“குளத்து முதலை” …சிறுகதை!

-ராஜேந்திரன்

ஏழு நிமிட வாசிப்பு…

மின்சாரம் எல்லாம் ஊருக்குள்ள எட்டிப்பார்க்காத காலம்.

ஆத்து பாசனம், ஏரிப்பாசனம், கொளத்து பாசனம்னு முப்போகமும் வெளைஞ்ச ஊரு.

வருஷா வருஷம், குறுவை சாகுபடி தீபாவளிக்கும், தாளடி பொங்கலுக்கும், சம்பா சாகுபடி வீட்டுக்கும் சரியா இருக்கும்.

யாரு கண்ணு பட்டுதோ தெரியல, அந்த ஒரு வருஷம், எல்லாமே தலைகீழா மாறிப்போயிடுச்சு.

குறுவை சாகுபடிக்காக நடவு நட்ட பயிரெல்லாம், கதிர் விட்டு, பால்  கட்ட ஆரம்பிச்ச நேரம். இந்த வருஷம் வெளச்சல் அமோகமா இருக்கும்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க.

மன்னுருக மழை  பேஞ்சி.. பொன்னுருக வெயில் காயிற புரட்டாசி மாசத்து மழை, பெருசா பாதிக்காதுன்னுதான் ஆரம்பத்துல எல்லாரும் நெனச்சாங்க.

ஆனா, அந்த வருஷம் புரட்டாசி மாசத்துல புடிச்ச மழை.. ஐப்பசி, கார்த்திக’னு… தொடர்ந்து மூணு மாசமும் நிக்கவே இல்ல.

காவேரி, வாய்க்கால், குளம், குட்டை, ஏரி எல்லாமே, மழை தண்ணியில  நெரம்பி வழிய ஆரம்பிச்சிடுச்சி.

அடுத்த சில நாட்கள்ல, வயல்வெளி எல்லாம் தண்ணி புகுந்து பயிரெல்லாம் முழுகி போச்சு.

கொஞ்சம் நஞ்சம் தலை காட்டுன கதிருங்கள, வயல்ல புகுந்த மீனுங்க கொத்தி தின்னுட்டு போயிடுச்சி.

அதோட மழை நின்னுடும்னு பாத்தா, விடுற மாதிரி இல்ல.

தெருவெல்லாம் தண்ணி புக ஆரம்பிச்சி. கொஞ்சம் பள்ளத்துல  இருக்குற வீடுங்க எல்லாம் தண்ணியில் மூழ்க ஆரம்பிச்சிட்டுது.

அங்க இருந்தவங்க எல்லாம்.. கொஞ்சம் ஒயரமா இருக்குற கல்லு வீடுங்கள்ல வந்து தங்கிகிட்டாங்க.

அப்படியே, ரெண்டு மூணு நாளு ஓடுச்சி.

அதுக்கு பிறகு கொஞ்சம், கொஞ்சமா மழை நிக்க ஆரம்பிச்சி, தேங்கி கெடந்த தண்ணி எல்லாம் வடிய ஆரம்பிச்சுது.

அதனால், ஊரு மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து, இடிஞ்சி போன வீடுகள்ல மராமத்து வேலைகள பார்க்க ஆரமிச்சாங்க.

வெளைஞ்ச நெல்லு எல்லாம் வெள்ளத்துல போச்சு. குந்தி இருந்த குடிசை வீடும் இடிஞ்சி போச்சுன்னு, பல பேரு கன்னத்துல கைய வைச்சி, கவலை பட்டுக்கிட்டு இருந்தாங்க.

ஆனாலும், கவலை படுறதுனால என்ன ஆகப்போவுது? நடக்க வேண்டியத பார்ப்போம்’னு, எல்லாரும் மறுபடியும், அடுத்த போக சாவடிக்கி தயாராகிக்கிட்டு இருந்தாங்க.

அந்த நேரம் பார்த்து, தாமர கொளத்த சுத்தி இருக்குற வீடுங்கள்ல இருந்து, தெனமும் ராத்திரியில ஆடு, மாடு, கோழின்னு தொடர்ந்து  காணாம போயிக்கிட்டே இருந்துச்சி.

