“முந்திரிக்கொட்டை”… சிறுகதை!

-ராஜேந்திரன்

ஆறு நிமிட வாசிப்பு…

அந்த ஆயா பேரு பட்டு. ஆனா, ஊருக்குள்ள வந்து பட்டு ஆயான்னு கேட்டா யாருக்குமே தெரியாது. முந்திரிக்கொட்டைனு கேட்டாதான் எல்லாருக்கும் தெரியும்.

எந்த பிரச்சினையா இருந்தாலும், யாரும் அழைக்கிலேன்னாலும், தானே நேரடியா ஆஜராகி, முந்திக்கிட்டு பேச ஆரம்பிச்சிடும் பட்டாயா.

இப்படி, எல்லாத்துக்கும் முந்திக்கிட்டு போயி நிக்கிறதாலதான் அதுக்கு, முந்திரிக்கொட்டைனு பேரு வச்சிருப்பாங்கன்னு எல்லாரும் நெனச்சிக்கிட்டு இருந்தோம்.

ஆனா, பட்டாயா வாக்கப்பட்டு வந்த, பத்து நாளைக்குள்ளேயே, அதுக்கு முந்திரிக்கொட்டைனு பேரு வந்திடுச்சாம். பொன்னம்பலம் தாத்தா சொல்லித்தான், இந்த விஷயமே எங்களுக்கெல்லாம் தெரிஞ்சிது.

பட்டாயாவுக்கு எதுக்க, அத முந்திரிக்கொட்டன்னு சொல்றது தெரிஞ்சிது, அவ்வளவுதான், சொன்னவங்க வாய புடிச்சி கிழிச்சி போட்டுடும். அது மட்டுமா? அதுக்கப்புறம் அது, வண்ட வண்டையா வையிர வார்த்தையில, புழுத்த நாயி கூட குறுக்க போவாதுன்னு சொல்லுவாங்க.

அதனால, பட்டாயா எதுக்க, ஆயா, ஆத்தா, அத்த, பெரிம்மா, சின்னம்மா, அக்கா ன்னுதான்  சொல்லுவாங்க. அது இல்லாதப்ப, அதப்பத்தி பேசும்போதுதான் முந்திரிக்கொட்டன்னு சொல்லுவாங்க.

அப்படித்தான், நான் சின்ன பிள்ளையா இருக்குறப்போ, பட்டாத்தா ஒரு நாளு, அம்மா இல்லாதப்போ, எங்க வீட்டுக்கு, வந்து பால் குடுத்துட்டு போச்சி. நானும் அதை வாங்கி உள்ளார கொண்டு வச்சிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சி, வந்த அம்மா, இது என்னடா பால் பாத்திரம் மாறி இருக்கு, யாரு பால் கொண்டு வந்து குடுத்தாங்கன்னு, வீட்டுக்கு உள்ளார இருந்துகிட்டே, எங்கிட்ட கேட்டாங்க.

முந்திரிக்கொட்ட கொண்டு வந்து குடுத்துட்டு போச்சின்னு, நானும் அம்மாகிட்ட சொன்னேன்.

நான், சொல்லிக்கிட்டு இருக்கிறப்பவே, முந்திரிக்கொட்ட, எங்க வீட்டு வாசலுக்கு வந்திடுச்சி. நான் சொன்னதையும் அது காதுல வாங்கிடுச்சி.

அவ்வளவுதான்… எங்க அம்மாவுக்கு… கை.. கால் எல்லாம் வெடவெடத்து போச்சி. அக்கா… அவன் சின்ன புள்ள… அவன் ஏதோ தெரியாம சொல்லிட்டான்… நீ.. அதை பெருசா எடுத்துக்காதக்கா…நான், அவனை கண்டிச்சி வைக்கிறேன்னு… பயந்து பயந்து சொன்னாங்க.

ஆனா, பட்டு பெரிம்மா… நான், அதை பெரிம்மான்னுதான் அழைப்பேன். அத விடுடி. அவன் சின்ன புள்ள… அவனுக்கு என்னா தெரியும்? இங்க இருக்குற பல குச்சிக்காரிங்க… நான் இல்லாதப்ப என்ன முந்திரிக்கொட்டன்னு தானே சொல்றாளுங்க. அதெல்லாம் எனக்கு தெரியாதா என்ன? சின்ன புள்ள தெரியாம சொன்னத போயி, நான் பெருசா எடுத்துக்குவேனா?ன்னு அது சொன்னது.

