“முயல் கறி” …. சிறுகதை!

-ராஜேந்திரன்

ஐந்து நிமிட வாசிப்பு…

வாசலில், பூவரசு மர நிழலில் காற்று வாங்கியபடி, கயிற்று கட்டிலில் உட்கார்ந்து  வெற்றிலை பாக்கு போட்டுகொண்டு இருந்தார் கோதண்டம்.

அடுப்பங்கரையில், அவரு பொண்டாட்டி அம்புசம், முயல் கறிக்காக அரைக்கும் மசாலா வாசனை, மூக்கை துளைத்துக் கொண்டு இருந்தது.

ரொம்ப நாளைக்கு பிறகு, முயல் கறி சாப்பிடப்போகும் கோதண்டத்துக்கு, அவரோட கூட்டாளிங்களான ரங்கநாதனையும், கலியமூர்த்தியையும் விட்டுட்டு, தனியாக சாப்பிட மனசு வரவில்லை.

அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வரலாம்’னு கெளம்பும்போதே, பள்ளிக்கூடத்துக்கு போயிருந்த அவரு மகன், இளங்கோவன், மதிய சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்தான்.

டேய், தம்பி.. போயி, கலியமூர்த்தியையும், ரங்கநாதனையும், அப்பா அவசரமா கூப்பிட்டாருன்னு சொல்லிட்டு வா என்றார்.

அவனும் புத்தகப்பையை வீட்டில் மாட்டிவிட்டு, அவர்களை கூப்பிட சென்றான்.

அவன் சென்ற கொஞ்ச நேரத்திற்கு எல்லாம், ரங்கநாதனும், கலியமூர்த்தியும் அங்கு வந்தனர்.

என்னா கோதண்டம்? அவசரமா எங்க ரெண்டு போரையும் வர சொல்லி இருக்க, ஏதாவது முக்கியமான விஷயமா? என்று கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டனர்.

முக்கியமான விஷயம் எதுவும் இல்லடா.. இன்னைக்கி அம்புசம் மொசல் கறி சமைக்கிறா… ஒங்கள விட்டுட்டு சாப்புட, எனக்கு மனசு வரல.. அதான் கூப்பிட்டு விட்டேன் என்றார்.

அதற்குள், இளங்கோவன், அம்மா நேரம் ஆச்சி எனக்கு சாப்பாடு போடு, சாப்பிட்டு பள்ளிக்கூடம் போகணும் என்றான்.

அப்போதுதான், மகன் மொசல்கறி சாப்பிட மாட்டான் என்று, அம்புசத்துக்கு ஞாபகம் வந்தது.

சரி, தயிற ஊத்தி சாப்பாடு போடலாம்… ஆனா தொட்டுக்க எதுவும் இல்லையேன்னு நெனச்ச அம்புசம்.. டேய்..தம்பி, அப்படியே, தாத்தா கொல்லைக்கி போயி, அவரு கிட்ட ஊறுகாய் இருக்கும், கேட்டு வாங்கிட்டு வாடான்னு சொன்னா.

அவனும், நாலஞ்சி வீடு தள்ளி இருக்குற தாத்தா வாழத்தோட்டத்துக்கு ஓடினான்.

அதற்குள், கலியமூர்த்தி… ஏன்யா.. ஒங்க அப்பாவ மொசல்கறி சாப்பிட கூப்பிடலையா என்றான்.

இந்த நேரத்துல ஏண்டா, அந்த கெழவன ஞாபகப்படுத்துற… இப்பத்தான் கொஞ்ச நாளா, சண்ட, வம்பு கொறஞ்சி இருக்கு. அதுக்குள்ள, அவர வேற கூப்புட சொல்லுறே.. அவரு கொஞ்ச நேரம் இங்க வந்துட்டு போறதுக்குள்ள, என்னென்ன களேபரம் நடக்குமோ’ன்னு எனக்கு பயமா இருக்கு.

வயசு எண்பதுக்கும் மேல ஆவுது. இன்னும் இளவட்டம் மாதிரியே, எல்லாரு கிட்டேயும் சண்டை வம்பு வளத்துக்கிட்டு, நாக்க துருத்தி, துருத்திக்கிட்டு அடிக்க போவுது.

வயசான கெழவன்கிட்ட எதுக்கு வம்புன்னு, மத்தவங்க போனா போவுதுன்னு ஒதுங்கி போனா, அதையே சாதகமா எடுத்துக்கிட்டு, திரும்ப, திரும்ப சண்டைக்கி போவுது.

இப்போ, காது வேற சரியா கேக்கிறது இல்லையா.. அதனால, நாம எது சொன்னாலும், நாம அவர வையிரோம்னு நெனச்சிக்கிட்டு, நம்மள ரொம்ப அசிங்கமா திட்டுறாரு.. அவரு பண்ணுற அமக்களம் தாங்க முடியலடா.