இந்த நேரத்துல, இவ்வளவு ஜனக்கட்டு இருக்குற ஊருல, ஒருத்தவன் வந்து, அவ்வளவு சாமானியமா திருடிட்டு போயிட முடியுமா?ன்னும் ஒரு சந்தேகம்.

யாரும், வெளியூருலேருந்து வந்து, நம்ம ஊருல திருடுறதுக்கு வாய்ப்பே இல்ல.

நம்ம ஊருலேயும்.. பசியோட இருந்தா, அதிக பட்சம் தேங்கா, மாங்கா திருடுவானுகள தவிர, இது மாதிரி, ஆடு, மாடுங்கள யாரும் திருட மாட்டாங்களே’ன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியா பேசிக்க ஆரம்பிச்சாங்க.

அதுக்கு அப்பறம், ஆடு, மாடு காணாம போன எடத்துல எல்லாம், ரத்தக்கறை இருந்தது தெரிஞ்சிது.

அதனால, நிச்சயமா… இது ரத்தக் காட்டேரியோட வேலையாத்தான் இருக்கும்’னு எல்லாருக்கும் ஒரு பயம் தொத்திக்கிச்சி.

சிங்கம், புலி’ன்னா கூட, எல்லாருமா சேர்ந்து அடிச்சி கொன்னுடலாம். ரத்தக்காட்டேரின்னா பயம் வரத்தானே செய்யும்.

அந்த பயத்துல, யாரும், சாயந்தரம் ஆறு மணிக்கும் மேல, வீட்ட விட்டே வெளியில வர மாட்டாங்க.

அதோட, இருக்குற ஆடு, மாடுங்களையாவது சேதாரம் இல்லாம காப்பாத்தனும்’ங்குற கவலை வேற வந்திடுச்சி.

அதனால, ராத்திரி ஆச்சுன்னா, ஊருக்கு நடுவுல இருக்குற பட்டியில கொண்டு போயி, எல்லா ஆடு மாடுங்களையும் அடைச்சிடுவாங்க.

பத்து, பதினஞ்சி இளந்தாரிங்க, ராந்தரு, அருவா, தடிக்கழி, வேல் கம்போட, பட்டியிலேயே காவலுக்கு படுத்துக்கிட்டாங்க.

இப்படியே, ஒரு ரெண்டு நாளு போச்சி.

அடுத்தநாளு, நடு சாமம் ரெண்டு மணி.. இருக்கும்.

கொளத்தங்கரையில இருக்கிற, ஒரு வீட்டுக்கு பின்னால இருந்து, கவுத்து போட்டுருந்த கோழி ஒன்னு, கொரல்வளைய அறுக்கும் போது அலறுமே.. மாதிரி, அலறுசசி..

அந்த சத்தத்துல, என்னமோ, ஏதோன்னு நெனைச்சி, அக்கம் பக்கத்து வீட்டுல இருந்தவங்க எல்லாரும், ராந்தரு, அருவா, தடிக்கழியோட அந்த எடத்துக்கு ஓடி வந்தாங்க…

ஓடி வந்தவங்க சத்தத்தையும், ராந்தரு வெளிச்சத்தையும் பாத்தா அது, பயந்து போயி, கோழிய குத்துயிரும், கொல உயிருமா, அப்படியே போட்டுட்டு கொளத்துக்கு ஓடிப்போயிடுச்சி.

அப்பறம்தான் தெரிஞ்சுது, இத்தன நாளா, ஆடு, மாடுங்கள கொன்னு திண்ணது, ரத்தக்காட்டேரி இல்ல.. அது மொதலைன்னு.

அப்பாடா.. பேய், பிசாசு, ரத்தக்காட்டேரி எல்லாம் இல்லேன்னு, அங்க இருந்தவங்களுக்கு நிம்மதி வந்துச்சி.

ஆனாலும், மொதலைகிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது?ன்னு ஒரு புது பயம், எல்லாரையும் தொத்திக்கிச்சி.

ஊரு வெள்ளத்துல மிதந்த நேரம், காவேரி ஆத்துல இருந்து தப்பிச்ச மொதலை ஒன்னு, வழி தெரியாம, எப்படியோ கொளத்துல வந்து புகுந்திருக்குன்னு அவங்க நெனச்சாங்க.

மறுநாள், ஊரே ஒன்னு கூடி, கொளத்துல இருக்குற மொதலைய எப்படி புடிக்கிறதுன்னு? பேச ஆரம்பிச்சாங்க.

