“கொடுப்பினை வேண்டும்” …. சிறுகதை!

-ராஜேந்திரன்

நான்கு நிமிட வாசிப்பு….

நகரின் பிரதான சாலையில் இருந்து, முட்டு சந்து பிரியும் இடத்தில் அந்த சிமென்ட் பெஞ்ச் அமைக்கப்பட்டு இருந்தது.

இரவு ஏழு மணி ஆனால் போதும், அந்த இடமே களைகட்டி விடும்… அந்த நகரில் இருக்கும் ரிடயர்டு ஆன பெரிசுகள் எல்லாம், அங்கே ஒன்றுகூட ஆரம்பித்து விடும்.

அந்த கூட்டத்தில், அரசியல், பொருளாதாரம், அறிவியல், சுய புராணம் என பலவும் விவாதிக்கப்படும்.

வழக்கம் போல, அன்றைய தினமும், விற்பனைவரி உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற, நாராயணன்தான் விவாதத்தை தொடங்கி வைத்தார்.

நாம் எல்லோரும் இங்கு உட்கார்ந்து கொண்டு, அவரவர் சுய பெருமையை மட்டுமே தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறோம். நாம்  செய்த தவறுகள், சந்தித்த அவமானங்கள் போன்றவற்றை பற்றி இதுவரை நாம் யாராவது பேசி இருக்கிறோமா? என்று அனைவரையும் பார்த்து கேட்டார்.

கூட்டத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை…

எப்போதும் கேள்வியை கேட்டு விவாதத்தை தொடங்கி வைத்து, அப்படியே மற்றவர்கள் சொல்லும் பதில்கள் மற்றும் கருத்துக்களை உள்வாங்கி கொண்டிருப்பதுதான் நாராயணனின் வழக்கம்.

ஆனால், அன்றைய தினம், நாராயணனின் அணுகுமுறை முற்றிலும் மாறிப்போய் இருந்தது…

மீண்டும் தொடங்கினார்…

தம் வாழ்வில் செய்த தவறுகள், சந்தித்த துன்பங்கள், பட்ட அவமானங்கள்  என அனைத்தையும் வெளிப்படையாக சொன்னதால்தான், தேசப்பிதா காந்தியை, நாம் இன்றும் மகாத்மா என்று போற்றுகிறோம்.

அதேபோல், நான் தீவிர கடவுள் பக்தி உள்ளவன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும், கடவுள் மறுப்பு கொள்கையை, இறுதிவரை கடைபிடித்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவையும் நான் அதிக அளவில் மதிக்கிறேன்.

“சிறைச்சாலை சிந்தனைகள்” என்ற நூலில், எம்.ஆர்.ராதா, தான் செய்த அருவருப்பான வேலைகளை கூட மறைக்காமல் சொல்லி இருப்பார்.

இப்படி எல்லாம் சொல்கிறீர்களே… இதைப்பார்த்து, உங்களை மற்றவர்கள் கேவலமாக நினைக்க மாட்டார்களா? அவரிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்பார்.

அதற்கு, சுய சரிதை என்று வந்த பிறகு, எதையும் மறைப்பது தவறு இல்லையா? என்று திருப்பி கேட்டார். அதில் இருந்து, எம்.ஆர்,.ராதா மீதும், எனக்கு அளவு கடந்த மரியாதை வந்துவிட்டது.

அதனால், இன்று ஒருநாள் மட்டுமாவது, அவரவர் வாழ்க்கையில் செய்த தவறுகள், பட்ட அவமானங்கள் போன்றவற்றில், ஏதாவது ஒன்றை, நீங்கள் ஒளிவு மறைவின்றி சொல்ல வேண்டும்.

நதிகளில் எவ்வளவு கழிவுகள் கலந்தாலும், அதன் இடைவிடாத ஓட்டத்தால், தன்னைத் தானே தூய்மை படுத்திக் கொள்ளும். அதனால் தான், நாம் நதிகளையும் கடவுளாக வணங்குகிறோம்.