நான் எதுவும் சொல்றதுக்கு இல்ல. இல்லேன்னா… இந்த வயசுல, வாழக்கொல்லையில, குச்சி போட்டுக்கிட்டு, தனிக்குடித்தனம் நடத்துமா அந்த கெழவன்?னு, மனம் நொந்து பேசுன கோதண்டத்த பாத்து, ரங்கநாதனுக்கும், கலியமூர்த்திக்கும், கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்தது.

இருந்தாலும், அந்த காலத்துல இருந்தே, ஆடு, கோழி, மீனு, உடும்பு, ஓணான்னு.. ஒன்னக்கூட விடாம, எல்லாத்தையும் தின்னவரு. இப்போ, அவர விட்டுட்டு, நாம மட்டும் மொசல்கறிய சாப்பிட்டா நல்லாவா இருக்கும்?’னு ரெண்டு பேரும் சொன்னாங்க.

சரி, மொதல்ல நம்ம வேலைய முடிப்போம். அதுக்கு பிறகு, அவருக்கு மொசல்கறிய கொண்டு போயி, குடுத்துட்டு வருவோம்’னு கோதண்டம் சொன்னது, ரெண்டு பேருக்குமே சரியாக பட்டது.

அந்த நேரம் பாத்து, தாத்தாகிட்ட ஊறுகாய் வாங்க போன, கோதண்டம் மகன் இளங்கோ, தலை தெறிக்க ஓடி வந்தான்…

அவன் ஓடி வந்த வேகத்தை பார்த்து பயந்த, மூணு பேரும் என்னடா.. ஆச்சுன்னு… பதற்றத்தோட கேட்டாங்க.

தாத்தாகிட்ட போயி, அம்மா ஊறுகா வாங்கிட்டு வர சொன்னாங்கன்னு கேட்டேன்.

அவருக்கு, சரியா காதுல விழல… திரும்ப திரும்ப ரெண்டு மூணு தடவ கேட்டாரு.. நானும் ஊறுகா, ஊருகான்னு சொன்னேன்.

ஒடனே, வேலியில இருந்த ஒரு காட்டாமணி கழிய ஒடச்சிக்கிட்டு… ஏண்டா ஒனக்கு என்ன வயசு? எனக்கு என்ன வயசு? என்ன போயி, கம்னாட்டின்னு வையிறியே… ஒங்க அப்பன் ஒன்ன இப்படித்தான் வளத்து வச்சிருக்கானா?ன்னு, அடிக்கிறதுக்கு விரட்டிட்டு வந்தாரு. அதனால, நான் ஓடி வந்துட்டேன்னு பயத்தோட சொன்னான்.

பாத்தீங்களாடா… இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க என்னென்ன நடக்க போவுதோ?ன்னு… பயத்துல தவிச்சாரு கோதண்டம்.

அவரு நெனச்ச மாதிரியே.. தாத்தாவும் கொஞ்ச நேரத்துல, கையில காட்டாமணி கழியோட, அங்க வந்து நின்னு, மூச்சு வாங்க  கோதண்டத்தை கொஞ்ச நேரம் மொறைச்சு பாத்தாரு.

அடுத்த கணமே, என்னாடா கோதண்டம் புள்ள வளத்து வச்சிருக்க நீ? பெரியவன், சின்னவன் வித்யாசம் தெரியாம, என்ன போயி, கம்னாட்டி பயலேன்னு வையிறான் ஒன்னோட புள்ள. இந்த வயசுலேயே இப்படி இருந்தா? வயசுல எப்படி இருப்பான்னு கேட்டு.. வழக்கம் போல, தன்னோட அருவருப்பான வசவுகள பஞ்சமில்லாம எடுத்து விட்டாரு தாத்தா.

கோதண்டத்துக்கு என்ன செய்றது’ன்னே தெரியல?

பாத்தீங்களாடா.. நான் சொல்லி வாய் மூடுறதுக்குள்ள, எவ்வளவு பெரிய பிரச்சினைய இழுத்துக்கிட்டு வந்து நிக்கிறாரு இந்த கெழவன். இதுக்கு, காது கேக்காம போனதுல இருந்தே.. நான் இதுகிட்ட மாட்டிக்கிட்டு, சிரிப்பா சிரிச்சி, சித்திரவதைய அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன். இது என்னைக்கு செத்து தொலையுதோ அன்னைக்குதான் எனக்கு நிம்மதின்னு சொன்னாரு கோதண்டம்.

கோதண்டம் சொன்ன வார்த்தையில எதெல்லாம், அந்த கெழவன் காதுல விழுந்ததோ, விழலையோ தெரியல… ஆனா “செத்து தொலையுற அன்னைக்குதான் நிம்மதின்னு” சொன்னது மட்டும் தாத்தா காதுல தெளிவா கேட்டிடுச்சி.