அப்போ, ஒவ்வொருத்தரும், அவங்கவங்க மனசுல உதிச்ச ஒவ்வொரு ஆலோசனைய சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

அதுல ஒருத்தரு, குளத்துல இருக்குற தண்ணிய எல்லாம் ஏத்தம் போட்டு இறைச்சிட்டா, மொதலை வெளியே வந்துடும். அப்போ, அதை கொன்னுடலாம்’னு சொன்னாரு.

எண்டா.. இப்படி கடல் மாதிரி விரிஞ்சி கெடக்குற கொளத்துல இருக்குற தண்ணிய, எத்தன மாசத்துக்கு ஏத்தம் போட்டு இறைக்க முடியும்?. ஏதாவது உருப்புடியா யோசனை இருந்தா சொல்லு’ன்னாரு   நாட்டாமை.

அதுவரைக்கும், எல்லாரும் பேசுறத பொறுமையாக கேட்டுக்கிட்டு  இருந்த நாச்சிமுத்து, அப்போதான் பேச ஆரம்பிச்சாரு.

எடுத்த எடுப்புலேயே, நான் ஒரு யோசனை சொல்லட்டுமா’ன்னு கேட்டாரு.

ஓ.. தாராளமா சொல்லு… அதுக்குதானே, இங்க எல்லாரும் கூடி இருக்கோம்’னு சொன்னாரு நாட்டாமை.

குளத்துல இருக்கிற முதலைய புடிக்கிறது என்னோட வேலை. அதை என்னுகிட்ட விட்டுடுங்கன்னு ஒரே வார்த்தயில சொன்னாரு நாச்சிமுத்து.

என்ன நாச்சிமுத்து, இது என்ன? நீயும் ஒன்னோட சிஷ்ய புள்ளைங்களும், ரெட்ட கொம்பு, மான் கொம்பு, சுருளுன்னு  சுத்திக்கிட்டு  குஸ்தி போடுற வேலை’னு நெனச்சியா?

இல்ல, கொளத்துல இருக்குற வெரால் மீன குறி பாத்து சுலுக்கியால குத்தி இழுப்பியே.. அது மாதிரி நெனச்சியா’ன்னு கேட்டாரு நாட்டாமை.

நாட்டாமைய தொடர்ந்து, பேசுன காசிநாதன்…

நாச்சிமுத்து எப்பவும் இந்த மாதிரி, ஏதாவது மொரட்டு தனமா பேசிக்கிட்டும், செஞ்சிக்கிட்டும்தான் இருப்பாரு. ஆனா, மத்த வேல மாதிரி.. இந்த வேலைய, நாம் அவருகிட்ட குடுக்க கூடாது.

ஏன்னா, தரையில நின்னு பத்து பேர கூட, அவரு, ஒண்டியா சமாளிப்பாரு.. ஆனா, இது மொதலையோட மல்லுக்கட்டுற சமாச்சாரம். தண்ணியில இருக்கிற மொதலைக்கி, யானைய விட பலம் அதிகம்.

அதனால, தனியா மொதலைய புடிச்சிடுவேன்னு, அவரே  சொன்னாலும், நாம அதை ஒத்துக்க கூடாது. அவரு உசுருக்கு ஏதாவது ஆபத்து வந்துட கூடாதுன்னு அக்கறையோட சொன்னாரு காசிநாதன்.

இதெல்லாம் கேட்டு நாச்சிமுத்துக்கு கோவம் கோவமா வந்துச்சி.

இங்க பாருங்க.. மொதலைக்கி தண்ணியில பலம், யானைக்கி தரையில பலம்’ங்குற கதை எல்லாம் அப்படியே இருக்கட்டும்.

கொளத்துல இருக்குற மொதலைய புடிக்கணும்… அதுதான நம்மளோட நோக்கம். அதை யாரு புடிச்சா என்ன? என்னால புடிக்க முடியும்’னு நான் நம்புறேன்.. நீங்க எதுக்கு பயப்புடுறீங்க?.

எனக்கு ரெண்டு நாளு அவகாசம் குடுங்க. நான் புடிச்சி காட்டுறேன்.

அந்த ரெண்டு நாளுல என்னால புடிக்க முடியலேன்னா.. அதுக்கு அப்பறம் நீங்க வேற முடிவு எடுத்துக்கோங்க.. என்று திட்டவட்டமா சொன்னாரு நாச்சிமுத்து.

