கொரோனா நிவாரண பணிகளில் பம்பரமாய் சுழலும் பவுன்ராஜ்:  மக்கள் பாராட்டு!

கொரோனா நிவாரணப்பணிகளில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலேயே, அதிக அளவில் கூர்ந்து கவனிக்கக் கூடியவராக இருப்பவர், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ வான எஸ்.பவுன்ராஜ்.

நாகை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக  அறிவிக்கப்பட்டுள்ள, மயிலாடுதுறை மாவட்டத்தில், பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த மூன்று தொகுதிகளிலுமே அதிமுகவை சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

எனினும், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை, செயல் வடிவம் பெறுவதற்கு, முக்கிய காரணமாக இருந்தவர் பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ்.

அதனால், அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பு மக்களும்  , மாவட்டம் முழுவதும் போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரங்கள் மூலம், பவுன்ராஜுக்கு தங்களது பாராட்டையும், நன்றியையும்  தெரிவித்தனர்.

பூம்புகார் தொகுதியில், தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ வாக இருந்து வரும் பவுன் ராஜ், அமைச்சர் ஒ.எஸ்.மணியனின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்டவர்.

ஆனால், மாவட்டத்திற்கு கிடைத்த மருத்துவக்கல்லூரி, மயிலாடுதுறையில் அமைவதற்கும், மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அமைவதற்கும், ஒ.எஸ்.மணியன்  இடையூறாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த நிலையில், அமைச்சரின் நெருக்கடி மற்றும் எதிர்ப்புகளையும் மீறி, மயிலாடுதுறை மாவட்டம் அமைவதற்கு, முதல்வர் எடப்பாடியை தனியாக சந்தித்து வலியுறுத்தினார் பவுன்ராஜ்.

அதையடுத்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மக்களின் பாராட்டை, தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பவுன்ராஜ், தற்போது அமைச்சர் ஒ.எஸ்.மணியனின், கட்டுப்பாட்டில் இருந்து விலகி சுதந்திரமாக பணியாற்றி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, இன்று வரை, பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில், இடைவிடாத நிவாரணப்பணிகளில் தம்மை, முழுமையாக  ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் அவர்.

ஏழை-எளிய மக்கள், மாற்று திறனாளிகள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும், அரிசி, காய்கறிகள், உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள், முகக்கவசம் போன்ற நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், தமது சொந்த பணத்தில் இருந்தும் லட்சக்கணக்கில் செலவு செய்து, பணமாகவும், பொருளாகவும், மருந்து பொருட்களாகவும் வழங்கி வருகிறார்.

இது தவிர, சாலை மற்றும் தெருக்களில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளையும் கண்காணித்து, அந்தப்பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இதனால், எம்.எல்.எ பவுன்ராஜை தொகுதி மக்கள், மனமுவந்து பாராட்டி வருகின்றனர். பவுன்ராஜின் முகநூல் பக்கத்தில், பின்னூட்டமிடும் மக்களின், கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்து, அந்தந்த பகுதியிலும், கொரோனா நிவாரண பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

பவுன்ராஜின் இந்த கொரோனா நிவாரணப்பணிகளை, மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மட்டுமன்றி, ஒருங்கிணைத்த தஞ்சை மாவட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர்.

கும்பகோணத்திற்கு வடபகுதியில் அமைந்திருக்கும் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று தொகுதிகளை சேர்ந்த யாருக்கும், எந்த அரசிலும், இதுவரை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதில்லை.

இந்நிலையில், தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறையில், பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜின், செயல்பாடுகள் அனைத்தும்… மக்களால் மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சிகளாலும் கூர்மையாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

பவுன்ராஜின் இதுபோன்ற பணிகள் அனைத்தும், “இதயசுத்தி” யோடு தொடர்ந்தால், அவர் மயிலாடுதுறை மாவட்டத்தின் மக்கள் நாயகனாக வலம் வருவார். “பவுனு பவுனுதான்” என்றும் பாராட்டப்படுவார்  என்பதில் சந்தேகம் இல்லை.