“மாமழை போற்றுதும்”…. சிறுகதை!

-ராஜேந்திரன்

ஆறு நிமிட வாசிப்பு..

மாமாவ மாதிரி இன்னொரு மனுஷன், இந்த ஊருல பொறக்கவே முடியாது’ன்னு சொன்ன சுந்தரேசன், அப்பாவப் பத்தி இன்னும் எதையெல்லாம பெருமையா பேசப்போறாரு’ன்னு, நானும், அண்ணன்களும் ஆர்வமா கேட்டுக்கிட்டே இருந்தோம்.

நம்ம சாதி சனம் அத்தன பேரும், கவுச்சி சாப்புடுவோம், கள்ளு, சாராயம் குடிப்போம். சண்டைன்னு வந்துட்டா வெட்டு, குத்துன்னு ஏறங்கிடுவோம்.

ஆனா, இந்த மாதிரி, எந்த பழக்கமும் இல்லாம, கடைசி வரைக்கும், வாழ்த்து செத்த ஒரு மனுஷன் நம்ம ஊருலேயே மாமா மட்டும்தான்.

வயல்ல எறங்கி சேறு சகதிய ஒடம்பு முழுக்க பூசிக்கிற வேலையா இருந்தாலும், தெனமும் காலங்காத்தால எழுந்திரிச்சி, குளிச்சி, முழுவி, சுத்த பத்தமா, ராமலிங்கசாமிய வேண்டிக்கிட்டு, அவரு நெத்தியில போடுற, அந்த மூணு பட்டையும், சாயந்தரம் வந்து, அவரு மறுபடியும்  குளிக்கிற வரைக்கும் அழியவே அழியாது.

ஏறுலேயும், வண்டியிலேயும் பூட்டுற மாடுங்கள, சும்மா கையில ஒரு குச்ச வச்சிக்கிட்டு மெரட்டுவாறே தவற, ஒரு நாளு கூட தார் குச்சியால குத்துனதே இல்ல.

மாடு தெனருற அளவுக்கு வண்டியில பாரத்தை ஏத்தவும் மாட்டாரு. ஏறுல கட்டியும் அடிக்க மாட்டாரு.

கடைசி காலத்துல, அவரு செருப்பு கூட போட்டுக்காம, வெறும் காலோடதான் அங்க இங்கன்னு நடந்து போவாரு.

ஏன் மாமா செருப்பு கூட போட மாட்டுற?ன்னு கேட்டா, தரையில ஊருற எறும்பு எல்லாம், செருப்புல மிதி பட்டு செத்துடும்னு சொல்வாரு.

இந்த ஊருல எத்தனையோ வருஷம், பஞ்சம் பட்டினி எல்லாம் வந்திருக்கு. ஆனா, ஒரு நாள் ராத்திரி கூட, அவரு, யாராவது ஒருத்தருக்கு சோறு போடாம, தனியா சாப்புட்டு நாம் பாத்ததே இல்ல.

அவரோட பொறுமையும், நிதானமும் யாருக்கும் வராது மத்தவங்க மொகம் சுளிக்கிற மாதிரி, அவரு ஒரு வார்த்த கூட பேசி, நாங்க யாரும் பாத்ததே இல்ல.

நம்ம தெருவுல இருக்குற, முக்காவாசி வீட்டுல இருக்குறவன் பூரா  குடிக்கிறவன். ஆனா, ஒருத்தவன் கூட மாமா எதுக்க, குடிச்சிட்டு நிக்க மாட்டான். ஒரு பீடி, சுருட்டு கூட பத்தவைக்க மாட்டான்.

தெருவுல, ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிக்கிட்டு நின்னா கூட, மாமா வர்றத கண்டா, அப்படியே ஒதுங்கி போயிடுவானுங்க.

அவரு என்ன வேலி கணக்குல நெலம், நீறு எல்லாம் வச்சிக்கிட்டு பைச்சல் பண்ற மிராசுதாரா? லட்சாதிபதியா? இல்ல வஸ்தாதா? எதுவுமே இல்ல. நல்ல மனுஷன்’ங்குற ஒரு பேர தவர, அவரு வேற எதையும் சம்பாதிக்கல

இப்பல்லாம், சின்னது, பெருசுன்னு வித்யாசம் தெரியாத அளவுக்கு, நம்ம தெருவுல இருக்குற நண்டு சிண்டு எல்லாம் குடிக்க ஆரமிச்சிடுச்சி. அந்த அளவுக்கு காலம் கெட்டுபோயி கெடக்குது.

ஆனா, மாமா செத்து, அவர அடக்கம் பண்ற வரைக்கும், தெருவுல  ஒரு பய கூட குடிக்கவே இல்ல. ஒருத்தவன் வீட்டுல கூட ஒல வைக்கவும் இல்ல.

அப்படீன்னா, அந்த மனுஷன் இந்த ஊருல இத்தன வருஷம் எப்படி வாழ்ந்திருப்பாரு?ன்னு சொல்லும்போதே, சுந்தரேசனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவர் குரல் உடைந்தது. அதன் பிறகு கொஞ்ச நேரம் அவருக்கு பேச்சே வரவில்லை.

