“சிலம்பத்துக்கு பொறந்தவன்” … சிறுகதை!

-ராஜேந்திரன்

எட்டு நிமிட வாசிப்பு…

பொங்கல், வருஷ பொறப்பு, தீமிதி, அமுது படையல், காமுட்டி கொளுத்துறதுன்னு ஊருல எந்த விழா நடந்தாலும், அதுல சிவசாமியோட சிலம்பாட்டம் கண்டிப்பா இருக்கும்.

அந்த வருஷமும் பொங்கலோட கடைசி நாளான கரிநாள் அன்னிக்கி, சிவசாமியும், அவரோட சிஷ்ய புள்ளைங்களும் சிலம்பாட்டம் வெளையாடுறதுக்கான ஏற்பாடு நடந்துகிட்டு இருந்தது.

அதுக்காக பதினஞ்சி நாளைக்கு முன்னாடியே, சிஷ்யனுங்களுக்கு பயிற்சி குடுக்கிற வேலைய ஆரம்பிச்சிட்டாரு சிவசாமி.

கம்பு சண்டை கத்துக்குற சிஷ்யன்களும், கத்துக்குடுக்குற சிவசாமியும் அந்த அளவுக்கு ஏக்கரு கணக்குல நெலம் உள்ள ஆசாமிங்க இல்ல.

அதனால, பகல்ல வேலைக்கு போயிட்டு, ராத்திரி பன்னண்டு, ஒரு மணி வரைக்கும், சிவசாமி வீட்டுக்கும் பின்னாடி இருக்குற எடத்துல இந்த பயிற்சி எல்லாம் நடக்கும்.

அந்த பயிற்சிய பாக்குறதுக்கும், ஒரு கும்பல் காத்துக்கிட்டுதான் இருக்கும்.

சாதாரண நாளுல கூட எப்பவாவது கள்ளு, சாராயம் குடிக்கிற சிவசாமி, சிலம்பாட்ட பயிற்சின்னு வந்துட்டா, கோயிலுக்கு விரதம் இருக்குற மாதிரி..அதை கொஞ்சம் கூட தொட மாட்டாரு.

அவரோட சிஷ்யனுங்களும், அவர மாதிரியே, கம்பு சுத்துறத கடவுளுக்கு செய்யிற பூச மாதிரி, பய பக்தியோட செய்வாங்க.

சிவசாமின்னு சொன்னா, அவரு ஒரு அருமையான சிலம்பம்  வாத்தியாருன்னு, சொல்ற அளவுக்கு, சுத்துப்பட்டு ஊருகள்ல அவருக்கு நல்ல பேருஇருந்துச்சி.

சுத்துப்பட்டுல இருக்குற பல ஊரு வாத்தியாருங்களோட கம்பு சண்ட போட்டு ஜெயிச்சவரு சிவசாமி.

அதனால, சிவசாமியோட சிலம்ப வித்த நுணுக்கத்தையும், அவரோட சிஷ்யனுங்களோட கம்பு சுத்துற விதத்தையும் பாக்குறதுக்கு, சுத்துப்பட்டு ஊருக்காரங்க நெறைய பேரு, விழாவுக்கு வர்றது உண்டு.

சிவசாமி கம்பு சுத்துற அழகே தனி. போர் சிலம்பம், அலங்கார சிலம்பம், கம்பு சுத்திக்கிட்டே பின்னால திரும்பி, தாக்க வர்றவன தடுக்கிறது, தாக்குறது, பம்பரம் மாதிரி சுத்துறதுன்னு, ஒவ்வொரு விஷயத்துலயும் சிலம்பம் அவரு கையில அப்படியே தாண்டவமாடும்.

ஒவ்வொரு வருஷத்துக்கும், ஒவ்வொரு புது உருப்படிய சிலம்பத்துல அறிமுகப்படுத்துவாரு சிவசாமி.

சில நேரம் அவரு கம்பு சுத்துறப்போ, சிலம்பத்துல இருந்து வர்ற சத்தம், நாகப்பாம்பு சீறுற மாதிரியே இருக்கும்.

இவ்வளவு தெறம இருந்தும், சிவசாமி ஒரு நாளு கூட யாரையும் அடிச்சதோ, வெட்டி வம்புக்கு போனதோ கெடையாது. களத்துல எறங்குனாத்தான், சிங்கமா சீறுவான். மத்த நேரம் பசு மாட்டை விட சாதுவா இருப்பான். கொழந்தைங்க மாதிரி கவுடு சூது தெரியாதவன்.

அப்படிப்பட்ட சிவசாமியோட வித்தைய சோதிக்கிற மாதிரி, அந்த வருஷம் ஒரு அதிர்ச்சியான சேதி வந்து சேந்துச்சி.

நாட்டாமை நாராயணசாமிதான் அந்த தகவல, சிவசாமிக்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாரு.