அப்பறம்தான்… அம்மாவுக்கு நிம்மதியே வந்தது.

முந்திரிக்கொட்டை’ங்கிறது அவ்வளவு சீரியசான விஷயம்’ங்கிறதே எனக்கு அப்புறம்தான் தெரிஞ்சிது.

அன்னிக்கி ராத்திரி, பொன்னம்பலம் தாத்தா எங்க வீட்டுக்கு வந்து, அப்பாவோட பேசிக்கிட்டு இருந்தாரு. அவங்க பேச்சுல, பல ஊரு கதை எல்லாம் போய்க்கிட்டு இருந்துச்சி.

அப்போ, நைசா போயி, எங்க அப்பாவுக்கும் பக்கத்தில நான் உட்கார்ந்தேன்.

அதப்பார்த்துட்டு… என்னடா தம்பி… எப்படி இருக்க? நல்லா படிக்கிறியா?ன்னு பொன்னம்பலம் தாத்தா கேட்டாரு.

நானும் நல்லா படிக்கிறேன் தாத்தான்னு அவருக்கிட்ட சொன்னேன். சொல்லிட்டு அவரையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.

என்னடா.. என்ன சங்கதி.. என்னையே உத்து பாக்குற?ன்னு தாத்தா கேட்டாரு.

ஒன்னும் இல்ல தாத்தா… நம்ம பட்டு பெரிம்மா இருக்குல்ல… அத ஏன் எல்லாரும் முந்திரிக்கொட்டன்னு சொல்றாங்கன்னு கேட்டேன்?

அவ்வளவுதான்… எங்க அப்பா… பொன்னம்பலம் தாத்தா ரெண்டு பேருமே.. விழுந்து, விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க…

பிறகு… பொன்னம்பலம் தாத்தா சொன்னார்… டேய் தம்பி… அந்த கதைய நான் சொல்றேன். ஆனா, நாந்தான் இந்த கதைய சொன்னேன்னு… யாரு கிட்டேயும் சொல்லிடாத… அப்புறம்.. அந்த பட்டு, என்ன உண்டு இல்லன்னு ஆக்கிடுவா..ன்னு சொன்னார்.

சரி தாத்தா… நீங்க சொல்லுங்க, நான் யாரு கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.

அதுக்கு பிறகுதான், பொன்னம்பலம் தாத்தா கதையை சொல்ல ஆரம்பிச்சாரு..

எனக்கு கல்யாணம் ஆகி, ரெண்டு வருஷம் கழிச்சிதான், கண்ணையனுக்கும், பட்டுக்கும் கல்யாணமாச்சி.

அந்த காலத்துல கல்யாணம் ஆனா, பொண்ணு மாப்பள, பேசிக்கவே பத்து பதினஞ்சி நாளாகும்.

கல்யாணம் நடக்கும்போது, மணவரையில உட்கார்ந்து இருக்குற பொண்ணுங்களோட தல, வெட்கத்துல குனிஞ்சிக்கிட்டே, இருக்கும். குனிஞ்ச தலைய, நிமுத்தி, நிமுத்தி வைக்கிறதே… நாத்தனாருங்களுக்கு வேலையா இருக்கும்.

ஆனா, மணவறையில உட்கார்ந்துகிட்டே. அயிருகிட்டயும், வந்து இருக்குற சொந்த பந்தங்க கிட்டேயும் பேசுன மொதல் ஆளே பட்டு தான்.

மணவறை சடங்கு எல்லாம் முடிஞ்சி, தாலி கட்டுற நேரத்துல… கெட்டி மேளம்.. கெட்டி மேளம்னு, அயிரு சொல்றதுக்கு முன்னாடியே… மணவரையில உட்கார்ந்து இருந்த பட்டு, அத சொல்ல ஆரம்பிச்சிட்டா… எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு.

