“மாட்டு ராசி”… சிறுகதை!

-ராஜேந்திரன்

ஏழு நிமிட வாசிப்பு…

கிருஷ்ண படையாட்சிக்கும் பிச்சக்கண்ணு செட்டியாருக்கும் செய்யிற தொழில்லதான் வித்யாசமே தவிர, செய்யிற வேலையில, கொஞ்சம் கூட வித்தியாசமே இல்லை.

பிச்சக்கண்ணு செட்டியார், வாங்கிட்டு வந்து, செக்குல கட்டும் மாடுகள்ல, ஒரு சோடி மாட்ட கூட, அவரு உசுரோட வித்ததா  சரித்திரமே இல்லை.

அதே மாதிரி, கிருஷ்ண படையாட்சி வித்த மாடுங்க எதுவும், ஒரு மாசத்துக்கு மேல உசுரோட இருந்ததா, ஒரு புரளி கூட கிளம்புனது கெடையாது.

இந்த ரெண்டு பேருமே, காலங்காத்தால, தாமர கொளத்துல மாடு குளுப்பாட்டும் போது, பேசுற பேச்சும், செஞ்சிக்குற பரிகாசமும் இருக்கே.. அப்பப்பா… மாமன் மச்சான் கூட, அந்த மாதிரி பேசிக்க மாட்டங்க…

செட்டியாரே… இது வரைக்கும் ஒரு மாட்டையாவது நீ, உசுரோட வித்து இருக்கியா? உன் வீட்டு மாட்டு கொட்டாயில, எத்தன மாடுங்க செத்து போயிருக்கும். அந்த மாடுங்க சாபம் எல்லாம், உன்ன சும்மா விடாதுய்யா.. என்பார் கிருஷ்ண படையாட்சி.

நீ மட்டும் என்ன யோக்கியமா படாச்சி? நீ வித்த ஒரு மாடாவது, ஒரு மாசத்துக்கும் மேல உசுரோட இருந்துச்சா? அந்த பாவம் உன்னை மட்டும் விட்டு வைக்குமா? அப்படீன்னு செட்டியாரு சொல்லுவாரு.

கொஞ்ச நேரம்தான், இந்த மாதிரி ஒருத்தர ஒருத்தரு மாத்தி, மாத்தி நையாண்டி பண்ணிக்குவாங்க. அதுக்கு பிறகு இதுங்களோட வாயில, எவனோட கதையாவது மாட்டிக்கிட்டு சிரிப்பா சிரிக்கும்.

இப்படியே, மாடு குளுப்பாட்டுற கொஞ்ச நேரத்துல, இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிற பேச்சும், பண்ணிக்கிற நையாண்டியும், மத்தவங்களுக்கு ரொம்ப வேடிக்கையா இருக்கும்.

பிச்சக்கண்ணு செட்டியாரோட குடும்பம், பல தலைமுறையா செக்கு வச்சி எண்ணெய் பிழியிற வேலைய செஞ்சிக்கிட்டு இருந்துச்சி.

நெலம், நீறு, ஊரு மானியம் எல்லாம் கெடைச்சி, அந்த குடும்பமும் நல்லா வசதியாத்தான் வாழ்ந்துகிட்டு இருந்துச்சி.

ஆனா, பிச்சக்கண்ணு, செட்டியாரோட அப்பாவுக்கு தொடர்ந்து அஞ்சி பொம்பள புள்ளைங்க. ஆறாவதா பொறந்தவருதான் இவரு.

ஆம்பள புள்ளை பொறக்குமுன்னு நெனைச்ச செட்டியாருக்கு, தொடர்ந்து பொம்பள புள்ளைங்களே பொறந்துகிட்டு இருந்துச்சி.

அதனால, அடுத்து ஆம்பள புள்ள பொறந்தா… பிச்சை எடுத்து, பரிகாரம் பண்றேன்னு, சாமிக்கிட்ட வேண்டுனாரு பெரிய செட்டியாரு.