சிலம்பாட்டத்துல, சில்லா முழுக்க இருக்குற பெரிய பெரிய வாத்தியாருங்கள எல்லாரையும் தோக்கடிச்ச, நாச்சியார் கோயில் ராகவன்.

இந்த வருஷம் கரிநாள் அன்னைக்கி, சிவசாமியோட மோதுறதுக்கு, அவன் தயாரா இருக்குறதா சொல்லி அனுப்பி இருக்கான்.

நாச்சியார்கோயில்  ராகவன பத்தி சிவசாமியும் ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தாரு.

இருந்தாலும், ராகவனோட மோதுற அளவுக்கு, இதுவரைக்கும் எடுத்த பயிற்சி பத்தாதுன்னு, சிவசாமி மனசுக்கு பட்டது.

ராகவன், எத்தனையோ பெரிய பெரிய வாத்தியாரை எல்லாம் தோக்கடிச்சவன். பாதி பேரு, அவனோட சண்ட போடுறதுக்கு முன்னாடியே, தோல்விய ஒத்துக்கிட்டு ஒதுங்கிடுவாங்க.

அதனால, ராகவன் அனுப்புன சேதிய கேட்டு, அமைதியா எந்த பதிலும் சொல்லாம இருந்த, சிவசாமியை நெனச்சி ரொம்ப கவலைப்பட்டாரு நாட்டாமை.

மீண்டும் அவரே, நாம வேணுமுன்னா மோதுற வெளையாட்டு எல்லாம் வேணாமுன்னு சொல்லிடலாமான்னு கேட்டாரு.

அதைக்கேட்டு கோவப்பட்ட  சிவசாமி, என்ன மாமா பேசுறீங்க? இது என்ன சிவசாமிக்கு வந்துருக்குற தனிப்பட்ட சவாலா? ஊருக்கே வந்துருக்குற சவால் இல்லையா? என்ன ஆனாலும் ஆவட்டும். ஒன்னு அவனோடு மோதி ஜெயிக்கணும், இல்லேன்னா தோக்கணும். அதை விட்டுட்டு, மோதுற வெளையாட்டே வேணாம்னு சொன்னா, நமக்கு அசிங்கம் இல்லையான்னு.. கொஞ்சம் காட்டமாவே பேசுனாரு சிவசாமி.

அதுக்கு இல்லடா சிவசாமி, அவன் பத்து பதினஞ்சி வேலி நெலத்துக்கு சொந்தக்காரன். பொறந்ததுல இருந்தே கஷ்ட நஷ்டத்த பாக்காம, சிலம்பம், குஸ்தி, மடுவு, சுருளுன்னு பல எடங்கள்ல போயி பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தவன். நீ அப்படி இல்ல. ரெண்டு மூணு மா நெலம் மட்டுமே வச்சிக்கிட்டு, வயித்தையும் வாயையும் கழுவிக்கிட்டு இருக்கிறவன். அப்படி இருக்கும்போது, நீ அவனோட மோதுறது எப்படி  சரியா இருக்கும்’னு கேட்டாரு நாட்டாமை.

அதனால என்ன மாமா? வசதிக்கும் வித்தைக்கும் என்ன சம்பந்தம்? நான் ராகவனோட மோதி தோத்தா, அது என்னோட தோல்விய இருக்கட்டும். ஒரு வேளை நான் ஜெயிச்சிட்டேன்னா அது, இந்த ஊரோட வெற்றியா இருக்கட்டுமே’ன்னு உறுதியாக சொன்னாரு சிவசாமி.

வாத்தியாரு சொல்றதுதான் சரி’ன்னு அவரோட சிஷ்யனுங்களும் சொல்ல ஆரம்பிச்சாங்க.

சரி, இப்போ நான் என்ன செய்றதுன்னு சொல்லு?’ன்னாரு நாட்டாமை.

ராகவனோட மோதுறதுக்கு சிவசாமி தயாருன்னு சொல்லி அனுப்புங்க மாமான்னு சொன்னார் சிவசாமி.

சிவசாமி சிஷ்யனுங்க எல்லாருக்கும் ஒரே சந்தோஷம்… பெரிய வாத்தியாரோட நம்ம வாத்தியாரு மோதி சண்ட போடுறத பாத்து ரொம்ப நாளாச்சு’ங்குற சந்தோசம்தான் அது. இருந்தாலும், ராகவன்’னு சொல்றதுனால கொஞ்சம் அச்சமும் சேந்துடுச்சி.

ராகவனுக்கு தகவல் சொல்லியாச்சு.

அதுவரைக்கும் சிஷ்யனுங்களுக்கு மட்டுமே பயிற்சி குடுத்த சிவசாமி, அதுக்கு பிறகு, தானே களத்துல இறங்கி, விதவிதமா பயிற்சி எடுக்க ஆரம்பிச்சாரு.