இவ, இப்பவே இந்த போடு போடுறாளே… கண்ணையன எந்த பாடு படுத்த போறாளோன்னு, பொம்பளைங்க எல்லாம் அப்பவே பேச ஆரம்பிச்சிட்டாங்க.

அப்போ ஆரம்பிச்ச அவளோட வாயி… கண்ணையன் செத்து, இத்தன வருஷம் ஆன பிறகும் ஓயல.

அதைக் கேட்ட எனக்கு, இன்னும் ஆர்வம் அதிகமாகிக்கிட்டே இருந்தது. சரி தாத்தா… முந்திரிக்கொட்டன்னு எப்படி பேர் வந்ததுன்னு? மீண்டும் கேட்டேன்.

ம்.. அதத்தான் இப்போ சொல்லப்போறேன்னு… திரும்பவும் பொன்னம்பலம் தாத்தா ஆரம்பிச்சாரு…

கல்யாணம் ஆகி, மறுவீடு எல்லாம் போயிட்டு வந்து, ஒரு பத்து நாளு இருக்கும், கண்ணையனையும், அவ பொண்டாட்டி பட்டையும், நம்ம ஊரு மாரியம்மன் கோயிலுக்கு அனுப்பி வச்சா, கண்ணையன் அம்மா.

பட்டு முன்னாடியும், கண்ணையன் பின்னாடியும் தெருவுல போயிக்கிட்டு இருந்தாங்க.

போற வழியிலேயே, கண்ணையன் பங்காளி, மகாலிங்கம் வீட்டுல இருந்து குய்யோ, மொறையோன்னு ஒரே சத்தம்.

ஐயையோ என்ன விட்டுட்டு போயிட்டியா?ன்னு, மகாலிங்கம் பொண்டாட்டி கத்துன கத்தல் தெரு முழுக்க கேட்டுச்சி.

எல்லாரும் விழுந்தடிச்சி, மகாலிங்கம் வீட்டுக்கு ஓடுனாங்க.

அந்த சத்தத்த கேட்ட பிறகு, கன்னையனும், அவன் பொண்டாட்டியும்  கோயிலுக்கு போகாம, நேரா மகாலிங்கம் வீட்டுக்கு ஓடுனாங்க.

அப்போ, செத்து போன, தன்னோட மருமகள கோரப்பாயில கிடத்தி போட்டுட்டு, வயித்துலயும், மாருலயும் அடிச்சிக்கிட்டு ஒப்பாரி வச்சி அதுதுகிட்டு இருந்தா மகாலிங்கம் பொண்டாட்டி.

பொண்டாட்டிய பறிகொடுத்த வீராசாமியும், செத்தவ கால் மாட்டுல உட்கார்ந்துகிட்டு,  அய்யய்யோ… என்ன இப்படி, தவிக்க விட்டுட்டு போயிட்டியேன்னு… தலையிலேயே அடிச்சிக்கிட்டு அழுதுகிட்டு இருந்தான்.

அதைப்பார்த்து, அங்க வந்த பொண்டுங்க எல்லாம் வாயிலேயும், வயித்துலேயும் அடிச்சிக்கிட்டு அழுதாங்க.

ஊரு பெருசுங்களும், மத்த ஆம்பளைங்களும், வாசலுல நின்னுக்கிட்டு, நல்லாதானே இருந்தா? எப்படி செத்தான்னு? ஆளாளுக்கு சந்தேகத்த எழுப்பிக்கிட்டே இருந்தாங்க…

அப்போ, மகாலிங்கம் பொண்டாட்டி கிட்ட போன கண்ணையன், ஏன் பெரிம்மா… அண்ணி செத்தத எங்ககிட்ட சொல்லாம கூட நீ என்ன செஞ்சிக்கிட்டு இருந்தேன்னு… அழுதுகிட்டே கேட்டான்.

செத்த நாழிக்கும் முன்னாடிதாண்டா, அவ செத்து போனா… இனிமே தாண்டா எல்லாருக்கும் சொல்லனும்னு சொல்லி மீண்டும், சத்தம் போட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சா மகாலிங்கம் பொண்டாட்டி.

