தமிழுக்கும் மலரென்று பேர்!

-ராஜேந்திரன்

“தமிழுக்கும் அமுதென்று பேர்” என பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். தமிழ்.. தமிழ் என்று தொடர்ந்து உச்சரித்தால் அமிழ்து.. அமிழ்து என்ற ஒலி வரும் என்பதனால் அவ்வாறு கூறினார் அவர்.

அமுதம் என்பதற்கு உணவு என்றே பொருள். அது, அமிழ்தம், அமிர்தம் என்றும் சொல்லப்படுகிறது. பாற்கடலை கடைந்தததனால் கிடைத்த அமிர்தத்தை, வான் உறையும் தேவர்கள் உண்டதால் சாகா வரம் பெற்றனராம்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றி.. இந்த டிஜிட்டல் யுகம் வரை, சாகா வரம் பெற்று திகழும் தமிழை, அமிழ்தென்று என்று அழைப்பது பொருத்தமானதே.

அதேபோல், தமிழர்களின் பிறப்பு தொடங்கி, இறப்பு வரை ஒவ்வொரு அங்கத்திலும், நீக்கமற நிலைபெற்றவை பூக்கள். அதனால், தமிழுக்கும் மலரென்று பேர் என்று சில தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.

அதற்கான சான்றுகள் அடுத்தடுத்த அத்தியாயங்களில் தொடர்ந்து கிடைக்கப்பெறும். அதற்கு முன்னுரையாக சில அடிப்படை விளக்கங்களை காண்போம்.

மலருக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு. பூ என்றும் மலரை கூறுகிறோம். பூ என்றால் பூமி, பூமித்தாய் என்றும் சொல்கிறோம். உலகத்தை பூவுலகம் என்று அழைக்கிறோம்.

அதனால், பூவுலகம் தோன்றிய பின்னர், முதன் முதலில் தோன்றிய தமிழை, பூவுடன் ஒப்பிடுவதில் என்ன தவறு. பூ பூப்பதை போல அல்லது மலர்வதைப் போல, தமிழ் தினந்தினமும் பூத்துக் குலுங்கி  நறுமணம் வீசிக்கொண்டே இருக்கிறது.

தமிழுக்கு இலக்கண நூல் வகுத்த தொல்காப்பியர், “மலர்தலை உலகத்து மரபுநன் கரிய” என்று தொடங்கி வைக்க, அவரது அடியொற்றி, பின்னர் வந்த புலவர்கள் எல்லாம், மலராக மலர்ந்த உலகத்தை “மலர்தலை உலகம்” என்றே தங்கள் பாடல்களில் சிறப்பித்துள்ளனர்.

அதனால் “மலர்தலே தமிழ்” என்ற அடிப்படையில் “ தமிழுக்கும் மலரென்று பேர்” என்று சொல்லலாமே.

குலவிளக்கு என்ற படத்தில் “பூப்பூவாய் பூத்திருக்கும் பூமியிலே ஆயிரம் பூ” என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடல் எழுதி இருப்பார். அது உண்மைதான், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் பூத்துக் குலுங்கும் பூக்களின் நறுமணம், இந்த பூமிக்கு புத்துணர்ச்சியை  தந்துகொண்டு இருக்கின்றன.

உலகத்திலேயே, அதிக அளவிலான பூக்களை கொண்ட தேசம் நம் பாரதம் என்றாலும், அதன் பெருமை அனைத்தும் தமிழகத்துக்கே சாரும்.

சங்க இலக்கியம் குறிப்பிடும் ஐவகை நிலங்களும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பூக்களின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என புறத்திணை துறைகளுக்கும் பூக்களின் பெயரே சூடப்பட்டுள்ளன.

மூவேந்தர்களில் சேரனின் சின்னம் பனம் பூவாகவும், சோழனின் சின்னம் ஆத்திப்பூவாகவும், பாண்டியனின் சின்னம் வேப்பம்பூவாகவும் இருந்ததே இதற்கு சான்றாகும்.

சிவனுக்கு உகந்த மலராக கொன்றையும், முருகனுக்கு கடம்ப மலரும், திருமகளுக்கு ஆம்பலும், கலைமகளுக்கு வெண்தாமரையும், சமண மத அருகனுக்கு அசோக மலர்களும், புத்தருக்கு தாமரை மலர்களும் விருப்ப மலர்களாக கொண்டு பூஜிக்கப்படுவது அறிந்ததே..

தமிழ் மன்னர்கள், பாராட்டி அளித்த சிறந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் பொற்றாமரை போன்ற பூக்களின் வடிவத்திலேயே இருந்தன.

பண்டைய தமிழ் மன்னர்கள், உழவர்களுக்கும், வணிகர்களுக்கும் ஏனையோருக்கும் வழங்கிய விருதுகள் அனைத்தும் மலர்களின் பெயரிலேயே வழங்கப்பட்டன.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற உண்மையை உணர்ந்து, சிறந்த உழவனுக்கு “காவிதி” என்னும் மலரின் பெயர் கொண்ட விருதே வழங்கப்பட்டுள்ளது. காவிதி என்பதற்கு “காப்பாற்றுவாயாக” என்றும் பொருள் உண்டு.

அது போல, சிறந்த வணிகனுக்கு வழங்கியது “எட்டி” மலரின் பெயர் கொண்ட விருதாகும்.  எட்டிய நிலங்களில் உள்ள வளங்களை எல்லாம், கிட்டும்படி செய்வதால், அதற்கு எட்டி விருது என்று பெயர்.

பல்வேறு தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் உரை உள்ளிட்ட பலவற்றை  ஆதாரமாகக் கொண்டே இந்தத் தொடர் வெளியிடப்படுகிறது.

தமிழையும் இயற்கையையும் நேசிக்கும் பலர், இதுவரை அறியாத பல்வேறு மலர்களை பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும், இதன் மூலம் கொஞ்சம் அறிந்து, அதன் நறுமணத்தில் திளைக்கலாம் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம். (தொடரும்)