“அதுதான் சங்கதியா?” …… சிறுகதை!

-ராஜேந்திரன்

ஆறு நிமிட வாசிப்பு…..

சடங்கு சம்பிரதாயங்களுக்கு விளக்கம் கேக்குறது, நல்லது கெட்டதுக்கு நாள் குறிக்கிறது, சொந்தக்காரங்களுக்கு கடுதாசி எழுதுறது, பொழுது போகலேன்னா கதை சொல்றதுன்னு, எல்லா விஷயத்துக்கும் மக்கள் தேடிப்போறது பெருமாள் தாத்தாவத்தான்.

ராமாயணம், மகாபாரதம், காத்தவராயன் கதை, வள்ளலார் பாட்டுன்னு அவரு எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருப்பாரு. கேக்குறவங்க வயசுக்கு ஏத்த மாதிரியும், அவங்க மனசுல பதியிற மாதிரியும் விளக்கமா சொல்றதுல அவர மிஞ்ச முடியாது.

எண்பது வயசுக்கு மேலேயும் ஆரோக்கியமா இருந்த அவரு, தன்னோட சாவு என்னைக்கி வரப்போவுதுன்னு, முன்கூட்டியே சொல்லி, அதே நாளுல செத்து போனவரு.

பொறுமை, நிதானம், எந்த விஷயத்தையும், முழுமையா கேட்டு, தெளிவா ஆராய்ஞ்சி, அதுக்கு ஒரு தீர்க்கமான முடிவ சொல்வாரு.

அந்த காலத்துலேயே, அஞ்சாவது வரைக்கும் படிச்ச அவரு, ஊருல உள்ள பல பேருக்கு கடுதாசி எழுதியும் கொடுப்பாரு.

அவருக்கிட்ட கடுதாசி எழுத வர்றவங்க பலபேரும், மொதல்ல, இன்னாருக்கு.. இன்னாரு எழிதிக்கொண்டதுன்னு ஆரம்பிப்பாங்க.

அதெல்லாம் விடு, சமாச்சாரத்த சொல்லுன்னு சொல்வாரு. அதை முழுசா கேட்டுக்கிட்டு, தெளிவா எழுதி முடிச்சிடுவாரு.

அதுக்கு பிறகு, விலாசத்த சொல்லுன்னு அவரு கேட்கும்போதுதான், கடுதாசி எழுத வர்ரவங்க அவருகிட்ட திட்டு வாங்குவாங்க.

மொதல்ல, ஆளோட தலை எழுத்து, அதுக்கு பிறகு அவங்களோட பேரு, அடுத்தது தெருவு பேரு, அப்பறம் ஊரு பேரு, பிறகு தாலுக்கா பேரு, அடுத்தது ஜில்லா பேருன்னு, வரிசையா சொல்லணும்’னு, அவரு எத்தனையோ தடவ சொல்லி இருப்பாரு.

ஆனா, நம்ம ஊரு ஆளுங்க எல்லாரும், ஜில்லா பேர மொதல்ல சொல்லி, அதுக்கு பிறகுதான், தாலுக்கா, ஊரு, தெருவு, ஆளு பேருன்னு சொல்லி முடிப்பாங்க…

அந்த ஒரு விஷயத்த மட்டும், வரிசையா சொல்ல மாட்டுறாங்களேன்னுதான் கொஞ்சம் கோபப்படுவார். அந்த கோபமும் கொஞ்ச நேரம்தான்.

கூடுமானவரைக்கும், கடுதாசி எழுத வர்றவங்க யாருன்னு கேட்கும்போதே, அவங்களோட விலாசம் எல்லாம் இவருக்கு ஏற்கனவே தெரியும்.

ஆனாலும், எழுத சொல்றவங்க வாயில சரியா வருதா?ன்னு ஒவ்வொரு தடவையும் எதிர் பாப்பாரு. கூடுமானவரைக்கும், அது தலைகீழாத்தான் வரும்.

பொழுது விடிஞ்சதுமே, ஊருல உள்ள கெழம் கட்டைகள், விவசாய வேலைக்கி போற ஆளுங்க எல்லாரும், மொதல்ல வந்து டீ குடிக்கிற இடம் தங்கவேலு கடைதான்.

