“இதயத்தின் நறுமணம்” …சிறுகதை!

-ராஜேந்திரன்

ஐந்து நிமிட வாசிப்பு….

என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், ஒரு நெடிய ரயில் பயணத்தின் இடையே, தமது உயிருக்கு உயிரான மனைவியின் உயிர், தன்னுடைய மடியிலேயே பிரிவதை பார்த்தும், அதை தடுக்க முடியாத கையறு நிலையை, ஆண்டவன் அவருக்கு தந்திருக்கக் கூடாது.

அவரை நன்கு அறிந்தவர்கள் அனைவரும் அன்றைய தினம் ஆண்டவனை இப்படித்தான் சபித்து இருப்பார்கள்.

ஆண்டவன் அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை. நல்ல படிப்பு. வங்கியில் வேலை. கை நிறைய சம்பளம். தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர். நாடக நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் அவர்.

குடும்பத்தின் அனைத்து பொறுப்புக்களையும் தானே கையில் எடுத்துக் கொண்டு, பாரம் என்றால் என்னவென்றே தெரியாமல், கணவனை ஒரு குழந்தையை போலவே வைத்திருந்த மனைவி.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், இருவருமே நன்றாக படிப்பை முடித்து, நல்ல இடங்களில் மணம் முடிக்கப்படவர்கள்.

இப்படி அனைத்தையும் பஞ்சம் இல்லாமல் அந்த செய்தி வாசிப்பாளருக்கு கொடுத்த இறைவன், அவர் மனைவியை மட்டும், யாரும் எதிர்பார்க்காத இடத்தில், எதிர்பார்க்காத நேரத்தில் பறித்துக் கொண்டான்.

மூத்த மகளைப் பார்க்க, மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் புனேவை நோக்கி சென்று கொண்டிருந்தனர் அந்த தம்பதிகள்.

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் ரயில் நிலையம் வருவதற்கு முன்பாக, லேசாக நெஞ்சு வலிப்பது போல இருக்கிறது, மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கிறது என்று தவித்தார் அவரது மனைவி.

திருமணம் ஆன நாளில் இருந்து, மனைவி அப்படி துடிப்பதை பார்த்திராத அவருக்கு, இதயமே நின்று விடுவது போல இருந்தது.

மனதை திடப்படுத்திக் கொண்டு, அப்படியே, சக பயணிகள் உதவியுடன், ரெய்ச்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி, மனைவியை சக்கர வண்டியில் அமர்த்தி தள்ளிக்கொண்டே ஓடினார் அவர்.

அந்த இக்கட்டான நேரத்திலும், தன்னுடைய மரண வேதனையையும்  மறந்து, கணவனின் கண்ணீர் துளிகளைக் கண்டு பொறுக்க முடியாமல் தவித்தார் அவரது மனைவி.

சக்கர நாற்காலியில் இருந்தபடியே, கணவரின் நெஞ்சில் கை வைத்து, “அழாதீங்க, என்னை நீங்கள் கண்டிப்பாக காப்பாற்றி விடுவீர்கள்” என்று திடப்படுத்தினார்.

எப்படியோ, ரயில் நிலைய வாசலுக்கு வந்து, அவசர அவசரமாக ஒரு ஆட்டோவைப்பிடித்து, அதில் மனைவியை உட்கார வைத்து, தானும் அமர்ந்து, தன்னுடைய மனைவியின் தலையை, தன் மடி மீது வைத்துக் கொண்டே, மருத்துவமனையை நோக்கி பயணித்தார் அவர்.

ஆனால், அவரது மனைவியின் உடலை சுமந்த அந்த ஆட்டோ, அவரது உயிரை மட்டும், வரும் வழியிலேயே தவற விட்டு விட்டது.

அந்த சம்பவத்தை செய்தித்தாளில் படித்து விட்டு கலங்காதவர்கள் என்று யாருமே இருந்திருக்க முடியாது. அவர்களை விட அதிகமாக கலங்கியவர்கள் நாங்களே.

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை…

அரசு தொலைகாட்சி மட்டுமே கோலோச்சிய காலத்தில், முதன் முதலாக வந்த தனியார் சேனல் அது. அதன் ஒவ்வொரு நிகழ்ச்சியும், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

காலை, மதியம், இரவு என்று மூன்று தடவை, அதில் இடம் பெறும் செய்திகளும், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.

அப்போதெல்லாம், அந்த சேனலில், ஒரு நாளாவது வேலை செய்துவிட   வேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் கனவாக இருந்தது.

அடுத்த சில மாதங்களில், எனக்கு அந்த கனவும் கைகூடியது.

திரையில் தோன்றும் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தாலும், ஆரம்பத்தில், திரைக்கு பின்னால் இருந்து செய்தி எழுதும் வேலையே கிடைத்தது.

