நேற்று கே.பி.ராமலிங்கம் – இன்று வி.பி.துரைசாமி – நாளை யார்? திமுகவினர் மத்தியில் முளைத்துள்ள கேள்வி!

வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக தனித்தே நின்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். மறு பக்கம், அதிருப்தியாளர்கள் ஒவ்வொருவரும் திமுகவை விட்டு விலகிக்கொண்டே இருக்கின்றனர்.

நேற்று கே.பி.ராமலிங்கம், இன்று வி.பி.துரைசாமி என்று மேற்கு மாவட்டத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியை விட்டு விலகுவது ஒரு பக்கம் இருந்தாலும், இனி வரும் நாட்களில் இன்னும் யாரெல்லாம் திமுகவை விட்டு விலகுவார்கள் என்ற அச்சம், தற்போது  திமுகவை தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது.

அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கும், வலுவான வாக்கு வங்கியும் கொண்டு, தொடர்ச்சியாக திமுகவை ஆட்சிக்கு வராமல் செய்தவர் எம்.ஜி.ஆர். அந்த நெருக்கடியான காலகட்டத்தில் கூட, திமுகவை ஒரு ராணுவ கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தது கலைஞரின் தலைமை.

ஆனால், இதுவரை எதிர்கட்சிகள் யாருக்குமே இல்லாத அசுர பலத்துடன் தமிழக சட்டமன்றத்தில் வீற்றிருக்கிறது திமுக. அமைப்பு ரீதியிலான வலிமை, அசைக்க முடியாத தொண்டர்கள், வலுவான பொருளாதாரம் மற்றும் ஊடக பின்னணி என, திமுக தொடர்ந்து வலிமையாக இருப்பதாகவே தோற்றம் அளிக்கிறது.

ஆனால், கட்சிக்கு வெளியில் இருக்கும் மு.க.அழகிரி, கட்சிக்கு உள்ளேயே அதிகாரம் குறைக்கப்பட்டு வரும் கனிமொழி, ஸ்டாலினுக்கு பிடிக்காத பொறுப்பாளர்கள், ஸ்டாலினை பிடிக்காத பொறுப்பாளர்கள், வியூக வகுப்பாளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையிலான மோதல் போன்றவை, இன்றைய திமுகவின் பலவீனமாக மாறி இருக்கிறது.

கட்சிக்குள் ஜாதி அரசியல் என்பது, இலை மறை காய் மறைவாக இருந்த போதிலும், அண்மைக்காலமாக, தங்கள் சாதி, குறிப்பாக பெரும்பான்மை சாதிகளுக்கு, கட்சியின் செல்வாக்கு மிக்க பதவிகள் புறக்கணிக்கப்படுவதாக உள்ளுக்குள் குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்ட செயலாளர்களுமே, அம்மாவட்டத்தின் பெரும்பான்மை சாதிகளுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, வெளிப்படையாகவே ஒலித்தது. விளைவு, இடைத்தேர்தலில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது திமுக.

திமுகவின் பலம் என்பது எப்போதுமே வட மாவட்டங்கள்தான். தென் மாவட்டங்களில் அது எப்போதுமே அதிமுகவை மிஞ்சுவது கடினம். மேற்கு மாவட்டங்கள் என்பது எப்போதுமே திமுகவுக்கு மிகப்பெரிய பலவீனம்.

அதிமுகவுக்கு எதிரான வலை வீசும்போதும், கூட்டணி ரீதியாக திமுக  வலுவாக இருக்கும்போது மட்டுமே, அக்கட்சியால் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் வெற்றியை சுவைக்க முடியும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், இந்த கணக்குதான், திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்தது.

ஆனால், தற்போதைய நிலை அப்படி இல்லை. பாஜக-அதிமுக எதிர்ப்பு அலை என்பது.. இப்போது பெரிய அளவில் வீசவில்லை.

மறுபக்கம், திமுகவை பலவீனப்படுத்தும் வேலையை, டெல்லி மேலிடம் தொடங்கி விட்டது. அது, மேற்கு மாவட்டத்தில் இருந்தே கணக்கை தொடங்க ஆரம்பித்துள்ளது.

அதன் முதல் கட்டமாக, திமுக விவசாய பிரிவு தலைவரும் முன்னாள் எம்.பி யும், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான கே.பி.ராமலிங்கம், ஸ்டாலினுக்கு எதிராக ஒரு அறிக்கையை விட்டு, விலகலுக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

அடுத்து, திமுகவின் மாநில துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி, பாஜகவில் இன்று ஐக்கியம் ஆகி உள்ளார். திமுகவில், ஜாதிக்கொரு நீதி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அவர்.

அத்துடன், அதிமுக அமைச்சர்களை, திமுகவில் உள்ள அவரவர் சாதிக்காரர்கள் சந்திக்கிறார்களா இல்லையா? என்றும் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் வி.பி.துரைசாமி.

இந்நிலையில், திமுகவின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான குற்றச்சாட்டை முன் வைத்து, இன்னும் பல முக்கிய தலைகள், திமுகவை விட்டு விலகும் அல்லது மற்ற கட்சியில் ஐக்கியம் ஆகும் என்பதே ஊடக வட்டாரங்களில் விவாதிக்கப்படும் செய்தியாக உள்ளது.

அதனால், நேற்று கே.பி.ராமலிங்கம், இன்று வி.பி.துரைசாமி, நாளை யார்? என்ற கேள்வியே, திமுகவினர் மத்தியில், தற்போது புதிதாக முளைத்துள்ளது.