இல்ல நாச்சிமுத்து, நீ எப்பவுமே, அடுத்தது என்னா நடக்கும்’னு பாக்காம கோதாவுல எறங்கிடுவ. இது கத்தியோ, கம்போ சுத்துற வெளையாட்டு இல்ல. தண்ணியில இருக்குற மொதலைய புடிக்கிற சமாச்சாரம்.

ஒனக்கு ஏதாவது ஆச்சுன்னா… ஒன்னோட பொண்டாட்டி புள்ளைங்க நிலவரம் என்ன ஆகும்? இதை எல்லாம் யோசிச்சிதான் சொல்றேன்.

வேணுமுன்னா… நீயே முன்னாடி நின்னு மொதலைய பிடி… நாங்களும் ஒன்னோட சேர்ந்து, பின்னாடி வாரோம்’னு அங்க இருந்த எல்லாருமே சொன்னாங்க.

நீங்க சொல்றது எனக்கு புரியுது. இருந்தாலும், எங்க அப்பன், பாட்டன், இன்னும் தலைமுறை தலைமுறையா.. எங்க குடும்பமே, இந்த ஊருல கம்பு, சுருளு, மடுவு, குஸ்தின்னு எல்லாருக்கும் கத்துக் குடுக்கிற  வாத்தியாரு குடும்பம்.

அதனால, ஊருக்கு ஒரு பாதிப்புன்னா, மொதல்ல, எறங்குறது எங்க குடும்பமாதான் இருக்கணும்’னு நான் நெனைக்கிறதுல என்ன தப்பு? இந்த ஊரு சனங்கள காப்பாத்துறதுக்குன்னு உசுரு போவுனும்னு இருந்தா, அதுல மொதல் உசுரு என்னோட உசுராத்தான் இருக்கணும்னு, உறுதியா சொன்னாரு நாச்சிமுத்து.

சரி.. இனிமே என்ன பேசுனாலும்.. பிரயோசனம் இல்ல.. அதனால, நாச்சிமுத்து சொன்ன மாதிரியே… அவருக்கு ரெண்டு நாளு அவகாசம் குடுப்போம். அதுக்கு பிறகு, மத்தத பேசிக்கலாம்னு சொன்னாரு நாட்டாமை.

அவரு சொன்னத, அங்க இருந்தவங்க எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க. இருந்தாலும்… அவருக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு, எல்லாரும் மனசுக்குள்ள… உப்புசந்தை மாரியம்மன வேண்டிக்கிட்டாங்க.

இதெல்லாம், நடந்துகிட்டு இருக்கிறப்பவே… நாச்சிமுத்துகிட்ட குஸ்தி கத்துக்கிற, சிஷ்யனுங்க எல்லாரும்… வாத்தியாரே.. மொதலை புடிக்கிற விஷயத்துல, நாங்க, உங்கள தனியா விட்டுட்டு வேடிக்க பாக்க மாட்டோம்னு சொன்னாங்க.

சிஷ்யனுங்களா… நான் மொதல்ல என்னோட வேலைய ஆரம்பிக்கிறேன்… என்னால முடியலேன்னா.. ஒங்களையும் துணைக்கு கூப்பிடுறேன்… அதுவரைக்கும் எல்லாரும், நான் சொல்றத கேளுங்கன்னு வாய மூட வச்சிட்டாரு.

பஞ்சாயத்து கலைஞ்சது… எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு போயிட்டாங்க.

நாச்சிமுத்தும் வீட்டுக்கு வந்து, பொண்டாட்டி வெள்ளையம்மா கிட்ட, பஞ்சாயத்துல நடந்த விஷயத்த ஒன்னு விடாம தெளிவா  சொன்னாரு.

அதைக்கேட்ட வெள்ளையம்மா சொன்னா…

நீ வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே.. எனக்கு எல்லா சங்கதியும் வந்து சேர்ந்துடுச்சி. அதனால, வரி கயிறு, சுலுக்கி எல்லாத்தையும் பரணையில இருந்து எடுத்து வச்சிருக்கேன். அதோட, கொஞ்சம் மொளகா தூள ரெண்டு பொட்டலமா கட்டியும் வச்சிருக்கேன்.

