தமிழுக்கும் மலரென்று பேர் – 3 : தேவலோக மலர்கள்!

-ராஜேந்திரன்

மனிதன் எப்போது, ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு இடம் பெயர ஆரம்பித்தானோ, அப்போதே, பூக்களும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர ஆரம்பித்தன.

அந்த வகையில், தமிழ் நிலத்தில் இருந்து பல்வேறு பூக்கள், மற்ற நிலங்களுக்கும் சென்றன. மற்ற நிலங்களில் இருந்த சில பூக்களும் இங்கு வரத்தொடங்கின.

இது தவிர, தேவலோகத்தில் இருந்து சில பூக்கள் பூமிக்கு வந்ததாகவும், இங்கிருந்து சில பூக்கள் தேவலோகத்திற்கு சென்றதாகவும் கதைகள் உண்டு.

கதைகளை கதைகளாகவே பார்ப்போம். அதை ஒரு காரணமாக வைத்து என்னுடன் மல்லுக்கட்ட வேண்டாம். சிலவற்றை கதைகளாகவும், பாடல்களாகவும் சொல்லும்போது, எளிதில் மனதில் பதியும் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டால் நல்லது.

சந்தனம், அரிசந்தனம், பாரிஜாதம், மந்தாரம், கற்பகம் ஆகிய மலர்கள் தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்த மலர்கள் என்று சொல்லப்படுகின்றன.

பகவான் கிருஷ்ணரின் தேவியர் பாமா ருக்மணிக்கு இடைய எழுந்த பூசலில், பாரிஜாதம் என்ற பவளமல்லி பற்றி பேசப்படும். மற்றொரு கதையில், பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன், தமது தேவி பாஞ்சாலிக்காக, தேவலோகத்தில் இருந்து, பாரிஜாதத்தை பூமிக்கு கொண்டு வந்தான் என்று சொல்லப்படுகிறது.

பூமியில் வாழ்ந்த மன்னன் ஒருவன், தமது வலிமையால், கற்பக மலரை தேவலோகத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்ததாக ஒரு கதை உண்டு.

தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்த மலர் போல, பூமியில் இருந்து  வானி (ஓமம்) மலரை, தேவலோகம் கொண்டு சென்று, செல்வத்திற்கு அதிபதியான குபேரன் அணிந்து கொண்டான் என்று சொல்லப் படுவதுண்டு. தாமரை மலரும் பூமியில் இருந்து தேவலோகத்திற்கு கொண்டு சென்ற மலர் என்றே கதைகளில் சொல்லப்படுகிறது.

வெளி நிலங்களில், இருந்து தமிழ் மண்ணுக்கு வந்த மலர் செவ்வந்தி என்று சொல்லப்படுகிறது. அது சாமந்தி, சிவந்தி, செவ்வந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கதை எல்லாம் இத்துடன் போகட்டும். இதற்கெல்லாம் ஆதாரங்கள் கிடையாது. அடுத்து பூக்களின் ஏழு பருவங்கள், ஆண் – பெண் பருவங்களுடன், எப்படி தொடர்பு படுத்தப்படுகின்றன என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். (தொடரும்).