அது போல, நாம் இதுவரை கடந்து வந்த பாதைகளில் நம்மீது சில கழிவுகள் கலந்திருக்கும். நதிகளைப்போலவே, நாமும், நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதற்காகத்தான், நம்முடைய பணியில் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவம் அல்லது தவறு என ஏதாவது ஒன்றை… நாம் வெளிப்படையாக சொல்லவேண்டும்.

விருப்பம் இல்லை என்றால் யாரும், தாங்கள் செய்த பாவங்கள் அல்லது தவறுகளை, இங்கே வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இந்த விவாதத்தை முன்வைத்தவன் என்ற முறையில், முதல் நபராக, நான் செய்த ஒரு தவறை, இன்னும் என் மனதை வாட்டும் அந்த குற்ற உணர்ச்சியை, உங்களிடம் சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்…

அடுத்த கணமே, அவர் முகம் சிவந்து காணப்பட்டது…

நான் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி, விற்பனை வரித்துறையில் வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு ஆய்வுக்கு சென்றேன்.

அப்போது, எங்கள் கண்களில் தென்பட்ட, மளிகைக்கடை ஒன்றை சோதனையிட்டோம்.

ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தை சேர்ந்த, இரண்டு சகோதரர்கள்,  கடுமையாக உழைத்து, ஒரு சாதாரண பெட்டிக்கடையை, அப்போதுதான்  பெரிய மளிகை கடையாக மாற்றி இருந்தனர் என்பது தெரிய வந்தது.

அவர்களுக்கு, வரி கட்டுவது குறித்து, பெரிதாக எதுவும் தெரியவில்லை.  வட்டிக்கு கடன் வாங்கித்தான், அவர்கள் தங்கள் பெட்டிக்கடையை மளிகைக்கடையாக மாற்றி இருந்தனர்.

இது நடந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அந்த சமயத்தில்தான் நாங்கள் அங்கு ஆய்வுக்கு சென்று இருந்தோம்.

ஆய்வில், அவர்கள் வரவு-செலவு கணக்குகள் எதையும் முறையாக பராமரிக்கவில்லை என்று அறிந்தோம். அதனால், அவர்களுக்கு அபராதம் விதித்து, சில நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

அது அவர்களை கடுமையாக பாதித்து விட்டது..

எங்கள் சோதனையால் பயந்துபோன அவர்கள், அதன் பிறகு அந்த கடையை திறக்கவே இல்லை.

வியாபாரம் பாதித்ததால், வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல், பழையபடி, கூலி வேலைக்கு போக ஆரம்பித்து விட்டனர்.

நான் நினைத்திருந்தால், அவர்களுக்கு கொஞ்ச நாள் அவகாசம் கொடுத்து, ஒரு நல்ல ஆடிட்டரை கூட அறிமுகம் செய்து வைத்திருக்கலாம்.

அவ்வாறு செய்திருந்தால், அவர்களுக்கு இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

சில நாட்கள் கழித்துதான், அவர்களுடைய வலியையும் வேதனையையும் என்னால் உணர முடிந்தது.

அதனால், என் மனதில் எழுந்த ஒருவித குற்ற உணர்ச்சி, என்னை படாத பாடு படுத்திக்கொண்டே இருந்தது.

எரியும் விளக்கை அணைத்து, ஒரு குடும்பத்தை இருளில் மூழ்கடித்தை செய்து விட்டோமே… என்று நான் துடியாய் துடித்தேன்.

எனக்கு தூக்கமே வருவதில்லை… கண்களை மூடினாலே… அந்த சகோதரர்கள் இருவரும்.. எதிரில் நின்று கண்ணீர் வடிப்பது போலவே எனக்கு தோன்றும்.

அந்த பாவத்திற்காக, ஏதாவது ஒரு பிராயசித்தம் தேட வேண்டும் என்று தீர்க்கமாய் முடிவு செய்தேன்.