அவரு வேண்டுதல் வீண் போகல… ஆறாவதா ஆம்பள புள்ள பொறந்துடுச்சி.

சாமிய வேண்டி, பிச்சை எடுத்து பொறந்ததால, தன்னோடு புள்ளைக்கு பிச்சக்கண்ணு”ன்னு பேரு வச்சாரு பெரிய செட்டியாரு.

பிச்சக்கண்ணு செட்டியார அவங்க அப்பா, செல்லமாத்தான் வளத்தாரு. ஆனா, அஞ்சி பொம்பள புள்ளைய கட்டி கொடுக்க, செஞ்ச செலவுல, அந்த குடும்பமே வறுமைக்கு வாக்கப்பட வேண்டியதாயிடுச்சி.

பிச்சக்கண்ணு, தலை எடுக்குற நேரத்துல, பெரிய செட்டியாரு செத்து போயிட்டாரு. அப்போ, அவங்க இருந்த வீட்டையும், செக்கையும் தவிர, சீவனம் பண்றதுக்கு வேற எதுவும் இல்ல. அன்னைக்கு செக்கு ஓட்ட ஆரம்பிச்சவருதான் பிச்சக்கண்ணு.

சுத்துப்பட்டுல இருக்குற ஏழெட்டு ஊருக்கு, இது ஒண்ணுதான் செக்கு. அதனால, அந்த ஊருல உள்ள தெருக்கள, செக்கை  அடையாளமா வச்சித்தான், செக்குக்கு முன்னாடியா, பினாடியா? ன்னு கேட்பாங்க.

ஒவொரு நாலும் செக்கு சுத்துறப்போ, அதுல இருந்த வர்ற சத்தம் தெரு முழுக்க கேக்கும். அந்த சத்தத்தோட சேர்ந்து, சில நேரம் தெருவுல கெடக்குற நாயிங்களும், அதுக்கு எத்த மாதிரி ஊளையிடும்.

எல்லார் வீட்டு நாயிங்களும், செட்டியார் வீட்டுக்கு பொதுவானதாவே இருக்கும். செட்டியார் அப்பப்போ போடுற புண்ணாக்கு அத்தனை நாயிங்களையும் அடிமைப்படுத்தி வச்சிருக்கும்.

நாய் மட்டுமா? சின்ன பசங்களும் அப்பப்போ போயி, செட்டியாரு கொடுக்கிற கொஞ்சம் புண்ணாக்குக்காகவும், செக்குல சுத்தி வர்ற ஆசையிலேயும் அவரோட நெருக்கமா ஆயிடுவாங்க.

இப்படி செட்டியாரு எல்லாருக்குமே புடிச்ச ஒரு மனுஷன்தான்.

ஆனா, கூடப்பொறந்த அஞ்சி அக்காவுக்கும் செய்ய வேண்டிய நல்லது கெட்டது எல்லாமே, செட்டியாரோட தலையில விடிஞ்சதால, அவருக்கு வர்ற வருமானம், வாய்க்கும் கைக்குமே சரியா இருந்துச்சி.

அதனால, அவரோட சந்தோஷத்த நெனச்சி பார்க்க கூட நேரம் இல்லாம், செக்கு மாடு மாதிரியே, ஒழண்டுகிட்டு இருந்தாரு.

இந்த நெலவரத்துல, மொரட்டு மாடுங்கள வாங்கிட்டு வந்து, செக்குல கட்டுறத பத்தி  எல்லாம் அவரால, நெனச்சியே பாக்க முடியல.

வேற வழியில்லாம, மூணு மாசம், ஆறு மாசத்துல செத்துப்போற நெலையில இருக்குற, வண்டி மாடுங்களத்தான் அவரு வாங்கிட்டு வருவாரு.

புண்ணாக்குக்கு மட்டும் எப்போதும் பஞ்சம் இல்லாததால, அந்த மாடுகள, ஒரு பத்து நாளைக்குள்ள, நல்லா தேத்தி, ஒரு வருஷம், ரெண்டு வருஷம் தாக்கு புடிக்கிற அளவுக்கு தயார் படுத்திடுவாரு.