பெருமாள் தாத்தாவும், அவரோட அந்த காலத்துல திண்ணை பள்ளிக்கூடத்துல படிச்ச ஒரு சில கெழம் கட்டைகளும், அங்கதான் வந்து டீ குடிக்கும்.

காலையில, டீக்கடை திறக்கும்போதே, வரும் இந்த பெருசுங்க, கடைக்கு வர்ற பேப்பர்ல இருக்குற ஒரு வார்த்தைய கூட விடாம படிச்சி முடிச்ச பிறகுதான் வீட்டுக்கே கிளம்பும்.

அது சில நேரம், டீ ஆத்துற தங்கவேலுக்கே எரிச்சலா இருக்கும். கையில பேப்பர புடிச்சிக்கிட்டு இப்படியே, ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தா, இடுப்புக்கு கீழ வேர் ஓடிட போகுதுன்னு, அவரு கேலியா சொல்றதும் உண்டு.

பெருமாள் தத்தா மட்டும் அல்ல, அது கூட வரும் சில பெருசுங்களும் சேர்ந்து, பேப்பர்ல இருக்குற செய்திய படிக்காம, ராகம் போட்டு பாட்டாவே பாட ஆரம்பிச்சிடும்.

அந்த நேரம் பார்த்து ஒரு நாள், கடைக்கி டீ வாங்க வந்த நான், அந்த பெருசுங்க பேப்பர, ராகம் போட்டு பாட்டு பாடுறத பார்த்து சிரிச்சிட்டேன்.

ஒடனே, என்னைய திரும்பி பார்த்த பெருமாள் தாத்தா, யார் இந்த புள்ளையாண்டான்?, என்னய பார்த்துட்டு சிரிக்கிறான். இவன இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லையே?ன்னு தங்கவேல் கிட்ட  கேட்டார்.

இவன், பழநிவேலோட கடைசி மவன் என்றார் தங்கவேலு.

அப்படியா…இவ்வளவு நாளு இவன் எங்க இருந்தான்.

பழனிவேலு பொண்ண செம்னார்கோயிலுல கட்டி குடுத்திருக்காங்க இல்ல.. அங்க இருக்கான். அங்கேயே படிக்கிறான்.

அப்படியா சங்கதி… புள்ளையாண்டம் இங்க வாடான்னு, என்னை அவர் பக்கத்தில் அழைத்தார்.

அவர் பக்கத்தில் சென்றவுடன், என் முதுகை தட்டிக்கொடுத்து உன் பேர் என்ன என்று கேட்டார்.

செல்வம் என்றேன்.

என்ன படிக்கிற என்றார்?

மூணாவது படிக்கிறேன் என்றேன்.

அடுத்து.. தமிழ் மாசங்கள் மொத்தம் எத்தனை என்றார்.

பன்னண்டு என்றேன்.

அதை வரிசையாக சொல் என்றார்.

சித்திரை தொடங்கி, பங்குனி வரை வரிசையாக சொன்னேன்.

அதே போல் ஆங்கில மாதங்கள் எத்தனை? அதையும் சொல் என்றார்.

அதையும் வரிசையாக சொன்னேன்.

அடுத்து, தமிழ் வருடங்கள் எத்தனை என்று கேட்டார்..

எனக்கு தெரியவில்லை…விழித்தேன்.

பின்னர் அவரே, பிரபவ, விபவ, பிரமோதூத, பிரஜோற்பத்தி…என்று தொடங்கி, அக்ஷய வருஷம் வரை கொஞ்ச நேரத்தில் அறுபது வருடங்களையும் வரிசையாக சொல்லி முடித்தார்.

எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.

ஒடனே, தங்கவேலை பார்த்த பெருமாள், புள்ளையாண்டம் கேட்டிககாரண்டா, நம்ம ஊருல எட்டாவது படிக்கிற புள்ளைங்கள கேட்டா கூட இவ்வளவு அழகா சொல்லாதுங்க. இவன் தெளிவா சொல்றான் என்றவர், நீ நல்லா படி, வயசுல பெரிய உத்தியோகம் கெடைக்கும் என்று தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்.

அப்போது பார்த்த பெருமாள் தாத்தாவ, அதுக்கு பிறகு, ஒவ்வொரு பரீட்சை லீவுக்கும், ஊருக்கு வரும்போதெல்லாம் பார்ப்பேன்.