அதன் பின்னர், பல நாட்கள், பல்வேறு இடங்களில் தேடி அலைந்து, ஒரு வழியாக, அந்த சகோதரர்களை பிடித்து விட்டேன்.

அவர்களை சந்தித்த பிறகுதான்… எனக்கு மனதின் பாரம் சற்று குறைந்தது போல இருந்தது.

அவர்களை சந்தித்து உடனேயே… அவர்களிடம் நான் முதலில் மன்னிப்பு கேட்டேன்…

என்னுடைய செயலைக்கண்டு அவர்கள் மிகவும் ஆடிப்போய் விட்டனர்.

ஐயா… நீங்கள் பெரிய அதிகாரி… இப்படி எங்களை போன்றவர்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்க கூடாது என்று கெஞ்சினார்கள்.

நான், அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த சகோதரர்களை பார்க்கும்போது.. நான் ஒரு அதிகாரி என்பது எனக்கு மறந்து போய்விட்டது. ஒரு குற்றவாளியாகத்தான் என்னை நான் உணர்ந்தேன்..

பின்னர் அவர்களிடம்… சற்று நேரம் ரிலேக்சாக பேசி… நீங்கள் இருவரும், மீண்டும் மளிகை கடையை தொடங்க வேண்டும் என்று சொன்னேன்.

நாங்கள் இப்போது இருக்கும் நிலையில், அதைப்பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது ஐயா என்றனர்… ஆனால், அவர்களின் கண்களில் அந்த ஏக்கம் தொக்கி நின்றதை என்னால் உணர முடிந்தது.

ஏன் முடியாது… உங்களுக்கு பணம் மட்டும் தானே பிரச்சினை… அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நீங்கள் புதிதாக ஒரு மளிகைக்கடை தொடங்குவதற்கு தேவையான பணம் அனைத்தையும் நானே ஏற்பாடு செய்து தருகிறேன்.

நீங்கள் என்னிடம் பணம் வாங்குவதற்கு யோசிக்க வேண்டாம்…

உங்களின் எதிர்காலக் கனவுகளை சிதைத்தவன்…. என்ற முறையில், உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

அதனால், பணத்தை நான் ஏற்பாடு செய்து தருகிறேன்…

உங்களுக்கு என்னிடம் இருந்து பணம் வாங்குவதற்கு தயக்கமாக இருந்தால், நான் கொடுக்கும் பணத்தை கடனாக வைத்துக் கொள்ளுங்கள்…

வட்டி எதுவும் வேண்டாம்… உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக, கடனை திருப்பிக் கொடுத்தால் போதும் என்று அவர்களிடம் கூறினேன்.

அவர்கள் முகத்தில் அப்போது தெரிந்த புன்னகையும், பிரகாசமும்… என் மனத்தில் இருந்த ஒரு வித அழுத்தத்தை குறைத்தது போல இருந்தது.

இதற்கு முன்னாள், அப்படி ஒரு மன நிறைவை நான் அடைந்ததே இல்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்வார்களே… அன்றுதான் அந்த வாசகத்தின் உண்மையான பொருளை நான் உணர்ந்தேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று, அவர்களும் மளிகைக்கடை வைக்க சம்மதித்து விட்டனர்.

அப்பாடா…. கடவுள் என்னை மன்னித்து விடுவார். என் மனசாட்சியும் இனி என்னை வாட்டி வதைக்காது…. என்று மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி…

ஆண்டவன்… நாம் செய்த பாவத்திற்கு.. பரிகாரம் செய்ய ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறான். அதை கோட்டை விட்டு விடாமல் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனது உத்தரவு போட்டது.

புராணத்தில், வரலாற்றில் உயர்வாக பேசப்படும்… பொன்னர்-சங்கர், காந்தவராயன்-சேந்தவராயன், மருது சகோதரர்கள் போல, வியாபாரத்துறையில், இந்த இரு சகோதரர்களும் புகழ் பெற வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை, மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டேன்.

