“என்ன காரணம்?” … சிறுகதை!

– ராஜேந்திரன்

ஐந்து நிமிட வாசிப்பு…

எனக்கு தெரிந்து, இதுவரை நான் பணியாற்றிய தனியார் நிறுவனங்களில், எனக்கு தெரிந்த சிலரை வேலைக்கு சேர்த்திருக்கிறேன். அதுபோல, என்னையும் சிலர் வேலைக்கு சேர்த்திருக்கிறார்கள்.

ஒன்று நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ற பணியாளர்களை சேர்ப்பது. அல்லது, சிரமப்படும் சிலருக்கு, ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அது இருக்கும்.

அப்படித்தான், ஒரு முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் முக்கிய பொறுப்பில் இருந்த எனது நண்பர் ஒருவர், என்னை அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டார்.

நட்பு என்பது, அலுவலகத்திற்கு வெளியேதான். நட்பை பயன்படுத்தி எந்த சலுகைகளையும் பெற நானும் விரும்புவதில்லை. அவரும் அதை செய்வதில்லை. சில சமயத்தில், நியாமாக கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட நட்பு என்ற உறவு கிடைக்காமல் செய்து விடும்.

அப்படிப்பட்ட நாட்களில்தான், சிவனுடைய மூன்றாவது கண்ணுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தில், எனக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார்.

அவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரை, முதலாளி திடீரென்று வேலையை விட்டு நிறுத்தி விட்டார். அவன், கடும் மன உளைச்சலில் இருக்கிறான். பொருளாதார நெருக்கடி வேறு. அவனுக்கு நீ வேலை செய்யும் நிறுவனத்தில், ஏதாவது ஒரு வேலை வாங்கி தர முடியுமா? என்று கேட்டார்.

திடீரென்று, அவரை வேலையை விட்டு நிறுத்த என்ன காரணம்? ஏதாவது தவறு செய்து விட்டாரா? என்று கேட்டேன்.

அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ மாவட்ட செய்தியாளர்கள் சிலரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு, பணம் வசூலித்து விட்டான் என்று புகார் வந்தது. அதனால், அவன் வேலையை விட்டு நிறுத்தப்பட்டு விட்டான் என்றார்.

அப்படி என்றால், அதே போல, வேறு ஒரு வாரப் பத்திரிகையில் வேலைக்கு சேர வேண்டியதுதானே? என்றேன்.

இல்லை. வேறு எந்த பத்திரிகையிலும் அவனை சேர்க்க மாட்டார்கள். ஏனென்றால், அவனுடைய புகைப்படத்தை அட்டைப்படத்தில் போட்டு, இவனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று செய்தியே வெளியிட்டு விட்டனர் என்றார்.

அப்படிப்பட்டவருக்கு, நான் எப்படி என்னுடைய நிறுவனத்தில் பரிந்துரை செய்ய முடியும்? மேலும், அவரை பரிந்துரை செய்வது தவறாயிற்றே என்றேன்.

உண்மைதான், இப்போது அவன் இருக்கும் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இனி, அதுபோல, அவன் நடந்து கொள்ள மாட்டான். என்னிடம் சத்தியம் செய்கிறான். அவன் குடும்பம் சிரமப்படுகிறது. எனவே மனிதாபிமான அடிப்படையில் அந்த உதவியை செய் என்று உருக்கமாக பேசினார்.

மேலும், நாங்கள் வேலை செய்வது ஒரு சிறிய நிறுவனம். ஆனால், நீ வேலை செய்வது கடல் போன்று பெரிய நிறுவனம். அதனால், எதாவது ஒரு ஓரத்தில் இவன் இருந்துவிட்டு போகட்டும். ஒரு குடும்பத்தை காப்பாற்றிய புண்ணியம் உனக்கு கிடைக்கும் என்றார்.

அடுத்தநாள், சம்பந்தப்பட்ட நபரும், என்னிடம் வந்து தன்னுடைய இயலாமை, வறுமை, குடும்ப கஷ்டம் எல்லாம் எடுத்து சொல்லி, எப்படியாவது உங்கள் நிறுவனத்தில் எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள் என்று  என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதைக்கேட்டு எனக்கும் சிரமமாகத்தான் இருந்தது. நானும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இல்லை. சம்பாதிப்பது கைக்கும், வாய்க்கும் சரியாகத்தான் இருந்தது. ஆனாலும், எந்தவித கெட்ட பெயரும் இல்லாததால், எனக்கு நான் பணியாற்றிய நிறுவனத்தில் எனக்கு நல்ல மரியாதை இருந்தது.

அந்த செல்வாக்கை பயன்படுத்தி, எனது உறவினர் சொன்ன அந்த நபருக்காக, நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த எனது நண்பரிடம் பேசினேன். நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்திற்காக, நான் பரிந்துரைத்த நபருக்காக வேலை போட்டுக் கொடுத்தார் நண்பர்.

