யார் சித்தர்?….. சிறுகதை..

–ராஜேந்திரன்

ஐந்து நிமிட வாசிப்பு..

தானியங்களில் இருந்து கற்களை பொறுக்கலாம்… கற்களில் இருந்து தானியங்களை பொறுக்கும் அளவுக்கு யாருக்கு பொறுமை இருக்கும்.

சில சமயங்களில் நம்முடைய தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும், தீர்வு காண, இரண்டாவது வழியைத்தானே தேட வேண்டியுள்ளது.

அந்த சிக்கலில்தான் அல்லாடிக் கொண்டிருந்தான் ஆசைத்தம்பி.

பெயர்தான் ஆசைத்தம்பி, சிறு வயதில் இருந்தே தன்னுடைய சாதாரண ஆசைகள் கூட நிறைவேறியதில்லை என்று அடிக்கடி நண்பர்களிடம் விரக்தியுடன் கூறுவான் அவன்.

இப்போது மட்டும் என்ன? வேலை இருந்தால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லை. இருவருக்கும் ஒற்றுமை ஏற்படும்போது வேலை இல்லை.

முன்னே போனால் முட்டுவது, பின்னே சென்றால் உதைப்பதுமாக இருக்கிறதே என்று அவனுக்கு ஒரே குழப்பம்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று? யார் என்ன சொன்னாலும், அதை அப்படியே கேட்கும் நிலைக்கு ஆளாகி விட்டான் அவன்.

அப்போதுதான், அந்த பிரபலமான ஜோதிடர் மாரியப்பனை சந்தித்தான் ஆசைத்தம்பி. பிறந்த தேதி, நேரம், இடம் எல்லாவற்றையும் தெளிவாக சொன்னான் அவன்.

அடுத்த சில நிமிடங்களில், அவனுடைய ஜாதகத்தை கணித்த அவர்.. தம்பி இது சந்நியாசி ஜாதகம். இந்த மாதிரி ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு, அடிப்படை வாழ்க்கையே சரியாக அமையாது. திருமண வாழ்க்கை கொஞ்சம் கூட நிறைவை அளிக்காது என்றார்.

முதல் வார்த்தையிலேயே… தம்மை வீழ்த்தி விட்டாரே ஜோதிடர் என்று வியந்து போனான் ஆசைத்தம்பி.

ஐயா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான வார்த்தை. ஆனாலும், இது சின்ன வயதிலேயே தெரிந்து இருந்தால், நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருப்பேன் அல்லவா?

இப்போது என்ன செய்வது? எனக்கு ஆசை என்று எதுவும் இல்லை. இப்போதைக்கு என்னிடம் எஞ்சி இருப்பது கடமை உணர்வு மட்டுமே.

எனக்கு மன நிறைவான இல்லற வாழ்க்கை இல்லை. ஆனாலும், என் மனைவியையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கிறது.

இந்த கடமையை… செய்து முடிக்கும் வாய்ப்பைக் கூட ஆண்டவன் தட்டிப் பறிக்கிறான். அதைத்தான் என்னால், பொறுத்துக் கொள்ள முடியவில்லை ஐயா என்றான்.

என்ன செய்வது? விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அதற்கும் ஜாதகத்தில் அந்த அமைப்பு இருந்தால் மட்டுமே முடியும். ஆனாலும் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்றார் ஜோதிடர்.

எனக்கு யாராவது உதவிக்கரம் நீட்டுவார்கள் என்றுதான் விரும்புகிறேன்… ஆனால், அனைவரும் அறிவுரை சொல்வதற்குத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ஆசைத்தம்பி.

ஆனாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ள முடியாமல் தவித்த அவன், நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வழியை காட்டுங்கள் என்று நேரடியாகவே ஜோதிடர் மாரியப்பனை கேட்டான் ஆசைத்தம்பி.