இதுவரைக்கும் கத்துக்குடுத்த அத்தனை வித்தையையும் பயன்படுத்தி, சிஷ்யனுங்க, ஒவ்வொருத்தனையும் தன்னோட தனித்தனியா மோத சொன்னரு.

அது முடிஞ்சி, ஒட்டுமொத்தமா எல்லா சிஷ்யனுங்களையும், ஒரே நேரத்துல தன்னோட மோத சொன்னாரு.

இப்படியே, போகிய முடிஞ்சி, பொங்கல் வரைக்கும் தெனமும், ரெண்டு மடங்கு பயிற்சியில இறங்குனாங்க சிவசாமியும், அவரோட சிஷ்யனுங்களும்.

மாட்டு பொங்கல் அன்னிக்கி ராத்திரி, வழக்கம் போல பயிற்சி நடந்துகிட்டே இருந்துச்சி. இத்தன நாளு பயிற்சி எடுத்த சிஷ்யனுங்களுக்கும், பயிற்சி குடுத்த சிவசாமிக்கும், அன்னைக்கி என்னவோ ரொம்ப அசதியா இருந்துச்சி. ஒடம்பும் வலிக்க ஆரம்பிச்சுது.

மறுநாள் கரிநாள், ராகவனோட மோதுறதுக்கு தயாரா இருக்கணும். இந்த நேரம் பார்த்து இப்படி, ஒடம்பெல்லாம் அசதியா இருக்குதேன்னு, சிவசாமிக்கும் அவரோட சிஷ்யனுங்களுக்கும் ரொம்ப கவலை வந்துடுச்சி.

என்ன செய்யிறதுன்னு யோசிச்சாங்க. யாருக்கும், ஒடம்பு வலியையும், அசதியையும் சமாளிக்க வழி தெரியல.

அப்போதான், சிஷ்யன் ஒருத்தவன், ஒரு யோசனை சொன்னான்.

வாத்தியாரே… நாம பனங்கள்ளு குடிச்சி ரொம்ப நாளாச்சு. இன்னைக்கு ராத்திரி மட்டும், மரத்துல இருந்து யாருக்கும் தெரியாம, இறக்கி குடிச்சிட்டு படுத்தோமுன்னா, நல்லா அசந்து தூங்கிடலாம். விடிஞ்ச பிறகு ஒடம்புல உள்ள வலி, அசதி எல்லாம் பறந்து போயிடும்.

அதைக்கேட்டு, சிவசாமிக்கு கோபம், கோபமா வந்துச்சி. என்னடா அறிவு கெட்ட தனமா பேசுற. நாம பயிற்சி முடிஞ்சி, வெளையாட்ட முடிக்கிற வரைக்கும் அது மாதிரி எல்லாம் செய்யக்கூடாதுன்னு கொஞ்சம் காட்டமாவே திட்டினார் சிவசாமி.

சரி, வேற ஏதாவது வழி இருக்கான்னு சொல்லுங்க’ன்னு மத்தவங்கள கேட்டாரு. யாரும் எந்த பதிலும் சொல்லல.

கடைசியா.. ஒரு நாளைக்கி தானே வாத்தியாரே.. இத சாப்புட்டா, நாளைக்கி தெம்பா போயி, ராகவன் கிட்ட நல்ல சுறு சுறுப்பா மோதலாம் இல்லையா? அதுல ஒன்னும் தப்பு இல்லையே? என்று பக்குவமாக சொன்னான்.

அவ்வளவுதான், ஒருத்தன்  சொன்னத அப்படியே புடிச்சிக்கிட்ட சிஷ்யனுங்க, நீங்க இங்கியே உக்கார்ந்து இருங்க.. நாங்க போயி, நைசா இறக்கிட்டு வந்துடுறோம்’னு ரெண்டு மூணு பேரு சேர்ந்து சொன்னானுங்க.

கொஞ்ச நேரம்.. அப்படியே யோசிச்ச சிவசாமி, வேற வழி இல்லாம  சரிடான்னு ஒப்புதல் குடுத்துட்டாரு.

அவ்வளவுதான், அடுத்த கொஞ்ச நேரத்துல, பக்கத்துல இருக்குற தோப்புக்கு, ரெண்டு மூணு சிஷ்யனுங்க போயி, நாலஞ்சி மரத்துல இருக்குற பணங்கள்ள அப்படியே பானையோட, இறக்கிட்டு வந்துட்டாங்க.

அப்படியே, கலயத்துல இருக்குற கள்ள போதுமான அளவுக்கு குடிச்சாங்க.

அதுக்கு பிறகு, அப்படியே கலயத்த எடுத்துட்டு போயி ஒடச்சி, பக்கத்துல இருக்குற கொளத்துல போட்டுட்டு, எல்லாரும்வீட்டுக்கு போயி படுத்துட்டாங்க.