மொதலையோட கண்ண மொதல்ல குத்திட்டோம்’னா… அதால ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லுவாங்க…

ஒரு வேள, நீ சுலுக்கியால குத்தும்போது, குறி தப்பி போச்சுன்னா.. இந்த மொளகா பொடிய இடித்து, அதோட கண்ணுல தூவி விட்டுடு… அது தடுமாறும்.

அப்போ, அது கழுத்துல சுருக்க போட்டு, நல்லா ஒரு இருக்கு, இருக்கி’ட்டேன்னா… அதால ஓட முடியாதுன்னு வெள்ளையம்மா, ஒரு யோசனையும் சொன்னா.

பொண்டாட்டி சொன்ன யோசனைய கேட்டு, நாச்சிமுத்துக்கு இன்னும் உற்சாகம் பொங்க ஆரம்பிச்சுது.

அப்படியே மத்தியான சாப்பாட்ட முடிச்சிட்டு, சாயந்தரம் ஆறு மணி வரைக்கும், கயித்து கட்டில்ல படுத்துக்கிட்டு, மொதலைய எப்படி எல்லாம் புடிக்கிலாம்?னு யோசிச்சிக்கிட்டே இருந்தாரு.

ஆறு மணிக்கும் மேல, இருட்ட ஆரம்பிச்சுது.

நாச்சிமுத்து, வரிக்கயித்த சுருக்கு போட்டு, அதை எடுத்து கழுத்த சுத்தி போட்டுக்கிட்டாரு. பொண்டாட்டி மடிச்சி குடுத்த ரெண்டு பொட்டலம் மொளகா தூளையும், இடுப்புள சொருவிக்கிட்டு, ஒரு கையில சுலுக்கியும், மறு கையில ராந்தரையும் எடுத்துக்கிட்டு, கொளத்துக்கு புறப்பட்டாரு.

கொஞ்ச நேரம் அப்படியே நின்னு, கொளத்தோட நாலா பக்கமும் கண்ணாலையே நோட்டம் விட்டாரு.

கொளத்துல எந்த அசைவையும் அவரால பார்க்க முடியல, அல்லிக் கொடியும், ஆகாய தாமரையும் நெரம்பி இருந்த அந்த கொளத்துல, மொதலை இருக்குற தடயமே தெரியல..

அதனால, விடிய, விடிய நவக்கிரகத்த சுத்துற மாதிரி கொளத்தையே சுத்தி, சுத்தி வந்தாரு.. பொழுது விடிஞ்சதே ஒழிய, மொதலைய கண்ணால கூட பார்க்க முடியல.

விடிஞ்சதும், சண்டையில தோத்துப்போன வீரன போல, தொங்கிப்போன மொகத்தோட வீட்டுக்கு வந்தாரு.

ராத்திரி பூரா கொளத்த சுத்தி, சுத்தி வந்ததுல, ஒடம்பெல்லாம் ஒரே அசதி.. விடிய விடிய கண்ணு முழிச்சதுல, கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். இருந்தாலும் அவருக்கு தூக்கம் வரல.

இன்னைக்கி ஒரு நாளுதான் இருக்கு. அதுக்குள்ள எப்படியாவது அந்த மோதலைய புடிச்சாதான் அவருக்கு தூக்கம் வரும்.

அதனால், வெறித்தனமா யோசிக்க ஆரம்பிச்சாரு. அப்பத்தான் அவருக்கு ஒரு யோசன உதிச்சது. அந்த யோசன, அவருக்கு ஒரு புது தெம்பையும் குடுத்துது.

மறு நாளும், சரியா ஆறு மணிக்கெல்லாம், மொதல் நாள் மாதிரியே.. சுருக்கு கயிறு, மொளகா தூள் பொட்டலம், சுலுக்கி, ராந்தருன்னு எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டாரு.

ஆனா, கொளத்துக்கு போறதுக்கும் முன்னாடி,  நேரா கொட்டாய்க்கு  போயி, அங்க கட்டி இருந்த ஆட்டுக்கடாவ ஓட்டிக்கிட்டு, அங்க  சொருவி இருந்த பிச்சுவா கத்திய எடுத்து, இடுப்புல சொருவிக்கிட்டு, கொளத்த நோக்கி புறப்பட்டாரு நாச்சிமுத்து.