அதுங்களும், கடைசி காலத்துல நாக்குக்கு ருசியா குடிச்ச கழனி தண்ணிக்கும், வயிறு முட்ட சாப்புட்ட புண்ணாக்குக்கும், வஞ்சன பண்ணாம… செட்டியாருக்கு தன்னால முடிஞ்ச அளவுக்கு ஒழச்சி கொடுக்கும்.

அதுக்கு பிறகு, அந்த மாடுங்கள கொண்டு போயி, எங்கே விக்கிறது. வேற வழியில்லாம அவரு கொட்டாயிலேயே செத்து போகும்.

அதுக்கு பிறகு, அதே மாதிரி வேற சோடி மாடுங்கள வாங்கிட்டு வந்து செக்குல கட்டுறதே செட்டியாருக்கு வேலை.

ஆனா, கிருஷ்ண படையாட்சியோட கதையே வேற..

கிருஷ்ண படையாட்சியோட குடும்பமும் தலைமுறை தலைமுறையா மிராசுதார் குடும்பம்தான்.

நஞ்சை, புஞ்சை, தோட்டம் தொறவு அப்படி இப்படீன்னு முப்பது ஏக்கருக்கு மேல, அந்த குடும்பம் சாவடி பண்ணிக்கிட்டு இருந்துச்சி.

கிருஷ்ண படையாட்சிக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. இவரு நடுலவரு.. அதனால் நல்லவருன்னு’தான் கூப்புடுவாங்க.

இவங்க மூணு பேருக்கும், தன்னோட சொத்த,  சரி சமமா.. பிரிச்சி கொடுத்தாரு அவங்க அப்பா.

ஆனாலும், எங்க அப்பா, முப்பது ஏக்கரு நெலத்த சாவடி பண்ணுன மாதிரி, தானும் சாகுபடி செய்யணும்னு ஆசைப்பட்டாரு கிருஷ்ண படையாட்சி.

அதுக்காகத்தான், இந்த மாதிரி ஆடு, மாடு, குதிரை, இன்னும் எது எதெல்லாம்  கண்ணுல படுதோ, அது எல்லாத்தையும் வாங்கி, வாங்கி, கொஞ்சம் கூடுதல் வெலைய வச்சி விக்க ஆரம்பிச்சிட்டாரு.

சல்லாடை போட்டு சலிச்சாலும், கிருஷ்ண படையாட்சி மாதிரி, ஒரு மாட்டு வியாபாரிய, இந்த சில்லாவுலேயே பார்க்க முடியாதுன்னு, அவரோட சாதுரியத்த ஊரு மக்களே பெருமையா பேசிக்குவாங்க.

நடக்கவே தெம்பு இல்லாத நோஞ்சான்  மாடுங்கள வாங்கிட்டு வந்து, வைத்தியம் மேல வைத்தியம் பாத்து,  ஜல்லிக்கட்டு காளைன்னு சொல்லி காசு பாத்துடுவாரு அவரு.

இவரப்பத்தி நல்லா தெரிஞ்ச உள்ளூருகாரனும் சரி , அக்கம் பக்கத்து ஊருகாரனும் சரி, யாரும் இவருகிட்ட மாடு வாங்க வர மாட்டான்.

ஆனாலும், இவரு எங்கேருந்துதான் மாடு வாங்குற ஆள, புடிச்சிட்டு வராருன்னு தெரியலே’ன்னு ஊருக்காரங்க பேசிக்குவாங்க.

அந்த அளவுக்கு, அவருகிட்ட ஒரு வியாபார ரகசியம் இருந்துச்சி. அவரோட சிஷ்யன் மணிக்கு மட்டுமே தெரிஞ்ச அந்த ரகசியம், இப்போ ஊருல உள்ள பல பேருக்கும் தெரிய ஆரம்பிச்சிடுச்சி.

