இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கத் தூண்டும் கொரோனா!

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா கற்றுத்தந்துள்ள பாடத்தில் முக்கியமானது இயற்கை விவசாயம்.

நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்றவர்கள், இதற்கான விழிப்புணர்வை ஏற்கனவே தொடங்கிவிட்ட பின்னரும், இன்றுவரை, அது முழுமை பெறாமலே இருந்து வருகிறது.

தொற்று நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே என்பது, அறிவியல் உலகத்திற்கு நன்றாகவே தெரியும். உடலில். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்கு, நாம் உண்ணும் உணவுப்பொருட்களே காரணம் என்பதும் தெரியும்.

மாட்டு சாணம், பசுந்தாள் உரங்கள் மட்டுமே பயன்படுத்தி வேளாண்மை செய்த காலத்தில், அதில் இருந்த பெற்ற உணவுப்பொருட்களில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருந்தது.

ஆனால், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக, உணவுப்பொருட்களில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, மண்ணும் மலடாகி வருகிறது.

அதே போல், விவசாயத்திற்காக வழங்கப்படும் சலுகைகளும், ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கே பயன்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, உலகின் பல நாடுகளிலும் ஏற்பட்ட பாதிப்பு, அந்நாடுகளை எல்லாம் மீண்டும், இயற்கை விவசாயம் நோக்கி திரும்ப வைத்துள்ளது.

ஆனால், பெரும்பாலான மக்கள், விவசாயத்தையே பெரிதும் நம்பி வாழும் நம் நாட்டில், முக்கிய அமைப்பான, நிதி ஆயோக், தற்போது, இயற்கை விவசாயத்தின் முன்னெடுப்புகளை தொடங்க ஆரம்பித்துள்ளது.

சர்வதேச அளவிலான, கொரோனா குறித்த காணொளி கலந்தாய்வில், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை, இந்திய நிதி ஆயாக், மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது, விவசாயிகளையும், இயற்கை விவசாய ஆர்வலர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இயற்கை விவசாயம் என்பது வெறும் பயிர் சாகுபடி மட்டும் அல்ல. நமது பாரம்பரிய விவசாய முறைகள் அனைத்தையும் மீட்டெடுப்பதும் கூட.

வேளாண்மை சார்ந்த காடு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி கொல்லிகள் போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.

அத்துடன், கடும் வறட்சியை சமாளிக்க நீர் சேமிப்பு கட்டுமானங்களும், பெரு வெள்ளத்தின் சேதத்தை கட்டுப்படுத்த வடிகால் வசதிகளும் நிறைந்த, அடிப்படை கட்டுமானத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையிலும் இன்று நாம் இருக்கிறோம்.

இலை, தழைகள், ஆடு மாடுகளின், சிறு நீர், சாணம், போன்றவை மண்ணின்  மலட்டு மண்ணையும் வளமாக்கும். நாட்டு இன மாடுகள், நமது தட்ப வெப்ப நிலையை தாக்குப்பிடித்து வாழும் தன்மை கொண்டவை. பனையேறி கெண்டை போன்ற நுரையீரல் கொண்ட மீன்கள், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வலிமை கொண்டவை.

எனவே, மனித சமூகம் காக்கப்பட, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவனின் வாக்கை, கொரோனா என்னும் கொடிய ஆபத்து, காலம் கடந்தாவது உணர்த்தி இருக்கிறது என்றே, இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.