அவ்வளவுதான்… என்ன சொன்ன?, “நான் செத்து தொலையனுமா?” இந்த சொல்ல… காதுல வாங்குறதுக்குதான், ஒன்ன பெத்து, வளத்து, இருவது மா நெலம் எல்லாம் வாங்கி வச்சனா?. இதுதான்.. பெத்த புள்ள.. அப்பனுக்கு காட்டுற மரியாதையா?… இருக்கட்டும்டா.. “நான் செத்துதான போகணும்”… செத்துபோறண்டா, நீ ஒன்னோட பொண்டாட்டி புள்ளையோட  நிம்மதியா இருடா’ன்னு சொல்லிக்கிட்டே.. அங்க கிடந்த வரிக்கயித்த கையில எடுத்துக்கிட்டு… விறு விறுன்னு, தன்னோட வாழக்கொல்லை பக்கம் ஓட்டமும், நடையுமா புறப்பட்டாரு தாத்தா.

அப்பாடா.. நல்ல வேலை.. இந்த தகராறு இதோட முடிஞ்சிதுன்னு.. கோதண்டமும், அவரு கூட்டாளியும் கொஞ்சம் அமைதி ஆனாங்க.

இது மாதிரி பல சண்டைகள பாத்து பழகுனதால, மாமானாரும், புருசனும் போட்டுக்குற சண்டைய, அம்புசம் பெருசா காதுல போட்டுக்கிறது இல்ல..

அதனால, அது முடிஞ்சி, கொஞ்ச நேரத்துல, மொசல் கறி தயார் ஆயிடுச்சி. எல்லாரும் கை கழுவிட்டு சாப்புட வாங்கன்னு கூப்புட்டா அம்புசம்.

அதுவரைக்கும் அமைதியா இருந்த கோதண்டத்துக்கும், அவரு கூட்டாளிங்களுக்கும், அப்பத்தான் திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சி.

இந்த கெழவன் கோவத்தோட கயிற எடுத்துக்கிட்டு, விறு விறுன்னு போச்சே, ஒரு வேள, தூக்கு மாட்டிக்கிட்டா என்னாவுறது?ன்னு ஒரு பயம்.

அப்படியே, மூணு பேரும் விழுந்தடிச்சி, வாழக்கொல்லைக்கி ஓடுனாங்க.

ஓடிப்போயி, தாத்தாவோட ஓலைக்குடிசைய பார்த்தா.. உள்பக்கமா, தாழ்ப்பாள் போட்டிருந்துச்சி.

தட்டி இடுக்கால எட்டி பார்த்தா.. உள்ளார ஒரே இருட்டா தெரிஞ்சதே ஒழிய, வேற எதுவும் தெரியல… எந்த சத்தமும் இல்லாம, அந்த இடமே அமைதியா இருந்துச்சி.

அய்யய்யோ.. எங்க அப்பா ஏதோ பண்ணிக்கிட்டாருடா’ன்னு மகன் கோதண்டம் அங்கேயே அழ ஆரம்பிச்சிட்டாரு.

யோவ்.. இந்த நேரத்துல அழாதையா… என்னன்னு பார்ப்போம்’னு, குடிசையோட பக்க வாட்டுல இருந்த கீத்து தட்டிய, கையால வெலக்கி விட்டு, ஒடம்ப வளச்சி, தலைய மட்டும் உள்ளார விட்டு பார்த்தான் கலியமூர்த்தி,.

அவ்வளவுதான், அடுப்புக்கும் பக்கத்துல அருவா தீட்டுற கட்டையோட, வெறித்தனமா உட்கார்ந்து இருந்த தாத்தா, என்னடா, நான் செத்து போவேன்னு நெனச்சீங்களா’ன்னு சொல்லிக்கிட்டே.. அந்த கட்டையால, கலியமூர்த்தி தலையில, ஆவேசமா ஓங்கி  ஒரு போடு போட்டாரு.

அவ்வளவுதான், தாத்தா போட்ட போடுல, மண்டை ஒடஞ்சி ரத்தம் வந்துடுச்சி. வலி தாங்க முடியாம, அய்யய்யோ’ன்னு கத்துனான் கலியமூர்த்தி…

அடே.. கலியமூர்த்தி பயப்புடாதடா… தைரியமா பாருடா’ன்னு மீண்டும், இடுப்ப புடிச்சி, கோதண்டமும், ரங்கநாதனும், அவன் தலையை வெளிய எடுக்க முடியாத அளவுக்கு வலுக்கட்டாயமாக தள்ளுனாங்க.