பின்னர், நீங்கள் இருவரும் இங்கிருந்து, வேறு எங்கேயும் சென்று விடாதீர்கள். இன்னும் ஒரு வாரத்தில், உங்களுக்கு தேவையான பணத்தோடு நான் வருகிறேன்… என்று அவர்களிடம் விடைபெற்று திரும்பினேன்.

ஒரு வாரம் கழிந்தது…

அவர்களுக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில், என்னுடைய சேமிப்பில் இருந்தும், கடனாக பெற்றும், அவர்களுக்கு தேவையான பணத்தையும் எடுத்துக்கொண்டு, அவர்கள் வசிக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டேன்.

தண்டனையில் இருந்து விடுபடும் போதும், தர்ம சங்கடத்தில் இருந்து நமீளும் போதும் ஏற்படும் ஒரு நிறைவும், திருப்தியும் என் மனதில் குடி கொண்டிருந்தது.

ஆனால், அவர்கள் வீட்டு வாசலை அடைந்த போதுதான்… எனக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருப்பது தெரிய வந்தது.

பாவத்திற்கு, பரிகாரம் செய்யும் வழியை சொல்லிக்கொடுத்த, ஆண்டவன், அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை தடுத்து விட்டானே? என்பதை நான் உடைந்து போனேன்.

நான் அந்த சகோதரர்களை சந்தித்து விட்டு திரும்பிய, வாரத்திற்குள், அங்கு என்னென்னவோ நடந்திருக்கிறது.

விற்பனை வரித்துறை ஏற்கனவே உங்களுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால், நீங்கள் இருவரும் ஆஜராகவில்லை. எனவே, உங்கள் இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும். அதற்காகவே, அந்த அதிகாரி உங்களிடம்  இப்படி ஒரு நாடகம் ஆடுகிறான்… என்று அந்த சகோதரர்களிடம், யாரோ தவறாக சொல்லி அவர்களை திசை திருப்பி இருக்கிறார்கள்.

அவர்களும்… அதை உண்மை என்று நம்பி பயந்து போன அவர்கள், தங்கள் இருப்பிடம் பற்றி யாரும், அறிந்துகொண்டால் ஆபத்து என்று  எண்ணி, யாரிடமும் சொல்லாமல் – கொள்ளாமல், அங்கிருந்து, வேறு எங்கோ சென்று விட்டனர்.

நாம் யாருக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அதை பெற்றுக்கொள்ளும் கொடுப்பினை, அவர்களுக்கு இருக்கிறதா? என்பதையும் ஆண்டவன்தான் முடிவு செய்ய வேண்டும்… என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்தேன்.

ஆனாலும், அவர்கள் இருவரும் அந்த நிலைக்கு ஆளானதற்கு காரணம் நானே என்று குற்ற உணர்ச்சி மட்டும் என்னை விட்டு நீங்கவே இல்லை.

நானும், பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை, அந்த சகோதரர்களை பல இடங்களில் தேடி விட்டேன்… அவர்கள் இதுவரை என் கண்ணில் படவே இல்லை.

நான் இறப்பதற்கு முன்பாவது, அவர்களை ஒரு முறை சந்தித்து, செய்த பாவத்திற்கு ஒரு பிராய சித்தம் செய்துவிட  வேண்டும் என்று என் மனசாட்சி என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது.

குறைந்த பட்சம் மன்னிப்பாவது கேட்டால்தான் என் ஆன்மா சாந்தி அடையும்.

ஆண்டவனிடம்… இதைத்தான் நான் தினமும் வேண்டிக் கொண்டே இருக்கிறேன்… என் குரலுக்கு ஆண்டவன் செவி சாய்க்க வேண்டும். அதற்காக நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் நாராயணன்.

அப்போது, அவர் கண்களில் மட்டுமல்ல… அங்கிருந்த அனைவரது கண்களிலும்… கண்ணீர்த்துளிகள்… மழைத்துளியாய் பெருக்கெடுத்தன…