திராவிடம் மறைத்த தியாகி “சேலம் அர்த்தநாரீச வர்மா”!

– அ. அஸ்வத்தாமன் , பாஜக.

சில தினங்களுக்கு முன்பு ‘தமிழ் இந்து’ பத்திரிகையில் வெளியான ‘சுயசார்பு இந்தியா’ குறித்த எனது கட்டுரையில் ….

“பாங்குறு நாடுகள் தமக்கொரு சேதி,
பண்டு போல் ஆண்டிடும் பாரத ஜாதி ”

என்ற சுதந்திர போராட்ட தியாகி ராஜரிஷி அர்த்தநாரீஸ்வர வர்மா அவர்களுடைய கவிதையை மேற்கோள்காட்டி அந்தக் கட்டுரையை தொடங்கியிருந்தேன்.

“பாங்கான உலகநாடுகள் அனைத்திற்கும் ஒரு செய்தி, இனி பழையது போன்று மீண்டும் உலகை ஆள தொடங்கிடும் பாரத ஜாதி ” என்பது அந்தப் பாடலின் பொருள்.

இஸ்லாமிய, ஆங்கிலேய படையெடுப்புகளுக்கு முன்பு, இந்த உலகை ஆண்டு கொண்டிருந்தது இந்தியா .அதை குறிக்கும் விதமாக “பழையது போன்று ” இந்தியா உலகை ஆளத் தொடங்கும் என்கின்ற வகையிலும், பாரத தேசத்தில் வாழ்கின்ற அத்தனை பேரையும் ஒரே ஜாதியாக்கி அவர் பேசியுள்ள அந்த முறை பற்றியும் , சிலாகித்து பல சான்றோர்கள் என்னிடம் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்கள்.

அவர்கள் அனைவரும் கேட்ட ஒரு கேள்வி, யார் இவர் ? இவரைப் பற்றி எங்களுக்கு இத்தனை நாட்களாக தெரியாமல் போய்விட்டது  என்பதே.

இவரைப் பற்றி ஏற்கனவே ஒரு தருணத்தில் நான் பதிந்து இருக்கிறேன். இப்போதும் ,அவரைப் பற்றி மீண்டும் ஒருமுறை பேசுவது நியாயம் என்று நினைக்கிறேன்.

1931 ஆம் ஆண்டு பிரஸ் எமர்ஜென்சி ஆக்ட் (Press Emergency Act ) கொண்டுவரப்பட்டு அவர் நடத்திய வீர பாரதி பத்திரிக்கை வெள்ளையர்களால் தடைசெய்யப்பட்டது . அப்படி எனில் அவருடைய எழுத்தின் வீச்சும் வீரியமும் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

அவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கு மீண்டும் அளித்துள்ளேன்.

யார் இந்த அர்த்தநாரீஸ்வர வர்மா? இந்திய சுதந்திர வரலாற்றில்
மறைக்கப்பட்ட ஆளுமை தான இவர்..

சுதந்திர போராட்ட வீரர், கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா: மூதறிஞர் ராஜாஜியால் “இராஜரிஷி ” எனப் பட்டம் சூட்டப் பட்டவர். திரு.வி. கல்யாணசுந்தரனாரால் ‘மகாகவி பாரதியாருக்கு இணையான தேசப்பக்தி கவிஞர்’ எனப் புகழப்பட்டவர்.

வாழ்க்கை முழுவதும் ஒரு சுதந்திர போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத்தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த மாபெரும் தியாகி.

இந்திய  சுதந்திர போராட்டத்தில் திலகரை பின்பற்றி தீவிரவாத பாதையை ஏற்று ‘கழறிற்றறிவார் சபை’ எனும் அமைப்பை 1907 ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர்.

மகாத்மா காந்தியை பின்பற்றி தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர்.

மதுவிலக்கிற்காக அயராது போராடியவர். தனது பள்ளித்தோழரான ராஜாஜியை வற்புறுத்தி இந்தியாவிலேயே முதன்முதலாக 1937ல் சேலம் ஜில்லாவில் மது விலக்கு கொள்கையை செயலாக்கியவர்.

மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரைப்பற்றி பேச எல்லோரும் பயந்த நிலையில், மகாகவி பாரதிக்காக இரங்கல் கவிதை எழுதி சுதேசமித்தரனில் வெளியிட்ட ஒரே வீரர்.

இந்திய விடுதலைக்காக  1931 ஆம் ஆண்டில் வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தியவர். அக்காலத்தில் தமிழில் வெளியான ஒரே சுதந்திரப் போராட்ட பத்திரிகை அது மட்டும்தான். ஆங்கிலேயர்கள் சிறப்பு சட்டம் மூலம் தடைசெய்த ஒரே தமிழ் பத்திரிகையும் அதுவே.

மகாத்மா   காந்தி 1934 இல் திருவண்ணாமலைக்கு வந்தபோது வரவேற்பு பத்திரம் வாசித்து வெளியிட்டவர். கல்விக்காகவும் பெண் கல்விக்காவும் பாடுபட்டவர்.

தமிழ்நாட்டின்  திருப்பதி, சித்தூர் பகுதிகளை ஆந்திராவுடன் இணைப்பதை எதிர்த்துப் போராடியவர்.

சத்திரியன், சத்திரிய சிகாமணி, வீரபாரதி, தமிழ் மன்னன் எனப் பல பத்திரிகைகளை நடத்தியவர். மதுவிலக்கு சிந்து உள்ளிட்ட பல நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.

அர்த்தநாரீச வர்மா 7.12.1964-ல் திருவண்ணாமலையில் உயிர்நீத்தார். மறைவுக்கு மூதறிஞர் ராஜாஜி கல்கி இதழில் புகழஞ்சலி கட்டுரை எழுதினார்.

மறைக்கப்பட்ட போராளி, சுதந்திர போராட்ட வீரர், கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா அவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும்.

அனைவராலும் போற்றப்பட வேண்டிய ஒரு சுதந்திர போராளியின் தியாகம், திராவிடத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.