வாயில்லா சீவன படுத்துற பாடு, அவர சும்மா விடாதுன்னு எல்லாரும் சொல்லுவாங்க.

ஆனாலும், அவருக்கு நேரா, அதை யாரும் சொல்ல, யாருக்கும் தைரியம் இல்ல.  அப்புறம் யாரு அவரு வாயில நிக்கிறதுங்குற அச்சம்’தான் அதுக்கு  காரணம்.

கிருஷ்ண படையாட்சி மாடு வாங்குறதும், அதுக்கு ஒரு பத்துநாள் செய்யிற சவர்த்தனையும், அதுக்கு பின்னாடி, அத நல்ல வெலைக்கி விக்கிறதும் ஒரு தனிக்கதை.

இனி, இந்த மாடுகள வச்சி எதுவும் செய்ய முடியாது… அடி மாட்டுக்குதான் போடணும்’ங்குற நிலமையில, எங்காவது வண்டி மாடுங்க கெடக்குதான்னு, எப்போதும், கழுகு மாதிரி, அவரு கண்ணு நோட்டம் விட்டுக்கிட்டே இருக்கும்.

பிறகு, அந்த வீட்டுக்கு போயி, அந்த மாடுங்கள அடிமாட்டு வெலைக்கே பேசி முடிச்சி, வீட்டுக்கு ஓட்டிட்டு வருவாரு.

இன்னிக்கா, நாளைக்கா’ன்னு சாவை எதிர்பார்த்து, காத்துக்கிட்டு இருக்கிற நெலமையில, அந்த மாடுன்களால், இவரு வீடு வரைக்கும், வர முடியுமா?

வர்ற வழியிலேயே, அந்த மாடுங்க செத்து போயிடும்’னுதான் எல்லாரும் நெனச்சிக்கிட்டு இருப்பாங்க.

ஆனா, எள்ளு புண்ணாக்குல வெல்லத்த தடவி, மாட்டுக்கு கொஞ்சம், கொஞ்சமா குடுத்து, குடுத்து, பிறகு அதை அப்படியே, மாடுங்க மூஞ்சிக்கு நேரா, காட்டி காட்டியே, எப்படியாவது தந்தரமா வீட்டுக்கு கொண்டாந்து சேர்த்துடுவாரு.

அந்த மாடுங்கள கொண்டு வந்து சேக்குறதுக்குள்ள, அவரு சிஷ்யன் மணி வாங்கி கட்டிக்கிற பாட்டு, கொஞ்சம் நஞ்சம் இல்ல.

சில, சமயங்கள்’ல, இவரு பேசுற பேச்சுல, மணி கோவிச்சிக்கிட்டு, வேறு ஆள பாத்துக்கோன்னு சொல்லிட்டு கெளம்புவான்…

அதுக்கு அப்புறம்.. மாடுங்கள சமரசம் பண்ணி இழுத்துக்கிட்டு வர்ற மாதிரியே, சிஷ்யன் மணியையும் சமாதானம் பண்ற நிலைமை அவருக்கு வந்துடும்.

இப்படி. அடிக்கடி மணி  கோவிச்சிக்கிட்டு கெளம்பி போறதும், அதுக்கு பிறகு, அவன்கிட்ட போயி கெஞ்சி, கூத்தாடி, அவனை சமாதானம் பண்ணி கூப்பிட்டு வர்றதும்.. இவருக்கு ஒன்னும் புதுசு இல்ல.

இருந்தாலும், இவரு வாய வச்சிக்கிட்டும் சும்மா இருக்க மாட்டாரு. அவனும் இதுதான் சாக்குன்னு கோவிச்சிக்கிட்டு போயிடுவான்.

என்னதான் சண்ட போட்டுக்கிட்டாலும், குருவ விட்டு சிஷ்யனாலோ, , சிஷ்யன விட்டு குருவாலோ, இருக்கவே முடியாது.

அதனால, அவங்க ரெண்டு பேருக்கும் வர்ற சண்டை, புருஷன் பொண்டாட்டி சண்ட மாதிரின்னு, அத யாரும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க.