சின்ன வயசுலேயே ராமாயணம், மகாபாரதம், வள்ளலார் பத்தி எல்லாம் எனக்கு நிறைய கதைகள சொல்லுவாரு. சின்ன சின்ன நீதிக்கதைகள், பழமொழின்னு எனக்கு நிறைய சொல்லி கொடுத்திருக்காரு.

நான் அக்கா வீட்டுக்கு படிக்க போயிருக்குற காலத்துல, எங்க அம்மா அப்பாவ எப்ப பாத்தாலும், என்ன பத்தி விசாரிச்சுக்கிட்டே இருப்பாருன்னு சொல்லுவாங்க.

இப்படி ஆரம்பிச்சதுதான் எங்க நட்பு. பெருமாள் தாத்தா சாகுற வரைக்கும் அது தொடர்ந்து கிட்டே இருந்தது.

பிளஸ் டூ படிக்கிற காலத்துல நான், அக்கா வீட்டை விட்டு எங்க வீட்டுக்கே வந்துட்டேன்.

அப்போ ஒரு கார்த்திகை மாசம். மழை, குளிரு ரெண்டும் சேர்ந்த மாதிரி இருந்துச்சி.

அந்த ராத்திரி நேரங்கள்ல, கெடா நாயிங்க எல்லாம், எதுவும் சாப்புடாம,  பொட்ட நாயிங்கல வெறட்டிக்கிட்டே இருக்கும்.

திடீர்.. திடீர்னு ராத்திரியில, நாயிங்க கும்பல், கும்பலா அப்பப்போ கொலச்சிக்கிட்டே இருக்கும்.

பகல் எல்லாம், கடுமையா வேலை செஞ்சிட்டு, ராத்திரியில அசந்து தூங்குறவங்களுக்கு, அந்த சத்தம் ரொம்ப எடஞ்சலா இருக்கும்.

அந்த கோவத்துல, வீட்டுல இருக்குற கம்பு, தடிக்கழின்னு எதுல்லாம் கெடைக்குதோ, அது எல்லாத்தையும் எடுத்துகிட்டு ஓடி, நாயிங்கள அடி, அடின்னு அடிச்சி தொரத்துவாங்க.

அதப்பாத்தா, நாயடி திருவிழா மாதிரியே இருக்கும். ஏன்னா, நாய அடிக்கிறவங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்.

அவ்வளவு அடியும் வாங்கி, ஒடம்பெல்லாம் புண்ணா போன நாயிங்க, கொஞ்ச நேரந்தான் அமைதியா இருக்கும்.

திரும்பவும், கொஞ்ச நேரத்துக்கு எல்லாம், பழைய மாதிரியே கத்த ஆரம்பிச்சிடும்.

மீண்டும், தூங்குறவங்க எல்லாம் எழுந்து போயி, அந்த நாயிங்கள அடி, அடின்னு அடிச்சி தொரத்துவாங்க.

அதோட நாய் ஜென்மம்னு சொல்றது எவ்வளவு சரியா இருக்கு பாருன்னு வேற பேசிக்குவாங்க.

இப்படித்தான் பல இரவுகள் கழியும்.

சில நேரத்துல, ஒரு சில நாயிங்க மட்டும் தனியா உட்கார்ந்துகிட்டு “ஓ”ன்னு ஊளையிட்டுக்கிட்டு அழும்.

அந்த நாயோட ஊளை சத்தத்த கேட்டு, அடுத்த தெருவுல இருக்குற சில நாயிங்களும் அதுக்கு, பின்பாட்டு பாடுற மாதிரி ஊளையிடும். சில நேரத்துல, ஒட்டுமொத்தமா எல்லா நாயிங்களும் சேர்ந்துகிட்டு ஊளையிடும்.

பொட்ட நாயிங்கள, கூட்டம் கூட்டமா வெறட்டிக்கிட்டு அலையிற கெடா நாயிங்கள கூட, அடிக்காம விட்டுடுவாங்க.

ஆனா, ஒப்பாரி வச்சி அழுற நாயின்களுக்கு மட்டும் மன்னிப்பே கெடையாது. அதுங்க வாங்குற அடிதான் அதிகமா இருக்கும்.

அப்போ, எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சி.

