் சூழலும் கூட அவனுடைய அடையாளமாகவே கருதப்படுகிறது.

அதேபோல், பூக்கள் மலரும் இடங்கள், தாவரங்கள் மற்றும் பூக்கும் தன்மையைக் கொண்டும் அடையாளம் காணப்படுகின்றன.

செடிகளிலும், மரங்களிலும் பூக்கும் மலர்களை “கோட்டுப்பூ” என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கொடிகளில் பூப்பவை “கொடிப்பூ” என்று அழைக்கப்படுகின்றன. நிலம் மற்றும் புதர்களில் மலர்பவை  “நிலப்பூக்கள்” என்றும், நீர்நிலைகளில் பூப்பவை “நீர்ப்பூக்கள்” என்றும் கூறப்படுகின்றன.

பூவிதழ் வகை

மனிதனுடைய உருவமும் தோற்றமுமே அவனது புற அடையாளம். அதேபோல், இதழ்களே பூக்களின் வெளிப்படையான அடையாளம். அந்த இதழ்களின் வகைகளைக் கொண்டும் பூக்கள் வகைப்படுத்தப் படுகின்றன.

மலர்களின் இதழ்கள், “இதழ், அதழ், கோடு, ஏடு, மடல், தளம், பாளை” என ஏழு வகைப்படும்.

இதழ் என்பதே பூவின் முதல் அடையாளம். வடிவம், வண்ணம், நிறம், நறுமணம் அனைத்துக்குமான  அடையாளம் இதழ்களே. இதழ் என்பது புல்லி என்ற புற இதழ், அல்லி என்ற அக இதழ் ஆகிய இரண்டையும் கொண்டதாகும்.

அதழ் என்பது உள்ளீடாக சுருங்கி விரிவதை குறிப்பதாகும். தோடு என்பது மலரின் தடிப்பு தன்மையை குறிக்கும். தடிமன் என்றும் சொல்லலாம். மென்மையான தடிப்பு கொண்டது தோடு. ஏடு என்பது தோட்டை விட சற்று தடிப்பானது.

மடல் என்பது நீட்சியும், மடிக்கும் தன்மையும் கொண்ட இதழ்களை குறிக்கும்.. தாழை மடல் என்பதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். தாழை மடலில்தான் மடல்கள் எழுதப்பட்டன. அந்த மடல்களுக்கு (கடிதம்) முடங்கல் என்று பெயர்.

தளம் என்பது தட்டையான, வளப்பமான இதழ்களை குறிக்கும். பாளை என்பது தடிப்பாக பூங்கொத்துக்களை மூடி இருக்கும் இதழ்கள் ஆகும். தென்னம் பாளை இதற்கு உதாரணம்.

பூங்கொத்து வகை

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பெயர் இருப்பது போல, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பெயர் இருக்கும். அதற்கென்று ஒரு தனித்தன்மையும் இருக்கும். நாம் “வகையறா” என்று சொல்வதை கூட இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

பூக்கள் மலரும் இடங்கள் மற்றும் தாவர வகைகளை வைத்து கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்று ஏற்கனவே அறிந்தோம். அதேபோல், பூங்கொத்து வகைகளைப்பற்றி தற்போது அறிவோம்.

பூங்கொத்து என்பது கொத்து, தொத்து, துணர், இணர், மஞ்சரி, தொடர்ச்சி, குலை என பல்வேறு வகைகளை கொண்டது.

கொத்து என்பது, பூக்கள் ஒரு ஒழுங்கு இல்லாமல் பூத்து மேலும் கீழுமாக அமைவது. தொத்து என்பது மேற்சொன்ன அமைப்புடன் தலை கீழாக தொங்குவது. துணர் என்பது துண்ணென்று வெடித்து பூப்பது. இணர் என்பது ஒழுங்குடன் நெருக்கமாக அமைவது.

மஞ்சரி என்பது மிகச்செறிவாக தூவியது (துய்வாக) போன்று காணப்படுபவை. தொடர்ச்சி என்பது பக்கவாட்டிலோ, மேல்நோக்கியோ பூப்பது. குலை என்பது ஒரு வகை இனத்தொகுப்பு ஆகும்.

பூக்களை பற்றி சங்க இலக்கியங்கள் கூறும் தகவல்கள் அனைத்துமே, மணக்கத்தான் செய்கின்றன. அதேபோல், பூக்களை சூடுவதிலும், அவற்றை தொடுக்கும் மாலைகளிலும் கூட பல வகைகள் இருக்கின்றன என்பதை நினைக்கும் போதே, நெஞ்சம் நறுமணத்தில் திளைக்கிறது. அந்த நறுமணத்தை அடுத்த அத்தியாயத்தில் நுகர்வோம். (தொடரும்).