வள்ளுவம் ஒரு வாழ்வியல் வழிகாட்டி!…. ச. பராக்கிரம பாண்டியன்

திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளில் தோன்றிய மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவர். வள்ளுவரின் சிந்தனை ககனம் போன்று எல்லையற்று பரந்து விரிந்தது. பண்ணெடுங்காலமாக குமுகத்தில் நிலவிய பல மூடபழக்க வழக்கங்களைத் தனது அறிவுத்தீயால் தீக்கிரையாக்கியவர். அவர் வீசியெறிந்த தீக்கங்குகள் இன்னும் கனன்று கொண்டுதான் இருக்கிறது. அறமற்ற செயல்களைச் சுட்டெறிப்பதற்கு!

எப்போதும் வாய்மையைக் கைக்கொள்! எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்! காலம் கருதி செயல்படு! அறிவை விரிவுசெய்! அறத்தின் வழியில் பொருள் தேடு! ஈதல் செய்! இன்பத்தை பெறு! பொய் சொல்லாதே! புலால் உண்ணாதே! கள்ளுண்ணாதே! களவு செய்யாதே! வஞ்சம் கொள்ளாதே! பொய்மை பேசாதே! தீயவர் உறவை மேற்கொள்ளாதே! பெரியோரைத் துணைக் கொள்! ஆராயாமல் நட்பு கொள்ளாதே! பிறன்மனை விழையாதே!  வரைவின் மகளிர் உறவு கொள்ளாதே! இவைதான் வள்ளுவர் குறிப்பிடுகிற மிக முதன்மையான கொள்கைகளில் சில.

இக்கொள்கைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ, இனத்திற்கோ, மொழிக்கோ, மனிதனுக்கோ என்று அவர் படைக்கவில்லை. ஒட்டுமொத்த மானுட சமூகத்திற்கும் அறநெறியோடு வழிகாட்ட வேண்டும் என்ற உந்துதலோடும், மேலுயுயர்ந்த சிந்தனையோடும் எழுத்தாணி கைக்கொண்டு இறவாப் பேறு பெற்ற உலகப்பொதுமறை என்ற இலக்கியத்தை இவ்வுலகிற்கு வழங்கியுள்ளார்.

மழலைத் தொடங்கி நாட்டை ஆட்சி செய்யும் மன்னன் வரைக்கும் அறநெறி சார்ந்து எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக் கூடாது? என்று ஒரு வழிகாட்டியாக நம்மை கைகூட்டி அழைத்துச் செல்கிறார் தெய்வப்புலவர். இந்த வையம் முழுவதும் பரவி வாழ்கிற மானுட சமூகம் ஏன் வள்ளுவரை வாழ்வியல் வழிகாட்டியாக மேற்கொள்ள வேண்டும் என்ற உந்துதலே இந்த கட்டுரையின் தோற்றுவாய்.

 பகுத்தறிவு: உலகில் தோன்றிய உயிர்களிலேயே பகுத்தறியும் திறன் கொண்ட ஒரே இனம் மனித இனம் மட்டுமே. எதுவொன்றையும் பகுத்தறியாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதும், ஒரு பணியை பிறரிடம் ஒப்படைப்பதும் மனித இயல்புகளுக்கு முற்றிலும் முரணானது என்பதை வள்ளுவர் உணர்ந்ததால் தான் ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று சொல்கிறார்.

 அறநெறி: நிலையற்ற வாழ்க்கையை நிலைபேறுடையதாக மாற்றும் வல்லமை கொண்ட ஒரு கருவி தான் அறம். அறம் என்பது தர்மம் செய்வதோடு முடிந்து போகிற ஒரு விடயமல்ல. வள்ளுவர் காட்டுகிற அறம் என்பது பொறாமை, ஆசை, சினம் மற்றும் கடுஞ்சொல் இந்நான்கு செயல்களையும் தவிர்த்து வருவதே அறம் என்கிறார். அந்த அறத்தின் வாயிலாக வரக்கூடிய சிறப்பு எத்தகையது என்பதை ‘சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு’ என்ற தமிழ்மறை மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

இதையே ஔவையாரின் ஆத்திச்சூடியும் ‘அறம் செய விரும்பு’ என்று வழிமொழிகிறது. நான்முகனார் காட்டுகிற அறத்தின்  அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்கிறவர்கள் தம் வாழும் காலத்திலேயே தெய்வநிலையை எய்துவர் என்பதை, ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற பொதுமறை மூலம் நமக்கு உணர்த்துகிறார். எது தலையாய அறம்?  ‘வாய்மையும்’ ‘பல்லுயிர் ஓம்புதலுமே’ ஒருவன் தன் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய தலையாய அறம் என்று பொய்யாமொழியில் குறிப்பிடுகிறார்.