இப்படித்தான், வாங்குன மாடுங்கள, சிஷ்யன் மணியோட, தந்தரமா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாரு.

மறுநாள், காலையிலேயே ரெண்டு மாட்டையும், தாமரகொளத்துக்கு கொண்டு போயி, குருவும், சிஷ்யனும் தேயி தேயின்னு தேய்ச்சி குளுப்பாட்டுவாங்க.

நீ தேய்க்கிற தேயில, மாட்டுக்கு தோலு உறிஞ்சிடப் போவுது… அப்பறம் விக்க முடியாதுன்னு…மாமன் மச்சான் மொறை உள்ளவங்க எல்லாம், இவர பரிகாசம் பண்ணுவாங்க.

அவங்களுக்கு எல்லாம் பதில் சொன்னா, தொழில் ரகசியம் வெளியில தெரிஞ்சிட போவுதுன்னு, நைசா சிரிச்சிக்கிட்டே பதில் சொல்லாம நழுவிடுவாறு.

குளுப்பாட்டுன மாடுகள, அப்படியே கொண்டு போயி, மாட்டு கொட்டாயிக்கும் வெளியில, கொஞ்சம் கூட நெழலே விழாத  எடத்துல கட்டி போடுவாரு.

அவ்வளவுதான்.. அப்படியே மத்தியானம் உச்சி வெயில் படுற வரைக்கும்… அந்த பக்கமே திரும்ப மாட்டாரு.

அந்த மாடுங்க ரெண்டும், காலையிலே இருந்து, வெறும் வயித்தோடா தண்ணி கூட குடிக்காம, வெயிலுல கெடந்து தவியா தவிக்கும்.

தண்ணி தாகம், பசி, கொளுத்துற வெயிலோட சூடு எல்லாம் சேர்ந்து, அந்த மாடுங்களோட வாயில, நுரை தள்ளுற அளவுக்கு ஆகிடும்.

அதுக்கு பிறகுதான், குருவும் சிஷ்யனும் அங்கே வருவாங்க.

வந்த ஒடனே, அந்த மாடுங்களோட கண்ணுக்கு எட்டுற தூரத்துல இருக்கிற, ரெண்டு தொட்டியிலேயும், நல்லா கம கமன்னு வாசனை, மூக்கை துளைக்கிற மாதிரி.. கழனி தண்ணியையும், கஞ்சி தண்ணியையும் கலந்து ஊத்துவாங்க.

அந்த வாசனையில, மாடுங்க ரெண்டும், தலைய தூக்கிக்கிட்டு  தொட்டி பக்கம் திரும்ப ஆரம்பிக்கும்.

அடுத்து, கிலோ கணக்குல ஊற வச்சிருக்கிற புண்ணாக்கை எடுத்து வந்து, தொட்டியில போட்டு, கொஞ்சம் தவுட்டையும் கொட்டி, மட்டையை எடுத்து, நல்லா கலக்கு, கலக்குன்னு ரெண்டு பெரும் மாறி, மாறி கலக்குவாங்க.

மாடுங்கள நல்லா பட்டினி போட்டு, வயிர காயவிட்டு, அதுக்கு பிறகு தீனி போட்டாதான், அது, வயிறு முட்ட சாப்புடும்னு, அவர் சிஷ்யன்கிட்ட சொல்லுவாரு.

அதுக்கு பிறகுதான் அந்த மாடுங்கள, சிஷ்யன் அவுத்து விடுவான்.

அவன், அவுத்து விட்ட பிறகு, அடுத்த காட்சிய பாக்கணுமே…

அந்த மாடுங்க ஒரே மூச்சில, ஒரு தொட்டி தண்ணியையும் குடிச்சி முடிச்சிடும்.

அதப் பாக்கும்போது தான், காஞ்ச மாடு கம்புல உழுந்த கதைன்னா என்னன்னு? நமக்கு தெரியும்.

