கும்பகோணம் மாவட்டம்: முனைப்பு காட்டும் பாஜக – முட்டுக்கொடுக்கும் அதிமுக!

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அண்மைக்காலமாக அதன் தீவிரம் அதிகமாகி உள்ளது.

குறிப்பாக மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்னர், கும்பகோணம் மாவட்டத்திற்கான கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.

கும்பகோணம் என்றாலே, நமக்கு நினைவுக்கு வருவது பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகமும், அந்த நகரை சுற்றி உள்ள நவக்கிரக ஆலயங்களுமே.

அதுமட்டுமல்ல, பிரளய காலத்தில், வேதங்கள் அனைத்தும், ஒரு மண் குடத்தில் அடைத்து பாதுகாக்கப்பட்டன. அந்த மண் குடம் தண்ணீரில் மிதந்து வந்தபோது, வேடன் உருவில் வந்த சிவன், அம்பு எய்தி அதன், மூக்கை உடைத்ததான். அந்த குடத்தில் இருந்து அமிர்தம் சிந்திய இடமே குடமூக்கு. அந்த குடமூக்கே கும்பகோணம் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணமே வர்த்தக நகராகவும், ஆன்மிக நகராகவும் ஜொலித்தது. இன்னும் அந்த நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற கணக்கியல் மேதை ராமானுஜம் பிறந்த ஊர் கும்பகோணம். எம்.ஜி.ஆரின் இளம் பிராயத்தில் அவரை வாழவைத்தது கும்பகோணமே. ஆங்குள்ள ஆணையடி பள்ளியே அவர் பயின்ற பள்ளி. இப்படி எத்தனையோ பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

கும்பகோணம் என்ற குடந்தையை சுற்றியே, பெரும்பாலான நவக்கிரக தளங்கள் அமைந்துள்ளன. நவக்கிரக தளங்கள் இந்த நகரை சுற்றி அமைந்ததாலோ என்னவோ, குடந்தையை ஒட்டிய பகுதிகளே, தமிழகத்தின் அரசியல் கேந்திரமாக திகழ்கின்றன.

தஞ்சாவூர் என்பது, சோழர்களின் தலைநகராக விளங்கிய போதும், கும்பகோணத்தை ஒட்டிய பழையாரையே, சோழ மன்னர்கள் வசித்த இடமாக உள்ளது. தாராசுரம், பட்டீஸ்வரம் மற்றும் கும்பகோணத்தை ஒட்டிய பகுதிகளே பழையாறை நகரமாகும். இங்குள்ள உடையாளூர், பெரும்பள்ளி ராஜராஜ சோழன் சமாதி அடைந்துள்ள ஊர் ஆகும்.

நவக்கிரக தலங்களில், சூரியனுக்கு உரிய சூரியனார் கோயில், சந்திரனுக்கு உரிய திங்களூர், குருவுக்கு உரிய ஆலங்குடி, சுக்கிரனுக்கு உரிய கஞ்சனூர், ராகுவுக்கு உரிய திருநாகேஸ்வரம் என ஐந்து நவக்கிரக கோவில்கள் கும்பகோணத்தை ஒட்டியே அமைந்துள்ளன.

செவ்வாய்க்கு உரிய வைத்தீஸ்வரன் கோயில், புதனுக்கு உரிய  திருவெண்காடு, கேதுவுக்கு உரிய கீழப்பெரும்பள்ளம் ஆகிய மூன்று நவக்கிரக தளங்கள் மட்டுமே மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளன.

எஞ்சிய சனீஸ்வரர் ஆலயம் மட்டுமே, புதுவை மாநிலத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாரில் அமைந்துள்ளது.

மேலும், சோழர் கால, வரைபடத்தின் அடிப்படையில், காவிரியின் நேரடி பாசனத்திற்கு உட்பட்ட பெரும்பாலான நிலங்கள், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பகுதிகளையே ஒட்டி அமைந்துள்ளன.

இதன் காரணமாக, நவக்கிரக தளங்கள் ஐந்தையும் அருகருகே கொண்டுள்ள கும்பகோணத்தை தனி மாவட்டமாக உருவாக்கி, அங்கிருந்து தமது அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்றும், அதுவே திராவிட இயக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நல்ல தொடக்கமாக இருக்கும் என்றும், ஆன்மிக பெரியவர்களும், ஜோதிட நிபுணர்களும் பாஜகவுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்பு, ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க, தமிழக அரசை பாஜக வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கும்பகோணம் மாவட்டம் விரைவில் உதயமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், கும்பகோணத்திற்கே சம்பந்தம் இல்லாமல், அப்பகுதியின் மீது செலுத்தி வரும் அரசியல்வாதிகள் சிலரது எதிர்ப்பு காரணமாக, கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு, முதல்வர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அப்பகுதி மக்கள், பாஜகவின் ஆதரவை நாடி உள்ளனர். பாஜகவும், நவக்கிரக தலங்களை உள்ளடக்கிய கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து, திராவிட அரசியல் எதிர்ப்பை முன்னெடுக்க தீவிரமாகி வருகிறது என்பதே லேட்டஸ்ட் தகவல்.

பாஜகவின் இந்த முயற்சிக்கு, முட்டுக்கொடுக்கும் அதிமுகவின் பிடி எப்போது வேண்டுமானாலும் தகர்க்கப்படும்.

அத்துடன், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குள் வருவதால், கும்பகோணம் தனி மாவட்டமாக அமைவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனாவையும் மீறி, கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரும் போராட்டங்கள் தீவிரம் அடையத் தொடங்கி உள்ளன.

பாமக சார்பில், தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் ம.க.ஸ்டாலின்  தலைமையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி, ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள், முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில், பாபநாசம் தொகுதியை அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக தக்கவைத்துக் கொண்டுள்ளது.

திருவிடைமருதூர், கடந்த இரண்டு தேர்தல்களாக தனித்தொகுதியாக இருந்தாலும், மிகக்குறைந்த சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற்று வருகிறது. கும்பகோணம் தொகுதியை பொறுத்தவரை, இரு திராவிட கட்சிகளுமே, பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் செய்யும் அரசியலால், திமுக மட்டும் சற்று பலம் பெற்று விளங்குகிறது.

கும்பகோணம் மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால், அதுவும் முழுமையாக அதிமுகவின் கைவசம் ஆகும் என்பதே அப்பகுதியை சேர்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

எனவே, பாஜக ஆதரவுடன் விரைவில், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.