“கடைமுடி நாட்கள்” …சிறுகதை!

–ராஜேந்திரன்

ஆறு நிமிட வாசிப்பு…

பிறந்த ஊரைப்பற்றி பெருமையாக பேசுவது,  எல்லோருக்குமே அலாதியான ஆனந்தம் தரும் விஷயம்தான். நான் மட்டும் அதில் விதிவிலக்கா என்ன?

ஊரின் தொடக்கமும் முடிவும் காவிரியால் அளக்கப்படும் ஊர். தெருக்கள், குடியிருப்புக்களை விட, நீர் நிலைகளும், வயல் வெளிகளுமே நிறைந்த ஊர்.

கிழக்கே ஓடிவரும் காவேரி, எங்கள் ஊரில்தான் ஒரு இடத்தில் மேற்கு நோக்கி திரும்பி, மீண்டும் கிழக்காக பாயும்.

புராண காலத்தில் வாழ்ந்த, சகுந்தலையின் வளர்ப்பு தந்தை கண்வ மகரிஷி, இந்த இடத்தில் வந்து தவம் புரிந்தே, தமது தவ வலிமையை பெருக்கிக்கொண்டார் என்பது ஐதீகம். இன்றும் அந்த இடம் கண்வ மகரிஷி துறை என்றே அழைக்கப்படுகிறது.

காஞ்சி பெரியவர் கூட, ஒரு முறை இந்த இடத்திற்கு வந்து, சிறப்பு பூஜைகள் எல்லாம் செய்து விட்டு போனார் என்று, ஊர் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எங்கள் ஊரில் உள்ள சிவாலயமும் பாடல் பெற்ற ஸ்தலம்தான். மேற்கு பார்த்து அமர்ந்திருக்கும், எங்கள் சிவனுடைய பெயர்  கடைமுடி நாதர். அம்பாள் அபிராமி.

சீர்காழியில் உதித்த மகான் திருஞான சம்பந்தர், எங்கள் ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை போற்றி பதிகம் பாடியுள்ளார்.

அவர் கடைசியாக பதிகம் பாடிய ஸ்தலம் என்பதால், எங்கள் ஊருக்கு திருக்கடைமுடி என்றும், எங்கள் சிவன் கடைமுடிநாதர் என்றும் போற்றப்படுகிறார்.

கோயிலின் தல விருட்சம் கிளுவை மரம். அதனால், கடைமுடி என்ற எங்கள் ஊர், ஆரம்பத்தில் கிளுவையூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அது, கீழையூராக மருவி விட்டது.

எங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு தெருக்களும் ஒவ்வொரு ஊரைப் போலவே, இருநூறு முன்னூறு வீடுகளை கொண்டிருக்கும். அதனால் ஏழூர் சேர்ந்த கீழூர் என்றே சொல்வார்கள்.

“அருத்தனை அறவனை அமுதனை,நீர்

விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,

ஒருத்தனை, அல்லதுஇங்கு உலகம்ஏத்தும்

கருத்தவன், வளநகர் கடைமுடியே”

என்று, திருஞான சம்பந்தர், தம்முடைய பாடல்கள் ஒவ்வொன்றிலும், எங்கள் ஊரை “வளநகர்” என்றே போற்றிப் பாடியுள்ளார். அந்த அளவுக்கு முப்போகம் விளைந்த வளம் கொழிக்கும் ஊராக திகழ்ந்துள்ளது.

அதே போல்,

“அடிமுடி காண்கிலர் ஓர்இருவர்,

புடைபுல்கி அருள்என்று போற்றிசைப்பச்

சடையிடைப் புனல்வைத்த சதுரன்இடம்,

கடைமுடி அதன் அயல் காவிரியே”

என்று, மற்றொரு பாடலில், எங்கள் ஊரின் முக்கிய அடையாளமான  காவிரியையும் குறிப்பிட்டு, திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

எங்கள் ஊரின் அடையாளங்கள் அனைத்துமே, சோழ நாட்டின் அடையாளம்தான்.