எல்லா தண்ணியையும் ஒரே மூச்சில குடிச்சதால, அந்த மாடுங்களோட வயிறு, கொட்டாப்புட்டி மாதிரி பொடைச்சிக்கிட்டு  நிக்கும்.

காலையில குளியல், மூணு வேலையும் தவுடு, புண்ணாக்கு கலந்த கழனி தண்ணி, பகல் பூரா விரும்பி திங்கிற அளவுக்கு புல்லு, விடியிற வரைக்கும்  வைக்கோலுன்னு அந்த ஒரு வாரத்துல, அந்த மாடுங்க ரெண்டும் அப்படி ஒரு விருந்த அனுபவிக்கும்.

அதுங்களுக்கு மட்டும் பேச தெரிஞ்சா, இப்படி ஒரு பரோபகாரிய, ஒலகத்துல வேற எங்கேயுமே பாக்க முடியாதுன்னு வாழ்த்துற அளவுக்கு, அப்படி ஒரு கவனிப்பு கவனிப்பாரு கிருஷ்ண படையாட்சி.

இன்னிக்கா, நாளைக்கா’ங்கிற நெலமையில வந்த, அந்த ஒரு அந்த மாடுங்களோட தோற்றமே சுத்தமா மாறி போயிருக்கும். ஒரு வார கவனிப்புல, மாடுங்க ரெண்டும், நல்லா தெளிஞ்சி  தெம்பா, பளபளப்பா இருக்கும்.

ஒரு வாரமா, மாடுங்களுக்கு விருந்து மட்டுமே குடுத்துட்டு வந்த படையாட்சி, அதுக்கு பிறகு விருந்தோட சேர்த்து,  வைத்தியமும் செய்ய ஆரம்பிப்பாரு.

வழக்கம் போல, காலையில் குளுப்பாட்டுவார். கொஞ்ச நேரம் வெயிலில் கட்டிப்போடுவார். அடுத்து, தவுடு புண்ணாக்கு கலந்த கழனி தண்ணியை குடிக்க வைப்பார்.

அதுக்கு பிறகு, கொட்டாயில கட்டுறதுக்கு பதிலா, தோட்டத்தில இருக்கிற பூவரசு மரத்துல கொண்டு போயி, அறுத்துக்கிட்டு ஓடிடாம இருக்குற மாதிரி, வரிக்கயித்தால நல்லா இறுக்கிக் கட்டுவாரு.

அவ்வளவுதான்…அப்படியே தயாரா வச்சி இருக்கிற, உடைஞ்சி போன, நுகத்தடிய எடுத்துட்டு வந்து, ஒரு அரை மணி நேரம், அடியோ, அடின்னு மாடுங்கள போட்டு அவ்வளவு அடி அடிப்பாரு.

அந்த அடி தாங்க முடியாம, மாடுங்க அலறி, அலறி கத்தும். எப்படியாவது தப்பிச்சி ஓட முயற்சி செஞ்சி, அப்படியும், இப்படியம் பாயும்.

ஆனாலும், அவரு அடிக்கிறத நிறுத்த மாட்டாரு. அடிச்சி, அடிச்சி அவரு கையே மறத்து போன பிறகுதான், அடிக்கிறத நிறுத்துவாரு.

அதுக்கு அப்புறம், மாடுங்க கிட்ட போனா, பயத்துல மெரளுமுன்னு அவருக்கு தெரியும். அதனால, அவரு சிஷ்யன் மணியை விட்டு அவுத்து, கொட்டாயில கொண்டு போயி கட்ட சொல்லுவாரு.

தீனி போட்ட மகராசன்’னு வாழ்த்துறதா? இப்படி சித்திரவதை செய்யுற எமனேன்னு சபிக்கிறதான்னு தெரியாம மாடுங்க தவிக்கும்.

அடுத்த ரெண்டு மூணு நாளைக்கு. அவரோட சிஷ்யன் மணிதான், மாடு குளிப்பாட்டுறது, தண்ணி காட்டுறதோட, விருந்து படைக்கிற வேலையையும் செய்வான்.