கொளத்த ஒட்டி இருந்த, ஏத்த மரத்துக்கு, அடியில கொண்டு போயி, அந்த ஆட்டுக்கடாவ கட்டுனாரு.

அப்படியே.. பக்கத்துல இருந்த இலுப்ப மரத்துல, ஒரு கெளைய வெட்டி, ஆடு திங்கிறதுக்கு வாட்டமா, அந்த ஏத்த மரத்துலேயே கட்டி தொங்க விட்டாரு.

லேசா நிலவு வெளிச்சம் தெரிஞ்சதால, ராந்தரு வெளக்கையும் அணைச்சிட்டு… அப்படியே… அந்த மரத்துக்கு அடியிலேயே, மறைஞ்சி இருந்து தாக்குற வீரன போல, பதுங்கி இருந்தாரு.

அவரு கட்டி தொங்க விட்ட இலுப்பை இலைய, ஆட்டுக்கடா  தின்னுகிட்டே இருந்தது.

ராத்திரி ஒம்போது  மணி இருக்கும். அப்படியே போயி, கட்டி தொங்க விட்டிருந்த இலுப்பை கெளைய, அவுத்து, தூரத்துல வீசி எறிஞ்சாரு.

மறுபடியும்,  பழைய மாதிரியே, மரத்துக்கு பின்னால ஒளிஞ்சிக்கிட்டு ஆட்டுகடாவையே நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தாரு.

நல்லா வயிறு நெரம்பி போயிருந்த ஆட்டுக்கடா, கொஞ்ச நேரம்  படுத்துக்கிட்டு, அப்படியே அசை போட்டுக்கிட்டு இருந்தது.

இவரும் வச்சக்கண்ணு மாறாம அதையே பார்த்துக்கிட்டு இருந்தாரு.

கொஞ்ச நேரம், அசை போட்டுக்கிட்டு அமைதியா இருந்த ஆட்டுக்கடா, நேரம் ஆக, ஆக அங்க யாரும் இல்லேன்னு நெனச்சி கத்த ஆரம்பிச்சுது…

ஆனாலும், நாச்சிமுத்து, தன்னோட இருப்ப காட்டிக்காம,  ரொம்ப அமைதியா, அந்த இலுப்ப மரத்துக்கு பின்னாடியே பதுங்கி இருந்தாரு.

ஆடு கத்த ஆரம்பிச்சி, கொஞ்ச நேரம்தான் இருக்கும்… கொளத்துல அல்லிக்கொடி எல்லாம் அசையுற மாதிரி, லேசா சத்தம் கேட்டுச்சி.

அப்படியே… மெதுவா கழுத்தை நீட்டி, சத்தம் வந்த தெசைய பாத்தாரு நாச்சிமுத்து. சந்தேகமே இல்ல…மொதலைதான்…

அல்லிக் கொடிய எல்லாம் விலக்கி விட்டபடி… கரைக்கு வந்தது மொதலை.

கரைக்கு வந்ததும், நாலு பக்கமும்.. கண்ணை ஒரு சொழட்டு  சொழட்டி ஒரு பார்வை பாத்துது.

எதிரிங்க யாரும் இல்லேங்கிறத உறுதி செஞ்சிக்கிட்டு.. மெது, மெதுவா… ஆட்டுக்கடாவ நோக்கி முன்னேற ஆரம்பிச்சுது மொதலை.

மொதலைய பார்த்து பயந்த ஆட்டுக்கடா, மெரண்டு போயி.. இன்னும் அதிகமா சத்தம் போட்டு கத்த ஆரம்பிச்சுது..

ஆட்டுக்கடாவ, மொதலை நெருங்கி வரட்டும்’னு, அப்படியே, ரொம்ப கவனமா, உன்னிப்பா பாத்துக்கிட்டு இருந்தாரு நாச்சிமுத்து.

அலறி.. அலறி.. கத்துற ஆட்டுக்கடாவ நெருங்குன மொதலை,  மறுபடியும், எதிரிங்க யாராவது இருக்காங்களான்னு, சுத்தி, முத்தி எச்சரிக்கையா ஒரு நோட்டம் விட்டுச்சி.