அதற்கேற்ப, எங்கள் ஊரில் அரண்மனை என ஒன்று இருந்தது. அரண்மனை என்றால், தஞ்சாவூர் அரண்மனை போல பிரம்மாண்டமாக  இருக்காது. சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட ஒரு பழைய காலத்து சுற்றுக்கட்டு கட்டிடம்தான்.

ஆனால், அரண்மனைத்தோட்டம் என்பது ஒரு ஊரையே வளைத்து வைத்திருக்கும். அங்கே, வேறெங்கும் காண முடியாத விதவிதமான பூச்செடிகளும், மரங்களும் நிறைந்து இருக்கும்.

தஞ்சையை தலைநகராக கொண்டு, சில காலம் ஆட்சி செய்த சரபோஜி மன்னருக்கு, வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற, ஒரு குடும்பம் அந்த அரண்மனையில் வசித்தது.

அவர்கள் யாரும் தமிழர்கள் அல்ல. மராட்டியர்கள் என்பது, பல ஆண்டுகளுக்கு பிறகே எனக்குத் தெரிந்தது. எனக்கு வெளி உலகம் தெரிந்த காலத்தில் எல்லாம் அவர்கள் அங்கு இல்லை.

எங்கள் ஊரை சேர்ந்த சிலரும், வெளியூரை சேர்ந்த சிலரும், அவர்களின் வீடு, தோட்டம் போன்றவற்றை எல்லாம் வாங்கி விட்டனர். ஆனாலும், அந்த அரண்மனையின் எச்சங்கள் அனைத்தும், இன்னும் முற்றிலுமாக அழிந்து விடவில்லை.

எங்கள் ஊரின் ஒட்டுமொத்த நிலமும், அந்த குடும்பத்திற்கு சொந்தமானது என்றும், அந்த நிலங்களை எல்லாம் ஊரில் உள்ளவர்கள் குத்தகைக்கு  எடுத்து சாகுபடி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பெரியவர்கள் சொல்வார்கள்.

அந்த குடும்பத்தின் கடைசியாக வசித்த இரண்டு அண்ணன் தம்பிகளில், மூத்தவருக்கு குழந்தை இல்லை. இளையவருக்கு மட்டுமே குழந்தை இருந்தது.

மூத்தவர் இறந்தபோது, அவரது மனைவியும் உடன் கட்டை எறிவிட்டாராம். அதனால், இளையவரின் குழந்தை மட்டுமே, அத்தனை சொத்துக்களுக்கும் வாரிசாக வந்தது.

அறுபது வயதை கடந்த பின்னரும், அந்த வாரிசை அனைவரும் குழந்தை என்றே அழைப்பார்கள்.  “அரண்மனை குழந்தை” என்பது அவரை குறிப்பிடும் வார்த்தையாக இருந்தது.

அந்த அரண்மனை தெருவை ஒட்டியபடி, நான்கைந்து தெருக்கள் இருக்கும். அதில், ஒரு தெருவில்தான் எங்கள் வீடு இருந்தது.

அப்போது நான் மட்டுமே பட்டப்படிப்பு படித்துக் கொண்டு இருந்தேன். அதனால், என்னிடம் அந்த அறுபது வயது குழந்தை அவ்வப்போது பேசுவார்.

இப்போது, அந்த குழந்தையும் இறந்து விட்டாராம். குழந்தையின் குழந்தை, கோயம்புத்தூரில்,  ஏதோ பெரிய அளவில் பிஸ்னஸ் செய்து கொண்டு இருக்கிறார் என்று ஊரில் பேசிக்கொள்கின்றனர்.

காவிரிக்கரையை ஒட்டியே, அரண்மனை அமைந்து இருக்கும். அதனால், குளிக்க செல்லும் போதெல்லாம், அரண்மனையை கடந்தே செல்ல வேண்டும்.

அந்த தெருவுக்குள் நுழைந்ததுமே, வெவ்வேறு விதமான மலர்களின் வாசனை மூக்கை துளைக்கும்.