மீண்டும், அவரே பேச ஆரம்பித்தார்.

நல்ல மனுஷன் செத்தா அந்த ஆகாயமே மழையா கண்ணீர் வடிச்சி அழுவுமாம். மாமா சாவுலேயும் அதான் நடந்துச்சி.

மாமா செத்தது, சுட்டு எரிக்கிற வெயில் காலம். ஆனாலும் பார்த்தியா… அவர கொண்டு போயி, அடக்கம் பண்ணிட்டு வந்த ஒடனே, அப்படி  ஒரு மழை பேஞ்சிது.

அடுத்து, பதினாறாம் நாள் காரியம் பண்ணிட்டு வந்த அன்னைக்கும், யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு மழை பேஞ்சிது.

இன்னைக்கி, மாமாவுக்கு தல தெவசம் குடுத்துருக்கோம். அதனால, இன்னைக்கும் கண்டிப்பா ஒரு மழை பெய்யும் பாரேன்’ன்னு சொன்னார்.

அவர் சொல்லி ஒரு பத்து நிமிடம் கூட ஆகி இருக்காது.

மேகங்கள் எல்லாம் திரண்டு வந்தது போல இருந்தது. திடீரென சில்லென்று ஒரு காற்று வீசியது.  அவ்வளவுதான், அடுத்து அரைமணி நேரத்துக்கு, இடைவிடாமல், அமைதியாக நின்று பெய்தது மழை.

சாதாரணமாக, அன்று மழை பெய்து இருந்தால், நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டோம்.

அப்பா இறந்த அன்று பெய்த மழை, பதினாறாம் நாள் காரியம் அன்று பெய்த மழை என இரண்டையும் குறிப்பிட்டு சொன்ன சுந்தரேசன், மாமாவுக்கு தல தெவசம் குடுக்குற, இன்னைக்கும் மழை வரும் என்று சொன்ன போது கூட, நாங்கள் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், அவர் சொன்ன அடுத்த சில நிமிடத்திலேயே, மழை பெய்த அதிசயத்தில் இருந்து, நாங்கள் மீள்வதற்கே ரொம்ப நேரம் ஆகிவிட்டது.

அதன் பிறகு, அப்பாவோடு கழித்த காலங்கள் எல்லாம் எங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

அன்று இரவு, நாங்கள் எல்லாரும் அம்மாவுடன் சேர்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.

அப்போது… தம்பி.. உனக்குத்தானே அப்பா, நெறைய கதை சொல்லும். ஞாபகம் இருக்காடா?ன்னு பெரிய அண்ணன் கேட்டாரு.

அதோட, நாம எல்லாம் வரிசையா கோர பாயில படுத்துக்கிட்டு தூங்குறப்போ, நீ அம்மா பொடவைய போத்திக்கிட்டு தூங்குவியே’ன்னு சொல்லிட்டு சிரித்தார்.

ஒ.. நல்லா ஞாபகம் இருக்கே. ஒரு நாள் நல்ல மழையில, தவக்களை எல்லாம் கத்தும்போது, அப்பா ஒரு கதை சொல்லுச்சே, அதுவும் எனக்கு இன்னும் மறக்கவே இல்லை என்றேன்.

அப்படீன்னா, அந்த கதைய நீ சொல்றியா?ன்னு அண்ணன்கள் எல்லாரும், என்னை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லாருக்கும் கடைசி பிள்ளையான நான், அன்று மூத்த பிள்ளையாய் மாறி, அப்பா மாதிரியே உட்கார்ந்து கொண்டு, இப்படித்தான் கதை சொல்ல ஆரம்பித்தேன்…

அன்னிக்கி ராத்திரி, இடி இடிக்காம, மின்னல் மின்னாம, ரொம்ப நேரம், மழை கடுமையா பேஞ்சிக்கிட்டு இருந்துசசி.

அதுக்கு பிறகு, மழை லேசா விட ஆரம்பிச்ச ஒடனே, தவக்களைங்க எல்லாம், விவிதமான சத்தத்துல கத்த ஆரம்பிச்சுது.

டேய்.. சின்னத்தம்பி… தவக்களைங்க எல்லாம் எப்படி, எப்படி சத்தம் போட்டு கத்துது?ன்னு அப்பா கேட்டுச்சி.

எனக்கு எதுவும் சொல்ல தெரியல.

ஒடனே பெரிய அண்ணன், ஒரு சில தவக்களைங்க  “குடு..குடு, குடு…குடு” ன்னு கத்துதுன்னு சொன்னுச்சி.

அடுத்து, ஒரு சில தவக்களைங்க “தர்றேன்.. தர்றேன், தர்றேன்.. தர்றேன்”ன்னு கத்துற மாதிரி இருக்குன்னு நடு அண்ணன் சொன்னுச்சி.

