யார் அறிவார்? : சிறுகதை….

-ராஜேந்திரன்

ஐந்து நிமிட வாசிப்பு….

அந்த தொழிற்சாலையின் கேண்டீனில், தொழிலாளர்கள் பலரும் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அருகிலேயே மற்றொரு மேஜையில், அலுவலக ஊழியர்கள் சிலரும் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அன்றும் வழக்கம் போல, அக்கவுண்டன்ட் ஜெயராமன்தான் பேச்சை ஆரம்பித்தார்…

இப்போ நம்ம ஆபீசுக்கு புதுசா சேர்ந்திருக்கிற நீங்க ரெண்டு பேரும், எங்களுக்கு எப்போ டிரீட் கொடுக்கப் போகிறீர்கள் என்று  ரவியையும், உஷாவையும் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டார்.

அதனால் என்ன…நாளைக்கே கொடுத்துவிடலாம் என்றால் உஷா…

அதை சற்றும் எதிர்பார்க்காத ரகு, எதுவும் சொல்ல முடியாமல் தவித்தான்.

என்ன ரகு, உஷா ரெடி என்கிறாள்… நீ எதுவுமே சொல்லவே இல்லையே? என்றான் ஜெயராமன்.

மீண்டும் மவுனம் காத்தான் ரகு. அவனுக்கு என்ன சொல்வது? என்றே தெரியவில்லை.

என்ன ரகு… டிரீட் என்று கேட்பது ஒரு சம்பிரதாயம்தானே?…கேட்டால் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லையே? என்று மீண்டும் சொன்னான் ஜெயராமன்.

அப்படி இல்லை சார்… நான் இந்த மாதம் சம்பளம் வாங்கிய பிறகு டிரீட் கொடுக்கலாம் என்று சொல்ல நினைத்தேன். அதற்குள், நாளைக்கே ரெடி என்று உஷா சொன்னதால்… எனக்கு எதுவும் சொல்ல முடியவில்லை என்றான்.

நிலைமையை புரிந்து கொண்ட உஷா… சாரி ரகு.. நான் ஏதோ மனதில் பட்டதை சொல்லி விட்டேன். நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். நீங்கள் என்னைக்கு சொல்கிறீர்களோ? அன்றைக்குதான் டிரீட் எல்லாம்… என்றாள்.

ஜெயராமன் உள்பட அங்கிருந்த அனைவரும்… ஆமாம் அதுதான் சரி என்று கோரசாக சொல்ல ஆரம்பித்தனர்.

இருந்தும்… ரகுவின் முகம் இயல்பான நிலைக்கு இன்னும் வரவில்லை. தன்னுடைய பணக்கஷ்டத்தை நினைத்து அவன்.. மனதுக்குள் வருத்தப்பட்டு இருப்பான் என்று நினைத்தார் ஜெயராமன்.

அதனால், பேச்சை வேறு திசைக்கு திருப்பினார் ஜெயராமன்.

ரகு, அடிக்கடி கவிதை புத்தகங்களையே படித்துக்கொண்டு இருக்கிறீர்களே… நாங்க எல்லாரும் ரசிக்கிற மாதிரி ஒரு கவிதையோ அல்லது கவிதை சம்பந்தப்பட்ட விஷயத்தையோ சொல்லுங்கள் என்றார் அவர்.

அப்போதுதான், அவன் முகம் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்புவது போல தோன்றியது… பேச ஆரம்பித்தான்…

ஒரு கல்லூரியில், அருமையாக கவிதை எழுதும், இளம் விரிவுரையாளர் ஒருவர் இருந்தார். மேடையிலும் அவர் நகைச்சுவை ததும்ப பேசுவார்.

அவர் பேச ஆரம்பித்தாலோ, வகுப்பில் பாடம் நடத்த ஆரம்பித்தாலோ… யாரும் தங்களது கவனத்தை வேறு திசைக்கு திருப்ப முடியாத அளவுக்கு இருக்கும்.

அந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த, அழான மாணவி ஒருவருக்கு, அந்த விரிவுரையாளர் மீதும், அவரது கவிதைகள் மீதும் தீராத காதல்.

அந்த மாணவியையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும், ஆசிரியர் என்ற ஸ்தானத்தில் இருப்பதால், அவர் அதை காதலாக மாற்ற நினைக்கவில்லை.

அந்த நிலையில்தான், எப்படியாவது தன்னுடைய காதலை அவரிடம் வெளிப்படுத்திவிட வேண்டும் என்று அவள் துடித்தாள். அதற்காக, அவள் ஒரு வேலையை செய்தாள்…

“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல”

என்ற திருக்குறள் அவளுக்கு கைகொடுத்தது.

அதில் அறத்தான் என்ற வார்த்தையில் உள்ள “ற” வை அகற்றிவிட்டு, “அத்தான்” வருவதே இன்பம் என்று ஒரு துண்டு காகிதத்தில் எழுதி, இந்த திருக்குறளுக்கு விளக்கம் கொடுங்கள் சார். பதிலும் எழுத்து வடிவத்தில் வேண்டும் என்று வகுப்பறையில் கொடுத்தாள்.

