“கொரோனா யுகம்” …சிறுகதை!

-ராஜேந்திரன்

ஆறு நிமிட வாசிப்பு….

என்னுடைய செல்போனில் தொடர்ச்சியாக வந்த அழைப்பின் எண் புதிதாக இருந்தது.

ஏதோ டெலி மார்க்கெட்டிங் கம்பெனியில் இருந்து வரும் அழைப்பாக இருக்கும் என்று எடுக்காமலே விட்டு விட்டேன்.

ஆனால், ஒரு அரை மணி நேரம் கழித்து, அதே எண்ணில் இருந்து  வந்த மெசேஜ் என்னை தூக்கி வாரிப்போட்டது.

எவ்வளவு பெரிய ஆள்… அச்சு ஊடகம் தொடங்கி, காட்சி ஊடகம் வரை, அவர் கையால் குட்டுப்படாத, நபர்கள் என்பது… என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே இருக்க முடியும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னாள், என்னுடைய ஆரம்ப காலத்தில், ஒரு மாலை தினசரியில், அவர் பொறுப்பாசிரியராக இருந்தபோது… நானும் அவரோடு ஒரு சில மாதங்கள் பணியாற்றி இருக்கிறேன்.

ஒரு தலைப்பு செய்தி விஷயத்தில், எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்… அதன் பிறகு, இன்று வரை, எங்கள் இருவரையுமே இணைந்து பணியாற்ற முடியாத நிலைக்கு ஆளாக்கி விட்டது.

இருந்தாலும், எந்த இடத்தில் பணியாற்றினாலும், என்னைப்பற்றி அவர் அக்கறையோடு விசாரித்துக் கொண்டே இருப்பார் என்பதை, சில நண்பர்கள் மூலம் என்னால் தொடர்ந்து அறிய முடிந்தது.

வயதிலும், அனுபவத்திலும் மூத்த ஒரு மனிதர், என்னோடு பேச விரும்பி மெசேஜ் அனுப்பி இருக்கிறாரே… என்பதை நினைத்து கொஞ்சம் ஆடிப்போய் விட்டேன்.

அதனால், கொஞ்சமும் தாமதிக்காமல், அவருடைய செல்போனுக்கு நானே தொடர்பு கொண்டேன்…

நல்லா இருக்கீங்களா? என்ற நல விசாரிப்புடன் தான், அவர் பேச்சையே தொடங்கினார்.

நல்லா இருக்கேன் சார். என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் நம்பர் என்று தெரியாததால்… நான் எடுக்காமல் விட்டு விட்டேன் என்று  வருத்தம் தெரிவித்தேன்.

பரவா இல்லை. அதெல்லாம் விடுங்கள் என்றார்.

பின்னர், இருதரப்பு நலன்களும் இருவருக்கும் இடையே விசாரிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரே… நேரடியாக விஷயத்திற்கு வந்தார்…

ஆமாம்… இருபது வருடத்திற்கு முன்னாள், என்னோடு… ஒரு தலைப்பு செய்தி விஷயமாக, நீங்கள் சண்டை போட்டீர்களே.. ஞாபகம் இருக்கிறதா? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

சார்.. அதை நினைத்து இன்னும் வருத்தப்படுவேன் சார். உங்கள் வயது… அனுபவம் என எதையும் பாராமல்… நான் கத்துக்குட்டி தனமாக நடந்துகொண்டது… எனக்கே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சார்… என்று மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டேன்.

தம்பி… அதில் வருத்தப்படுவதற்கும்… மன்னிப்பு கேட்பதற்கும் என்ன இருக்கிறது? நீங்கள் அன்று என்னை கேட்ட கேள்வியை நினைத்து… அப்போது கோபப்பட்டேனே ஒழிய, அதற்கு பிறகு, உங்களை நினைத்து, இன்றுவரை நான் பெருமைப்பட்டுக் கொண்டே இருக்கிறேன் என்றார்.

