தமிழுக்கும் மலரென்று பேர் – 11. : பூக்களை பற்றிய அரிய தகவல்கள்!

-ராஜேந்திரன்

நமக்கு தெரிந்தும், தெரியாமலும், அறிந்தும், அறியாமலும் பூக்களை பற்றிய அரிய தகவல்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சில வியப்பையும் தருகின்றன.

அத்தி மற்றும் ஆல மரத்தின் பூக்களை பார்க்க இயலாது. பலா மரத்தின் பூக்களும் கண்ணுக்கு தெளிவாக புலப்படுவதில்லை.

மலரும் உண்டு, பெயரும் உண்டு ஆனால் இதுதான் என்று அறிய முடியாத நிலையில் சுள்ளி மற்றும் பாங்கர் மலர்கள் உள்ளன.

அனிச்ச மலரும், காவிதி மலரும் விளக்கம் அறிய இயலா மலர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

நெருஞ்சி, இருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி , முருங்கை ஆகிய பூக்களை மக்கள் அதிகம் விரும்புவதில்லை. எந்த ஒலியும் இல்லாத நள்ளிரவில் நொச்சி பூங்கொத்து விழும்.

கோங்கு பூக்கள் தனிப்பூவாக பூத்திருப்பதை பார்க்கும்போது, விளக்கு வரிசையை போல இருக்கும். காற்றில், அதன் மலர்கள் காம்பில் இருந்து, கழன்று விழுவதை பார்க்கும்போது, நெருப்பு சுடரை விட்டெறிவது போல தோன்றும்.

இலுப்பை பூ இனிப்பு தன்மை மிக்கது. அதனால், கரடிகள்  மரத்தின் மீது ஏறி, இலுப்பை பூக்களை உண்ணும்.  வேப்பம் பூவை உண்ட வவ்வால், கசப்பு சுவை நாவில் இருந்து அகல, இலுப்பை பூவை உண்ணும்.

மயிலை மலர் என்பது மயிலைக் காளையை போல, கரு-வெண்மை நிறத்தில் இருக்கும் பூவாகும். இது நள்ளிரவில் பூத்து மணம் பரப்புவதால், நள்ளிருள் நாறி எனப்பெயர் பெற்றது.

வெண்மை நிறத்தில் பூத்து குலுங்கும் முசுண்டை மலர், பீர்க்கம் பூ போலவே இருக்கும். கூதிர் காலத்தில், மழை நின்ற பின்னர், முசுண்டை  பூக்களை பார்த்தால், விண்மீன்கள் பளிச்சென்று தெரிவது போல இருக்குமாம்.

பூக்களை பற்றிய செய்திகள் அணித்துமே நாசிகளில் புகுந்த நறுமணமே. ஆனாலும், அவற்றின் அடுத்த தன்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

அதற்கு முன், சங்க இலக்கியங்களில், மகளிருக்கும், இன்ன பிறவற்றுக்கும்  உதாரணமாக கூறப்பட்டுள்ள பூக்கள் சிலவற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். (தொடரும்).