கிடைத்த வேலையை நான் மட்டும் அல்ல, என்னோடு இருந்தவர்களும் ஒரு தவமாகவே செய்தோம்.

ஆனால், இரவுப்பணி என்று வரும்போது மட்டும் சில வசதி குறைவுகள் மற்றும் சில நெருக்கடிகள் என்பது, அங்கே தவிர்க்க முடியாமல் இருந்தது.

அச்சு ஊடகத்தில் இரவுப்பணி என்பது, அதிகபட்சம் இரவு ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கெல்லாம் முடிந்து விடும். ஆனால், தொலைக்காட்சியை பொறுத்தவரை, காலை நான்கு மணியில் இருந்துதான் பதற்றமே ஆரம்பிக்கும்.

முதல்நாள் பின்னிரவில் வந்த செய்திகள், இரவு பனிரண்டு மணிக்கு வானொலியில் வரும் ஆங்கில செய்தி, மறுநாள் தினசரி பத்திரிகைகளில் வரும் முக்கிய செய்திகள், இது தவிர, மாவட்டங்களில் இருந்து வரும் செய்திகள் என அனைத்தையும் முழுமையாக அலசி ஆராய்ந்த பின்னரே, அன்றைய காலை தொகுப்பில் இடம் பெற வேண்டிய செய்திகள் என்னென்ன? என்பதை இறுதி செய்ய முடியும்.

அதனால், அந்த பதற்றம் நிறைந்த காலை நேரங்களில், குறைந்த பட்சம்  இரண்டு தடவையாவது தேநீர் அருந்தினால்தான், தூக்கமும், அசதியும் குறைந்து பணியாற்றுவதற்கு தெம்பாக இருக்கும்.

அப்போதெல்லாம் கேண்டீன் வசதி கிடையாது. மேலும், வெளியில் சென்று தேநீர் அருந்தி விட்டு வருவதற்கும் நேரம் இருக்காது. சேனலிலும், காலை நேர தேநீருக்கு அனுமதி இல்லை.

அவரவர் சொந்த பணத்தை செலவு செய்துதான், ஆபிஸ் பாயை தேநீர் வாங்கி வரசொல்லி அருந்துவோம். வரும் தேநீரை, உடன் பணியாற்றும் மற்றவர்களை விட்டுவிட்டு  ஓரிருவர் மட்டுமே அருந்தவும் மனது வராது.

இப்போது உள்ளது போல, சேனல்களில் அப்போது சம்பளமும் அதிகம் இருக்காது. அச்சு ஊடகத்தில் வரும் சம்பளத்தை விட, சற்று கூடுதலாக இருக்கும். அவ்வளவுதான்.

அதனால், இரவுப்பணி என்பது எங்களுக்கு ஒரு சாபமாகவே இருக்கும். அதனால், நாங்கள் அனைவரும், அவரவர் வசதிக்கு ஏற்ப, சிறிது பணத்தை போட்டு, ஆபிஸ் பாய் மூலம், தேநீர் வாங்கி வர சொல்லி அருந்துவோம்.

அப்போதெல்லாம், நேரலை இல்லாமல், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகும். அதனால், செய்தி வாசிப்பாளர்களும், காலை ஐந்து மணிக்கு முன்பே வந்து விடுவார்கள்.

ஒரு சில நாட்களில், செய்தி வாசிப்பாளர்களில் சிலர், எங்கள் தேநீர் செலவை, விரும்பி ஏற்றுக்கொள்வதும் உண்டு.

அந்த செய்தி வாசிப்பாளர்களில், ஒருவராகத்தான் அவர் எங்களுக்கு முதலில் அறிமுகம்.

ஏற்கனவே அரசு தொலைக்காட்சிகளில் செய்தி வாசித்து பிரபலம் அடைந்தவர், வயதிலும் கொஞ்சம் மூத்தவர் என்பதால், அவரிடம் மிகுந்த மரியாதையுடன் அனைவரும் பழகுவோம்.

ஆனால், அவரைப் பொறுத்தவரை, மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதைத் தவிர, வேறு எதையும் நாங்கள் பார்த்ததில்லை.

அன்று காலை, செய்தி வாசிப்பதற்காக அவர் வந்திருந்தார். அந்த நேரத்தில் ஆளுக்கு, ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என தேநீருக்காக ஆபிஸ் பாயிடம், நாங்கள் பணம் கொடுத்துக்கொண்டு இருந்தோம்.

அதைப்பார்த்த அவர், என்ன எல்லோரும் ஆளாளுக்கு ஐந்து, பத்து என பணம் கொடுக்கிறீர்கள் என்றார்.

