காவலனா?….கள்வனா? சிறுகதை!

–ராஜேந்திரன்

ஐந்து நிமிட வாசிப்பு….

பொழுதுக்கும் முகநூலிலேயே மூழ்கிக் கிடக்கும் விவேக், இரண்டு மூன்று நாட்களாக அந்தப்பக்கமே தலை வைத்து படுக்காதது, அவனது நண்பன் ஆனந்தனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அது, ஒரு வகையில் சந்தோஷம் என்றாலும், அவன் இயல்பான நிலையில் இல்லாதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

அவனுடைய நிலையில், திடீரென அப்படி ஒரு மாற்றம் வந்ததற்கு என்ன காரணம்? என்று அறிய நினைத்தான் ஆனந்தன்.

எண்டா… ரெண்டு மூன்று நாட்களாக ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? என்று விவேக்கை நேரடியாகவே கேட்டு விட்டான் ஆனந்தன்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை. முகநூலில் எந்த அளவுக்கு நல்ல விஷயம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அருவருப்பான விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்று அலுத்துக் கொண்டான் விவேக்.

அதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் நன்மைகளும் இருக்கும், தீமைகளும் இருக்கும். அதில், கெட்டதை ஒதுக்கிவிட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள பழகிக்கொள்ள வேண்டியத்தான் என்றான் ஆனந்தன்.

உண்மைதான்… இதுவரை நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு இருந்த எனக்கு, சில அருவருப்பான விஷயங்களை பார்க்கும்போது… கொஞ்சம் மனது சஞ்சலப்படுகிறது என்றான் விவேக்.

மனசு சஞ்சலப்படும் அளவுக்கு, அப்படி என்னதான் நடந்தது?  நீ எதைப்பார்த்து அப்செட் ஆனாய்? என்று மீண்டும் கேட்டான் ஆனந்தன்.

அது ஒன்றும் இல்லை. வழக்கமாக எனது முகநூல் பக்கத்திற்கு வரும் நட்பு அழைப்புக்களை, அவரவர் சுய விவர குறிப்புகளை, அறிந்த பின்னரே ஏற்பேன்.

அந்த வகையில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் எனக்கு நட்பு அழைப்பு விடுத்து இருந்தார். நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.

அதன் தொடர்ச்சியாக, அந்த நபரின் நட்பில் உள்ள சில பேரும், எனக்கு நட்பு அழைப்பு விடுத்து கொண்டே இருந்தனர்.  நானும், அவருடைய நண்பர்கள்தானே என்று ஏற்றுக்கொண்டேன்.

இப்படியே, ஒரே வாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர், எனது நட்பு வட்டத்தில் புதிதாக இணைந்தனர்.

இதெல்லாம் முடிந்து ஒரு வாரம்தான் இருக்கும்.

அவர்களில் ஒருவர் என்னுடைய மெசஞ்சரில் வந்து அவ்வப்போது, வணக்கம், நலமா? என்றெல்லாம் தினமும் அக்கறையுடன் விசாரிப்பார். நானும் மரியாதை நிமித்தமாக பதில் வணக்கம் சொல்லிவிட்டு, நலம் விசாரிப்பேன்.

திடீரென ஒரு நாள், அவர், ஆபாச வீடியோ ஒன்றை என்னுடைய மெசஞ்சருக்கு அனுப்பினார்.

எனக்கு சரியான கோபம் வந்து விட்டது. என்னை எவ்வளவு கேவலமாக நினைத்து விட்டான் அவன்?. அவனைப்போலவே என்னையும் எண்ணி விட்டானே? என்ற ஆத்திரம் வந்தது.

இருந்தாலும், அவனை திட்டியோ, வாக்கு வாதம் செய்தோ, என்ன ஆகப்போகிறது? என்று,  அவனை அன் பிரண்டு செய்து விட்டேன்.

அதன் பிறகும், மீண்டும், மீண்டும் நட்பு அழைப்பு கொடுத்துக் கொண்டே இருந்தான். நானும் ரிஜெக்ட் செய்து கொண்டே இருந்தேன்.

