தமிழுக்கும் மலரென்று பேர் – 10 : சங்க இலக்கியங்கள் சொல்லும் மலர் மருத்துவம்!

-ராஜேந்திரன்

அறிவியல் ஆய்வுகள் நிரூபணம் ஆவதற்கு முயன்பே, தமிழனின் மருத்துவ ஞானம் வெளிப்பட்டு விட்டது என்பதற்கு, இலக்கியங்கள் சொல்லும் மலர் மருத்துவமே சான்றாகும்.

இலவம் பூவைக் கொண்டு கருக்கு நீர் செய்து குடித்தால், ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும், சிறுநீரை பெருக்கும், மலமிலக்கியாக செயல்படும், இலவம் பஞ்சு, சீழை வற்றச் செய்யும்.

தாழம் பூவின் மனம் சிறந்த கிருமிநாசினி. அம்மை நோய் கண்ட இடத்தில் இப்பூவை கட்டித் தொங்க விட்டால், கிருமிகளை விரட்டும். தாழை மடலில் இருந்து வடிக்கப்படும் பனி நீர், அம்மை நோய்க்கான மருந்தாகும்.

பெட்டிகளில் உள்ள, பழங்கால ஓலைச் சுவடிகளை பூச்சிகள் அழிக்காமல் இருக்க, தாழம்பூவின் மணம் பயன்படும்.

இலுப்பைப் பூவை குடிநீரில் கலந்து குடித்தால் சிறு நோய்கள் அகலும். மருந்தாக்கி உண்டால் பித்த சுரம் நீங்கும். இரும்புத்தூளில் பூவின் சாற்றை கலந்து பக்குவம் செய்தால், மை போன்று குழைத்து எடுக்கலாம்.

கோழிக் கொண்டை பூ என்ற கவிர் பூவின் சாற்றைக் கொண்டு ஈயத்தை நீராக்கலாம்.

ஆவிரை பூவின் இதழை தேனில் இட்டு, குல்கந்து செய்து உண்டால், உடல் குளிர்ச்சி அடையும், வலுவும் கூடும்.

செவ்வலரி (செவ்வரளி) மலரால் பக்குவம் செய்யப்படும் மருந்து பல நோய்களை தீர்க்கும் தன்மை உடையது. இதில் தோன்றும் மஞ்சள் நிறச்சாறு கொடிய நஞ்சாகும்.

சண்பகப்பூ உடலில் மறுவையும் பருவையும் நீக்கும்.

நந்தியா வட்டம் கண் நோய்கள் பலவற்றை போக்கும்.

ஓமப்பூவில் இருந்து வடிக்கப்படும் ஓம நீர் வயிற்றுப் பிரச்சினையை போக்கும்.

பருத்திப்பூ குருதி அழல் நோய், வெள்ளைப்படுதல், புண் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும்.

செம்பருத்தி பூவை எண்ணையில் இட்டு ஊறவைத்து முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

மாதுளை முகிழை காயவைத்து, பொடி செய்து இருமலுக்கு மருந்தாக கொடுக்கலாம்.

தெங்குப்பூ உடலின் நஞ்சு நோய்க்கு மருந்து.

எட்டிப்பூ கண்நோய்க்கு நல்ல மருந்து.

வயிற்றளைவு, கைகால் எரிச்சல், எருவாய் கடுப்பு இருமல் போன்றவற்றுக்கு வாழைப்பூ நல்ல மருந்து. மேக நோயை ஒழிக்கும் தன்மை உடையது.

மயிலை மலர் குருதியில் உள்ள பித்தத்தை போக்கும்.

குசும்பை பூவைக் கொண்டு ஆடைக்கு காவி நிற சாயம் ஏற்றப்படுகிறது.

இவை அனைத்தும் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள மலர் மருத்துவம். இதை தனிப்பட்ட முறையில் யாரும் செய்து பார்க்க வேண்டாம்.

மனிதர்களில் சிலர், மற்றவர்களால் கணிக்க முடியாத அளவுக்கு விசித்திரம் நிறைந்தவர்களாக இருப்பதுண்டு. அரிய பண்புகள் கொண்டவர்களாகவும் இருப்பதுண்டு.

அப்படிப்பட்ட அரிய தன்மைகளைக் கொண்ட மலர்களும் உண்டு. அவற்றை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். (தொடரும்).