விடிய காலைல நாலு, நாலர மணி இருக்கும், சிவசாமியோட சிஷ்யனுங்க எல்லாரும், வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களோட நாக்கு தடிச்சி போயி, என்னென்னவோ, ஒளறி, ஒளறி பேச ஆரம்பிச்சிட்டாங்க.

இத மாதிரி சம்பவங்கள் அடிக்கடி ஊருல நடக்கிறது சகஜம்னா கூட, நாளும் கெழமையுமா இப்படி செஞ்சிட்டானுங்களேன்னு, பொம்பளைங்களும், பெருசுங்களும் தலையிலேயே அடிச்சிக்கிட்டாங்க.

கம்பு சண்ட கத்துக்கப் போற பசங்க குடிக்க மாட்டானுன்களே. இந்த கம்னாட்டிங்க ஏன், இந்த மாதிரி ஊமைத்தங்கா போட்ட, திருட்டு கள்ள குடிச்சிட்டு வந்து, படுத்தி வைக்கிறானுங்களே. வாத்தியாருக்கு இதெல்லாம் புடிக்காதேன்னு எல்லாரும் வீட்டுக்கு ஓடுனாங்க.

அங்க போயி பாத்தா, அவரு நெலம அதோட மோசமா இருந்துச்சி. அவரும் வாந்தி எடுத்து, ஒளறி, ஒளறி பேச ஆரம்பிச்சி இருக்காரு.

என்ன செய்றதுன்னு தவிச்ச அவரு பொண்டாட்டி ரங்கநாயகி, தண்ணியில எலுமிச்சம் பழத்த புழிஞ்சி ஊத்தி, அதுல உப்பை போட்டு, உள்ளுக்கு குடுத்து, கொடம் கொடமா தண்ணிய எடுத்து தலையில ஊத்தி படுக்க வச்சி இருந்தா.

அதப் பாத்தவங்க எல்லாரும், அடப்பாவத்தே.. கொடும, கொடுமன்னு கோயிலுக்கு போனா, அங்க ரெண்டு கொடும அவுத்து போட்டுட்டு ஆடுன கதையால்ல இருக்கு? சிவசாமியும் இப்படி ஆயிட்டானேன்னு.. அவங்களுக்கு கவலயாயிடுச்சி.

இந்த குடிகார நாயிங்க, என்னைக்கும் திருந்தாதுங்க. அதுனால ஊரு திருவிழாவா நிறுத்த முடியுமா? ன்னு பேசிக்கிட்டே, பெருசுங்க எல்லாரும், மத்த வெளையாட்டுங்கள நடத்துவோம்’னு முடிவு பண்ணுனாங்க.

காலையில ஒம்பது மணிக்கே, சூடம் கொளுத்தி, தீபம் காட்டி, தேங்கா எல்லாம் ஒடைச்சி, வழக்கம்போல, ஆட்டத்த தொடங்கி வச்சாரு நாட்டாமை.

ஊரு சனமே கூடி நின்னு வெடிக்க பாத்துது… கொஞ்ச நேரம் மேளம், நாதஸ்வரம் எல்லாம் வாசிச்சி முடிஞ்சிது.

மோதல் ஆட்டமா, கண்ண கட்டிக்கிட்டு பானைய ஒடைக்கிற ஆட்டம் தொடங்குச்சி. வாலிப புள்ளைங்களும், வயசான ஆம்பள, பொம்பளைங்களும், அந்த போட்டியில ஆர்வமா கலந்துகிட்டாங்க.

ஒருத்தவங்க ரெண்டு பேருதான் அந்த போட்டியில ஜெயிச்சாங்க.

அடுத்ததா, பாராங்கல்ல தூக்குற போட்டி நடந்தது.

இதை எல்லாம் சத்தம் போட்டு எல்லாரும் ரொம்ப ஆர்வமா எல்லாரும் பார்த்து  ரசிச்சிக்கிட்டே இருந்தாங்க.

அந்த நேரம் பார்த்து, பத்து பதினஞ்சி ரேக்ளா வண்டி வரிசையா வந்துச்சி. அந்த வண்டிங்க வந்த வேகத்துல, பறந்த புழுதி, அப்படியே பொக மாதிரி, எல்லாரு கண்ணையும் உறுத்த ஆரம்பிச்சுது.

ஆட்டத்த நிறுத்திட்டு, அப்படியே அந்த வண்டிகளையும், அதுல வந்த ஆளுங்களையும் எல்லாரும் பார்த்துக்கிட்டே இருந்தாங்க. அவனுங்க ஒவ்வொருத்தனும் வீமனும் சூமனுமா இருந்தாங்க.

மொதல்ல வந்த வண்டியில இருந்து சண்டியரு மாதிரி இறங்குனான் ராகவன்.