அவளின் எண்ணத்தை அறிந்துகொண்ட விரிவுரையாளர்.. மறுநாள் வகுப்பறையில் பாடம் நடத்தி முடித்துவிட்டு… கிளம்பும் போது… இதோ நீங்கள் நேற்று கேட்ட சந்தேகத்திற்கு விளக்கம்.. என்று அவளை அழைத்து ஒரு காகிதத்தை கொடுத்தார்.

வீட்டுக்கு சென்று அதை அவசர அவசரமாக படித்துப் பார்த்த அவள்… மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள்” என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினான் ரகு…

அந்த காகிதத்தில் அவர் அப்படி என்னதான்  எழுதி இருந்தார்… என்று அனைவரும் ஆவல் பொங்க கேட்டனர்…

“யாமறிந்த பாவையிலே நிறைமதி போல்… இனிதானவள் எங்கும் காணோம்” என்று அவர் அதற்கு பதில் எழுதி இருந்தார் என்றான் ரகு.

இது ஒன்றும் பிரமாதமாக இலக்கிய விஷயம் அல்ல. ஒரு சாதாரண விஷயம்தான், இருந்தாலும் கூட்டல், கழித்தல், ரசீது, வவுச்சர் என்றே தினமும் பேசிக்கொண்டிருக்கும் அலுவலக ஊழியர்களுக்கு, ரகு சொன்ன கவிதைக் கதை மிகவும் பிடித்து போய்விட்டது.

மறுநாள், வழக்கம் போல அலுவலகத்தில் அனைவரும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ரகுவும், ரசீது மற்றும் வவுச்சர்களை அக்கவுன்ட் நோட்டில் எழுதிக் கொண்டிருந்தான்.

அப்போது, அவனை நோக்கி கையில் ஒரு பைலுடன் வந்த உஷா, அவன் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். ஆனால், அவள் முகத்தில் ஏதோ லேசான பதற்றம் தென்பட்டது.

ஏதோ கிளைன்ட் பேமென்ட் மிஸ்டேக் ஆகி இருக்கும், அது  சம்பந்தமாக பேச வந்திருக்கிறாள் என்று நினைத்து, வாங்க உஷா.. சொல்லுங்க என்றான் ரகு.

அவளோ… தயங்கி… தயங்கி… பேசுவதற்குள் மேல் மூச்சு..கீழ் மூச்சு வாங்குவது போல திக்கி, திணறி சொல்ல ஆரம்பித்தாள்…

என்ன உஷா? ஏன் இப்படி டென்ஷனா இருக்கீங்க? ஏதாவது சிக்கலா? என்றான் ரகு.

இல்லை ரகு, இந்த பைலுக்குள் நான் எழுதிய கவிதை ஒன்றை வைத்திருக்கிறேன். எனக்கு கவிதை எல்லாம் எழுதி பழக்கம் இல்லை. இப்போதுதான் முதன் முதலில் எழுதி இருக்கிறேன்…

நீங்கள் இதை படித்துவிட்டு எப்படி இருக்கிறது? என்று சொல்லுங்கள்…என்றதுதான்  தாமதாம்… அடுத்த வினாடியே தமது இருக்கைக்கு பறந்து விட்டாள்.

இதற்கு ஏன் இப்படி டென்ஷன் ஆகிறாள்? கவிதை எழுதுவது என்ன சமூக விரோத செயலா? என்று நினைத்துக்கொண்டு… அவள் கொடுத்த பைலை திறந்து, அதில் அவள் எழுதிக்கொடுத்த கவிதையை படித்தான்…

அடுத்த கணமே, இவனுக்கு டென்ஷன் தொற்றிக்கொண்டது… லேசாக கால் கைகளும் உதற ஆரம்பித்தது…

ஒரு பக்கம் உற்சாகம் கரை புரண்டு ஓட… மறுபக்கம் அச்சம் ஆயுதம் ஏந்தி தாக்குவது போல உணர்ந்தான்.

அந்த காகிதத்தில் அவள் எழுதி இருந்தது இதைத்தான்…

“நான் உன்னை நேசிக்கவில்லை

உன்னுள் இருக்கும் நிஜத்தை நேசிக்கிறேன்…

உன் கண்ணை நேசிக்கவில்லை

கண்கள் கூறும் கவிதையை நேசிக்கிறேன்…

நான் என்னை நேசிக்கவில்லை

என்னுள் இருக்கும் உன்னை நேசிக்கிறேன்!

இதை கவிதை என்று சொல்ல முடியாது…

ஒரு இளம் பெண்ணின் பூப்பூக்கும் இதயத்தில் ஒளிந்து கொண்டிருந்த காதல் என்ற உணர்வை, வெளிப்படுத்த அவள் கையாண்ட மொழி என்பதை மட்டுமே அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அதைப்படித்ததும்… அவனுக்கும் அவள் மேல் காதல் பிறந்தது…

ஆனாலும், தமக்கு வேலை போட்டுக்கொடுத்து, குடும்பத்தை காப்பாற்ற சம்பளத்தையும் கொடுக்கும்… முதலாளியின் உறவுப்பெண் அல்லவா அவள்?

