தமிழுக்கும் மலரென்று பேர் – 6.  மலரின் குணமும் மனிதனின் குணமும்!

-ராஜேந்திரன்

எத்தனை அவதாரம், அடடா எத்தனை அவதாரம், இத்தனை சிறிய மனிதன் தினமும், எடுப்பது தசாவதாரம் என்று ஒரு பாடல் உண்டு. நொடிப் பொழுதில் நிறம் மாறும், மனித குணங்களை சொல்லும் சினிமா பாடல் அது.

அதேபோல, மலர்களுக்கும் பத்து விதமான குணங்கள் உள்ளன என்று  சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

மணம், மென்மை, வண்ணம், தூய்மை, தண்மை, சுவை, ஒளி, எழில், கவர்ச்சி, மங்கலத்தன்மை ஆகியவை அந்த பத்து குணங்களாகும்.

மணம் என்பதே  மலரின் முதல் குணம். மணம் இல்லாத மலர், உயிர் இல்லாத உடல் போன்றது. மலரும் மனமும் போல வாழ்த்தும் சொற்களில் இருந்தே அதை உணரலாம்.

மென்மை என்பது மலரின் இரண்டாவது குணம். மலரை போன்ற மென்மை என்றே உதாரணம் சொல்லப்படுகிறது. மணம் என்பது மலரின் உயிர் என்றால், மென்மை என்பது அதன் நாடி. பெண்களை வர்ணிக்கும் பாடல்கள் மென்கூந்தல், மெல்லிதழ், மென் தோள், மென் கை, மெல்லிடை, மெல்லடி என்றே இலக்கியங்கள் வர்ணிக்கின்றன.

வண்ணம் என்பது பூக்களின் மூன்றாவது குணம். பூக்களுக்கு அழகூட்டுவதில் வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு பூவுக்கும், அதன் வண்ணமே தனித்த அடையாளம்.

தூய்மை என்பது பூவின் நான்காவது குணம். பூஜைக்கு உரிய மலர்களை, வண்டுகள் வாய் வைப்பதற்கு முன்பே பறிக்கப்பட  வேண்டும் என்பர். கைப்படாத மலர்கள் என்பதும் அறியப்பட வேண்டியவை. தங்கம் மற்றும் வெள்ளி ஊசிகள் கொண்டு, பூக்கள் தொடுக்கப்பட்டு இறைவனுக்கு அணிவிக்கப் பட்டுள்ளன.

தண்மை என்பது குளிர்ச்சியை குறிக்கும். குளிர்ச்சி என்பது பூவின் ஐந்தாவது குணமாகும். பூக்களை பார்த்தாலே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அதனால்தான் பூக்களை கண்களில் ஒத்திக்கொள்கிறோம்.

சுவை என்பது மலரின் ஆறாவது குணமாகும். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு சுவை உண்டு. புளியம் பூ புளிக்கும். வேப்பம்பூ கசக்கும். இலுப்பை பூ இனிக்கும், மகிழம் பூ துவர்க்கும். இவ்வாறு ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு தனித்த சுவை உண்டு.

ஒளி என்பது மலரின் ஏழாவது குணம் ஆகும். மலர்களின் பளபளப்பே ஒளி எனப்படுகிறது. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வண்ணத்தால் மெருகேறி பளபளக்கும் தன்மை கொண்டவை.

எழில் என்பது மலரின் எட்டாவது குணம் ஆகும். எழில் என்றால் அழகு. பூக்கும் பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகை பிரதிபலிக்கும். எனவே, பூவின் குணங்களில் எழிலும் ஒன்றானது.

கவர்ச்சி என்பது பூவின் ஒன்பதாவது குணம். அழகு என்பது ஒரு தன்மை என்றால், கவர்ச்சி என்பது காந்தம் போல சுண்டி இழுக்கும் செயலை குறிக்கும். பூக்களுக்கு, கவர்ந்து இழுக்கும் தன்மை உண்டு என்பதை விளக்கவே, இந்த குணமும் சேர்க்கப்பட்டுள்ளது.

மங்கலத்தன்மை என்பது பூவின் பத்தாவது குணமாகும். மங்கல பொருட்கள் பல இருந்தாலும், அங்கே பூக்கள் இல்லை என்றால், மங்கலத்தன்மை நிறைவடையாமல் போகும்.

சங்கப் புலவர்கள், பூக்களை எப்படி எல்லாம் வியந்து, ரசித்து உணர்ந்து பாடி இருக்கிறார்கள். அத்தோடு விட்டார்களா என்ன?. அவற்றின் குடும்ப வகை, இதழ் வகை, பூங்கொத்து வகை என்றெல்லாம் இனம் பிரித்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அந்த வியப்பின் உச்சத்தை, அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். (தொடரும்).