“கண்ணாடி”…. கவிதை! – ப.உ.தென்றல்

மோட்டார் சைக்கிளில்

பொருத்தியிருக்கும் கண்ணாடியுடன்

மயிலின் பல மணி நேரப்போராட்டம்,

கண்ணாடியின் பாதுகாப்பைக் கருதி

நான் விரட்டியவுடன்

முடிவிற்கு வந்தது.

 

தன் முகமென்று அறியாமல்

கொத்திக் கொண்டிருக்கும் அதற்கு

‘அலகு வலிக்குமா?’ என்று

நான் நினைப்பதெல்லாம்

பொருட்டல்ல.

 

அதன் முகமா, அடுத்த மயில் முகமா

அதனைச் சலனப்படுத்துவது?

 

வேறொன்று என நினைத்துப்

போராடிக் கொண்டிருக்கிறதோ?

விட்டுச் செல்ல மனம்

ஒப்பவில்லை போலும்!

 

கண்ணாடி படுத்தும் பாடு –

அதிசயமாய் முகம் பார்க்கும்

மயிலுக்குத்தான்.

நித்தம் முகம் பார்க்கும்

முகமூடி மனிதர்களுக்கு அல்ல.