அவரும்… கொஞ்ச நேரம் யோசித்தார். அவனுடைய நிலைமையை நினைக்கும்போது, ஜோதிடருக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

தம்பி… நீ எந்த கோவிலுக்கும் போகாதே. சித்தர்களின் ஜீவ சமாதிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ… அங்கெல்லாம் சென்று வழிபடு… அவர்களால் மட்டும்தான்… உனது சந்நியாசி யோகத்திற்கு தீர்வு வழங்க முடியும் என்றார் அவர்.

ஐயா.. தவறாக நினைக்க வேண்டாம்… எனக்கு புரியும்படி கொஞ்சம் விளக்காமாக சொல்லுங்கள் என்று ஜோதிடரிடம் வேண்டினான் அவன்.

தம்பி… நான் இப்போது உனக்கு சில விஷயங்களை சொல்கிறேன். அது உனக்கு, எந்த அளவுக்கு புரிகிறது என்று தெரியவில்லை. இருந்தாலும், அதை புரிந்து கொள்ள முயற்சி செய். அது, உனக்கு ஒரு புதிய வழியை ஏற்படுத்தி தரும் என்றார்.

சரி ஐயா… சொல்லுங்கள்… நான் புரிந்து கொண்டு நடக்க முயற்சி செய்கிறேன் என்றான் ஆசைத்தம்பி.

தம்பி… நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அறிவியலின் துணையால், அறிந்து கொள்ள முடியும்.

ஆனால், மனம், புத்தி, சிந்தனை போன்றவை எங்கு இருக்கின்றன என்பதை, யாராலும் கண்டறிய இயலாது. அதற்காக நம் முன்னோர்கள், சிலவற்றை ரகசியமாக சொல்லி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அவற்றை நன்றாக புரிந்து, உள்வாங்கிக் கொண்டு தேடினால், உணர முடியும். ஆனால், அதை யாருக்கும் புரிய வைக்க முடியாது. நிரூபிக்கவும் முடியாது என்று தொடர்ந்தார் ஜோதிடர்…

இந்த உலகத்தின் அனைத்திலுமே பஞ்ச பூத சக்திகள் அடங்கி இருக்கும்.  நம்முடைய உடலும் பஞ்ச பூத சக்தியால் உருவானதுதான்.

இந்த உடலில் அமைந்துள்ள ஆறு ஆதார சக்திகளின் இயக்கமே.. நம்மை தீர்மானிக்கின்றன.

அந்த சக்கரங்கள், மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்னா என்பவை ஆகும்.

இந்த ஆறு சக்கரங்களையும் தலா மூன்று சக்திகள் இயக்குகின்றன. ஆக இந்த ஆறு சக்கரங்களையும், பதினெட்டு சக்திகள் இயக்குகின்றன.

இந்த பதினெட்டு சக்திகளைத்தான் பதினெட்டு சித்தர்கள் என்று கூறுகிறோம்.

இந்த பதினெட்டு சித்தர்களுக்கும், அழிவு என்பது இல்லை. இவர்கள் வந்து சென்ற இடங்களும், இறைவனை பூஜித்த இடங்களுமே ஜீவ சமாதிகள் என்று சொல்லப்படுகிறது.

இந்த பதினெட்டு சித்தர்களின் ஜீவ சமாதிகளில், உங்களால் செல்ல முடிந்த இடங்களுக்கு எல்லாம் சென்று,  சித்தர்களை நினைத்து மனமுருகி வழிபடுங்கள்… அவர்கள் உங்களுக்கு, நல்ல வழி காட்டுவார்கள் என்றார் ஜோதிடர் மாரியப்பன்.

ரொம்ப நன்றி ஐயா… ஆனால், பல இடங்களில் என்னென்னவோ பெயரில் சித்தர்களின் சமாதிகள் இருக்கின்றனவே… அங்கும் பக்தர்கள் சேர்ந்து வழிபட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் மட்டும் அந்த பதினெட்டு சித்தர்களின் ஜீவசமாதிகளில் மட்டுமே வழிபட வேண்டும் என்கிறீர்களே? அதற்கு காரணம் என்ன? என்று கேட்டான் ஆசைத்தம்பி.