ஆனால், பட்டு மட்டும் செத்தவ பக்கத்துல போயி, அவளோட ஒடம்பு, வாயி, கண்ணு, மூக்கு, உதடு, கை, கால் எல்லாத்தையும் கொஞ்ச நேரம் நோட்டம் விட்டுக்கிட்டே இருந்தா.

பிறகு, அந்த வீட்டுல இருக்குற எல்லா அறையையும், கண்ணாலேயே அளந்து முடிச்சா. அப்புறமா? செத்து போனவளோட மாமியாகாரி செய்றத எல்லாத்தையும் உத்து கவனிச்சிக்கிட்டே இருந்தா.

அதேல்லாம், முடிஞ்ச பிறகு, அவ எப்படி செத்து போயிருப்பான்னு ஒரு முடிவுக்கு வந்துட்டா பட்டு.

இதெல்லாம் நடந்துகிட்டு இருக்கும் போதே.. அங்க வந்தவங்க எல்லாரும்… நல்லா இருந்த மருமக எப்படி செத்து போனான்னு… ஒப்பாரி வக்கிற மாமியார் கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தாங்க.

எல்லாரு கிட்டேயும், அவ அரளி கொட்டைய அரச்சி குடிச்சிட்டு செத்து போயிட்டா’ன்னே சொல்லிக்கிட்டு இருந்தா மாமியாகாரி.

செத்து போனவள பாத்து பாத்து அழுதுகிட்டே இருந்த, பொண்டுகளுக்கு, அங்கியும், இங்கயும் நோட்டம் விடுற பட்டுவ பாக்குறதுக்கு, ரொம்ப எரிச்சலா இருந்துச்சி.

எல்லா பொம்பளைங்களும், அழுதுகிட்டு இருக்காங்க, இவ என்னவோ, எல்லாத்தையும் நோட்டம் விட்டுக்கிட்டு இருக்காளேன்னு சில பேரு நேரடியாவே, சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

ஆனா, அதுக்கெல்லாம் பட்டு கொஞ்சம் கூட அசரவே இல்ல.

அப்போதான்… பேச ஆரம்பிச்சா பட்டு….

வெளியில நிக்கிற, பெரியவங்க, ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் உள்ள வாரீங்களா?ன்னு உரக்க சத்தம் போட்டு கத்துனா பட்டு.

என்னடா இது… வயசான பொம்பளைங்க கூட, ஆம்பளைங்கள பாத்து பேசுறதுக்கு அச்சப்படுவாங்க. இவ, என்னடான்னா.. உத்தரவு போடுற மாதிரி கூப்புடுறாலே’ன்னு.. அங்க இருந்த பொம்பளைங்களுக்கு  கொஞ்சம் அருவருப்பா இருந்துச்சி.

இருந்தாலும், பட்டு அதப்பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படுற மாதிரி இல்ல.

பட்டு சொல்றத கேட்டு.. ஆச்சரியத்தோட உள்ள வந்த பெருசுகளும், ஆம்பளைங்களும்… என்னம்மா.. இப்படி… கொஞ்சம் கூட, கூச்ச நாச்சம் இல்லாம… ஆம்பளைங்கள கூப்புடுறியே’ன்னு கேட்டாங்க.

இப்போ… அது முக்கியம் இல்ல. எனக்கு இந்த சாவுல சந்தேகம் இருக்குன்னு… ஒரே போடா போட்டா பட்டு.

பட்டு சொன்னதக் கேட்டு, தெகச்சி போன அவங்களுக்கு, என்ன சொல்றதுன்னே தெரியல.. அப்படியே, வாயடைச்சி போயி நின்னாங்க.

ஆனா மாமியகாரி மட்டும்…ஏய்… என்னாடி நெனச்சிக்கிட்டு இருக்க… வாக்கப்பட்டு வந்து இன்னும் முழுசா பத்து நாளு கூட ஆகல, அதுக்குள்ள இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டு, குடும்பத்த கலைக்க பாக்குறே’ன்னு சத்தம் போட்டா.

இவ சொல்றத ஆம்பளைங்களும் கேட்டுக்கிட்டு நிக்கிறீங்களே.. இந்த பித்துக்குளி செருக்கி பேசுறத கேக்காதீங்க… வேற ஏதோ வம்ப இழுத்து விடுறதுக்கு திட்டம் போடுறா’ன்னு, பெரிய சத்தமா குடுத்து, பட்டுவோட வாயை அடக்க முயற்சி பண்ணுனா மாமியாகாரி.