சார்.. அது உங்களுடைய பெருந்தன்மை, பரந்த மனப்பான்மை சார்… என்ன இருந்தாலும், அந்த வயதில், நான் அப்படி நடந்துகொடிருக்கக கூடாது என்று மறுபடியும் வருத்தத்தை வெளிப்படுத்தினேன்.

சரி தம்பி.. நான் அந்த சம்பவத்தையும், நான்கைந்து வருடங்களுக்கும் முன்பாக, ஒரு ஆங்கில செய்திக் கட்டுரையை மேற்கோள் காட்டி நீங்கள் எழுதிய கட்டுரையையும் பற்றி பேசத்தான் உங்களை தொடர்பு கொண்டேன் என்றார்.

எனக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாக இருந்தது. இருந்தாலும் லேசான  தயக்கத்துடன்… சரி சார் சொல்லுங்கள் என்றேன்…

நமக்குள் பிரச்சினையை உருவாக்கிய செய்தி எது என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அது, சந்தன வீரப்பனை பற்றிய செய்திதானே? என்று கேட்டார்…

ஆமாம் என்றேன்..

உனக்கே நன்றாக தெரியும்.. மாலை பத்திரிகைகள் என்பது, பரபரப்பான செய்திகளை வெளியிட்டால் மட்டுமே விற்பனை ஆகும் தன்மை கொண்டவை.

அந்த வாரம் முழுக்க, பரபரப்பு செய்திக்கு மட்டுமல்ல, சாதாரண செய்திக்கே கூட, ரொம்பவும் பஞ்சமாக இருந்தது. அதனால், என்ன செய்வது என்று யோசித்த நான்,

“சந்தன வீரப்பன் மூன்று நாட்களாக பட்டினி” “போலீஸ் தேடுதல் வேட்டையால் உணவு கிடைக்காமல் அவதி”

என்று தலைப்பு கொடுத்து, அதற்கு தகுந்தது போல, உன்னை செய்தி எழுத சொன்னேன்.

ஆனால் நீயோ, இந்த செய்திக்கான சோர்ஸ் எதுவும் இல்லை. யு.என்.ஐ – பி.டி.ஐ போன்ற செய்தி நிறுவனங்களில் கூட இதற்கான தடயமே இல்லை என்று என்னிடம் சொன்னாய்.

அதெல்லாம், உனக்கு அவசியம் இல்லை. நான் சொல்லும் தலைப்புக்கு ஏற்றவாறு,  நீ செய்தியை எழுது என்றேன்.

ஆனால், நீ முடியாது என்று சொல்லி இருந்தால் கூட, அந்த விஷயத்தை நான் எப்போதோ மறந்திருப்பேன்.

ஆனால், நீ அதற்கு சொன்ன பதிலை, இப்போது நினைத்தாலும் ,எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை என்றார்.

சார் அப்போது.. சிறிய வயது… மனதுக்கு பட்டதை உடனே சொல்லி விட்டேன். இன்னும்… அதை சொல்லி, சொல்லி என்னை துன்பப் படுத்தாதீர்கள் என்று மீண்டும் கேட்டுக்கொண்டேன்.

நான் வருத்தப்படவும் இல்லை… உன்னை துன்பப்படுத்தவும் இல்லை. அதை நினைத்து இன்னும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றார்…

அடுத்து சிரித்துக்கொண்டே… அது என்ன தம்பி?

“உங்கள் கூடவே இருக்கும், நாங்கள் சாப்பிடவில்லை என்றால் கூட உங்களுக்கு தெரியாது…  ஆனால், எங்கேயோ காட்டில் இருக்கிற சந்தன வீரப்பன், மூன்று நாள், சாப்பிடாமல் பட்டினி கிடந்தது மட்டும் உங்களுக்கு எப்படி உங்களுக்கு தெரியும்?”  என அன்று நான் அன்று சொன்ன… டயலாகை அப்படியே அடி பிறழாமல் அவர் சொன்னது.. எனக்கும் சிரிப்பாகத்தான் இருந்தது…. இருவருமே சிரித்து விட்டோம்.

அடுத்து அவரே.. வேறு சப்ஜெக்டுக்கு தாவினார்….

