திமுகவில் துரைமுருகனுக்கு சிக்கலா? ஊதிப் பெரிதாக்கும்  ஊடகங்கள்!

திமுக பொது செயலாளராக நீண்ட காலம் தொடர்ந்து வந்த, பேராசிரியர் அன்பழகன் மறைவை அடுத்து, பொருளாளராக இருந்த துரைமுருகன் அந்த பொறுப்பில் அமர்த்தப்படும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

அதற்காக, துரைமுருகன் ஏற்கனவே வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்ய, அதை கட்சி தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாததால், பொதுசெயலாளர் தேர்வு தள்ளிப்போனது.

இந்நிலையில், கலைஞர் பிறந்தநாளான நேற்று, கட்சியின் பொருளாளர் பதவியில், துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என்று, கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

எனவே, கட்சியின் பொது செயலாளர் தேர்தல் என்பது, இனி சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இது ஒரு வகையில், கட்சியின் பொது செயலாளர் அதிகாரங்கள் அனைத்தையும், தலைவரே பயன்படுத்த வழி வகுக்கும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

தேர்தல் சமயத்தில், என்னதான், பொதுக்குழு, செயற்குழு என கூடி முடிவுகளை எடுத்தாலும், அந்த முடிவுகள் அனைத்தும், தலைமையினுடைய விருப்பத்தின் வெளிப்பாடாகவே இருக்கும்.

இருந்தபோதும், கலைஞரும், பேராசிரியரும் இல்லாத நிலையில், குறைந்த பட்சம், சட்டமன்ற தேர்தல் முடியும் வரை, கட்சியின் முக்கிய அதிகாரங்கள் அனைத்தும், தம் வசம் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் மட்டும் அல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களும் விரும்புகின்றனர்.

இதன் வெளிப்பாடாகவே, திமுகவின் பொது செயலாளர் தேர்தலை, சட்டமன்ற தேர்தல் முடியும் வரை தள்ளிப்போடலாம் என்ற முடிவை ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.

இதற்கு, தேர்தல் உத்தி வகுப்பு நிறுவனத்திற்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தோன்றும் இணக்கமற்ற சூழலும் ஒரு காரணமாகும்.

ஆனால், வழக்கம் போல, திமுகவின் முக்கிய பொறுப்பில், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் வந்துவிட கூடாது, அதிலும் குறிப்பாக, நீண்ட நெடிய சட்டமன்ற அனுபவமும், அரசியல் அனுபவமும் நிறைந்த துரைமுருகன், பொது செயலாளர் பதவியில் அமர்ந்துவிட கூடாது என்று, உள்ளுக்குள் ஒரு லாபியும் வலுவாக இயங்கி வருகிறது.

அதற்காக, முதல்வர் எடப்பாடியை, துரைமுருகன் அடிக்கடி சந்தித்து பேசுவதாகவும், அதனால், ஸ்டாலின் அவர் மீது கோபமாக இருப்பதாகவும், ஒரு திட்டமிட்ட தகவல் தொடர்ந்து, அந்த லாபியால் பரப்பப்பட்டு வருகிறது.

கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் மறைவுக்கு பின்னர், சட்டமன்ற வளாகத்திற்குள், திமுக-அதிமுக என்ற வேறுபாடு இல்லாமல், திமுக எம்.எல்.ஏ க்கள் பலரும், அதிமுக அமைச்சர்களை சந்தித்து பேசுவதும், அதன் மூலம் சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதும், தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்றே.

அண்மையில், திமுகவில் இருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்துள்ள, வி.பி.துரைசாமி, இதை வெளிப்படையாகவே கூறி இருந்தார்.

இந்நிலையில், திமுக முக்கிய புள்ளிகள் அனைவரையும் மறைத்துவிட்டு, துரைமுருகன் மீது மட்டும் இந்த குற்றச்சாட்டை, ஊதி பெரிதாக்கும் முயற்சியில், திமுகவில் உள்ள ஒரு லாபி, தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. அதற்கு சில ஊடகங்களும் கைகொடுத்து வருகின்றன.

சாதாரண திமுக எம்.எல்.ஏக்களே, அதிமுக அமைச்சர்களை பார்த்து காரியம் சாதித்துக்கொள்ளும் போது, திமுகவின் முக்கிய பொறுப்பில் இருப்பவரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசுவதாக ஒரு தகவலை ஊதி பெரிதாக்கி வருகின்றனர் சிலர்.

ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும், யார் யாரை சந்தித்து பேசுகின்றனர் என்ற தகவல் உடனுக்குடன் கட்சி தலைமைக்கு கிடைத்து விடும். இதில், துரைமுருகன்-முதல்வர் சந்திப்பு என்பது, ரகசிய சந்திப்பாக இல்லாமல், தலைமை செயலகத்தில் மட்டுமே நடக்கிறது.

மற்றவர்களால், அதிமுக அமைச்சர்களை மட்டுமே சந்திக்க முடிகிறது. முதல்வரை சந்திக்க முடியவில்லை. இந்த ஆதங்கமும், துரைமுருகன் மீது மற்றவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலினை பொறுத்தவரை, சட்டமன்றத்தில், ஆட்சியில் பழுத்த அனுபவம் கொண்ட துரைமுருகன், பொது செயலாளராக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், துரைமுருகன் மீது முடிந்தவரை வெறுப்பை வளர்க்க, இதுபோன்ற வேலைகளை, தொடர்ந்து செய்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றவில்லை என்றால், அது ஸ்டாலின் தலைமையையும், திமுகவின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடும். எனவே, எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று துடியாய் துடிக்கிறது திமுக.

இந்த நிலையில், கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற உள்ளடி வேலைகள், தேர்தல் நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்றே.. பலரும் எச்சரிக்கின்றனர்.