கொன்றை, யானைப்பூ, மகிழம்பூ, நாகலிங்கம் பூ, பிச்சிப்பூ, இன்னும்  பெயரே தெரியாத நூற்றுக்கணக்கான பூக்கள் அந்த தெரு முழுவதுமே மணம் பரப்பிக்கொண்டே இருக்கும்.

எங்கள் ஊரின் தலை காவேரி என்றால், நுழைவு வாயில் சுண்டிக்குளம், அடுத்து தாமரைக்குளம், திருக்குளம், பிள்ளையார் கோயில் குளம், வண்ணான் குட்டை என ஊரின் எல்லையில் அமைந்துள்ள, செல்லக்கொயில் தெரு வரை எண்ணற்ற குளங்கள்.

ஊரின் வடக்கு எல்லையில், ரெட்டை வாய்க்கால், வடகிழக்கு எல்லையில் காவேரி என எல்லாமே நீரால் சூழப்பட்டதே எங்கள் ஊர்.

இது தவிர, வயல்வெளிகளை ஒட்டி, வாய்க்கால்களும், ஏரிகளும் நிறைய உண்டு. இப்படியே எத்தனையோ விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இவை அனைத்தும், எங்கள் ஊரில் பிறந்த அனைவருக்கும் பெருமை தரும் சங்கதிகள். அதை, எல்லோரும் பேசலாம், எப்போதும் பேசலாம்.

ஆனால், ஒவ்வொரு வீட்டின், தனிப்பட்ட அருமை பெருமைகளை அனைவராலும் பேச முடியுமா? அப்படித்தான் எங்கள் குடும்பத்திற்கும் சில பெருமைகள் உண்டு.

அந்த பெருமைகள் எல்லாம், இன்று கனவாக, பழங்கதையாக நினைவில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அது, அவ்வப்போது வந்து  என்னை ஆட்டிப்படைக்கும்.  அப்போதெல்லாம்,  நான் என்னை மறந்து,  அந்த நினைவுகளில் மூழ்கிப்போய் விடுகிறேன்…

ஒரு காலத்தில், அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்கா என எட்டு  பேர்களால் நிரம்பி வழிந்தது எங்கள் வீடு,

அங்கே, சிறகு விரித்து,  பறந்து, திரிந்து, அடைந்த அனைத்து பறவைகளும், வெவ்வேறு இடங்களுக்கு பறந்து வெகு நாட்கள் ஆகி விட்டன.

நான் சிறுவனாக இருந்த போது, நாங்கள் வசித்த, எங்களுடைய  பெரிய கூரை வீட்டை, ஓட்டு வீடாக மாற்றி அமைக்க, எத்தனையோ தடவை முயற்சி செய்தார் எங்கள் அப்பா.

ஆனால், ஏதோ ஒரு காரணத்தால், அது கடைசி வரை, முடியாமலே போய்விட்டது.

அதற்காக வாங்கிப் போட்ட செங்கற்களும், மரங்களும் கூட, வருடக்கணக்கில் கொல்லைப் புறத்தில் அப்படியே கிடந்தன.

ஒரு கட்டத்தில்,  தேள்,  பாம்புகள் எல்லாம் அதில் புகுந்து விடுகிறதே என்ற அச்சத்தில், செங்கற்கள் அனைத்தையும், அக்கம் பக்கத்தில், வீடு கட்டுபவர்களுக்கு கொடுத்து விட்டார் அப்பா.

ஆனால், மரங்களை மட்டும், மரவாடிக்கு கொண்டு சென்று, பலகைகளாக அறுத்து, ஆசாரியை வைத்து, வீட்டுக்கு தேவையான, கட்டில், பீரோ, நாற்காலி, மேஜை, நெல் சேமிக்கும் பத்தாயம் என்று பலவற்றை செய்து வீட்டை நிறைத்தார்.

அதனால், எல்லா வசதிகளும் நிறைந்த, ஒரு பெரிய கூரை வீடு என்ற அந்தஸ்துடன் இருந்தது எங்கள் வீடு.