என்ன நான் சொன்ன மாதிரி வந்துட்டேன்… என்னோட மோதுற ஆளு எங்கே’ன்னு நேரடியா விஷயத்துக்கே வந்துட்டான்.

அதைக்கேட்டு, அங்க இருந்த நாட்டாம உள்பட.. யாருக்கும், என்ன பதில் சொல்றதுன்னே தெரியல? ஒரு மாதிரி சங்கடமா இருந்துச்சி.

அப்போ, அங்க இருந்த ஒரு பெருசு மட்டும் பேசுச்சி..

இதோ பாரு வாத்தியாரே… ஒங்களோட மோதுறத்துக்கு, எங்க சிவசாமி தயாராதான் இருந்தான். ஆனா, அவனுக்கு திடீர்னு ஒடம்பு சரி இல்லாம போச்சு. அவன் ராத்திரி பூரா வாந்தி எடுத்து, பொரக்கன இல்லாம மயக்கம் அடிச்சி படுத்து கெடக்குறான். அதுனால, இன்னைக்கி நடத்துற வெளையாட்ட இன்னொரு நாளைக்கி வச்சிக்கலாம்’னு கொஞ்சம் பக்குவமாவே எடுத்து சொன்னாரு.

அதைக்கேட்ட ராகவன், அஹ்ஹஹ்ஹா’ன்னு ஒரு சிரிப்பு சிரிச்சான் பாருங்க… அது கோழி கொக்கரிக்கிற மாதியே இருந்துச்சி.

அதுக்கு பிறகு அவன் சொன்ன வார்த்தைதான்… அங்க இருக்குற அத்தனை பேரையும் அவமானப்படுத்துறதா இருந்தது.

என்னோட மோதுறதுக்கு பயந்து, பல பேரு நடத்துற நாடகம்தான் ஒங்க ஊருலேயும் நடந்து இருக்கு. சிவசாமிய விட்டா, ஒங்க ஊருல ஒரு ஆம்பள கூட இல்ல?’ன்னு  சொல்லுங்க.. நான் இப்பவே திரும்பி போயிடுறேன். அப்படி இல்லேன்னா.. சிவசாமிய அழைச்சிட்டு வந்து, அவனோட தோல்விய, ஒங்க எல்லாரு முன்னாடியும் ஒத்துக்க சொல்லுங்க போயிடுறேன். இது ரெண்டுமே செய்யாம, நான் எப்படி இந்த ஊரைவிட்டு போறதுன்னு கேட்டான்.

அவன் சொன்ன வார்த்தையால, எல்லாருக்கும் ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சிடுச்சி. இருந்தாலும், சிவசாமியோட ஒரு சிஷ்யன் கூட, எதுத்து சண்ட போருற நெலமையில இல்லையே?ன்னு ஊரு மக்கள் எல்லாம் தவியா தவிச்சாங்க.

அப்போ, நாட்டாமை சொன்னாரு…

வாத்தியாரே… ஒங்களோட மோதி, சிவசாமி ஜெயிப்பானா? தொப்பானா?ங்குறது வேற விஷயம். ஆனா, அவன் ஒங்களோட மோதி, தோத்தா கூட பரவாயில்லன்னுதான், நீங்க விட்ட சவால ஏத்துக்கிட்டான். ஆனா, இப்போ அவன் இருக்குற நெலமையில, எதுவுமே செய்ய முடியாதேன்னு சொல்லி பாத்தாரு.

அவரு சொல்றது எதையும் ஏத்துக்கிற நெலமையில ராகவன் இல்ல.

ஒன்னு, சிவசாமி நேரடியா வந்து தன்னோட தோல்விய ஒத்துக்கணும். இல்லேன்னா, இங்க யாருமே ஆம்பள இல்லேன்னு ஒத்துக்கணும்,னு சொன்னதையே திரும்ப சொன்னான்.

என்ன செய்யிறதுன்னு யோசிச்ச நாலஞ்சி பெருசுங்க, இவ்வளவு நேரம், சிவசாமிக்கு பாதி போதையாவது தெளிஞ்சி இருக்கும். அதனால, அவன போயி, எப்படியாவது கைத்தாங்கலா  அழைச்சிட்டு வருவோம். அவனோட நெலமைய பாத்த பிறகு, ராகவனே முடிவு எடுக்கட்டும்’னு சொன்னாங்க.

ஆமாம், இனிமேலும் உண்மைய மறைச்சி பிரயோஜனம் இல்ல. அதனால, சிவசாமிய போயி தூக்கிட்டு வாங்கன்னு சொன்ன நாட்டாமை, வாத்தியாரே, கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க’ன்னு அமைதி படுத்தினாரு.

ஏதோ, சொல்ல போறாங்கன்னு நெனச்ச ராகவனும், சரின்னு ஒத்துக்கிட்டு, அங்கேயே ஒரு நாற்காலிய போட சொல்லி உட்கார்ந்து இருந்தான்.