நல்ல கேள்வி கேட்டீர்கள் தம்பி…

சித்தர்களுக்கு அழிவில்லை. அவர்கள் புதைக்கப்படவும் இல்லை. அதனால், அவர்கள் வந்து சென்ற இடங்களைத்தான் நாம் ஜீவ சமாதிகள் என்கிறோம்.

ஆனால், சிலர், இறைவன் மீது பக்தி கொண்டு, அவனது அருளைப்பெற்ற மகான்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களும் வணங்கத் தக்கவர்களே. அதேபோல், அந்தந்த பகுதிகளில் சில ஆன்மீக பெரியவர்களும் வாழ்ந்து மருந்து இருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் அனைவரும் சித்தர்கள் அல்ல. அவர்களின் உடல் புதைக்கப்பட்ட இடம் ஜீவ சமாதியும் அல்ல. வெறும் சமாதி மட்டுமே. அதனால் செத்தவர்களை எல்லாம் சித்தர்களாய் எண்ணிக்கொள்ளக் கூடாது, என்று மறுபடியும் தெளிவாக விளக்கினார் ஜோதிடர்.

அத்துடன், நீங்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண, வணங்க வேண்டியது, சித்தர்களின் ஜீவ சமாதிகள் மட்டுமே என்று மீண்டும் தீர்க்கமாக சொன்ன ஜோதிடர்… அதுவே உங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்றார்.

அது போலவே.. சப்த ரிஷிகளை தவிர… வேறு யாரும் ரிஷிகள் அல்ல. அதனால்தான் சப்த ரிஷி மண்டலம் என்று நாம் அழைக்கிறோம். இவற்றை எல்லாம் நீங்கள் தெளிவாக உணரும் காலம், உங்களுக்காண வாழ்க்கை பாதை புலப்படும் என்று முடித்துக் கொண்டார் ஜோதிடர்.

இதுவரை யாரும் சொல்லாத விளக்கத்தை ஜோதிடர் மாரியப்பன்  சொன்னது… ஆசைத்தம்பிக்கு ஏதோ.. ஒரு புதிய நம்பிக்கையை தந்தது போல இருந்தது.

அடுத்த ஆறு, ஏழு மாதங்களில்… ஜோதிடர் சொன்னது போலவே, தன்னால் செல்ல முடிந்த சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு எல்லாம் சென்று வணங்கி வந்தான்.

ஆதார சக்கரங்கள் அவற்றின் இயக்கங்களை பற்றி கூறும் புத்தகங்களை எல்லாம் வாங்கி படித்தான். அது பற்றிய உரைகளை எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தான்.

இப்படியே, ஒரு வருடம் கழிந்தது…

சித்தர்கள் அவனுடைய வாழ்க்கையை மாற்றினார்களா? அல்லது, அவனாகவே சிந்தித்து, தன்னை தானே மாற்றிக்கொண்டானா? என்பது யாருக்கும் தெரியாது.

புதிதாக அவன் திறந்த… ஜோதிட ஆலோசனை மையத்தில், தினமும் ஏராளமானோர் வந்து செல்ல ஆரம்பித்தனர். பணம் தாராளமாக புழங்கியது…

அவனுக்கான புதிய பாதையை அவன் வகுத்துக் கொண்டான்.

தன்னுடைய நிலையைப் பற்றி, மற்றவர்களிடம் பேசுவதற்கு கூட, தற்போது அவனுக்கு நேரம் இல்லை.

அவனிடம் ஆலோசனை கேட்க, அங்கே அலைமோதும் கூட்டம் அவனையும் “சித்தர்” என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டது.

கடந்த வருடம் “சித்தர்கள்” என்பவர்கள் யார்? என்று கேட்ட தாமே… இன்று சித்தர் ஆனதை…ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தவித்தான் ஆசைத்தம்பி.