“நெஞ்சுக்கு நிம்மதி” …. சிறுகதை!

 -ராஜேந்திரன்

ஐந்து நிமிட வாசிப்பு…

வாய்ப்பே கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு மத்தியில், கிடைக்கும் வாய்ப்பையும், புறம் தள்ளுபவர்களை வேடிக்கை மனிதர்கள் என்பதா? விளங்காதவன் என்பதா?

ஆனால் இந்த இரண்டு வரையறைக்குள்ளும் அடங்காதவன்தான் தருமன்.

எந்த வேலையை செய்தாலும், மிக நேர்த்தியாக, நிர்ணயிக்கப்பட்ட கால கட்டத்தில் செய்து முடிக்கும் ஆற்றல், அவனுக்கு இயல்பாகவே இருந்தது.

அன்றாட நாட்டு நடப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பான். அரசியல், வரலாறு, கலை, இலக்கியம் என அனைத்திலும் அவனுக்கு ஈடுபாடும் ஞானமும் இருந்தது.

அடுத்தவர்கள் ஆலோசனையோ, அறிவுரையோ சொல்லும் அளவுக்கு அவன் அறிவிலும், ஞானத்திலும், சமயோசித புத்தியிலும் கொஞ்சமும் குறைந்தவன் அல்ல.

உனக்கு இருக்கும் திறமையில், பாதி இருந்தால் கூட, நான் இவ்வளவு நேரம் நம்முடைய துறையில் உச்ச நிலையை அடைந்திருப்பேன். ஆனால், நீ எதற்காக இப்படி கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்துக் கொண்டே இருக்கிறாய்? என்று அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் பலரும் அவனிடம் அடிக்கடி கேட்பதுண்டு.

அதற்கெல்லாம்… அதை விட்டுத்தள்ளுங்கள்… பார்த்துக் கொள்ளலாம் என்று சிரித்துக் கொண்டே முற்றுப்புள்ளி வைத்து விடுவான் தர்மன்.

ஆனால், அண்மையில் அவன் நிராகரித்த வாய்ப்பு, அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.

அதுதான், அவனுடைய நண்பர்களையும், நல விரும்பிகளையும், மிகவும் கவலை அடைய வைத்து விட்டது.

தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு, அறிக்கை எழுதிக் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சியில் அன்றாடம் நடைபெறும் அரசியல் விவாதத்தில், அந்த கட்சியின் பிரதிநிதியாக பங்கேற்க வேண்டும். அதுதான் அந்த வாய்ப்பு.

அந்த வாய்ப்பை எதிர்நோக்கி, எத்தனையோ பேர் கால் கடுக்க காத்திருக்கின்றனர். சிலர், அந்த தலைவருக்கு நெருக்கமான புள்ளிகளை அணுகி, தங்களை பரிந்துரைக்குமாறு தொடர்ந்து நச்சரித்து வருகின்றனர்.

ஆனால், தானுண்டு, தன் வேலையுண்டு என்று அந்த ஊடகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தர்மனுக்கு மட்டுமே, அந்த வாய்ப்பு  தானாக தேடி வந்தது.

தாமாக வீடு தேடி வந்து, வாசல் கதவை தட்டிய மகாலக்ஷ்மியை, வேறு இடம் போய் பார் என்று, விரட்டி அடிப்பவன், இந்த காலகட்டத்தில் தர்மனைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

இதை எப்படி தர்மனுக்கு புரிய வைப்பது? என்று தவித்த சிவா, ஒரு கட்டத்தில் எண்டா இப்படி செய்கிறாய்? என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.

வாங்கும் சம்பளம், கைக்கும் வாய்க்குமே சரியாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும், இதைவிட பல மடங்கு சம்பளம் கிடைக்கும்.

வீட்டு வாடகை, இதர செலவுகள் எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொள்வார். பெட்ரோல் செலவு, டிரைவர் சம்பளத்துடன் ஒரு கார், அதோடு, அடிக்கடி தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்கும் பப்ளிசிட்டி..

இதெல்லாம் கிடைத்தும், அதை சர்வ சாதாரணமாக நிராகரிக்கிறாயே… உண்மையில் நீ வேடிக்கை மனிதனா? இல்லை விளங்காதவனா? என்றே கேட்டு விட்டான் அவன்.

இதைத்தவிர, உன்னால் வேறு எதை கேட்க முடியும் என்று சிவா?