ஓட்டு வீடு கட்ட முடியாமல் போய்விட்டதே என்ற ஒரு வருத்தம் எங்களுக்கு தொடர்ந்து இருந்தது.

ஆனாலும், அந்த கூரை வீடு,  எங்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அது, எல்லை இல்லாத ஆனந்தத்தை, எங்களுக்கு  வாரி வழங்கிக்கொண்டே இருந்தது.

வீட்டின் தென்மேற்கு மூலையை ஒட்டி, சற்று முன்னே, பால், தயிர், வெண்ணை நிரப்பட்ட சிறு, சிறு பானைகள் அடுக்கப்பட்டு, உறி தொங்கிக் கொண்டிருக்கும்.

அந்த மூலையில் உள்ள மண் சுவற்றை ஒட்டி, அடுக்குப்பானைகள் நிறைந்திருக்கும்.

உறிக்கும் அடுக்குபானைக்கும் இடையே எப்போதும், பூவன், மொந்தை, கற்பூரவல்லி, ரஸ்தாலி, பேயன் என ஏதாவது ஒரு வாழைத்தார் தொங்கிக்கொண்டே இருக்கும். சீசன் காலங்களில் மட்டும் பச்சை வாழைப் பழங்களை பார்க்க முடியும்.

தை மாதங்களில், அறுவடை நடைபெறும் சில நாட்களில், வீட்டில் படுப்பதற்கே இடம் இல்லாத அளவுக்கு நெல் மூட்டைகள் அடுக்கி கிடக்கும்.

வயல் களத்தில் இருந்து, மூட்டைகளை சுமந்து வரும்,  வண்டிகளின் அசைவில் சிதறும் நெல் மணிகள், சில நாட்களில் சாலையோரங்களில், நாற்றுக்கள் போலவே முளைத்துக் கிடக்கும்.

நெல் அறுவடை முடிந்த சில நாட்களில், உளுந்து பயிறு பறிக்கும் சீசனும் களை கட்ட ஆரம்பித்து விடும்.

அப்படியே, தேங்காய் எண்ணைக்காக, தோப்பில் இருக்கும் முற்றிய ஆயிரக்கணக்கான தேங்காயை பறித்துக் கொண்டு வரப்படும். நீண்ட அரிவாள் மற்றும் கோடரிகளால், அந்த தேங்காய்கள் ஒவ்வொன்றும் இரண்டாக பிளக்கப்படும்.

பிளக்கப்படும் தேங்காய்களில் இருந்து வழியும் தண்ணீர், கொஞ்சம் கீழே சிந்தினாலும்,  எஞ்சிய தண்ணீரை, லாவகமாக அருகில் வைத்திருக்கும், வாயகன்ற பெரிய பாத்திரத்தில் பிடிப்பார்கள்.

பாத்திரத்தில் நிரம்பிய தேங்காய் தண்ணீரை, தெருவில் உள்ள அனைவரும், தங்கள் வீட்டில் இருந்து, எடுத்து வரும் பாத்திரத்தில் நிரப்பி செல்வார்கள்.

அதை தேங்காய் வெட்டு திருவிழா என்றே நாங்கள் சொல்லிக் கொள்வோம்.

அடுத்து, அந்த தேங்காய்கள், இரண்டு மூன்று நாட்கள் காய வைக்கப்படும். பின்னர், கொட்டாங்கச்சியில் இருந்து தேங்காயை மட்டும் எடுத்து, பல கீற்றுக்களாக அரிந்து, வெயிலில் மீண்டும் காய வைக்கப்படும்.

அது, நன்றாக காய்ந்து எண்ணெய் எடுக்கும் பக்குவம் வரும்போது, செக்குக்கு எடுத்து சென்று எண்ணெய் பிழியப்படும்.

அதற்கு இடையே, புளியம்பழம் உலுக்கி, ஓடுகளை உடைத்து, புளியில் இருந்து கொட்டை நீக்கி, காயவைத்து பானைக்குள்  அடுக்கி வைக்கும் வேலையும் நடக்கும்.