அடி வாங்குன பிறகும், இந்தப்பய இன்னும் தலைய நீட்டுறானே’ன்னு, நெனச்ச தாத்தா, என்னடா? செலவுக்கு சில்லற குடுத்தது பத்தலையா? இந்தா.. இன்னும் வாங்கிக்கோ;ன்னு, கட்டையால் இன்னொரு போடு போட்டாரு.

மீண்டும் வலி தாங்க முடியாம, ஐயையோன்னு கத்துன கலியமூர்த்தி, திமிறிக்கிட்டு ஒடம்ப வெளியில இழுத்து, அப்படியே பின்பக்கமா மல்லாக்க போயி விழுந்த கலியமூர்த்திக்கு, அப்படியே தல கிறுகிறுன்னு சுத்த ஆரம்பிச்சிடுச்சி.

அதப்பார்த்த கோதண்டம், அடே.. ரங்கநாதா.. எங்க அப்பா தூக்குல தொங்குறாரு போல இருக்குடா, அதான், அந்த பய பயத்துல மயக்கம் போட்டு வுழுந்துட்டான்.. நீ தைரியமான ஆளாச்சே… நீ கொஞ்சம் தலைய விட்டு பாருடான்னு கெஞ்சினாரு கோதண்டம்.

அதனால், ரங்கநாதனும், கலியமூர்த்திய போலவே, தட்டியோட ஓட்ட வழியா, தலைய நீட்டி பார்த்தான்.

மறுபடியும், கையில வச்சிருந்த கட்டையால, ரங்கநாதன் தலையிலையும் ஓங்கி ஒரு போடு போட்டாரு தாத்தா.

ரங்கநாதனும், வலி தாங்க முடியாம, ஐயோ அம்மா’ன்னு கத்துனான்.

என்னடா.. நீயும் கலியமூர்த்திய மாதிரி பயப்புடுறியே? பயப்புடாம நல்லா பார்த்து சொல்லுடா’ன்னு, மீண்டும், ரங்கநாதன் இடுப்ப புடிச்சி, தலைய வெளியில எடுக்க முடியாம அமுக்கி தள்ளுனாரு கோதண்டம்.

திரும்பவும் ரங்கநாதன் தல உள்ளார வந்தத பார்த்த தாத்தா, என்னடா ஒனக்கும், ஒரு தடவ சில்ற குடுத்தா போதாதா? இந்தா இன்னும் கொஞ்சம் வாங்கிக்க’ன்னு மறுபடியும் கட்டையால, ஆவேசமா ஓங்கி இன்னொரு போடு போட்டாரு தாத்தா…

மண்டையில் ரத்தம் வழிஞ்ச ரங்கநாதனும், ஒடம்ப திமிறி வெளியே இழுத்து, வந்த ஆத்தரத்துல… அப்படியே, கோதண்டத்தோட கன்னத்துல ஓங்கி ஒரு அரை விட்டான்.

அரை விட்ட அந்த சத்தத்துல, மயக்கம் தெளிஞ்சி எழுந்த கலியமூர்த்தியும், கோதண்டத்தோடா இன்னொரு கன்னத்துல விட்டான் ஒரு அரை.

எதுவுமே புரியாத கோதண்டம்… ஏண்டா.. எங்க அப்பாவ காப்பாத்த சொன்னா.. ரெண்டு பேரும் மாறி, மாறி என்னையே இப்படி அடிக்கிறீங்களே’ன்னு பரிதாபமா கேட்டாரு கோதண்டம்.

டேய்.. கலியமூர்த்தி கெளம்புடா… நமக்கு மொசலு கறியும் வேணாம்.. ஒரு மசுரு கறியும் வேணாம். நாம் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா.. அப்பனும், புள்ளையும் சேர்ந்து நம்மல கொன்னுடுவானுங்க’ன்னு சொல்லிக்கிட்டே, ரெண்டு பேரும் கெளம்புனாங்க.

அந்த நேரம் பார்த்து, குடிசையோட உள்பக்கமா பூட்டி இருந்த, பூட்ட ஒடைக்கிற மாதிரி ஒரு சத்தம் கேட்டுச்சி..

அடுத்த நொடியே.. வாழத்தாறு வெட்டுற பளபளப்பான நீட்டு அருவாளோட, காத்தவராயன் கணக்கா.. கதவை ஒடைச்சிக்கிட்டு இவங்கள நோக்கி பாய்ஞ்சாரு தாத்தா…

நானாடா செத்துப்போவன்னு நெனச்சீங்க.. ஒங்கள கொல்லாம, நான் சாவ மாட்டேண்டா’ன்னு ஆவேசம் பொங்க.. அவரு கத்துன கத்துல, அந்த மூணு பேரும், தலை தெறிக்க தெசைக்கி ஒரு பக்கமா, பொகையா பறந்துட்டாங்க.