பிரசாந்த் கிஷோர்  திமுகவுக்கு பலமா? பலவீனமா?

வகுத்த வியூகம் பிசுபிசுக்கும்போது விரக்தி ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான், திமுக இருக்கிறது என்பதை, அண்மைக்கால நிகழ்வுகள், குறிப்பாக கொரோனா அணுகுமுறைகள் சுட்டிக் காட்டுகின்றன.

1949 ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, கலைஞர் சுறுசுறுப்பாக இயங்கிய வரை, அக்கட்சியின் வியூகங்கள், வெற்றி, தோல்வி என மாறி, மாறி சந்தித்து இருக்கலாம்.

ஆனால், கட்சி தொண்டர்களையோ, நிர்வாகிகளையோ ஒரு போதும் சோர்வடையும் நிலைக்குத் தள்ளாத, ஒரு வலிமை அந்த தலைமையிடம் இருந்தது.

அதேபோல், தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் திமுகவுக்கு இருக்கும், தொண்டர்களும், அமைப்புமே அதன் அசைக்க முடியாத ம்பலம். அமைப்பு ரீதியான பலம்.

அந்த வலுவான அமைப்பும், தலைமையும், ஸ்டாலின் கைகளுக்கு மாறும்போதுதான்… நவீன வியூகங்கள் என்ற அடிப்படையில், பல அதிகார மையங்கள் புதிதாக கட்சிக்குள் முளைக்க ஆரம்பித்தன.

தலைமையின் சொல்லுக்கு கட்டுப்படுவது என்பது, திமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மனம் விரும்பும் ஒரு விஷயமே தவிர, வெறுக்கும் விஷயம் அல்ல.

ஆனால், வெற்றிக்காக, தலைமையை தவிர, மற்றெந்த நபர்களும் அதில் தலையிடுவதை அவர்கள் ஒரு போதும் விரும்புவதில்லை.

இதுதான், கட்சியின் நடவடிக்கைகளில் பிரசாந்த் கிஷோர் உள்ளே புகுந்ததால் ஏற்பட்ட விளைவு.

கொரோனா நிவாரண பணிகள் மூலம், பொது மக்களை தம் பக்கம் ஈர்ப்பதற்காக, மேற்கொள்ளப்பட்டதுதான்  “ஒன்றிணைவோம் வா” திட்டம்.

இந்த திட்டம், ஆரம்பத்தில் பலன் அளிப்பது போல, தெரிந்தாலும், இறுதியில், அது தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாகவே மாறி விட்டது.

அந்த திட்டம் அறிவிப்பதற்கு, முன்னமே, ஒவ்வொரு ஊரில் உள்ள திமுக நிர்வாகிகளும், தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை, மக்களுக்கு செய்து கொண்டுதான் இருந்தார்கள்.

அதில், ஐபேக் இணைந்து, சில புதிய உத்தரவுகளை பிறப்பித்ததை, திமுக மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கொஞ்சம் கூட விரும்பவே இல்லை.

ஒரு கட்டத்தில், பொதுமக்கள் தரப்பில் இருந்து வந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும், மாவட்ட செயலாளர்கள் மூலம் திரட்டப்பட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

இதை, திமுகதான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லையே? அனைத்து கட்சி நிர்வாகிகளும் இதை செய்வார்களே.

அதேபோல், டி.ஆர்.பாலு தலைமையில், தலைமை செயலாளரை சந்தித்த எம்.பி க்கள் குழுவும், அங்கு, தயாநிதி மாறன் உதிர்த்த வார்த்தைகளும், திமுகவுக்கே எதிராக திரும்பி விட்டது.

என்னதான், தலைமை செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திமுகவினர் முன்வைத்தாலும், அவை அனைத்தும், தயாநிதி மாறன் புண்ணியத்தால், திமுகவிற்கு எதிரான தாக்கத்தையே ஏற்படுத்தி விட்டது.

அத்துடன், சனிக்கிழமை நடந்த, திமுக மாவட்ட செயலாளர்களுடனான  வீடியோ கான்பெரன்சிங் கூட்டத்தில், தி.நகர் அன்பழகன் சொன்ன கருத்துக்கள் அனைத்தும், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தாகவே பார்க்க வேண்டி உள்ளது.

இதை எல்லாம், ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து பார்த்தால், ஐபேக் குழு, திமுகவை பலப்படுத்துகிறதா? இல்லை பலவீனப்படுத்துகிறதா? என்ற கேள்வியே எழுகிறது.