“பல்லிகள்” கவிதை – ப.உ.தென்றல்

பல்லியும் உரிமை

கொண்டாடுகிறது

வீட்டை .

 

முட்டையையும்,

குட்டியையும்

பெருக்கி வெளியில்

போடலாம்.

பெரியதை ஒன்றும்

செய்ய முடிவதில்லை.

ஆட்டம் காட்டுபவை.

நிரந்தர உறுப்பினர்கள் போல்

சர்வ சாதாரணமாய்

வலம் வருபவை.

பெயர் வைத்து

குடும்ப அட்டையில்

சேர்க்காததுதான் குறை.

 

சன்னல்களில் குடித்தனம்

நடத்துபவையோ –

“இப்ப என்ன ?;

நானும் இந்த வீடுதான் “.

சொல்லாமல் சொல்லிப்

பகல் தூக்கம் தூங்குபவை.

 

ஒட்டடை அடிக்கும்போதும்,

துடைக்கும் போதும்,

” நாங்களும் இருக்கிறோம்” என்று

காட்டிக் கொள்பவை.

சமயங்களில்,

எரிச்சலையும் உண்டு

பண்ணும் –

வீட்டுக்கு வீடு

அண்டிக் கிடக்கும் பல்லிகள்.

 

தலையில் விழுவது,

தோளில் விழுவது .

எழுப்பும் ஒலிகள் –

சகுனம், அபசகுனம்

பல கதைகள் உண்டு

இதற்கு .

 

துரத்தும்போது,

தப்பிப்பதாய் –

வாலை விட்டு

ஓடும் பல்லிகள்

நின்று கூறும் :

“என் வீடு! திரும்ப வருவேன்!”