தம்பி… ஆரம்பத்தில் பிரின்ட் மீடியாவில் வேலை பார்த்தபோது, ரேடியோவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நமக்கு இருந்தது. அதன் பிறகு, விஷுவல் மீடியாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது.

ஆனால், இவை அனைத்த்திலுமே, அதை நடத்தும் நிர்வாகத்தின் முடிவை மீறி, நம்மால் எதையும் யோசிக்க கூட முடியாது. அப்படியே யோசித்தாலும், அதை செயல்படுத்தும் அளவுக்கு, நாம் எப்படி பணம் திரட்ட முடியும்?

ஆனால், இன்று, முதலாளியின் கட்டுப்பாடு இல்லாமல், பெரிய அளவு பொருளாதார பின்னணி இல்லாமல்? சமூக ஊடகங்கள், குறிப்பாக இணைய தளம், யூ டியூப் போன்றவை உங்களை போன்ற சுதந்திர மனப்போக்கு உள்ளவர்களை, சுயமரியாதையுடன் வாழவைத்துக் கொண்டு இருக்கிறது.. என்பதைப் பார்க்கும்போது… ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று மூத்தவர் மேலும் தொடர்ந்தார்…

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு ஆங்கில செய்திக்கட்டுரையை மேற்கோள் காட்டி நீ ஒரு கட்டுரை எழுதி இருந்தாயே? அது இப்போது நடைமுறைக்கு வந்து விட்டதையும், நான் உணர்கிறேன் தம்பி.

முதலாளிகளை திருப்திப்படுத்தவும், ஆள்பவர்களின் ஆதரவை பெறவும், உண்மையை பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கி, ஒன்றும் இல்லாத செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, முக்கிய செய்திகளை இருட்டடிப்பு செய்வதுமாக இருக்கும் வெகுமக்கள் ஊடகங்கள், இன்னும் சில வருடங்களில் சமூக ஊடகங்களை சமாளிக்க முடியாமல் திணறும் என்று அந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருந்ததை நினைவு படுத்தி இருந்தீர்கள்.

அந்த விஷயம் தற்போது அரங்கேறி வருவதை ஒரு மூத்த பத்திரிகையாளராக நான் உணர்கிறேன். நாம் ஒரு செய்தியை சொல்லாமல் விட்டால், அதை சமூக ஊடகம் சொல்லி விடுகிறது.

நாம் ஒரு செய்தியின் ஒரு பக்கத்தை மட்டுமே சொன்னால், அதன் மற்றொரு பக்கத்தை சொல்லி, சமூக ஊடகங்கள், மக்களை தமது பக்கம் திருப்பி விடுகின்றன.

இந்த கொரோனா ஊரங்கில், டிக்-டாக், மீம்ஸ், வாட்ஸ்-அப், போன்றவற்றில் வரும், காட்சிகளைதான், இன்று பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன பார்த்தீர்களா?

இப்போது, அரசியல் கட்சிகள், மக்கள் சார்ந்த அமைப்புகளின் பிரச்சாரத்திற்கு சமூக ஊடகங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல், அவற்றின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அவை நம்மை முந்திக் கொள்கின்றன.

இனி ஊடக யுத்தம் என்பது, பெரு முதலீட்டு ஊடகங்களுக்கும்… சமூக ஊடகங்களுக்கும் இடையில்தான் என்று… யாரோ தீர்க்கதரிசனமாக சொன்னதை.. நினைத்து பார்த்தேன்… உன்னுடைய ஞாபகம் எனக்கு வந்தது என்றார்.

மூத்த பத்திரிகையாளர் அல்லவா? அதனால்தான்… நம்மை போன்ற சிலரின் கருத்துக்கள், அனுபவங்களைக் கூட புறம் தள்ளாமல், நினைவு படுத்தி, ஈகோ பார்க்காமல், அவராகவே நம்மை தொடர்பு கொண்டு பேசுகிறார்… என்று நினைத்தேன்… அவர் மீது இன்னும் மரியாதை கூடியது.