அதனா,  விசுவாசம் என்ற ஆயுதமும் அதனோடு ஒட்டிக்கொண்ட அச்சமும், அவனது காதலை வீழ்த்தி விட்டன…

அதன் பிறகு… அவனுக்கு வேலையே ஓடவில்லை.

அன்று மதியம் சாப்பிடும் போதும், அதன் பிறகும்.. அவள் விழிகள் இவனை மட்டும் கள்ளத்தனமாக கண்காணித்துக் கொண்டே இருந்தன.

அவன் அன்று முழுவதும்… எதைப்பற்றியும் யாரிடமும் பேசவே இல்லை… ஏதோ மூடு அவுட்டில் இருக்கிறான் என்றே உடன் பணியாற்றும் ஊழியர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

மறுநாள் காலை… வழக்கம் போல, அலுவலக பணிகள் தொடங்கின..

மீண்டும் உஷா, அவன் எதிரில் வந்து அமர்ந்தால்… அவள் சாதாரணமாகவே அழகு தேவதைதான். ஆனாலும், நேற்றை விட இன்று அவள் கூடுதல் அழகோடு ஜொலித்தாள்.

சில நிமிடத்திற்கு பின்… உஷாவே பேசினால்…

ரகு, நேற்று நான் ஒரு பைலை கொடுத்தேனே அதை பார்த்தீர்களா? அன்று ஆரம்பித்தாள்.

இவன் எதுவும் பேசவில்லை. மேடம்…என்று ஆரம்பித்தான்…

ரகு… திருமணம் ஆகாத பெண்ணை மேடம் என்று அழைக்கக் கூடாது. மிஸ் என்றுதான் அழைக்க வேண்டும்.

நீங்கள் என்னை மிஸ் என்று அழைக்க வேண்டிய அவசியம் இல்லை பெயர் சொல்லியே அழைக்கலாம் என்றாள்.

ஆனாலும்… அவனுக்குள் நிலைகொண்டிருந்த பயம்… அவள் முகத்தை நேராக பார்த்து பேசக்கூட அனுமதிக்கவில்லை.

சரி… மிஸ்.. இருக்கட்டும்… இந்த பைலில் உங்களுக்கான பதில் இருக்கிறது. ஒரு பேப்பரில் எழுதி வைத்திருக்கிறேன்.

நீங்கள், இதை எடுத்துச் சென்று, உங்கள் இருக்கையில் அமர்ந்து படித்துக் கொள்ளுங்கள் என்று பட படவென பேசி முடித்துக் கொண்டான் ரகு.

ரகுவின் பதில்… அவளுடைய டென்ஷனை குறைத்தது போல உணர்ந்தாள். உற்சாகமும் பிறந்தது அவளுக்கு.

அந்த பைலை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டு தமது இருக்கைக்கு பறந்தாள்.

அக்கம் பக்கத்தில் யாராவது தம்மை பார்க்கிறார்களா? என்று கண்களை துழாவ விட்டாள்.

யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு… மிகுந்த ஆவலுடன் அந்த பைலில் உள்ள பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினாள்.

படிக்க தொடங்கிய உடன், அவளுடைய கண்களில் இருந்த வழியத் தொடங்கிய கண்ணீர், அன்று முழுவதும்… நிற்கவே இல்லை.

எப்போதும் கலகலப்பாக இருக்கும் உஷாவுக்கு என்ன ஆச்சு? ஏன் அவளுடைய கண்கள் கலங்கி கொண்டே இருக்கிறது என்று, சக ஊழியர்கள் அனைவரும் கேட்க ஆரம்பித்தனர்.

ஒன்றும் இல்லை… என்னவென்று தெரியவில்லை… காலையில் இருந்தே கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கிறது… என்று சொல்லி சமாளித்தாள்.

அப்படி.. அவன் அந்த காகிதத்தில் என்னதான் எழுதி இருந்தான்?

“மலரும் புன்னகையால் மானுடத்தை மயக்கியது போதும்…

விசாலப் பார்வையால் விழுங்கி விடாதே என்னை… நான்

வேலை தேடி வெகுதூரம் வந்தவன்”

இதுவும் இவன் எழுதிய கவிதை அல்ல…

அறிவை விரிவு செய்.. அகண்டமாக்கு…என்ற பாரதிதாசன் கவிதையில் இருந்து, எடுக்கப்பட்ட வரிகளில், கொஞ்சம் மாற்றம் செய்து, தன்னுடைய நிலையை, அந்த கடிதத்தில் விளக்கி இருந்தான் ரகு.

இது நடந்து எத்தனையோ வருடங்கள் கடந்து விட்டன.

உஷா எழுதிய காதல் கவிதையை விட, உயர்ந்த கவிதை உலகிலேயே இல்லை என்று, இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கிறது அவன் இதயம்.

அவளும், அவளுக்காக இவன் எழுதிய கவிதையும்… எங்கோ?… எப்படியோ?… யார் அறிவார்?