நுகத்தடி வைத்தியத்த மட்டும் கிருஷ்ண படையாட்சி பார்த்துக்குவாரு.

இப்படியே ஒரு ரெண்டு மூணு நாள், மாடுங்களுக்கு விருந்தும், வைத்தியமும் மாறி மாறி நடக்கும்.

அதுக்கு பிறகு, மாட்டுக் கொட்டாய் பக்கம், அப்படி – இப்படி போகும் போதும், வரும் போதும், தொண்டைய கணைக்கிற மாதிரி ஒரு சவுண்டு கொடுப்பார்.

அந்த கணைப்பு சத்தத்தை கேட்ட அடுத்த நொடியே, அவ்வளவுதான், எங்கே, நுகத்தடியோட அவரு வரப்போறாரோ’ ங்குற பயத்துல, மாடுங்க ரெண்டும், கயிற அறுத்துக்கிட்டு ஓடுறது மாதிரி, மிரளும்,  அங்கேயும் இங்கேயும் தாண்டி குதிக்கும்.

இதுதான், மாடுங்களை விக்கிறதுக்கு சரியான தருணமுன்னு, அவருக்கு தெரியும்.

அப்புறம் தான், வெளியூருல இருக்கிற மாட்டு தரகருங்க கிட்ட விஷயத்த சொல்லுவாரு இவரு.

எப்படித்தான் வருவானுங்க’ன்னே தெரியாது. யாரு மூலமாவோ, எங்கேருந்தோ, ஒருத்தவன், இவருகிட்ட எமாறனுமுன்னே வருவான்.

வந்தவன்கிட்ட இப்படித்தான் மொதல்ல ஆரம்பிப்பாரு..

ஏண்டா தம்பி… உன்ன பாத்தா, ஒடம்புல வலுவு இல்லாதவன் மாதிரி தெரியுதே… என்னோட மாடுங்க ரெண்டும், மொரட்டு காளையாச்சே… அதை எப்படி ஒன்னால சமாளிக்க முடியும்னு? ஒரு கேள்விய  போடுவாரு.

சாதாரணமாவே, ஒழவு மாடு வாங்குறவங்க, அது நல்லா மொரட்டு தனமா இருந்தாதான் நல்லா ஒழைக்கும்’னு நெனைப்பாங்க.

அத மனசுல வச்சித்தான் படையாட்சி, அப்படி ஒரு வார்த்தைய ரொம்ப எசைவா போட்டு வாங்குவாரு.

நம்ம மாடுங்க, சும்மா அப்ப சப்பையான மாடுங்க இல்ல தம்பி. ரொம்ப மொரட்டு மாடுங்க. அதுல எந்த பிரச்சினையும் இல்ல. ஆனா, ஒங்களை பாத்தா…அந்த மாடுங்கள அடக்கி ஆளுற திராணி இருக்குற மாதிரி தெரியலையே’ன்னு… மேலும் ஒரு பீதிய கெளப்புவார்  கிருஷ்ண படையாட்சி.

மாடு வாங்க வந்தவங்கள, வெறுப்பேத்துற மாதிரியே பேசி, பேசி வெலையையும் நைசா எத்திகிட்டு இருப்பாரு அவரு.

அவரு பேசுனத கேட்டவங்க, நம்மள இந்த கெழவன் “சொத்தப்பய” ன்னு, நெனச்சிட்டான் போல, அதனால, எவ்வளவு வெலையா இருந்தாலும், கண்டிப்பா வாங்காம போகக் கூடதுன்னு ஒரு முடிவுக்கு வந்துடுவாங்க.

அதை எதிர்பார்த்து தானே, படையாட்சியும் அப்படி பேசிக்கிட்டு இருக்காரு..