என்னை முட்டாள் என்று சொல்லலாம். மூடன் என்று சொல்லலாம். பிழைக்க தெரியாதவன் என்று சொல்லலாம். விளங்காதவன் என்று சொல்லலாம்…

இன்னும் என்னென்னவோ சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்லலாம். ஆனால், இதை எல்லாம், நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், கடந்து சென்று கொண்டே இருப்பேன் என்று கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சொன்னான் தர்மன்.

தர்மனிடம் இருந்து, இப்படி ஒரு பதில் வரும் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை சிவா…

இதோ பாருடா தர்மா… நீ நல்லவன், அறிவாளி, திறமையானவன் என்று எல்லோருக்கும் தெரியும்… இவ்வளவு நல்ல குணங்கள் இருந்தும், நீ கஷ்டப்பட கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் நான் கேட்கிறேன்.

நீ அந்த செய்தி தொடர்பாளர் வேலையை வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் என்ன? அதற்கான காரணத்தை என்னிடமாவது சொல்.. என்று விடாப்பிடியாக வற்புறுத்தினான் சிவா.

சிவா இவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், எந்தவித… டென்ஷனும் இல்லாமல், மறுபடியும்… புன்முறுவலோடு, பேசினான் தர்மன்.

வரும் தேர்தலுக்கு, எங்கள் கட்சிக்காக ஒரு தேர்தல் அறிக்கை தயாரித்து கொடு என்றால், அதை செய்து கொடுக்கலாம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு பலனளிக்கும் அளவுக்கு ஒரு திட்டத்தை தயாரித்துக் கொடு என்றால் அதை செய்யலாம். அதுவும் இல்லை, என்னை பற்றி புகழ்ந்து ஒரு கட்டுரை எழுத்திக்கொடு என்றால் கூட எழுதிக் கொடுக்கலாம்.

ஏனென்றால், அவற்றால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால், அவர்கள் மீது மற்றவர்கள் சுமத்தும், ஊழல், அடாவடி போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து,  நாம் அறிக்கை தயாரித்து கொடுக்க வேண்டும்.

அதேபோல், தொலைக்காட்சி விவாதங்களில், அவர்களின் செய்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்தி பேச வேண்டும்… இதற்கு நான் தானா கிடைத்தேன்? அன்று ஆதங்கப்பட்டான் தர்மன்.

அப்போது… அவன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த தெரு நாய் ஒன்று எதையோ பார்த்து குரைத்தது. அந்த சப்தத்தால் இவர்களால் பேச முடியவில்லை.

அந்த ஒரு நாய் குரைத்ததைக் கேட்டு, தெருவில் உள்ள அனைத்து நாய்களும் குரைக்கத் தொடங்கி விட்டன. அவர்கள் இருவரும் காதை பொத்திக் கொள்ளும் அளவுக்கு அந்த சப்தம் இருந்தது.

ஒரு வழியாக தெரு நாய்களின் சப்தம் முடிவுக்கு வந்த பின்னரே, அவர்கள் இருவரும், மீண்டும் பேச்சை தொடங்கினர்.

ச்சே… இந்த நாய்கள் போட்ட சப்தத்தில் நம்மால், எதையும் பேச முடியாமல் போய்விட்டது என்று அலுத்துக் கொண்ட சிவா, நீ என்ன சொன்னாய் மீண்டும் அதை சொல் என்றான்.

தர்மன் தொடர்ந்தான்…

இப்படித்தான், ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்பு, அடுத்தடுத்து எழும் பல்வேறு பிரச்சினைகளால், முதலில் எழுந்த பிரச்சினை மறந்து போய்விடும் என்று நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தான்.

இப்போது, நீ எதற்கு சிரித்தாய்… எனக்கு புரியவில்லையே என்றான் சிவா?

லஞ்சம், ஊழல், குற்றச்செயல்கள் போன்றவற்றால் ஆதாயம் பார்ப்பது அனைத்தும், தலைமையும், அதை சூழ்ந்து இருக்கும் சில முக்கிய புள்ளிகள் மட்டுமே.

ஆனால், அதற்காக வாதாடுவதற்கும், நியாப்படுத்துவதற்கும் நம்மைப்போன்ற, கூலிக்கு மாரடிக்கும் ஆட்கள் அவர்களுக்கு தேவை.

தலை கறி கேட்டாலும், குடல் கறி கேட்டாலும், கொஞ்சம் கூட இரக்கமே இல்லாத கசாப்பு கடைக்கார்கள் மட்டுமே அவர்களுடைய தேவை.

மறுபக்கம், உண்மையை பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் புனையும் வித்தார கவிகளும் தேவை.

