தமிழுக்கும் மலரென்று பேர் – 2 : கபிலர் பாடிய 99 மலர்கள்!

-ராஜேந்திரன்

தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் பணியாற்றிய மூத்த தமிழ் அறிஞரும், ஆர்கிடெக்ட் துறை நிறுவனரும், முனைவருமான கோ.தெய்வநாயகம் அவர்களுடன் உரையாடும்போது, என்னிடம்  கூறிய தகவல்களை, இந்த அத்தியாத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

தற்போது ஆந்திர மாநிலத்தின் ஓர் அங்கமாக இருக்கும், “வாரங்கல்” என்ற பகுதியை “பிரகஸ்தன்” என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அப்போது தெலுங்கு மொழி புழக்கத்தில் இல்லை.

அவனுக்கு சமஸ்கிருத மொழி மட்டுமே தெரியும். ஆனால், தமிழ் மொழியின் தொன்மையையும், சிறப்பையும் அறிந்த பிரகஸ்தன், தமிழ் மொழியை கற்றுக்கொள்ள பேராவல் கொண்டான்.

அதன் காரணமாக, அந்த காலகட்டத்தில், தமிழ் இலக்கியத்தில் புகழ் பெற்று விளங்கிய புலவர் கபிலரை, தமது அரண்மனைக்கு விருந்தினராக அழைத்தான் அம்மன்னன்.

அவன் அழைப்பை ஏற்று, கபிலரும் அவனது அரண்மனைக்கு சென்று சில காலம் விருந்தினராக தங்கி இருந்தார். பலநாட்கள் ஆகியும், அவருக்கு குறைவற்ற உபசரிப்பு நடந்ததே தவிர, அவரிடம் யாரும் எந்த கோரிக்கையும் வைக்கவே இல்லை.

விருந்தினராகவே எவ்வளவு நாட்கள் இங்கே தங்கி இருப்பது? என்று யோசித்த கபிலர், இது வரை தன்னிடம் எந்த கோரிக்கையும் விடுக்காதது ஏன்? என்று அரசவை அதிகாரிகளிடம் கேட்டார்.

அப்போது, மன்னன் பிரகஸ்தன், தமிழின் தொன்மையும், சிறப்பையும் அறிந்து, அதன் மீது தீராத காதல் கொண்டுள்ளார். அதனால், தமிழின் சிறந்த புலவராக திகழும், தாங்களை அரண்மனையில் தங்க வைத்து உபசரிப்பதை, அவர் பெரும் பேறாக கருதுகிறார். அத்துடன், உங்களிடம் அவர் தமிழ் கற்றுக்கொள்ள விரும்புகிறார் என்றும் அரசவையை சேர்ந்த சிலர் கபிலரிடம் கூறினார்.

அதைக்கேட்டு மகிழ்ந்த கபிலர், மலர்களை அறிந்தாலே, தமிழை அறியலாம் என்பதை உணர்த்தும் வகையில், 99 வகையிலான மலர்கள் இடம் பெரும் பாடல் ஒன்றை அவையில் பாடினார். அந்தப்பாடல் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றுள்ளது.

அந்தப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழை நேசிப்பவர்கள், இந்தப்பாடலை மனப்பாடம் செய்து கொள்ளலாம். ஏனென்றால், நான் மனப்பாடம் செய்து விட்டேன்.

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்

அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ”

இவை அனைத்தும் செடிகள் மற்றும் மரங்களில் மலரும் கோட்டுப்பூ, கொடிகளில் பூக்கும் கொடிப்பூ, நீர் நிலைகளில் பூக்கும் நீர்ப்பூ, நிலப்பகுதிகளில் பூக்கும் நிலப்பூக்கள் ஆகும்.

இவற்றில் பல பூக்களை நாம் நேரில் கண்டிருந்தும், அதுதான் இந்த மலரா? என்று அறியாமல் இருந்திருப்போம். சிலவற்றை அடையாளம் காண முடியாமல் தவிப்போம். இந்த தவிப்பு நமக்கு மட்டும் அல்ல. கபிலருக்கு பின் வந்த புலவர்கள் பலருக்கும் இருந்துள்ளது.

எது எப்படியோ, ஒரே பாட்டில் 99 பூக்களை ஒரு புலவனால் பாட முடிகிறது என்றால், அவர் எந்த அளவுக்கு இயற்கையை அறிந்திருப்பார் என்றும் ஆச்சரியம் தோன்றுகிறது.

புலவனில் நான் கபிலன் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குறிப்பிடுவது இவரைத்தானா? என்றும் யோசிக்க வைக்கிறது.

கபிலர் பாடிய 99 மலர்களோடு, தமிழகத்தின் பூக்கள் முடிந்துவிட வில்லை. இன்னும் எண்ணற்ற பூக்கள் உள்ளன. அவற்றை பற்றியும் நாம் இந்த தொடரின் சில இடங்களில் பேசுவோம். (தொடரும்)