அங்க கூடி இருந்த எல்லாருக்கும்.. நம்ம ஊரோட மானமே போயிடுச்சேன்னு ஒரே கவலை.

நாட்டாமை சொன்ன மாதிரியே, ஒரு நாலைஞ்சி பேரு, நேரா சிவசாமி வீட்டுக்கு போனாங்க.

அங்க போயி, சிவசாமி இருக்குற நெலமைய பாத்தா, கைத்தாங்கலா கூப்புட்டுட்டு வர முடியாத அளவுக்கு இருந்தது. நாலைஞ்சி பேரு, தலையிலதான் தூக்கிட்டுதான் வரணும்.

வேற வழி இல்லாம, பாயில படுத்து கிடந்த சிவசாமிய, அப்படியே நாலஞ்சி பேரு சேந்து தூக்குனாங்க. அப்போ அதுல உயரமா இருந்த ராமலிங்கத்தோட தலை இடிச்சி, பரணையில நீட்டிக்கிட்டு இருந்த சிலம்ப கழிகள் எல்லாம் பட படன்னு சரிஞ்சி கீழ விழ ஆரம்பிச்சுது.

பொரக்கனை இல்லாம இருக்குற, சிவசாமி அந்த சிலம்பம் குச்சிங்க சத்தத்த கேட்டு, அப்படியே ஒடம்ப வளைச்சி அதை எல்லாம் கீழ விழாம தாவி கையில புடிச்சாரு.

அதப்பாத்ததும்… அந்த நாலஞ்சி பேருக்கும் கொஞ்சம் ஆச்சர்யம்.

அடப்பாவி.. குடி போதையில நிதானம் இல்லாம கெடக்குறவன் சிலம்பம் குச்சிங்க சத்தத்துல இப்படி பண்றானேன்னு… அப்படியே அவர நிக்க வச்சி, அதுல ஒரு சிலம்பத்த எடுத்து அவரு கையில குடுத்தாங்க.

அந்த கம்ப அப்படியே கையில புடிச்ச சிவசாமி, கண்ணை தொறந்து, தொறந்து மூடிக்கிட்டே, அந்த கம்ப அப்படியே தரையில ஊனி, தனியா நடக்க முயற்சி பண்ணுனாரு. ஆனா முடியல.

அதுக்கு பிறகு, அவரு எதையோ சொன்னாரு. ஆனா, நாக்கு தடிச்சி போனதுல, அது எதுவும் புரியல.. அதயும் மீறி, அவரு கையால சாடை காட்டி, எங்கேயோ கூப்பிட்டு போக சொல்றாருன்னு மட்டும் தெரியுது.

அப்பாடா? இது போதுண்டா சாமி.

இப்படியே..சிவசாமிய அந்த எடத்துக்கு கூப்புட்டு போயி, ராகவன சமாளிக்கலாம்’னு, அவங்க கொஞ்சம் சந்தோசப்பட்டாங்க.

சிவசாமி கையில சிலம்பத்தோட, அப்படியே கைத்தாங்கலா.. அவர கூப்புட்ட போக ஆரம்பிச்சாங்க.

சிவசாமிக்கு போதை முழுசா தெளியலையே ஒழிய, போகப்போக தனியா நடக்க முயற்சி செய்யிறத, அவங்களால் உணர முடிஞ்சிது.

கொஞ்ச தூரம் போன பிறகு, அவங்களும் சிவசாமிய தனியா விட்டு பாத்தாங்க… என்ன ஆச்சர்யம்.. எப்படியோ கம்ப ஊனிக்கிட்டு.. ஆடி, ஆடி தனியாவே நடக்க ஆரம்பிச்சிட்டாரு.

ஒரு வழியா, ராகவன் இருக்குற எடத்துக்கு வந்து சேர்ந்தாரு சிவசாமி.

சிவசாமிய பாத்த ஒடனே, அங்க இருந்த ஊரு சனங்க எல்லாரும், குடுத்த உற்சாக சத்தம் இருக்கே.. அதைக்கண்டு.. அப்படியே நெஞ்ச நிமுத்தி, சிலம்பத்த புடிச்சிக்கிட்டு, முனீஸ்வரன் மாதிரி நின்னாரு சிவசாமி.

அவரு கிட்ட நெருங்கி போயி, சிவசாமி.. நீ இப்போ இருக்குற நெலமையில, ராகவன் வாத்தியாரோட சண்ட போட முடியாது. அதனால, தோத்துட்டேன்னு ஒத்துக்க, நல்லா இருந்தா அடுத்த வருஷம் மோதிக்கலாம்’னு சொன்னாரு நாட்டாமை.

முழுசா போதை தெளியலேன்னாலும், நாட்டாம சொல்றத சிவசாமியால ஏத்துக்க முடியல. ஆனாலும் சிவசாமி அதுக்கு சொல்ற பதிலும் யாருக்கும் புரியல.