கிடைத்த வேலையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவரும் மன நிறைவோடு, வேலையை தொடர்ந்தார்.

இதெல்லாம் முடிந்து சில மாதங்கள் ஆகி இருக்கும். இன்னொரு நண்பர் வந்தார். அவரைப்போல, எனக்கும் உங்கள் நிறுவனத்தில் ஒரு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கெஞ்சாத குறையாக கெஞ்சினார்.

அவராவது, செய்தி எழுதுவதில் அனுபவம் பெற்றவர். அதனால், கிடைத்த வேலையை ஒழுங்காக செய்து வருகிறார். ஆனால், உங்களுக்கு செய்தி எழுதுவதில் அனுபவமே இல்லையே, நான் எப்படி உங்களுக்காக வேலைக்கு சொல்ல முடியும் என்றேன்.

இல்லை நானும் சில பத்திரிகைகளில் வேலை செய்துள்ளேன். கொஞ்சநாள் சினிமா ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி இருக்கிறேன். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கும் இங்கிருந்து நிகழ்ச்சிகளை எல்லாம் ஷூட்டிங் எடுத்து கொடுத்து இருக்கிறேன் என்றார்.

எனக்கு நியூசை தவிர வேறு செக்ஷன் பற்றி தெரியாது. அதனால், உங்களுக்கு நான் எப்படி பரிந்துரை செய்ய முடியும் என்று மீண்டும் அவரிடம் கேட்டேன்.

இல்லை, நான் வேலைக்கு சேர்ந்து விட்டால், ஒரே மாதத்தில் தயார் ஆகிவிடுவேன். எனக்கு இப்போது திருமண ஏற்பாடு நடக்கிறது. எந்த வேலையும் இல்லாததால், பெண் கொடுப்பவர்கள் யோசிக்கிறார்கள் என்று மிகவும் நொந்து போய் பேசினார்.

அவர் சொன்னது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. சரி.. நான் எனது துறைத்தலைவரிடம் பேசிப்பார்க்கிறேன் என்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அதே மாதிரி, என்னுடைய துறை தலைவரிடம், விஷயத்தை சொல்லி இவருக்கும் ஒரு வேலை போட்டு தருமாறு கோரிக்கை வைத்தேன்.

சில நாட்களில், அந்த கோரிக்கைக்கும் முழு பலன் கிடைத்தது. திருமணத்திற்காக வேலை தேடிய அந்த நபருக்கும் வேலை கிடைத்தது.

இந்த நேரத்தில் நீங்கள் செய்த உதவியை, என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று, முதல் நபரை போலவே, ஐவரும் நா தழுதழுக்க நன்றி கூறினார்.

நான் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கும் இதுபோல, பலர் வேலைக்காக உதவி செய்து இருக்கிறார்கள். அதனால், கெட்ட பெயரை சம்பாதிக்காமல், ஒழுங்காக வேலை செய்யுங்கள் போதும் என்று நான் முடித்துக் கொண்டேன்.

அடுத்த சில மாதங்களில், வேறு சில காரணங்களால், நான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டேன். அது ஒரு உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவுதான். இருந்தாலும், என்னால் அந்த முடிவை மறு பரிசீலனை செய்ய முடியவில்லை.

என்னுடைய துறை தலைவர், எனக்கு ஏற்கனவே எனக்கு நெருக்கமான நண்பர் என்பதால், கௌரவத்தை விட்டு, என்னை மீண்டும் வேலைக்கு வருமாறு  அழைத்தார். அவரின் சார்பாக மற்ற நண்பர்கள் சிலரும் என்னை மீண்டும் வேலைக்கு அழைத்தனர். ஆனால், நான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து விட்டேன்.

நான் வேலையை விட்டு நின்ற சில மாதங்களில், அங்கே என்னோடு  பணிபுரிந்த சக ஊழியர் ஒருவர், திடீரென் ஒரு நாள், என்னிடம் அலைபேசியில் பேசினார்.

அப்போது, உங்கள் திறமையையும், சுய மரியாதையையும் நிரூபித்துவிட்டு, நீங்கள் இந்த வேலையை விட்டு சென்று விட்டீர்கள். அதனால், இன்றும் ஆசிரியர் குழுவில் உங்களைப்பற்றி உயர்வாகவே பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், நீங்கள் வேலைக்கு சேர்த்துவிட்ட இரண்டு பேரும், உங்கள் பேரையே கெடுத்து விட்டனர் என்றார்.

அதைக்கேட்டு எனக்கு தூக்கி வாரிப்போட்டது. என்ன சார்? என்ன நடந்தது என்றேன் பதற்றத்துடன்…

இரண்டு பேரும் மாவட்ட செய்தியாளர்கள் சிலரை கையில் போட்டுக்கொண்டு, பணம் வாங்கிக்கொண்டு செய்தி போட்டு வருவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரை கையில் வைத்துக் கொண்டு, அப்படியே ஒன்றும் தெரியாதது போல இருந்து கொண்டே, அந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து விட்டார் நம் துறை தலைவர்.