வியாபாரிகளுக்கு போட்டது, பழமாக தின்றது போக, மீதமுள்ள மாங்காய்கள் மற்றும் எலுமிச்சைகள், நாரத்தைகள் போன்றவற்றை ஊறுகாய் போடும் பணிகளும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டே இருக்கும்.

இது தவிர, ஆடு, மாடு, கோழி பராமரிப்பும் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கும்.

ஆடி மாதம் காவேரியில் தண்ணீர் வர ஆரம்பித்தது தொடங்கி, சித்திரை, வைகாசியில் அது வற்றிப்போகும் வரை, ஒவ்வொரு பருவத்திலும்,  சுழற்சியாக, ஒவ்வொரு வேலையும், எந்த இடைவெளியும் இல்லாமல் எங்கள் வீட்டில் நடந்து கொண்டே இருக்கும்.

எப்போது பார்த்தாலும், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லாமல், மேலும் நான்கைந்து ஆண்கள், பெண்கள் இல்லாமல் எங்கள் வீடு இருந்ததே இல்லை.

வீடு இப்படி இருந்தது என்றால்… தெரு எப்படி இருக்கும்?

சூரியன் அஸ்தமனம் ஆகி, இருள் கவ்வ தொடங்கும்போதே, தெருக்களின் சந்திப்பு, குடிநீர் ஆதாரமாக விளங்கி, பின்னர் பயன்பாடற்றுப் போன கேணிக்கரை சுவர்கள், மழை வடிகால் கால்வாயின் மதகுகள், எப்போதாவது வந்து செல்லும் பேருந்துகள் நின்று செல்லும் நிறுத்தங்கள்  போன்றவற்றில், பெருசுகளும், இளசுகளும் நடுஜாமம் வரை ஏதேதோ கதைகளை பேசிக்கொண்டே பொழுதை கழிப்பார்கள்.

புதியவர்கள் யாராவது வந்தால், அவர்களின் விசாரிப்புகளை கடந்துதான், உரியவர்களின் வீடுகளுக்கு சென்று சேர முடியும்.

ஆனால் இன்றோ, எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது..

மாலை ஆறு ஏழு மணிக்கெல்லாம் யாரும் வெளியே வருவது கூட இல்லை. எல்லா மனிதர்களும் அவரவர் வீட்டு தொலைகாட்சி நெடுந்தொடர்களுக்கு அடிமையாகி, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

ஊர் தான் அப்படி மாறி விட்டது என்றால்…

எத்தனையோ ஜீவன்கள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்த, எங்கள் கூரை வீடு முற்றிலுமாக தடயம் அழிந்து, தென்மேற்கு மூலையில், அரசு உதவியுடன் கட்டப்பட்ட சிறு கான்கிரீட்  வீடாக சுருங்கிப்போய் விட்டது.

அங்கே புழங்குவதற்கு கூட, ஆட்கள்  இல்லாமல் அனாதையாக  வெறிச்சோடிக் கிடக்கிறது….

இதை எல்லாம் அவ்வளவு எளிதாக எப்படி மறக்க முடியும்?.

அந்த காலத்திற்கு மீண்டும் திரும்ப முடியாது என்று நினைக்கும்போது, கண்களோடு இதயமும் கலங்கத்தானே செய்கிறது.

நீர் நிலைகள் வற்றி மீண்டும் நிரம்பும்போதும், இலையுதிர் காலம் முடிந்து, வனத்தின் மரங்கள் மீண்டும் துளிர்விடும் போதும், விலகிச்சென்ற பறவைகள் அனைத்தும், மீண்டும் அங்கே நிச்சயம் திரும்பி  வரத்தொடங்கும்.

ஆனால், நாங்கள் பாடித்திரிந்த வனம் மீண்டும் துளிர்ப்பதற்கோ,  நீந்தித்திரிந்த குளத்தில் மீண்டும் நீர் நிரம்பவோ… வாய்ப்பே இல்லை என்பது நிதர்சனமாக தெரிகிறது.

ஆனாலும், அந்த “கடைமுடி நாட்களின்”  நினைவுகள் மட்டும்  வற்றிப்போக மறுக்கின்றன.