ஈதலின் பெருமை: ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்று புறநானூறு பேசுகிறது. வறியவர்களுக்கு உதவுவது என்பது  இறைவனுக்கே தொண்டு செய்வதற்கு சமம். வறியவர்களுக்கு கொடுத்து உதவுது ஒன்றே பேரின்பத்திற்கான திறவுகோல். தன்னை நாடி இரந்து வருகிறவர்களிடம் எதையும் எதிர்பாராமல் உதவி புரிய வேண்டும் என்பதை, ‘வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து’ என்கிறார். ஈதல் செய்வதால் என்ன பயன்? ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்ற வாயுறை வாழ்த்து மூலம் ஈதலின் மேன்மையையும் அதனால் வாழ்வில் உண்டாகும் பயனையும் பறைசாற்றுகிறார்.

இல்லற வாழ்வியல்: இல்லற வாழ்வு என்பது இன்பத்திற்கானது மட்டுமன்று. அன்பு செய்வதும், அறம் தழைக்க உதவுவதும், விருந்தினர் மனம் நோகாமல் விருந்தோம்புவதும் தான் இல்லற வாழ்வின் அடிப்படை நற்பண்புகள். அறமின்றி தீய நிலையில் இருப்பின் அது இல்லறமாகாது. ‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை’ என்ற முப்பால் காட்டுகிற வழியில் மானுட சமூகம் சென்றிருந்தால் இன்றைக்கு முதியோர் இல்லமே இல்லாத சூழல் உருவாகியிருக்கும்.

விருந்தோம்பல்: புதியவர்களுக்கு உணவு அளித்தலே விருந்தோம்பல் ஆகும்.  கிடைத்தற்கரிய அமிழ்தமே ஆனாலும் தமிழர்கள் அதை தாம் மட்டுமே உண்ணாமல் பலருக்கும் கொடுத்து மகிழும் குணம் உடையவர்கள். அத்தகைய, விருந்தோம்பல் குறித்து ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ என்று குறிப்பிடுகிறார். தம்மை நாடி வரும் விருந்தினர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற முறையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றவர் நாயனார்.

ஒழுக்கம்: ஒழுக்கம் என்பது இல்லையேல் இவ்வுலகம் பாழ்பட்டுப் போய்விடும் என்பதை முற்றும் தெளிந்து உணர்ந்ததால் தான் ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்றார். சங்கால பண்பாடு பரைத்தமையின் செயல்பாடுகளைக் கண்டித்தாக எங்கும் குறிப்பில்லை. நீண்ட நெடுங்காலமாக சமூகத்தில் புரையோடிப் போயிருந்த அத்தீய ஒழுக்கத்திற்கு எதிராக, ‘பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று’ என்று சாடுகிறார். மேலும், விலைமாதரை சென்றடைகிறவர்கள் கீழ்மக்கள் என்றும், அவ்வுறவு நரகத்தை ஒத்தது என்றும் கூறுகிறார். ஆயிரம் போர்க்களத்தில் வெற்றிக்கொடி நாட்டுகிறவனை விட பிறன்மனை நோக்காதவனே பேராண்மை கொண்டவன் என்று சொல்கிறார். சுய ஒழுக்கம் இல்லையேல் சர்வமும் நாசத்தில் முடியும் என்பதை நான்முகனாரைப் போன்று எச்சரிக்கை செய்த புலவர் எவருமில்லை.