கொலச்சி சத்தம் போடுற நாயெல்லாம் கூட, போனா போவுதுன்னு விட்டுடுறாங்க.. ஆனா ஊளையிட்டு ஒப்பாரி வைக்கிற நாயிங்கள மட்டும் ஏன் தயவு தாட்சண்யம் பாக்காம அடிக்கிறாங்க?ன்னு அம்மா கிட்ட கேட்டேன்.

இதுபோல, நாயி அழுதுதுன்னா யாராவது செத்து போயிடுவாங்க. நாயெல்லாம் பைரவர் சாமி இல்லையா? அதுனால், அதோட கண்ணுக்கு எமன் வர்றது தெரியும். அதப்பாத்துட்டுதான் ஒப்பாரி வைக்குது. அதுனாலதான், அந்த நாயிங்கள அடிச்சி தொரத்துராங்கன்னு அம்மா சொன்னாங்க.

சரி.. எமன் வர்றது, நாயோட கண்ணுக்கு தெரியிறதா கூட வச்சிக்குவோம். ஆனா, அதை அடிச்சி தொரத்துறதுனால, வர்ற எமன் திரும்பி போயிடுவானா?ன்னு அம்மாகிட்ட மறுபடியும் கேட்டேன்.

நீ என்னடா இப்படி எல்லாம் என்னைய கேள்வி கேக்குற? எனக்கு அதுல்லாம் தெரியாது. எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்கன்னு அம்மா சொன்னாங்க.

அதுக்கு பிறகு, அம்மாவ கேக்குறது பயன் இல்லேன்னு முடிவுக்கு வந்தேன்.

இந்த மாதிரி கேள்விக்கு எல்லாம், நம்ம பெருமாள் தாத்தாதான், சரியான பதில் சொல்லுவாருன்னு எனக்கு பட்டது.

அடுத்த நாள் காலையிலேயே, பெருமாள் தாத்தா வீட்டுக்கு போனேன். என்னைய பாத்ததும், தாத்தாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

என்னடா புள்ளையாண்டம், என்னைய பாக்குறதுக்கு காத்தாலேயே வந்திருக்கே?ன்னு கேட்டாரு.

சும்மாதான் தாத்தா.. ஒரு சந்தேகம்.. அதான் ஒங்ககிட்ட கேக்கலாமுன்னு வந்தேன்னு சொன்னேன்.

சந்தேகத்த கேக்குறதுக்கு முன்னாடி, அவரு பொண்டாட்டி அஞ்சல ஆயா, காப்பி போட்டுக்கிட்டு வந்து குடுத்துச்சி. ரெண்டு பேரும் குடிச்சி முடிச்சோம்.

என்னடா புள்ளையாண்டம் ஒனக்கு சந்தேகம்.. நீ படிக்கிற படிப்புல அதுக்கு பதில் இல்லையா? என்றார் தாத்தா.

இல்ல தாத்தா..என்றேன்.

அப்படி என்ன சந்தேகம்’னு மீண்டும் கேட்டார்.

அதாவது, நாயிங்க அழுதா? யாராவது செத்து போயிடுவாங்கன்னு சொல்றாங்களே.. அது உண்மையா?ன்னு கேட்டேன்.

என்னைய மேலும், கீழும் ஒரு பார்வை பாத்துட்டு, நமட்டு சிரிப்பு சிரித்த தாத்தா.. சரி வா.. நாம அப்படியே.. வயல்வெளிக்கு போய்கிட்டே பேசுவோம்’னு சொன்னார்.

அப்படியே, அவரோடு நானும் வயல்வெளி பக்கம் பேசிக்கிட்டே நடந்தோம்.

தாத்தா ஆரம்பிச்சாரு…

எண்டா ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் பருவ வயசு வந்த ஒடனே கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களே… எதுக்கு? அப்படி செஞ்சி வைக்கும்போது, அந்த வயசுல இருக்குற உடல் வேட்கை எல்லாம் தீரும். சந்ததிங்களும் வளரும். இது ஆறு அறிவு படிச்ச மனுசனுங்களுக்கு சரியா வரும்.

ஆனா, அஞ்சறிவு படிச்ச மிருகங்களுக்கு சரியா வருமா?

அது மட்டும் இல்லடா.. மனுஷன் எந்த நேரத்துல வேணுமுன்னாலும், அவனோட உடல் வேட்கைய தீத்துக்க முடியம். அது, முறை தவறி போயிடக் கூடாதுன்னுதான்.. கல்யாணம், குடும்பம், உறவுன்னு சில வரைமுறைகள வச்சிருக்கோம்.

