அடுத்த சட்டமன்ற தேர்தலை தீர்மானிக்கப்போவது வியூகமா? தொண்டர்களா?: குழப்பத்தில் திமுக – அதிமுக!

அடுத்து ஒரு உலகப்போர் வந்தால், அது அணு ஆயுதப் போராகத்தான் இருக்கும் என்று சொல்வது போல, தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல் என்பது, கட்சிகளுக்கான தேர்தலாக அல்லாமல், வியூகம் வகுப்பாளர்களின் தேர்தலாகத்தான் இருக்கும் என்பதே பலரது பேச்சாக இருக்கிறது.

1952 ம் ஆண்டு தொடங்கி   2016 வரை, தமிழகம் 15  சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த தேர்தல்கள் அனைத்திலும் இல்லாத வினோதம், அடுத்து வரப்போகும் தேர்தலில்தான் அரங்கேறப்போகிறது.

ஒவ்வொரு கட்சியும், தேர்தல் மற்றும் அன்றாட அரசியலை சந்திக்க, எப்போதும் ஒரு ஆலோசனைக் குழுவை வைத்திருக்கும். ஆனால், அந்தக்குழு சொல்லும் ஆலோசனை, கட்சி தலைமை மற்றும் முக்கிய பொறுப்பாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

அந்த வியூகங்களை அப்படியே, தொண்டர்களுக்கு கொண்டு செல்வதை, மேல்மட்டத்தில் இருந்து, கீழ் மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் செய்து முடிப்பார்கள்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைக்கு வந்த நவீன தகவல் தொழில் நுட்பத்தின் விளைவாக, சமூக ஊடங்களும், அது சார்ந்த சில நிபுணர்களும், அண்மைக்காலமாக முளைக்க தொடங்கி விட்டனர்.

அவர்களது மூளைத்திறனை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்திக் கொள்ளவும் சில கட்சிகள் முன்வந்தன. 2014  ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் அதை நேரடியாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜகவுக்கு, பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில் அடங்கிய குழு, வியூகம் வகுப்பாளர்களாக இருந்தது பின்னர் தெரிய வந்தது.

பிரசாந்த் கிஷோர், பீகார், டெல்லி, ஆந்திரா, மேற்கு வங்காளம் என தனது நடவடிக்கையை விரிவு படுத்த தொடங்கினார். சுனிலை திமுக தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டது.

நமக்கு நாமே திட்டம் போன்று, சுனில் வகுத்துக் கொடுத்த வியூகம், ஸ்டாலினை திமுகவில் முன்னிலைப்படுத்துவதில் பெரிய அளவில் வெற்றி கண்டது.

அதேபோல், 2016 சட்டமன்ற தேர்தலில், திமுக எதிர் கட்சியாக அமர்ந்தாலும், இதுவரை எந்த எதிர் கட்சியும் வெற்றி பெறாத அளவுக்கு அதிக இடங்களை கைப்பற்ற, சுனிலின் ஆலோசனை முக்கிய பங்கு வகித்தது.

2019 நாடாளுமன்ற தேர்தலிலும், அதிமுக-பாஜக எதிர்ப்பை சாதகமாகப் பயன்படுத்தி, மொத்தமுள்ள 39 தொகுதிகளில்,  38 தொகுதிகளை திமுக  கைப்பற்ற சுனில் வகுத்த வியூகமே முக்கிய பங்காற்றியது.

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் திமுக மாபெரும் தோல்வியை சந்தித்தது. பொதுவாக இடைத்தேர்தல் என்பது ஆளும்கட்சிக்கே சாதகமாக அமையும். ஆனாலும், இடைத்தேர்தலில் திமுக வாங்கிய அடி, அந்த கட்சியை கடுமையாகவே யோசிக்க வைத்து விட்டது.

குறிப்பாக, விக்கிரவாண்டி தொகுதியில், வன்னியர் விவகாரத்தை, ஸ்டாலின் கையில் எடுத்ததே, திமுகவின் படுதோல்விக்கு முக்கிய காரணம் என்று பலரும் கூறினர். ஸ்டாலினுக்கு இந்த ஆலோசனையை கூறியவரே சுனில்தான் என்றும் ஒரு பேச்சு எழுந்தது.

அதன் பிறகே, பிரசாந்த் கிஷோரின் வியூகத்தை பயன்படுத்த, திமுக தலைவரின் வாரிசுகள் முடிவு செய்தனர். இதை அறிந்த, சுனில், ஸ்டாலினின் வற்புறுத்தலையும் மீறி, அங்கிருந்து விலகினார்.

திமுகவில் நுழைந்த பிரசாந்த் கிஷோர், அங்கு பல்வேறு சமூக ஊடக வியூகங்களை புகுத்தி வருகிறார். கொரோனாவை முன்னிட்டு, திமுக செயல்படுத்திய “ஒன்றிணைவோம் வா” என்பதும் அவரது வியூகம்தான்.

திமுகவின் மக்கள் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில்தான், கிஷோர் அந்த வியூகத்தை வகுத்தார். ஆனால், அதன் நடைமுறைகள் பலவற்றை, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை. அதன் முடிவும்,  தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு போன்றவர்களுக்கு சிக்கலை உருவாக்கி விட்டது.

மறுபக்கம், சுனில் மற்றும் அவரது குழுவை, அதிமுக முழுமையாக பயன்படுத்த தொடங்கி விட்டது. கிஷோர் வகுக்கும் வியூகங்களை எல்லாம், சுனில் உடைத்துக் கொண்டே இருக்கிறார்.

இதன் முடிவு எப்படி இருக்கும்? என்று தெரியாது. உண்மையில், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள் மட்டுமே, தேர்தலில் வெற்றி தோல்வியை முடிவு செய்வதில்லை. ஆனால், வெற்றி, தோல்வியின் விகிதாச்சாரத்தை மாற்றியமைக்கும் தன்மை மட்டுமே வியூகங்களுக்கு உண்டு.

ஒவொரு கட்சியின் வெற்றி, தோல்விக்கு பின்னாலும், மக்களை நெருங்கி, மக்களோடு மக்களாக இருக்கும் தொண்டர்களே முக்கிய காரணம் என்பது அடிப்படை உண்மை.

அந்த உண்மையை, மழுங்கடிக்க போராடும், இந்த வியூக வகுப்பாளர்களை நம்பி, பயணம் செய்யும் கட்சிகளின் உண்மை நிலவரம், தேர்தலுக்கு பின்னரே தெரியவரும்.