பட்டு பேசுறது… ஆம்பளைங்க எல்லாருக்கும் கொஞ்சம் எரிச்சலா இருந்தாலும், அவ பேசுறது சரியா இருக்குற மாதிரி தோனுச்சி.

அதுக்கு பிறகு.. நீ கொஞ்சம் வாய மூடு… புது பொண்ணு எதையோ… சொல்றா… அது என்னன்னு பாப்போமுன்னு ஒரு பெருசு… மாமியாகாரியின் வாயை மூட சொன்னுச்சி.

அப்போ ஒரு பெருசு குறுக்கிட்டு பேசுச்சி….

ஏம்மா புதுப்பொண்ணு,… நீ சொல்றத பாத்தா ஏதோ… புரியிற மாதிரி இருக்கு. ஆனா, என்ன சொல்ல வர்றேன்னு  தெளிவா புரியல… அதனால எங்களுக்கு வெளங்குற மாதிரி சொல்லு’ன்னு சொன்னுச்சி.

அதக்குள்ள, அய்யய்யோ… நல்ல பொண்ணுன்னு நெனச்சிதானே, என்னோட கொழுந்தனாரு, புள்ளைக்கி இவள கட்டி வச்சோம்… இவ பித்துக்குளி செருக்கி மாதிரி பேசி.. வம்பு சண்டைய உண்டாக்கிடுவா போலருக்கே… இவ ஒரு பெரிய மனுசின்னு இவ சொல்றதையும் ஆம்பளைங்க கேக்கறீங்களே.. அப்படீன்னு.. மீண்டும் பட்டுவ பேச விடாம தடுக்குறதுலேயே குறியா இருந்தா மாமியாகாரி.

ஏய்… கெழவி… நீ வாய மூடு… அவளப்போயி பித்துக்குளின்னு சொல்றியே… அவ சரியாத்தான் பேசுறா… நீதான் பித்துக்குளி மாதிரி பேசி, அவள பேச விடாம தடுக்க பாக்குறேன்னு… கோபமாக கத்தினார் நாட்டாமை பக்கிரிசாமி.

அதுக்கு அப்புறம்தான் வாய மூடுனா மாமியாகாரி.

உடனே.. புதுப்பொன்னு.. நீ சொல்ல வந்தத, வெவரமா சொல்லுன்னு சொன்னார் நாட்டாமை பக்கிரிசாமி.

பிறகு பேச ஆரம்பிச்சா பட்டு…

செத்துப்போனவ அரளிக்கொட்டைய அரச்சி குடிச்சிட்டு செத்ததா அவ மாமியார் சொல்றாங்க. அப்படி அரளிக்கொட்டைய அரச்சி குடிச்சிட்டு செத்துருந்தா, அவ வாந்தி எடுத்துதான் செத்துருக்கணும்.

செத்துப்போனவ வாயி, வயிறு, மொகம், கை, காலுன்னு எதப்பாத்தாலும், அவ வாந்தி எடுத்த மாதிரியே தெரியல.

அதனால, அவ சாப்புடற சாப்பாட்டுல மருந்த வச்சி, யாரோ கமுக்கமா கொன்னுட்டாங்க’ ன்னு, சிதறு தேங்கா விட்ட மாதிரி, ஒரே போடா போட்டா பட்டு.

அப்புறமாத்தான், செத்து போனவ ஒடம்பு, மொகம், வாயி, கை, காலுன்னு அங்க இருந்தவங்க எல்லாரும் உத்து பாத்தாங்க.

அது வரைக்கும், பட்டுவ திட்டுன யாரும், அதுக்கு பிறகு, அவள திட்டவே இல்ல. எல்லாருக்கும் சந்தேகம் உறுதி ஆயிடுச்சி.