ஆனா, மிருகங்களோட நிலவரம் அப்படி இல்ல. அதுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட சீசன்லதான் இந்த மாதிரி, இச்சைகள தீத்துக்குற உணர்ச்சி எல்லாம் வரும். அது மூலமாதான், அதோட வம்சா வழியும் பெருகும்.

நாயிங்கள பொறுத்த வரைக்கும், அதுங்களுக்கு கார்த்திக, மார்கழி மாதிரியான மாசங்கள்ல தான், இந்த மாதிரி, உணர்ச்சிங்க வரும்.

அந்த நேரத்துல, அதுங்களுக்கு சோறு, தண்ணி, ராத்திரி, பகல்னு எதுவும் தெரியாது. எப்படியாவது இச்சைய தீத்துக்க போராடும்.

அதுனாலதான், எங்கெங்கேயோ கெடக்குற கெடா நாயிங்க எல்லாம், ஒன்னு ரெண்டு கெடக்குற பொட்ட நாயிங்கள தேடி, எல்லை விட்டு எல்லை வந்து, நம்மல மாதிரி, மனுசங்க கிட்ட அடிவாங்கி சாவுது.

பொட்ட நாயிங்கள வளத்தா, அது குட்டிய போட்டு தள்ளிக்கிட்டே இருக்கும். அதுங்க எல்லாத்தையும் வச்சி சமாளிக்க முடியாதுன்னுதான், பலபேரு பொட்ட நாயிங்கள வளக்குறது இல்ல. ஒரு சில வீடுங்கள்ல தான், அதுங்க இருக்கும்.

மொத்தத்துல, கெடா நாயிங்க அதிகம் இருக்கிறதால, அது அங்கங்க கெடக்குற, ஒன்னு ரெண்டு  பொட்ட நாயிங்கள தேடி, குவிய ஆரம்பிச்சிடுது.

அதுல, வாலிபமா இருக்குற கெடா நாயிங்க, எப்படியாவது போராடி, பொட்ட நாயிங்களோட சேர்ந்து, தன்னோட இச்சைய தீத்துக்கும்.

ஆனா, வயிறு ஒட்டி, ஒடம்பு மெலிஞ்சி, நோஞ்சானா கெடக்குற வயசான கெடா நாயிங்க, வாலிபமான நாயிங்களோட, போராட முடியாம, கடி பட்டும், காயம் பட்டும், தன்னோட இச்சைய தீத்துக்க முடியாத தவிப்புல, ராத்திரி எல்லாம் “ஒ”ன்னு ஒப்பாரி வச்சி அழ ஆரம்பிக்கும்.

இதுதான், ராத்திரியில நாயிங்க அழுறதுக்கு காரணம்.

இப்போ எல்லாம் பருவம் மாறி மழை பெய்யிறது, வெயில் கொளுத்துறது மாதிரி, நாயிங்களுக்கும் சீசன் மாறிப்போயிடுச்சி.

மனசாட்சிப்படி பாத்தா, பருவம் வந்த பிறகும் கன்னி கழியாத, ஆம்பள, பொம்பள எல்லாரும் இப்படித்தான் மனசுக்குள்ள அழுவாங்க. அவங்களோட துன்பம் நமக்கு தெரியாது.

ஆனா, அஞ்சறிவு படிச்ச மிருகங்களுக்கு அதெல்லாம் எப்படி தெரியும்? அதுனாலதான், இப்படி ராத்திரி எல்லாம் “ஒ”ன்னு ஒப்பாரி வைக்குது.

மத்தபடி, நாய் அழுறதுக்கும், மனுசன் சாவுறதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்குற மாதிரி எனக்கு தெரியல.

அப்படி ஏதாவது சம்பந்தம் இருந்ததுன்னா… அத நீதான் கண்டுபுடிச்சி சொல்லணும்’னு சொன்னாரு பெருமாள் தாத்தா.

சாஸ்திர சம்பிரதாயத்துக்கு எல்லாம் விளக்கம் கொடுக்குற பெருமாள் தாத்தா, சயிண்டிபிக்கா ஒரு விளக்கம் கொடுத்த பிறகு.. அத ஏத்துக்கிறத தவிர வேறு வழி இல்லன்னே எனக்கு மனசுல பட்டது.