வா.. ராசா.. வா.. இதுக்காகத்தானே… நான் காத்துக்கிட்டு இருக்கேன்னு  மனசுல நெனச்சிக்கிட்டே, தாக்குதலுக்கு தன்னை தயார் படுத்திக்கிட்டாரு நாச்சிமுத்து.

அவரு நெனச்ச மாதிரியே, ஆட்டுக்கடாவ நெருங்கி, அதோட கழுத்த கடிக்க எகிறி பாய்ஞ்சுது மொதலை.

அதுக்கும் முன்னாடி, மொதலைய நோக்கி பாய்ஞ்ச நாச்சிமுத்து, அப்படியே, தானோட சுலுக்கியால, விளாம்பழம் மாதிரி வெளியில துருத்திக்கிட்டு இருந்த மொதலையோட ஒரு கண்ணுல, சருக்குன்னு   குத்திட்டாரு.

குத்துன குத்துல.. மொதலையோட கண்ணுல இறங்குன சுலுக்கி, அப்படியே, தலையோட அடிவரைக்கும் போயிடுச்சி.

கண்ணுல குத்துன சுளுக்கியோட, வாலால சொழட்டி சொழட்டி அடிச்சிக்கிட்டே.. கொளத்துக்கு தப்பிச்சி ஓட பாத்துச்சி மொதலை…

சும்மா இருப்பாரா நாச்சிமுத்து? அடுத்த நொடியே, பொண்டாட்டி வெள்ளையம்மா குடுத்த, மொளகா தூள எடுத்து, மொதலையோட இன்னொரு கண்ணுல வீசி அடிச்சாரு.

அவ்வளவுதான்… கண்ணு ரெண்டையும் பறிகொடுத்த மொதலை, மறுபடியும தன்னோட வாலால, நாலா பக்கமும் சொழட்டி சொழட்டி அடிச்சி, உடம்ப போட்டு அங்கேயும், இங்கேயும் புரண்டுச்சே ஒழிய, அதால ஒண்ணுமே செய்ய முடியல.

இதுதாண்டா சமயம்னு நெனச்ச நாச்சிமுத்து, ஒடனே தன்னோட இடுப்புல சொருகி வச்சிருந்த பிச்சுவா கத்திய எடுத்து, ஆவேசமா  அதோட நடு மண்டையில ஒரு சொருவு சொருவுனாரு. அப்பத்தான், அவரோட வேகமும் கோவமும் கொஞ்சம் கொறஞ்சிது.

எதிரி எந்த பக்கத்துல இருந்து தாக்குறான்னே தெரியாத மொதலை, நெல கொலஞ்சி போயி, கொஞ்ச நேரம் அறுத்துப் போட்ட கோழி மாதிரி, துடியா துடிச்சி, அப்படியே செத்து போயிடுச்சி.

மொதலைய, தனி ஆளா நின்னு கொன்னு போட்ட உற்சாகத்துல, தலை கால் புரியாம குதிச்ச நாச்சிமுத்து, அப்போ குடுத்த சத்தத்த கேட்டு, ஊரு சனமே அந்த எடத்துல குவிஞ்சிட்டாங்க.

சாதாரணமாவே வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிற நாச்சிமுத்து  இப்போ சும்மா இருப்பாரா?

அப்படியே, மொதலைய அலாக்கா தூக்கி, தன்னோட தோள் மேல போட்டுக்கிட்டு.. அந்த ராத்திரியிலேயும், ஒரு தெரு விடாம, எல்லா தெருவுக்கும் ஊர்வலம் மாதிரி போனாரு.

ஊரு மக்கள் எல்லாரும்.. ராந்தரு வெளக்க கையில புடிச்சிக்கிட்டே.. அவருக்கு பின்னாடி போயி, அப்படியே, திரும்பவும் அவரு வீட்டுக்கு கொண்டு வந்து விட்டாங்க.

அந்த நேரம், நாச்சிமுத்து என்ன நெனச்சாரோ? தெரியல, அவங்க எல்லாருக்கும் முன்னாடியே, அவரோட பொண்டாட்டி வெள்ளையம்மாவ, அப்படியே தலைக்கும் மேல தூக்கிகிட்டு ஆட ஆரம்பிச்சிட்டாரு.

புருஷனோட கொண்டாட்டத்த, தடுக்க முடியாம, வெக்கி தல குனிஞ்சி தவியா தவிச்சிது வெள்ளையம்மா.