தமிழுக்கும் மலரென்று பேர் – 5: மலர்களின் உறுப்புக்களும் மனித உறவுகளும்!  

-ராஜேந்திரன்

மனித உறவுகளில், பெற்றோர், உடன் பிறந்தோர், தோழமை என பல சுற்றமும் நட்பும், நம்மை பாதுகாக்கவும் சந்ததிகளை பெருக்கவும் துணை புரியும் தன்மை கொண்டவர்கள்.

அதேபோல், பூக்களின் உறுப்புக்களும் அவற்றை பாதுகாத்து, அவற்றின் சந்ததிகளை பெருக்குவதற்கு துணை புரிகின்றன என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

பூக்களை பிரசவிக்கும் மரம், செடி, கொடி என அனைத்து வகையான தாவரங்களும், அவற்றின் தாய் தந்தையருக்கு ஒப்பானவை. காம்பும், தண்டும் செவிலியருக்கு ஒப்பாகும். இலையும், தழையும் பூக்களை சூழ்ந்து போற்றும் தோழியர்கள்.

பூக்களின் ஏழு பருவங்களைப் போல, அவற்றின் உறுப்புகளையும், சங்க இலக்கியங்கள், அறிவியல் பூர்வமாக ஏழாக பிரித்துள்ளன. அவை காம்பு, புல்லி, அல்லி, சூலகம், மகரம், தாது, தேன் என்பனவாகும்.

காம்பு என்பது பூவை கால் போல தங்கி நிற்கும் உறுப்பு ஆகும். இதை தாள், தண்டு என்றும் சொல்வதுண்டு.

புல்லி என்பது புற இதழ்களை குறிக்கும். புல்லுதல் என்பதற்கு தழுவுதல், அணைத்தல் என்ற பொருளும் உண்டு. மழை, வெயில் போன்றவற்றில் இருந்து பூக்களை பாதுகாக்கும் உறுப்பு என்றும் இதை  கூறலாம். இவை பெரும்பாலும் மெருகு இல்லாமல் சுரசுரப்பாகவே  இருக்கும்.

அல்லி என்பது அக இதழ்கள். இவை மென்மையாகவும், வண்ணம் மிகுந்த கவர்ச்சியான உறுப்பாகும் இருக்கும். “அல்லி வட்டம், புல்லி வட்டம் நானறிஞ்ச நிலா வட்டம்” என்ற பாடலை நினைவில் வைத்துக்  கொள்ளலாம்.

சூலகம் என்பது இனப்பெருக்கத்திற்கு, கருக்கொள்ளும் பெண் உறுப்பு. இதை பொகுட்டு என்று கூறுவர். பொகுட்டு என்பதற்கு வித்து என்பது பொருள். கருவை ஏற்று விதையை உண்டாக்குவதால் இப்பெயர் பெற்றது. இதற்கு கன்னிகை என்றொரு பெயரும் உண்டு.

மகரம் என்பதற்கு கருவை ஏற்றும் விந்து உள்ள ஆண் உறுப்பு. மங்கலான சிவப்பு நிறம் என்ற பொருளும் உண்டு. எனவே இதற்கு மகரம் என்ற பெயர் வந்தது.

தாது என்பது மகரத்தின் நுனியில் ஒட்டி நிற்கும், கரு உருவாவதற்கான தூள் ஆகும். இதை மகரம் + அந்தம் = மகரந்தம் என்ற வடமொழி சொல்லாலும் அழைப்பர்.

தேன் என்பது பூவில் உள்ள ஒரு சுவையான உறுப்பாகவே கருதப்படுகிறது. இந்த தேனுக்கு “நறை, நறா, கள், மட்டு, தேறல்” என்ற பெயர்களும் உண்டு.

மேற்கண்ட ஏழு உறுப்புகளும் நிறைவாக இருந்தால் அது “நிறைபூ”. ஒன்றிரண்டு குறைவாக இருந்தால் அது “குறைபூ”.

மனிதர்களைப் போல, பூக்களிலிலும் ஆண் பூ, பெண் பூ, அலி பூ, மலட்டுப் பூ  என, பாலின பாகுபாடுகளும், குறைபாடுகளும் உண்டு. சூலகம் இல்லாதது  ஆண் பூ. மகரம் இல்லாதது பெண் பூ. இரண்டும் இல்லாதது அலி பூ. தாது இல்லாதது மலட்டுப் பூ.

பாலின பாகுபாடுகள் மற்றும் குறைபாடுகளை அறிவியல் சொல்வதற்கு முன்பே தமிழ் இலக்கியங்கள் கூறி விட்டன.

அது ஒரு பக்கம் இருக்கட்டும், மனிதனின் குணங்களைப் போல, மலர்களுக்கும் குணங்கள் உண்டா? என்று கேட்டால் அதற்கும் விடை தருகின்றன தமிழ் இலக்கியங்கள்.

மச்ச அவதாரம், கூர்ம அவதாரம் என திருமால் எடுத்த ஒன்பது அவதாரங்களும், பத்தாவதாக எடுக்கப் போகும் கல்கி அவதாரமும்  மனித குணங்களில் இயல்பே என்று கூறப்படுவதுண்டு.

திருமாலின் பத்து அவதாரங்களைப் போல, மலர்களுக்கும் பத்து விதமான குணங்கள் உள்ளன. அவற்றை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். (தொடரும்).