பின்னர், அவனைப்போலவே,  மேலும் சிலர் , அது போன்ற அருவருப்பான வீடியோக்களை அனுப்ப ஆரம்பித்தனர். எனக்கு டென்ஷன் அதிகம் ஆகிவிட்டது.

பார்த்தேன்… கடைசியாக,  நட்பு வட்டத்தில் இணைந்த, நூற்றுக்கும் மேற்பட்ட, நட்புக்கள் அனைத்தையும் முகநூலில் இருந்து  நீக்கிவிட்டேன்.

அத்துடன், எனக்கும்,  எனக்கு அறிமுகம் ஆன நண்பர்கள் வட்டத்தில் இருந்த நட்புக்களை மட்டும் ஏற்க ஆரம்பித்தேன்.

அதனால், முகநூலில் உள்ள அருவருப்பான ஜென்மங்கள் அனைத்தையும், முற்றிலுமாக களை எடுத்த நிறைவில், வழக்கம் போல என்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.

ஆனாலும், சில நாட்கள் கழித்து, நட்பில் இருந்து நீக்கப்பட்ட சில அருவருப்பான ஜென்மங்கள், மீண்டும் மீண்டும் நட்புக்கான அழைப்பு கொடுப்பதை நிறுத்தவில்லை.

எனக்கு கோபம் வந்தது. இவர்களை எல்லாம் கையும் களவுமாக பிடித்து, காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

நாம் பார்ப்பதே, மக்கள் தொடர்புடைய தொழில்தானே? காவல் துறை போன்ற அரசின் எந்த துறையில் நாம் புகார் அளித்தாலும், அதன் மீது உடனடியாக நடவடிக்கை இருக்கும் என்று தெரியும்.

ஆனாலும், இப்போது இருக்கும் நிலையில், அது தேவையற்ற ஒரு வேலை. அதனால், அதுபோன்ற நபர்களை நட்பு பட்டியலில் இருந்து  நீக்குவதோடு, மீண்டும் சேர்க்காமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டேன் என்றான் விவேக்.

ஆமாம்… நல்ல முடிவுதானே எடுத்து இருக்கிறாய்… ஆனாலும் அப்செட் ஆவது ஏன்? என்று கேட்டான் ஆனந்தன்.

உண்மைதான்… இந்த அருவருப்பான கும்பல், என்னுடைய நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் சிலருக்கும் இதேபோல், நட்பு அழைப்பு விடுப்பார்கள்.

இவர்கள், அழைப்பு விடுக்கும் நபர்களின் நட்பு வட்டத்தில்,  நான் இருப்பதைப்பார்த்து, என்னுடைய நண்பர்களும், அவர்களது அழைப்பை ஏற்பார்கள்.

அதன் பிறகு, எனக்கு அனுப்பியது போல, அவர்களுக்கும், இதுபோன்ற  அருவருப்பான வீடியோக்களை அனுப்புவார்கள்.

அப்போது, என்னுடைய நண்பர்கள், என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? நானும் அவர்களைப் போன்றவன் என்று நினைக்க மாட்டார்களா? என்ற கவலை எனக்கு வந்து விட்டது. அதை நினைத்துதான் நான் அப்செட் ஆகிவிட்டேன் என்றான் விவேக்.

சரிதான்… உன்னுடைய நண்பர்கள் யார் என்று சொல்?.. நீ யாரென்று சொல்கிறேன்… என்ற பழமொழியை உறுதிப்படுத்துவது போல உள்ளது உன் வருத்தம். இமேஜ் கான்சியஸ் உள்ளவர்களுக்கு, இதுபோன்ற கோபம் வருவது நியாயம்தான். இருந்தாலும் என்ன செய்வது? எத்தனை பேரிடம் சண்டைக்கு போவது? இப்படியே சண்டை போட்டுக்கொண்டே இருந்தால், நம்முடைய வேலையை பார்க்க நேரம் இருக்குமா? அதனால் ஒதுங்கி இருப்பதே உத்தமம் என்றான் ஆனந்தன்.