சரி..சரி, மாடுங்கள அடக்கி ஆளுறது, எங்க சமாச்சாரம்… அத நாங்க பாத்துக்குறோம். மொதல்ல, மாடுங்கள காட்டுங்க, அப்புறமா வெலைய சொல்லுங்க’ன்னு கேட்பான், மாடு வாங்க வந்தவன்.

அடுத்த நொடியே.. படையாட்சியோட பார்வை, சிஷ்யன் பக்கம் திரும்பும்.

டேய் மணி… இந்த தம்பிக்கு, நம்ம காள மாடுங்கள காட்டுடா..

கொஞ்சம் தள்ளியே நிக்க வச்சி காட்டு… திடீருன்னு மிரண்டு பாய்ஞ்சிட போகுதுன்னு, கொஞ்சம் எச்சரிக்க செய்யிற மாதிரியும் சொல்லுவாரு.

அவருக்கு தகுந்த மாதிரியே… மணியும், மாட்டுக் கொட்டாயிக்கு அவங்கள அழச்சிக்கிட்டு போவான்.

கிட்ட போனதும் … நீங்க கொஞ்சம் தள்ளியே நில்லுங்க… புதுசா யார பாத்தாலும் நம்ம மாடுங்க மெரளும். அதோட, மொரட்டு மாடுங்களாச்சா, கயித்த அறுத்துக்கிட்டா, பிறகு அதைப்புடிச்சி கட்டுறது, ரொம்ப கஷ்டம்னு என்று சொல்லிக்கிட்டே… தன்னோட குருவுக்கு, கண் ஜாட காட்டுவான் மணி.

அந்த நேரம் பார்த்து… திடீர்னு, தொண்டைய கணைக்கிற மாதிரி, ஒரு சவுண்டு கொடுப்பார் படையாட்சி.

அவ்வளவுதான்… எங்கே நுகத்தடியை எடுத்துக்கிட்டு அடிக்க வரப்போகிறாரோ’ங்குற  என்ற பயத்த்துல, மாடுங்க ரெண்டும், கயித்த அறுத்துக்கிட்டு ஓடுற மாதிரி, வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதிக்கும்.

அந்த மிரட்சியில, கட்டி இருக்கிற கவணை, கொட்டாய்’னு எல்லாத்தையும், மாடுங்க ரெண்டும்,  ஒரு உலுக்கு உலுக்கி எடுத்துவிடும்.

அதப் பார்த்த பிறகு, மாடு வாங்க வந்தவன் எதுவுமே பேச மாட்டான். அவரு சொன்ன வெலையை கொடுத்துட்டு, அந்த மாடுங்கள வாங்கிக்கிட்டு போயிக்கிட்டே இருப்பான்.

அதுக்கு பிறகு, படையாட்சி சொல்லுற மாடு வெலை, ஒரு பைசா கூட கொறையாது.

பேசுன வெலைய குடுத்து வாங்கிட்டு, அவன் மாட்டோட கெளம்புவான்.

அப்போ, ஒரு வார்த்தைய மறக்காம சொல்லுவாரு படையாட்சி…

அந்த வார்த்தைதான், அவரோட வியாபார ரகசியம்’னு, அப்புறம்தான் மத்தவங்களுக்கு புரியும்.

இதோ பாரு தம்பி…

சாவுற நிலமையில இருக்குற மாடு கூட, என்னோட மாட்டுக் கொட்டாயிக்கு வந்துட்டா சிங்கம் மாதிரி சீறி பாயும். அந்த அளவுக்கு,   “மாட்டு ராசி” உள்ளவன் நான்.

அதுதான் அந்த வார்த்தை

இப்படித்தான் கிருஷ்ண படையாட்சி வித்த மாட்டுங்களும், பிச்சக்கண்ணு செட்டியார் வாங்குன மாடுங்களும், கொஞ்ச நாளுல செத்துகிட்டே இருக்கும்.

ஆனாலும், செட்டியார் மாடு வாங்குறதையும், படையாட்சி மாடு விக்கிறதையும், அவங்க ஆயுள் உள்ளவரைக்கும் நிறுத்தவே இல்ல.