தமிழக பாஜக கொடுக்கும் கடும் நெருக்கடி: கைதாகும் அச்சத்தில் தயாநிதிமாறன்!

நேரம் சரியில்லை என்றால், தம் கரங்களில் உள்ள ஆயுதமே, தமது அங்கங்களை காயப்படுத்திவிடும். தற்போது, அப்படிப்பட்ட ஒரு சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறது திமுக.

பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மை இன மக்கள் என அனைவருக்கும் காவலன் என்று மார் தட்டிக் கொள்ளும் திமுக, தற்போது, அவர்களின் எதிர்ப்பையே சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது அக்கட்சி.

சில மாதங்களுக்கு முன்பு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு, உயர் பதவி அளித்தது திமுக போட்ட பிச்சை என்று, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அவரே வருத்தம் தெரிவித்ததால், அந்த சர்ச்சை கொஞ்சம் அடங்கி இருந்தது.

இந்நிலையில்,கொரோனா விவகாரத்தில், திமுக எம்.பி க்கள் குழு, தமிழக தலைமை செயலாளரை சந்தித்து பிறகு, அந்த சந்திப்பை விமர்சித்து பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்ற ஒரு வார்த்தையை உதிர்த்து விட்டார்.

இது, திமுக கூட்டணியில் இருக்கும், விசிக கட்சிக்கு பெரிய தர்ம சங்கடமாக அமைந்து விட்டது. ஆனாலும், கூட்டணி தர்மத்தை கவனத்தில் கொண்டு, “தோழமை சுட்டல்” என்ற மென்மையான அணுகுமுறையுடன், அதை கண்டித்திருந்தார் திருமாவளவன்.

அதே சமயம், தமிழக பாஜக தலைவர் முருகன், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தயாநிதி மாறன் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தயாநிதி மாறனுக்கு எதிராக, பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, தாம் உள்நோக்கத்துடன் எதையும் பேசவில்லை என்று கூறிய தயாநிதி மாறன், அதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

ஆயினும், இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக விடக்கூடாது என்பதில், தமிழக பாஜகவும், அதன் தலைவர் முருகனும் தீவிரமாக உள்ளனர். தமிழகத்தில், பல்வேறு காவல் நிலையங்களில், தயாநிதி மாறனுக்கு எதிராக புகார் கொடுத்தவர்களில், அதிகமானோர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த விவகாரத்தில், திமுகவை கடுமையாக கண்டிக்காத, திருமாவளவனை மையப்படுத்தி, வர்மா என்பவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு கேலிச்சித்திரமும் சர்ச்சைக்குள்ளானது.

அதையடுத்து, கார்டூனிஸ்ட் வர்மா, நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என்றும், பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும், சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

ஒருவேளை, கார்டூனிஸ்ட் வர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அதே அடிப்படையில் தயாநிதி மாறனையும் கைது செய்யலாம் என்றும் சிலர் கருத்து கூறி இருந்தனர். ஆனால், வர்மா விடுவிக்கப்பட்டதால், அதற்கான வாய்ப்பு இல்லை.

எனினும், தயாநிதி மாறனை கைது செய்யாமல் விடக்கூடாது என, தமிழக பாஜக, டெல்லி தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழக பாஜகவின் தற்போதைய தலைவராக இருக்கும் முருகன், முரசொலி பஞ்சமி வழக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணைக்கு வந்தபோது, அதன் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக எப்போதுமே பலவீனமாக இருக்கும் மேற்கு மாவட்டங்களில், கட்சி  வளர்ச்சிக்காக, பல்வேறு அதிரடியான முடிவுகளை மேற்கொண்டு வருகிறது திமுக.

ஆனால், அதே மேற்கு மாவட்டங்களில் இருந்தே திமுகவிற்கு எதிரான அஸ்திரங்களை ஏவத்தொடங்கி உள்ளது பாஜக.

அதன் ஒரு பகுதியாகவே, திமுகவின் மாநில துணை பொது செயலாளரான வி.பி.துரைசாமி, அண்மையில், தமிழக பாஜக தலைவர் முருகனை, நேரடியாக வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.