மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க வாய்ப்பு!

மேட்டூர் அணை நிரம்பியுள்ள காரணத்தால், இந்த ஆண்டு முன்கூட்டியே, பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேட்டூர் அணை மூலம், டெல்டா மாவட்டங்கள் உள்பட  12 மாவட்டங்களில் உள்ள 16.05  லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வழக்கமாக, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால், தண்ணீர் திறப்பு தேதி, பல ஆண்டுகள் தள்ளிப் போயின.

இந்நிலையில், கடந்த ஆண்டைப்போல, இந்த ஆண்டும், மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால், முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 270 நாட்களுக்கும் மேலாகவே, அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்து வரும் நிலையில், தற்போது அதன் முழு கொள்ளளவான  120 அடியை நெருங்கி வருகிறது.

இதன் காரணமாக, மேட்டூர் அணையை முன் கூட்டியே திறக்க வேண்டும் என, பாசன வல்லுனர்கள் குழு வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக, முதல்வர் தலைமையில், நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.