“உண்மையின் நிறம்”…சிறுகதை!

-ராஜேந்திரன்

ஐந்து நிமிட வாசிப்பு…

அந்த கல்லூரியின் இதழியல் பிரிவு சார்பாக, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, துறைத்தலைவர் மாலினி, மூத்த பத்திரிகையாளர் முத்துராசுவை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அடுத்து ஒவ்வொரு மாணவராக தங்களின் பெயரை சொல்லி தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, மாணவர்கள் ஒவ்வொருவராக கேள்வி கேட்பதும், அதற்கு மூத்த பத்திரிகையாளர் பதில் சொல்வதும் தொடங்கியது.

முதலில் கேள்வி கேட்ட மாணவன் இப்படித்தான், தொடங்கினான். நியூஸ் என்ற சொல் எப்படி உருவானது?

இது உங்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு முறை சொல்கிறேன் என்று தொடங்கிய முத்துராசு, ஆங்கிலத்தில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகியவற்றை குறிக்கும் North, East, West, South என்ற சொற்களின் முதல் எழுத்துக்களை கொண்டு News என்ற சொல் உருவானது என்றார்.

அடுத்து பேசிய மாணவர், நம்மை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளுமே செய்திகள்தான். ஆனால், அவற்றுள் எவை தேவையானவை? எவை தேவை இல்லாதவை? என்று எப்படி அறிவது? என்றான்.

இதுவும் ஒரு அடிப்படையான விஷயம்தான் என்று குறிப்பிட்ட முத்துராசு, அன்றாட நிகழ்வுகள் அனைத்துமே செய்தி ஆகிவிடாது. குறிப்பாக, ஒரு நாய் மனிதனை கடிப்பது செய்தி அல்ல. அது அன்றாட நிகழ்வு. ஆனால், ஒரு மனிதன் நாயை கடித்தால், அது வழக்கமான நிகழ்வு அல்ல. அது செய்தி ஆகும். இதுவே செய்தியை தேர்வு செய்யும் முறை என்று விளக்கினார்.

ஒரு செய்தியாளனின் கடமை என்ன? என்று அடுத்த மாணவன் கேட்டான்.

அதற்கு பதில் அளித்த முத்துராசு, ஒரு நிகழ்வை அப்படியே படம்பிடித்து, உள்ளது உள்ளபடி வெளியிடுவதுதான் ஒரு செய்தியாளனின் கடமையாகும் என்றார்.

அப்படி என்றால், ஒரு தவறான நிகழ்வை தடுக்க கூடிய வாய்ப்புகள் இருந்தும், அதை தடுக்காமல், அப்படியே படம் பிடிப்பதும், உற்று நோக்குவதும் தவறு அல்லவா? என்று அவனே மீண்டும் கேட்டான்.

ஒரு நிகழ்வை அப்படியே படம்பிடிப்பதும், உற்று நோக்குவதும் ஒரு செய்தியாளனின் கடமை. ஆனால், ஒரு குற்ற நிகழ்வை தடுக்க கூடிய வாய்ப்பு இருந்தும், அதை தடுக்காமல் படம் பிடிப்பதும், உற்று நோக்குவதும் சமூக அக்கறை கொண்ட ஒரு பத்திரிகையாளனின் கடமை ஆகாது என்று சுருக்கமாகவே பதில் கூறினார் அவர்.

செய்தியாளருக்கும், சமூக அக்கறை உள்ள செய்தியாளருக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று கூற முடியுமா? என்றான் இன்னொரு மாணவன்.

ஒரு ஊரில் அடிப்படை பிரச்சினையை வலியுறுத்தி மக்கள் போராடுகிறார்கள் என்றால், அதை செய்தியாக்குபவர் செய்தியாளர். அந்த செய்தியை, உரியவர்களிடம், கொண்டு சேர்த்து, அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டால், அவர் சமூக அக்கறை உள்ள செய்தியாளர். அதே சமயம், அந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்கி, வெறும் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தினால், அவர் சமூக அக்கறை இல்லாத செய்தியாளர் என்ற அவரது விளக்கம் மாணவர்களுக்கு திருப்தியாக இருந்தது.