அத்துடன், இதுபோன்ற அருவருப்பான ஜென்மங்களுக்கு, இமேஜ் கான்சியஸ் என்று எதுவும் இருக்காது. அவர்களுடைய வக்கிர புத்தியை கட்டுப்படுத்தும் வழியும் தெரியாது. எப்போதாவது கையும், களவுமாக பிடிபட்டு அவஸ்தை பட்டால் கூட, அந்த சமயத்தில் சில நாட்கள் ஒதுங்கி இருப்பார்கள். ஆனாலும், அதன் பிறகு மீண்டும் தம்முடைய வக்கிர புத்தியை காண்பிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே, இதுபோன்ற அருவருப்பான ஜென்மங்களை அடையாளம் காண, முகநூல் உதவுகிறதே என்ற அளவில் நீ மகிழ்ச்சி அடைய கற்றுக்கொள். அதனால் அப்செட் ஆக வேண்டிய அவசியம் இல்லை என்றான் ஆனந்தன்.

நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் ஆனந்தா.. இருந்தாலும், ஆண்களாக இருக்கக் கூடிய நாமே, இதை இக்னோர் செய்து விட்டு ஒதுங்கினாலும், மனது வருந்துகிறோமே?

இது போன்ற அனுபவங்கள் பெண்களுக்கு ஏற்படும் போது… மனதளவில் அவர்கள் எந்த அளவுக்கு துன்பப்படுவார்கள்? என்று நினைத்துதான்.. நான் அச்சம் கொள்கிறேன் என்றான் விவேக்.

உண்மைதான் விவேக்… பெண்களின் நிலையை நினைத்து அச்சமாகத்தான் இருக்கிறது.. அதை, வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பார்கள் அல்லவா?

முகநூல் போன்ற சமூக ஊடகங்களை விடு… ஒரு பெண் படிக்க தொடங்குவதில் இருந்து, வேலைக்கு சேர்ந்து வருவது வரை, இது போன்ற வக்கிர எண்ணம் கொண்ட கழுகுகளின் பார்வை மற்றும் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள எவ்வளவு போராட வேண்டி இருக்கும்? என்று நினைத்துப்பார்.

எப்படியாவது படித்து முன்னேற வேண்டும். வேலைக்கு போய் குடும்ப கஷ்டத்தை போக்க வேண்டும். சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று  எத்தனை பெண்கள் போராடுகிறார்கள்.

அதை எல்லாம் விட, இது போன்ற, அருவருப்பான ஜென்மங்களிடம் தப்பிக்க, எத்தனை பெரிய ஆபத்து நிறைந்த போராட்டத்தை எல்லாம் அவர்கள் தினமும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது? என்று ஆறுதல் சொன்ன ஆனந்தனே, தன்னை அறியாமலே விவேக்கின் கவலையில் தானும் ஐக்கியம் ஆகிவிட்டான்.

சிறிது நேரம் அங்கே மவுனம் நீடித்தது…

ஆனந்தனே மீண்டும் தொடர்ந்தான்…

நேரடியாக பழகிய அனுபவம் இல்லாத நபர்கள் செய்யும், அருவருப்பான சில செயல்களுக்கே நீ வருத்தப்படுகிறாயே?

ஒரே சமூகத்தை சேர்ந்த நபர்கள் நிர்வகிக்கும் முகநூல் குழுக்களில் பயணிக்கும் பெண்களுக்கு கூட, அதே சமூகத்தை சேர்ந்த சில ஆண்களால், இது போன்ற நெருக்கடிகள் ஏற்படுவதாக, அண்மையில் சில தகவல்களை கேள்விப்பட்டேன்.

இது, அதைவிட மோசமான விஷயம் அல்லவா?

கடத்தல்காரனிடம் இருந்து, காப்பாற்ற வேண்டிய கனிகளை, காவல் காரனே சுவைக்க முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்? என்றான் ஆனந்தன்…

எதுவும் பேச முடியாமல் மீண்டும் மௌனமானான் விவேக்.