அவருக்கு பிறகு, சின்ன அண்ணன் சொல்றப்போ, “பம்..பம்..பம், பம்.. பம்..பம்’ ன்னு சில தவக்களைங்க கத்துதுன்னு சொல்லுச்சி.

மூணு பேரும் சொல்லி முடிச்ச பிறகு, என்னோட முறை வந்துச்சி.

நான் என்ன சொல்லப் போகிறேன்?ன்னு அப்பா என்னோட மொகத்தயே பாத்துச்சி. ஆனா எனக்கு எதுவும் சொல்ல தெரியல.

அதுக்கு பிறகு, அப்பாவே கதைய சொல்ல ஆரம்பிச்சுது.

நாம கடன் வாங்குறது மாதிரி, தவக்களைங்களும், அதுங்கக்குள்ள  கடன் வாங்கிக்கும்.

அப்படி கடன் வாங்குன ஒரு தவக்களையாள, சொன்ன தவணையில, கடன திருப்பி குடுக்க முடியா போயிடுச்சி.

அதனால, கடன் குடுத்த தவக்களைக்கும், கடன் வாங்குன தவக்களைக்கும், பஞ்சாயத்து நடக்குது’ன்னு அப்பா சொல்லுச்சி.

எதுவும் நமக்கு புரியல.

புரியிற மாதிரி சொல்லுப்பா’ன்னு நான் கேட்டேன்.

அதாவது… கடன் குடுத்த தவக்களை, கடன் வாங்குன தவக்களை கிட்ட  போயி, வாங்குன கடன  “குடு..குடு, குடு..குடு… குடு..குடு”ன்னு கேட்டு நச்சரிச்சிது.

ஆனா, கடன் வாங்குன தவக்களையால, ஒடனே கடன திருப்பி குடுக்க முடியல.

அதனால, கொஞ்சம் தயங்கி.. தயங்கி.. தர்றேன்.. தர்றேன், தர்றேன்.. தர்றேன்’ன்னு சொல்லி சமாளிக்க ஆரம்பிச்சுது.

அது, கடன் குடுத்த தவக்களைக்கு கொஞ்சம் கூட புடிக்கல.

அதனால, ரெண்டு தவக்களையும் சேர்ந்து, நாட்டாமக்கார தவக்களை கிட்ட, பஞ்சாயத்துக்கு போயிடுச்சி.

அப்போ, அந்த இரண்டு தவக்களைகிட்டயும், மாறி, மாறி விசாரண நடத்துச்சி நாட்டாமக்கார தவக்கள.

கடன் குடுத்த தவக்கள குடு..குடு, குடு..குடு” ன்னு தன்னோட தரப்பு குற்றச்சாட்ட முன் வச்சிது.

கடன் வாங்குன தவக்களையோ, தர்றேன்… தர்றேன்’ன்னு திரும்பவும்  அவகாசம் கேட்டுச்சி.

ரெண்டு தரப்பையும் தீர விசாரிச்ச, நாட்டமகார தவக்கள, ஒரு தீர்ப்ப சொல்லிடுச்சி.

நாட்டாம தவக்கள ரொம்ப வயசான தவக்கள. அதுக்கு பல்லு இல்ல.. பல்லு போனாலே சொல்லு போயிடும்’ல. அதனால… பம்… பம்… பம்…ன்னு சொன்னுச்சி.

ஆனா, நாட்டாமைக்கார தவக்கள சொல்ற தீர்ப்பு, பஞ்சாயத்துக்கு போன ரெண்டு தவக்களைக்கும் புரியல.

தீர்ப்பு, தெளிவா புரியாததால… அந்த பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வராம, இழுத்துக்கிட்டே போவுது’ன்னு அப்பா சொல்லி முடிச்சிது.

அந்த கதைய அப்பா சொல்லி முடிக்கிறதுக்குள்ள, நாம சிரிச்ச சிரிப்புல, நமக்கு வயித்து வழியே வந்துடுச்சி.

அதுக்குள்ளே, அந்த பக்கத்துல இருந்து வர்ற, தவக்கள சத்தத்த கவனிங்கடா..

அந்த தவக்களை எல்லாம், இப்போ வாய்க்கா வெட்டுற வேலைக்கி கெளம்புது. அதனால், தட்டெடு.. மம்டி எடு, தட்டெடு.. மம்டி எடு’ன்னு கத்துதுங்க பாரு’ன்னு அப்பா சொன்னுச்சி.

அதைக்கேட்டு, நாம மறுபடியும் வயிறு குலுங்க சிரிக்க ஆரமிசோம்’னு ஒரு வழியாக கதையை சொல்லி முடித்தேன்.

அந்த கதை, அப்பா ஞாபகத்திலேயே, மூழ்கி இருந்த அம்மாவையும்  சிரிக்க வைத்து விட்டது.

அதற்கு பிறகு, எப்போது மழை வந்தாலும், எனக்கு அப்பாவோடு,  அவர் சொன்ன தவக்களை கதையும் நினைவில் வந்து கொண்டே இருக்கும்.