தமிழுக்கும் மலரென்று பேர் – 4 :  மலர்களின் பருவங்களும் மனித வாழ்க்கையும்!

-ராஜேந்திரன்

சங்க இலக்கியங்கள் பூக்களின் வாழ்க்கையை, ஆண் மற்றும் பெண்ணின் ஏழு பருவங்களுடன் ஒப்பிட்டு பேசுகின்றன என்பது மிகவும் சுவையான ஒன்றாகும்.

ஒரு பூ என்பது நனை, அரும்பு, முகை, போது, மலர், அலர், வீ என்று ஏழு பருவங்களை கொண்டுள்ளது.

அதே போல, ஒரு ஆண் என்பவன் பாலன், மீளி, மறலோன், திறலோன், காளை, விடலை, முதுமகன் என்ற ஏழு பருவங்களை கொண்டவன்.

பெண் என்பவள் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழு பருவங்களை கொண்டவள்.

நனை என்பது ஒரு மலரின் தோற்றப் பருவமாகும். அப்போது, வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் ஈரப்பதமாக இருக்கும். எண்ணெய் பிசுப்பு இல்லாத தேன் தோன்றும் பருவமும் இதுவே. நனைந்து ஈரப்பதமாக இருப்பது போன்று உணரப்படுவதால், இந்தப் பருவம்  “நனை” என்று அழைக்கப்படுகிறது. நனை என்பதற்கு தோற்றம் என்றொரு பொருளும் உண்டு.

அரும்பு என்பது மலரின் இரண்டாவது பருவம். அரும் பூவாக மலர்வதற்கு அடிப்படை கொண்டதால் அரும்பூ – அரும்பு என்று அழைக்கப்பட்டது. அரும்புதல் என்பது, தோற்றத்திற்கு அடுத்த வளர்ச்சி நிலை ஆகும்.

முகை என்பது மலரின் மூன்றாவது பருவம். முகி என்ற சொல்லுக்கு முகம் காணுதல் என்று பொருள். அரும்பி, இதழ்கள் உள்பக்கம் நெகிழ்ச்சி அடைந்து, அடிப்பக்கம் சற்று பெருத்து, முகைத்து தோன்றுவதால், முகை பருவம் என்று அழைக்கப்படுகிறது.

போது என்பது குவிந்திருக்கும் மொட்டு, வாய் திறக்கும் பருவம். இது கன்னிப் பருவத்தில் இருந்து, கற்பை ஏற்கும் திருமணப் பருவம் போன்றது. போழ்தல் என்றால் பிளத்தல் என்று பொருள்படும். அதுவே “போது” என்றானது.

மலர் என்பது இதழ்கள் தனித்தனியே விரிந்து நிமிர்ந்து நிற்கும் பருவம். வண்ணங்கள் மெருகேறி, மணம் கமழ்ந்து, தேன் துளித்து, கருக்கொள்வதற்கு ஏற்ற பருவம். இந்த நிலையில்தான் பொகுட்டும், தாதும் வெளிப்படும். பொகுட்டு என்பது கருவை ஏற்று விதையை உருவாக்கும் .

அலர் என்பது மலரின் புற இதழ்கள் உதிர்ந்து, அக இதழ்கள் விரியும் காலம். விரிதல் மற்றும் பரவலுக்கும் அலர்தல் என்றே பெயர்.

வீ  என்பது நிறை வாழ்வு பெற்ற பூ, காம்பில் இருந்தும், தண்டில் இருந்தும் வீழ்தலை குறிக்கும். வீ என்பது நீங்குதல், வீழ்தல், கழன்று கொள்ளுதல் போன்ற பொருள்களை குறிக்கும்.

இவ்வாறு, மலர்களைப் போலவே, மனித வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் ஏழு பருவங்களை கடக்கின்றனர்.

சங்க இலக்கியங்கள், மலர்களை ஒப்பிட்டு வெறும் அழகியல் மற்றும் தத்துவங்களை மட்டுமே பேசவில்லை. அறிவியலையும் பேசுகிறது. அதை அடுத்த அத்தியாத்தில் காண்போம். (தொடரும்).