அதுக்கப்புறம், நாட்டாம பக்கிரிசாமி மீண்டும் பட்டுகிட்ட கேட்டாரு…

ஏம்மா புதுப்பொண்ணு… நீ சொல்றது உண்மைன்னே வச்சிக்குவோம். அப்படீன்னா, இவளுக்கு சாப்பாட்டுல வெஷத்த வச்சி கொன்னது யாரா இருக்கும்? அதையும் நீயே கண்டுபுடிச்சி சொல்லு என்றார்…

ஆமாம் அதுவும் சரிதான்’னு அங்க இருந்தவங்களுக்கு மனசுல பட்டுச்சி..

அதைக்கேட்டு, பட்டு கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா…

என்ன? எல்லா விஷயத்தையும் தேங்கா ஒடச்ச மாதிரி சொன்ன நீ, இதுக்கு மட்டும் அமைதியா இருந்தா எப்படி? பயமா’ன்னு, நாட்டாமை திரும்பவும் கேட்டார்.

உண்மைய சொல்றதுக்கு எனக்கு என்ன எந்த பயமும் இல்ல’ன்னு தைரியமாக போட்டு ஒடச்சா பட்டு…

இப்படி ஒரு காரியத்த செஞ்சது வேற யாரா இருக்க முடியும்?

என்னோட வாயிலேருந்து எதுவும் வரவிடாம தடுத்தாளே… அந்த கெழ குச்சிக்காரி மாமியா காரிதான்’ன்னு, கொஞ்ச நேரத்துல  பட…படன்னு வெடிச்சா பட்டு…

அடுத்த கணமே.. அடியே, குடிய கெடுத்த குச்சிக்காரி… எனக்கு கொலக்கார பட்டமா கட்டுறே’ன்னு மாமியாகாரியும், எங்க அம்மாவ கொலகாரின்னு சொல்றியான்னு வீராசாமியும்… பட்டுவ அடிக்கிறதுக்கு பாய்ஞ்சாங்க..

அதுக்குள்ள.. அங்க இருந்தவங்க எல்லாரும்.. தடுத்து நிறுத்தி… பட்டு மேல அடி விழாம பாத்துக்கிட்டாங்க.

ஒனக்கு ஏண்டி? வந்ததும்…வராம இந்த வம்புன்னு… பட்டு புருஷன் கண்ணையன் தலையிலேயே அடிச்சிக்கிட்டான்.

சரி.. சரி.. இந்த தகவலு போலீசுக்கு போனா… அப்பறம் செத்தவ ஒடம்ப ஆஸ்பத்திரிக்கி அனுப்பி கூறு போட்டுடுவாங்க. நீங்க இந்த மாதிரி அடிச்சிகிட்டா, அப்பறம் போலீசு இங்க வந்துடும். நம்மால எதையும் செய்ய முடியாம போயிடும்.

அதனால், செத்தவள சட்டு புட்டுன்னு எரிச்சி, அடக்கம் பண்ணுற வழிய பாருங்கன்னு பெருசுங்க எல்லாம்… சொல்ல ஆரம்பிச்சிடுச்சி.

அதனால, எல்லாரும் அந்த காரியத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சாங்க.

அப்பத்தான்… இனிமே ஏதாவது  நல்லது, கெட்டது நடந்தா… அங்க இந்த “முந்திரிகொட்டைய” சேக்க கூடாதுன்னு, பட்டுவ பாத்து சொன்னாரு, செத்தவளோட மாமனாரு மகாலிங்கம்.

அன்னயிலே இருந்து “பட்டு” ங்குற அவளோட பேரு மறைஞ்சி, முந்திரிகொட்டன்னு ஆயிடுச்சி.

அது மட்டும் இல்ல, செத்து போனவ, அரளி கொட்டைய அரச்சி குடிச்சிட்டு சாகல, அவ மாமியாகாரிதான் மருந்து வச்சி கொன்னுருக்கா…ங்குற விஷயம் உறுதி ஆயிடுச்சி.

அதுக்கு பிறகுதான், பொண்டாட்டிய பறிகொடுத்த வீராசாமி, பட்டுக்கிட்ட போயி, அவள அடிக்க போனதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிட்டான்.

அப்போ… ஆரம்பிச்சது தாண்டா,  இந்த ஊருல “முந்திரிக்கொட்ட ராஜ்ஜியம்” னு சொல்லிட்டு சிரிச்சாரு பொன்னம்பலம் தாத்தா…