அடுத்ததாக பேசிய மாணவன், கடும் வறட்சி காலங்களில் பொது மக்கள் ஆங்காங்கே காலி குடங்களுடன் போராடுவதை செய்தியாக வெளியிடும் ஊடகங்கள், மறுபக்கம், அந்த பிரச்சினையை தீர்க்க ஏதாவது ஊரில் இருந்து, அரசு தண்ணீர் எடுக்க முற்பட்டால், அதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் செய்தியாக வெளியிடுகிறதே, இதில் எப்படிப்பட்ட சமூக அக்கறை இருக்கிறது? என்று கேட்டான்.

கொஞ்ச நேரம் யோசித்து அதற்கு பின்னர் பேச ஆரம்பித்த முத்துராசு, ஊடகங்களை பொறுத்தவரை இரண்டு நிகழ்வுகளுமே செய்திகள் தான். குடிநீர் பிரச்சினையை ஊதி பெரிதாக்குவதும், அதற்கு தீர்வு காணும் முயற்சிக்கு எதிராக, மக்களை போராட வைப்பதும் அரசியல் கட்சிகள்தானே? இதில் ஊடகம் என்ன செய்ய முடியும்?. அதற்குத்தான் விவாதங்கள் என்ற பெயரில், எதிர் தரப்பும், தங்களது கருத்துக்களை எடுத்து சொல்ல ஊடகங்கள் வாய்ப்பு வழங்குகின்றன என்று நிதானமாகவே சொன்னார்.

ஒரு ஊடகத்தில் வரும் செய்திகள் சிலவற்றை கடுமையாக விமர்சிக்கும் அரசியல் கட்சிகள், சில நேரங்களில் அதே ஊடகத்தில் வரும் செய்தியை மேற்கோள் காட்டி பேசுகின்றனவே, அதற்கு காரணம் என்ன? என்று சிரித்துக்கொண்டே கேட்டான் மற்றொரு மாணவன்.

ஒரு காரணமும் இல்லை. ஊடகத்தில் வெளியாகும் செய்திகள் தங்களுக்கு எதிராக இருந்தால், அதை மஞ்சள் ஊடகம், வேசி ஊடகம்  என்றெல்லாம் விமர்சிப்பார்கள். அதே சமயம், அதில் வரும் செய்தி அவர்களுக்கு சாதகமாக இருந்தால், அந்த ஊடகத்தை மேற்கோள் காட்டி பேசுவார்கள். அதனால், ஊடகங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.

சில நேரங்களில் வாசகர்களே, தாங்கள் சார்ந்த அமைப்புக்கோ, இயக்கத்துக்கோ ஆதரவான செய்திகள் வந்தால், அதை நல்ல ஊடகம் என்பார்கள். அதுவே எதிராக இருந்தால், வேசி ஊடகம் என்று சொல்வார்கள். ஒரு ஊடகத்தை, வேசி ஊடகம் என்று வர்ணித்தவர்கள், அதே ஊடகத்தில் வரும் செய்தியை மேற்கோள் காட்டுவதற்காக பயன்படுத்திக் கொண்டால், அந்த வாசகரை, எந்த பெயர் கொண்டு அழைப்பது? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் முத்துராசு.

சார் நான் நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன் என்று ஆரம்பித்த ஒரு மாணவன், நதிநீர் பிரச்சினையின் அடிப்படை தத்துவம் என்ன? என்றான்.

எனக்கு இந்த விவரங்கள் முழுமையாக தெரியாது. இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன் என்று தொடங்கிய முத்துராசு,, ஒரு நதி நீரின் ஆரம்ப கால பயன்பாடு எந்தெந்த பாசனப்பகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்டதோ, அந்த பகுதிக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எஞ்சிய நீரே, மற்ற பகுதிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சட்டம். காலத்திற்கு ஏற்ப நாடுகளின் எல்லை மாறினாலும், அந்த விதிகள் மாறாது என்று சொன்னார்.