நாம்தான் எறும்பை நடுக்கக்கூட, இருபது தடவை யோசிக்கறோம். நல்லதுக்கு பொய் சொல்லக்கூட கூனிக் குறுகி நிற்கிறோம். நம்மால் எப்படி அந்த வேலையை செய்ய முடியும்? என்று மனதில் உள்ளதை வெளிப்படையாகவே கொட்டினான் தர்மன்.

நீ சொல்வது எல்லாம் பேசுவதற்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா?

அறிக்கை விடுவதற்கும், விவாதம் செய்வதற்கும் கூட பாவ புண்ணிய கணக்கு பார்த்தால், எப்படி முன்னுக்கு வர முடியும்? நீ நினைப்பது தவறு தர்மா..

இந்த வாய்ப்பு, தமக்கு கிடைக்காதா? என்று எத்தனை பேர் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? என அக்கறை கலந்த கோபத்தோடு கொந்தளித்தான் சிவா.

நீ ஏன் டென்ஷன் ஆகிறாய் சிவா?.. அந்த வேலை எனக்கு ஒத்து வராது என்று எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது மீண்டும், மீண்டும் அதைப்பற்றி பேசி ஆகப்போவது என்ன?

இதுவரை என் மீது எந்த அரசியல் சாயமும் படவில்லை. நான் பொதுவானவன். நாளைக்கே, அந்த செய்தி தொடர்பாளர் வேலைக்கு சென்று விட்டால், அவர்களின் நண்பர்கள் மட்டுமே நமக்கு நண்பர்கள். அவர்களின் எதிரிகள் நமக்கும் எதிரிகள்.

உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நிகழும் கல்யாணம், காது குத்தி, நல்லது, கெட்டது என எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அவர்கள் அனுமதி அளித்தால்தான் போகமுடியும். மீறி சென்றால், நமக்கு துரோகி பட்டம் சூட்டப்படும்.

வானத்தில் பறக்கும் பச்சை கிளியை பார். அதை கூண்டில் அடைத்து, மூன்று வேளையும் பாலும் பழமும் கொடுத்தாலும், அதற்கு மகிழ்ச்சி கிடைக்காது.

ஆனால், அது வெயில், மழை என நனைந்தாலும், வேளா வேளைக்கு தீனி கிடைக்காமல் ஒரு வேளை, இரண்டு வேளை பட்டினி கிடந்தாலும், சிறகை விரித்து வானத்தில் பறப்பதில்தான் அதற்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

நானும் அப்படித்தான், நான் தற்போது செய்யும் வேலை எனக்கு மன நிறைவை தருகிறது. நான் வாங்கும் சம்பளம் எனக்கு போதுமானதாக இல்லை என்பது உண்மைதான்.

ஆனாலும், அதற்கு ஏற்ப, என்னுடைய தேவையை சுருக்கிக் கொண்டும், வீண் செலவுகளை தவிர்த்தும வாழ்வதற்கும் பழகிக்கொண்டு விட்டேன்.

ஏனென்றால், இந்தப் பணியில் எனக்கு கிடைக்கும் சுதந்திரம், நல்ல  மன நிறைவை தருகிறது. அடுத்து, இதே போன்று மன நிறைவை அளிக்கும் மற்றொரு வேளை, இதைவிட கூடுதல் சம்பளத்தில் கிடைக்கலாம்.

அதுவரை… இந்த வேலையே எனக்கு போதும் என்று நினைக்கிறேன் என்று, மிக யதார்த்தமாகவும், ஒரு ஞானியை போலவும் பேசினான் தர்மன்.

அதன் பிறகு… சிவா எதுவும் அவனிடம் பேசவில்லை…

ஆனால் அவன் மனது இப்படித்தான் யோசித்தது…

தர்மன் வாசிக்கும் புத்தகங்கள், விவாதிக்கும் சப்ஜெக்ட்டுகள் போன்றவற்றில் இருந்து, எத்தனையோ புதுமையான, நவீன   உதாரணங்களை சொல்லி, தன்னுடைய நிலையை, அவன் தெளிவு படுத்தி இருக்கலாம்.

ஆனால், என்னுடைய சிந்தனையின் உயரம் இவ்வளவுதான் என்று, அவன் நினைத்து விட்டானோ என்னவோ?

சின்ன குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, கதை சொல்லி புரிய வைப்பதை போல, பச்சைக்கிளியின் வாழ்க்கை முறையை சொல்லியே… என்னை பேச முடியாமல் செய்து விட்டான்.

நான் இந்த நிமிடத்தை யோசித்தேன்… அவன் அடுத்த தலைமுறையை யோசிக்கிறான்.