அதையடுத்து, எல்லார் எதிரிலும், அசிங்க அசிங்கமாக, கேவலமாக வார பத்திரிகைகாரரை திட்டி விட்டார். அப்படி ஒரு திட்டு யாராவது வாங்கி இருந்தால், இந்நேரம் வேலையை தாமாக ராஜினாமா செய்து விட்டு போய் இருப்பார்கள். ஆனால், கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல், மீண்டும் போய் தனது இருக்கையில் உட்கார்ந்து அவர் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

துறைத்தலைவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எழுந்து வீட்டுக்கு கிளம்பு… இனி, நான் சொல்லும் போதுதான் வேலைக்கு வரவேண்டும் என்று அனுப்பி விட்டார்.

அதோடு வேலையை விட்டு நின்று விடுவார் என்று எதிர்பார்த்தால், ஒரு வாரம் கழித்து, துறைத்தலைவர் என்ன சொல்கிறார்? என்று கேட்டு எங்கள் எல்லாரிடமும் போனில் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்.

பிறகு இரவுப்பணி பார்ப்பதற்கு ஆள் இல்லை என்பதால், கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்டு மீண்டும் வேலைக்கு சேர்க்கப்பட்டார்.

திருமணத்திற்காக வேலைக்கு வந்தவர் நிலை அதைவிட மோசமாக ஆகி இருக்கிறது. அவரைப் போலவே இவரையும், ஆசிரியர் குழுவின் மத்தியில் அசிங்கமாகவும், கேவலமாகவும் பேசி.. அப்படியே, அவர் கழுத்தை பிடித்து, நெட்டி வெளியில் தள்ளி, இனி இந்த பக்கமே வரக்கூடாது என்று துரத்தி விட்டார்.

அந்த அவமானத்தில், அப்படியே அவர் வேலையை விட்டு போய் விடுவார் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.

ஆனால், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த அவர், ஒரு பேப்பரில், இனி இதுபோல தவறுகளை எல்லாம் செய்ய மாட்டேன் என்று, மன்னிப்பு கடிதம் ஒன்றை, துறைத்தலைவரிடம் எழுதிக்  கொடுத்துவிட்டு பரிதாபமாக நின்றார்.

துறைத்தலைவருக்கே என்ன செய்வது என்று தெரியவில்லை? தொலைஞ்சி போ.. இனிமே ஏதாவது கம்பிளைன்ட் வந்தா.. அவ்வளவுதான் என்று பல்லை “நற நற” வென கடித்தார்.

இதுதான் சமயம் என்று ஓடிப்போய், தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டார் என்று, அவர் சொல்லி முடிக்கும்போதே… எனக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது.

பரிதாபப்பட்டு வேலைக்கு சேர்த்தவர்கள் இப்படி அருவருப்பான வேலைகளை  செய்கிறார்களே.. என்று வருத்தப்படுவதை விட, என்னால் வேறு எதையும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் இருவரும், என்னுடன் பேசுவதற்கு கூட விரும்பாத நிலையில் இருந்தனர்.

பிறகு என்ன நடந்தது என்று தெரியாது. அந்த இருவருமே அந்த நிறுவனத்தில் பணியில் இல்லை.

எனக்கும், அவர்களோடு தொடர்பும் இல்லாமல் போய் விட்டது. ஆனால், சமூக ஊடகங்களின் வாயிலாக மீண்டும் அவர்களைப் பற்றி அறிய நேர்ந்தபோதுதான் எனக்கு திடுக்கிட்டது.

பத்திரிகையில் கட்டம் கட்டி வெளியேற்றப்பட்டவர், சமூக ஊடகங்களில் தன்னைத்தானே ஒரு அரசியல் விமர்சகராக கட்டமைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கழுத்தை நெட்டி வெளியே தள்ளப்பட்டவர், ஒரு வரலாற்று ஆய்வாளராக சிலரால் போற்றப்படுகிறார்.

எப்படியோ, நன்றாக இருந்தால் சரி என்றுதான்.. நான் நினைக்கிறேன். அவர்களைப் பற்றி, பொது வெளியிலோ, தனிப்பட்ட முறையிலோ, எந்த விமர்சனத்தையும் நான் முன் வைப்பதில்லை.

நான் எந்த நிறுவனத்தின் உயர் பதவியிலும் இல்லை. சுய தொழிலிலும் தன்னிறைவு அடையவில்லை. ஆனாலும், என்னைக் கண்டால் அவர்கள் காத தூரம் ஓடுகிறார்கள்.

என்னுடனைய நட்பை பற்றி கூட, அவர்கள் பொதுவெளியில் மூச்சு விடுவதில்லை. என்ன காரணமாக இருக்கும்?