அடுத்து கேள்வி கேட்ட மாணவன், சர்வதேச நதி நீர் பிரச்சினைகளுக்குக் கூட, இணக்கமாக தீர்வுகள் எட்டப்படும்போது, ஒரு நாட்டின் மாநிலங்களுக்கு இடையேயான, நதிநீர் பங்கீட்டில், உரிய தீர்வுகள் எட்டப்படாமல் போவதற்கு என்ன காரணம்? என்றான்.

மாநிலங்களுக்கு இடையேயான அரசியல் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? என்று முடித்துக்கொண்டார் அவர்.

அப்படி என்றால், இந்த பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? என்று மீண்டும் கேட்டான் அவன்.

உங்களில் ஒரு மாணவர் ஏற்கனவே கேட்ட கேள்வியையே இப்போது உங்களிடம் கேட்கிறேன் என்று ஆரம்பித்த முத்துராசு, அந்த கேள்விக்கு நீண்ட விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்.

ஒரே மாநிலத்தில், ஒரு பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண, மற்றொரு பகுதியை சேர்ந்த மக்களே எதிர்ப்பு தெரிவிக்கும் போது, ஒரு மாநில தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண, மற்றொரு மாநில மக்கள் எப்படி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பார்கள்.

உதாரணமாக, குடகு மலையில் தோன்றும் காவிரியில், அதன் வழி நெடுகிலும் எத்தனையோ, ஆறுகள் கலக்கின்றன. கர்நாடக ஆறுகள், கேரளா ஆறுகள், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுகளும் அதில் அடக்கம். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஓடும் சரபங்கா, திருமணிமுத்தாறு ஆகியவை முக்கியமானவை.

தமிழகத்தை பொறுத்தவரை, காவிரி நீர், டெல்டா மாவட்ட பாசன பகுதிகளுக்கே அதிகம் பயன்படுகிறது. ஆனால், பாசனத்திற்கான, வருடம் முழுவதும் நீரை தேக்கி வைத்து, தேவையானபோது வழங்கும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் உள்ளது. மேட்டூர் அணை கட்டுவதற்கு தேவையான நிலங்களை வழங்கியவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களே.

அப்படி இருக்கும்போது, குஜராத்தில் நர்மதா நதியில் மேலணை கட்டியுள்ளது போல, சரபங்கா திட்டம் மூலம், காவிரியின் உபரி நீரை, சேலம் மாவட்ட மக்கள் பயன்படுத்துவதற்கு, டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சிலரே எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே ஏன்? சேலத்தில் உள்ளவர்களும் நம்மவர்கள் தானே?

அவர்கள் என்ன டெல்டாவுக்கு கிடைக்கும் நீரிலா பங்கு கேட்கிறார்கள்? வீணாக கடலில் கலக்கும் உபரி நீரைத்தானே பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள். அதற்கு கூட, நம்மவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது எவ்வகையில் நியாயம்?

ஒரே மாநிலத்தில், ஒரு மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு, மற்றொரு மாவட்டத்தை சேர்ந்தவர்களே உதவி செய்யவில்லை என்றால், அண்டை மாநிலத்தை சேர்ந்தவனை எப்படி குறை சொல்ல முடியும்? என்று திருப்பி கேட்டார் அவர்.

அப்படி என்றால் நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? என்று அதே மாணவன் மீண்டும் கேட்டான்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உலக அளவில் நம் முன்னோர்கள் சிந்தித்தாலும், நமது செயல்பாடு இன்னும் உள்ளூரை கூட தாண்ட முடியாமல், குறுகிப்போய் விட்டது என்பதைத் தவிர நான் என்ன சொல்ல முடியும் என்றார் முத்துராசு.

கடைசியாக கேள்வி கேட்ட மாணவன், ஊடக அறம் என்பது என்ன? என்றான்.

“சமூகத்தின் உண்மையான நிறமே.. ஊடகத்தின் அறம்” என்று முடித்துக் கொண்டார் முத்துராசு.