வாய்மை கைக்கொள்: வாய்மை என்பது ஒர் உயர்ந்த அறநெறி. வாய்மை ஒருபோதும் மாறுவதில்லை. தீமையற்ற இன்சொற்கள் யாவும் வாய்மையே என்கிறார் வள்ளுவர், ‘வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்’ என்று வரையறை செய்வதோடு நின்றுவிடாமல் சில நேரங்களில், பொய்மை கூட நன்மை பயக்குமெனில் அப்பொய்மையும் வாய்மையே என்பதை ‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’ என்று கூறுகிறார். இவ்வுலகில் வாய்மையை விட சிறந்தது எதுவுமில்லை. செந்நாப்போதர் சுட்டுகிற வழியில் வாய்மையைக் கடைபிடித்தால் இம்மண்ணுலகே நல்லுலகாக மாறும்.

 சமூக ஏற்றத்தாழ்வு: சாதி, மதம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எந்தப் பாகுபாடுமின்றி மனிதனை மனிதனாகவே பார்த்தவர் தெய்வப்புலவர். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கணியன் பூங்குன்றன் வழிவந்த  சமத்துவ புலவர் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்று சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக சாட்டை வீசுகிறார்.

ஆனால், இன்றைக்கு நாம் சாதியால் பிளவுபட்டு தரம்தாழ்ந்த சமூகமாக மாறிக்கொண்டே இருக்கிறோம் என்றால் வள்ளுவரைக் கற்றும் என்ன பயன்? பிறப்பால் ஏற்றத்தாழ்வு நிலவிய சமூகத்தில் கல்வி தான் ஒரு மனிதனின் உயர்வு, தாழ்வை நிர்ணயிக்கும் என்பதை ‘மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு’ என்று கல்வியின் மேன்மையை கூறுகிறார் பொய்யாமொழிப் புலவர்.

மரபுகளை உடைத்தெறிதல்: புலால் உண்ணுவதையும், கள்ளுண்ணுவதையும், கள்ளுண்டு களித்தலையும் பெருமிதமாக நினைத்து பின்பற்றிய ஒரு நிலையை உடைத்தெறிந்து முதன்முதலில் கலகக்குரல் எழுப்பியவர் பொய்யில் புலவரே. கள்ளுண்ணும் சமூக ஒழுக்கக்கேட்டிற்கு எதிராக ‘உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்’ என்று சாடுகிறார். கள்ளுண்ணுவதை தீய பழக்கமென்று சொன்ன முதல் தமிழ் புலவர் வள்ளுவரே.

சங்க காலத்தில் கபிலர், ஔவையார் போன்ற பெரும் புலவர்கள் புலால் உணவைப் பற்றிப் பெருமை பேசுகின்றனர். புலால் உண்பது மனித நெறி அல்ல என்பதை முதலில் உரக்கச் சொல்லியவர் வள்ளுவரே ‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’ என்றும் ‘தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்உயிர் நீக்கும் வினை’ என்றும் புலால் உண்ணுவதையும் உயிர் கொலை புரிதலையும் எதிர்த்து வினையாற்றியவர் முப்பால் தந்த வள்ளுவரே.

செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை! முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்!  நன்றி மறப்பது நன்றன்று! அடக்கம் அமரருள் உய்க்கும்! அறிவுடையார் எல்லாம் உடையார்! சொல்லுதல் யாருக்கும் எளியவாம்! நீரின்றி அமையாது உலகு! தன்னையே கொல்லும் சினம்! என்று குறள் முழுவதும் வாழ்வியல் நெறிகளை வகுத்துச் சென்றவர்.

வள்ளுவரை முழுவதுமாக  உள்வாங்கிக் கொண்ட வள்ளல் பெருமான் பிற்காலத்தில் தாம் கண்ட ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ என்ற அமைப்பின் கோட்பாடுகளை மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய வகையில் வள்ளுவர் அடியொற்றி வழி வகுத்தார். அறநெறியோடு வள்ளுவர் நமக்கு வகுத்தளித்த வாழ்வியல் வழிமுறைகளை கடைபிடிக்காமல், படிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டால் ஏது பயன்? வள்ளுவம் காட்டுகிற வாழ்வியல் நெறிமுறைகளை இறுகப் பற்றிக்கொள்வோம். அவ்வழி ஒன்றுதான் மானுடம் செழிக்க ஓரே தீர்வு!