அதுக்கு அப்புறம், சிவசாமி கிட்ட நெருங்கிப் போன பெருசு ஒன்னு, இப்போ என்ன சொல்ற… ராகவனோட சண்ட போட தயாரா இருக்கியா?ன்னு கேட்டாரு.

அதுக்கு சிவசாமி தலையாட்டுனது… தயார்’னு சொல்ற மாதிரி இருந்துச்சி.

இனிமே.. ஒன்னும் சொல்ல முடியாது..

ராகவன் வாத்தியாரே.. சிவசாமி ஒங்க கூட மோதுறதுக்கு தயார்’னு சொல்றான். இப்போ, அவன் இருக்குற நெலமையில, கண்டிப்பா அவன் ஜெயிக்க முடியாதுன்னு தெரியும். இருந்தாலும், அவன் ஒன்னோட மோதி.. தோத்ததா இருக்கட்டும்.

கொஞ்சம் பாத்து அடி.. அவன் போதை மயக்கம் தெளியாம இருக்கான். இருந்தாலும்.. அவனோட உள் மனசு.. எப்படியாவது ஒன்னோட மோதனும்’னு சொல்லுது போல இருக்கு. அதனால், பாத்து வெளையாடு படாத எடத்துல பட்டுட போவுதுன்னு சொல்லிட்டு மன வலியோடு ஒதுங்கி வந்தது அந்த பெருசு.

போதையோட இருக்குறவன்கிட்ட சண்ட போடுறது வீரனுக்கு அழகு இல்ல. இருந்தாலும், ஊரு மானத்த காப்பாத்துறதுக்காக போராடுற ஒங்கள மதிச்சி, சும்மா கம்ப ரெண்டு சுத்து, சுத்தி சிவசாமிய கீழ தள்ளிட்டு, என்னோட வெற்றிய எடுத்துக்கிட்டு போறேன்னு சொல்லி, ஒரு சிலம்பத்தோட சிவசாமி எதுக்க வந்து நின்னான் ராகவன்.

சிவசாமி நெலமைய பாத்து ராகவனுக்கே கொஞ்சம் பாவமாத்தான் இருந்துச்சி. அதனால, அவரோட கையில இருந்த சிலம்பத்த மட்டும்  ஒரு தட்டு, தட்டிட்டு.. வெளையாட்ட தொடங்கலாம்’னு நெனச்சான்.

அதுக்காக, சலாம் வரிசை எல்லாம் எடுத்துட்டு, தன்னோட சிலம்பத்தால  பக்கவாட்டுல, சிவசாமி சிலம்பத்த ஓங்கி ஒரு தட்டு தட்ட போனான்.

ஆனா, அதுக்கு கொஞ்சம் கூட எடம் கொடுக்காம, தன்னோட சிலம்பத்தால, ராகவன் சிலம்பத்த தடுத்தாரு சிவசாமி.

வேடிக்கை பார்த்த கூட்டத்துல இருந்து ஒரு உற்சாக சத்தம்..

ராகவனுக்கு ஒரே ஆச்சர்யம்… மனுசன் போதையிலேயும், இவ்வளவு தெளிவா தடுக்குறானே’ன்னு நெனச்சி, அடுத்த முயற்சியில கொஞ்சம் தீவிரம் காட்ட ஆரம்பிச்சான்.

சிவசாமி, இருந்த எடத்த விட்ட நகரலையே தவிர, ராகவனோட ஒரு அடி கூட, தன் மேல விழாத அளவுக்கு, தன்னோட சிலமத்தால  தடுத்துக்கிட்டே இருந்தாரு.

இனிமே, இதெல்லாம் சரி வராதுன்னு நெனச்ச ராகவன், தனக்கு தெரிஞ்ச ஒவ்வொரு நுணுக்கத்தையும் அடுத்தடுத்து கையாள ஆரம்பிச்சான்.

ஆனா, ராகவனோட சிலம்பம், கொஞ்சம் கூட தன் மேல படாத அளவுக்கு, அத்தனைக்கும் நின்ன எடத்துல இருந்தே,போதை தல்லாட்டத்துலேயே அவனோட அத்தன முயற்சிக்கும் அணை போட்டாரு சிவசாமி.

சிவசாமி எப்படித்தான், சமாளிக்கிறாரோ தெரியல.. ஒரு அடி கூட அவர் மேல விழ மாட்டேங்குது.

இதெல்லாம் பாத்து, ஊரு சனம் கை தட்டுறதும், குடுக்குற உற்சாக சத்தமும்.. சிவசாமிய அடுத்தடுத்த நிலைக்கி, அவர அறியாமலே.. கொண்டு போய்கிட்டு இருந்தது.