அதற்கு, சிரித்துக்கொண்டே, இது டீ கலெக்ஷன் என்று அவரிடம் சொன்னான் ஆபிஸ் பாய்.

அவர் என்ன நினைத்தாரோ? தெரியவில்லை. காலை செய்தியின் பொறுப்பாசிரியராக இருந்த என்னிடம் நேராக வந்தார். சார், இன்று யாரிடமும் தேநீருக்காக பணம் வசூலிக்காதீர்கள். நானே தருகிறேன் என்று ஒரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

நாங்கள் வேண்டாம் என்று மறுத்தோம். அவர் கேட்கவில்லை. அத்துடன் விடுவார் என்று பார்த்தாலும் விடவில்லை.

அடுத்து, நான் காலையில் செய்தி வாசிக்கும் போதெல்லாம், நீங்கள் தேநீருக்காக பணம் வசூல் செய்ய வேண்டாம். நானே வீட்டில் இருந்து ஒரு பிளாஸ்க் முழுக்க காப்பி போட்டு எடுத்து வருகிறேன் என்றார்.

அதைக்கேட்டு நாங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனோம்.

அன்று முதல், அவர் எப்போதெல்லாம் காலையில், செய்தி வாசிக்க வருகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு ப்ளாஸ்க் முழுக்க காப்பியை நிரப்பிக்கொண்டு வந்து எங்களுக்கு கொடுப்பார்.

நறுமணம் மிகுந்த அவர் வீட்டு காப்பி, மாதக்கணக்கில் எங்களுக்கு  தொடர்ந்தது கிடைத்துக் கொண்டே இருந்தது. நாங்கள் மிகவும் ருசித்து சாப்பிடுவோம்.

கொஞ்சம் கூட சளைக்காமல், அவர் வரும்போதெல்லாம் நறுமணம் மிகுந்த காப்பியோடு வருவது, ஒரு கட்டத்தில் எங்களுக்கே, சற்று தர்மசங்கடமாக இருந்தது.

அன்று அதிகாலை நானே ஆரம்பித்தேன்.

சார், ஏதோ ஒரு நாள், ரெண்டு நாள், வீட்டில் இருந்து காப்பி கொண்டு வந்து கொடுத்தால் சரி. ஆனால், இப்படி ஒவ்வொரு நாளும் நீங்கள் கொண்டு வந்து கொடுப்பது எங்களுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது. உங்களோடு சேர்ந்து, உங்கள் மனைவியும் எங்களுக்காக சிரமப்பட வேண்டுமா? என்று சற்று தயக்கத்துடன் கூறினேன்.

அதைக்கேட்டு அவருடைய முகம், அப்படியே மாறிப்போனது.

சார், எனக்கு என்றைக்கெல்லாம் காலை செய்தி இருக்கிறதோ, அதை அறிந்து கொண்டு, முதல் நாளே, என் மனைவி கூடுதலாக ஒரு பால் பாக்கெட் வாங்கி, பிரிட்ஜில் வைத்துக் கொள்வாள். நான் இங்கே வரும் ஒவ்வொரு நாள் காலையும், உங்களுக்கெல்லாம் காப்பி போட்டு கொடுப்பதில், என்னை விட அவள்தான் அதிக மகிழ்ச்சி அடைகிறார் என்றார்.

அவர் சொன்னதை கேட்டு, நானே கொஞ்சம் தடுமாறிப்போனேன்.

மன்னித்துக் கொள்ளுங்கள் சார். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில், உங்கள் மனைவிக்கு எவ்வளவு மகிழ்ச்சி. எங்கள் அனைவரின் சார்பாக, உங்கள் துணைவியாருக்கு நன்றி சொல்லுங்கள்  என்று முடித்துக் கொண்டேன். அப்போதுதான் அவரது முகம், மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.

அடுத்த சில ஆண்டுகளில், அந்த சேனலில் இருந்து நான் உள்பட பல பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டோம். அவரும், நெடுந்தொடர் மற்றும் மேடை நாடகங்களில் பிசியாகி விட்டார்.

அந்த சமயத்தில்தான், அவரது மனைவியை, அந்த நீண்ட ரயில் பயணத்தின் இடையே, அவர் பறிகொடுத்த நெஞ்சை பிழியும் அந்த செய்தி, ஊடகங்களில் வெளியானது.

அதைப்பார்த்து, எங்கள் கண்கள் மட்டும் அல்ல, இதயமும் கலங்கத்தானே செய்யும்.

முகம் தெரியாத எங்களுக்காக கூட, முகம் சுளிக்காமல் இயங்கிய,  நறுமணம் கமழும் அந்த இதயத்தின் துடிப்பு, இப்படித்தான் அடங்க வேண்டுமா?