என்னடா.. எத்தன ஊருல, எத்தன ஆட்ட களத்துல எவ்வளவோ பெரிய மாவீரனை எல்லாம் சமாளிச்சி ஜெயிச்சிருக்கோம். ஆனா, இந்த குடி போதையில நிக்கிற, இவன் மேல, ஒரு அடிய கூட அடிக்க முடியலையேன்னு, தவிச்சான் ராகவன்..

அதனால, தன்னோட கடைசி நுணுக்கத்த கையில எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டான் அவன்.

முட்டிக்காலுக்கும் மேல, சிலம்பம் எப்படி வந்தாலும் தடுத்துடறான் இந்த சிவசாமி. அதனால், முட்டிக்காலுக்கு கீழ ஒரே ஒரு அடி மட்டும் அடிச்சிட்டா.. அவனால குனிஞ்சி தடுக்க முடியாது. சுருண்டு விழுந்துடுவான்னு ஒரு கணக்கு போட்டான் ராகவன்.

அதுக்காக, தரையில உட்கார்ந்த மேனிக்கு,  சிலம்பத்த ஒரு சுத்து சுத்தி, சிவசாமி முட்டிக்கு கீழ குறி வச்சி விட்டான் ராகவன்.

அதுவரைக்கும், அசையாம நின்னுக்கிட்டே, தடுப்பு ஆட்டம் ஆடுன  சிவசாமி, அப்படியே, தரைக்கு மேல, ஒரு, எகிறு எகிறி.. ராகவன் மேல பாய்ஞ்சி அடிச்சாரு ஒரு அடி.

அந்த போதையில, அப்படி ஒரு அடி, சிவசாமி அடிப்பாருன்னு  ராகவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அவ்வளவுதான், ராகவன் கையில இருந்த சிலம்பம் பறந்து போயி கூட்டத்து அந்தாண்ட விழுந்து.

அந்த அதிர்ச்சியில இருந்து, அவன் மீளுறதுக்குள்ள, தன்னோட குஸ்தி நுணுக்கத்த பயன்படுத்தி ராகவனோட நெஞ்சில விட்டாரு ஒரு உதை. தொம்முன்னு ஒரு சத்தம் கேட்டுச்சி.

அப்படி ஒரு உதைய, அவன் இதுவரைக்கும் வாங்கி இருக்க மாட்டான் போல. அதுல நிலை குலைஞ்சி போன ராகவன், ஐயோ..அம்மான்னு அப்படியே..நெஞ்ச புடிச்சிக்கிட்டு அப்படியே, பூதம் சரிஞ்சி விழுந்த மாதிரி தரையில சாய்ஞ்சான்.

அவ்வளவுதான், ஊரு மக்கள் குடுத்த சத்தமும், கை தட்டலும், வானத்தையே கிழிக்கிற மாதிரி இருந்துச்சி.

உற்சாக சத்தம்.. சிவசாமிக்கும் கேட்டுச்சி… தள்ளாடிகிட்டே ஊரு மக்களை எல்லாம் பார்த்து, தள்ளாடி.. தள்ளாடிக்கிட்டே ஒரு கும்புடு போட்டாரு.

அவ்வளவுதான்.. அவரும் பின்னாடி பக்கமா மல்லாக்க சாய ஆரம்பிச்சாரு… அதுக்குள்ள ஓடிப்போயி, ஊரு சனங்க எல்லாம், அவரு விழுந்துடாம புடிச்சிக்கிட்டு தலையில தூக்கிக்கிட்டு ஆட ஆரம்பிச்சிட்டாங்க..

அதப்பாத்த பெருசுங்க… அடேய்.. அவன் ஏதோ ஒரு வைராக்கியத்துல.. ராகவன ஜெயிச்சிட்டாண்டா…

அவனுக்கு இன்னும் போதை முழசா தெளியல.. அவன கொண்டு போயி, வீட்டுல படுக்க போடுங்கடா’ன்னு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பறம்தான், ஊரு சனமே ஒண்ணா சேர்ந்து  சிவசாமிய கொண்டுட்டு போயி, அவரு வீட்டுல படுக்க போட்டுட்டு வந்தாங்க.

மறுநாள் போதை எல்லாம் தெளிஞ்சி எழுந்த சிவசாமிக்கிட்ட கேட்டா.. என்ன நடந்துதுன்னே அவருக்கு தெரியல.

அவரு மனசுல இருந்த வைராக்கியம்மும், சிலம்பத்த உயிரா நெனைக்கிற அவரோட எண்ணமும்தான் அவ்வளவு போதையிலேயும் அவர ஜெயிக்க வச்சிருக்குன்னு ஊரே பேசிக்கிட்டாங்க..

அதுல இருந்து அவர, சிலம்பத்துக்கு பொறந்த சிவசாமி’ன்னே  எல்லாரும் கூப்புட ஆரம்பிச்சிட்டாங்க.