கோவிந்தன் எந்த கட்சி? சிறுகதை…

–ராஜேந்திரன்

ஐந்து நிமிட வாசிப்பு….

வாழும் வரை ஐந்து பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத கோவிந்தனுடைய சாவு, இந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும் என்று, அவன் மனைவி கூட எதிர்பார்க்கவில்லை.

இறப்பு சிறப்பாக அமையும் அளவுக்கு அவன் ஒன்றும் கொடை வள்ளல் கோவிந்தன் அல்ல. குடிகார கோவிந்தன்தான்.

நாட்டு நலனுக்காகவோ, மக்கள் நலனுக்காகவோ போராடி உயிர் துறக்கவில்லை. பொழுதுக்கும் சாராயம் குடித்தே, குடல் பாதிக்கப்பட்டுதான் அவன் இறந்து போனான்.

ஆனாலும், அவன் இறந்த நேரம் என்பது, உள்ளாட்சி தேர்தல் நடக்கும் நேரம் என்பதால், அவனுடைய சாவு சிறப்பான சாவாக மாறிப்போனது.

பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடக்க இன்னும் ஐந்து நாட்களே இருந்தன.

தலைவர் பதவிக்கு போட்டி போடும் ஏழெட்டு பேர், கவுன்சிலர் பதவிக்கு போட்டி போடும் பதினைந்து இருபது பேர் என, தாரை தப்பட்டை முழங்க, தெரு கோடியில் இருந்தே ஊர்வலமாக வந்து, கிடத்தப்பட்டிருக்கும் கோவிந்தன் உடலுக்கு ஆள் உயர மாலை எல்லாம் போட்டு இறுதி மரியாதை செலுத்திக் கொண்டு இருந்தனர்.

அதில் சிலர், கோவிந்தன் மனைவி, கோகிலத்தை தனியே அழைத்து, ஆயிரம் ஐநூறு என்று பணமும் கொடுக்க தொடங்கினர்.

சாதாரண நாளில் ஒரு ஐம்பது நூறு கேட்டால் கூட, திரும்பி பார்க்காமல் போகும் ஆட்கள்தான், தேர்தலில் போட்டி இடுவதால், ஆயிரம் ஐநூறு என்று கோகிலத்திற்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

கோகிலத்தை பொறுத்தவரை, கணவன் கோவிந்தன் பேருக்குதான் கணவன். அதைத்தவிர அவனால், குடும்பத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது.

இவள் தினமும் நடவு நடவும், களை பறிக்கவும் போய் தான் இதுவரை வயிற்றை கழுவி வந்து இருக்கிறாள்.

கோவிந்தன் சம்பாதிப்பது எல்லாம், அவன் குடிப்பதற்கே போதாது. அதனால், அவனை ஒரு மனிதனாக கூட மதிக்காத அவள், ஏதோ அது பாட்டுக்க ஒரு மூலையில் கிடக்கட்டும் என்று பேசாமல் இருந்து விடுவாள்.

இன்னும் சொல்லப்போனால், நீண்ட நாட்களுக்கு படுத்த படுக்கையாக இருந்து, அவஸ்தை பட்டு இறப்பதற்கு முன், பெரிய அளவு துன்பம் இல்லாமல், கோவிந்தன் இறந்து போனது கூட அவளுக்கு ஒரு வகையில் சந்தோஷம் தான்.

ஆயிரம் இருந்தாலும், அவளும் பெண்தானே.. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற நிலையில் அவள், கோவிந்தன் உடலுக்கு அருகில் துக்கம் தாளாமல் அழுதுகொண்டுதான் இருந்தாள்.

பங்காளி, மாமன் மச்சான் ஊருக்கெல்லாம் தகவல் சொல்லப்பட்டு, அவர்கள் எல்லோரும் வாய்க்கரிசி, கோடி போடுதல் போன்ற சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் செய்து முடித்து விட்டார்கள்.

ஆற்றங்கரை சுடுகாட்டில் புதைப்பதற்கான குழியும் வெட்டி முடிக்கப்பட்டு விட்டது. பாடை கட்டுவதும் முடிந்து விட்டது.

அடுத்து, இறந்த கோவிந்தனை குளிப்பாட்டி, பாடையில் வைத்து சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டியதுதான் பாக்கி.

இறந்தவன் பிணத்தை குளிப்பாட்டும் சடங்கும் முடிந்து விட்டது.

அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆளும் கட்சி ஆதரவுடன், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் பரமசிவம், ஒரு குண்டை தூக்கி போட்டான்.

இறந்த கோவிந்தன் எங்கள் கட்சியை சேர்ந்தவர் என்பதால், அவருக்காக கட்டப்பட்ட பாடையில் எங்கள் கட்சி கொடியை கட்ட வேண்டும் என்றான் அவன்.

எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியம், அதைக்கேட்டு சும்மா இருப்பானா என்ன? அதெல்லாம் முடியாது… கோவிந்தன் எங்கள் கட்சியை சேர்ந்தவர்… அதனால் பாடையில் எங்கள் கட்சி கொடியைத்தான் பறக்கவிட வேண்டும் என்றான்.

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது…. அவன் பாட்டன் காலத்தில் இருந்து எங்கள் கட்சிதான்… அதனால், எங்கள் கட்சி கொடியைத்தான் பாடையில் கட்டவேண்டும் என்றான் தேசிய கட்சியை சேர்ந்த தியாகராஜன்.

அட சும்மா இருங்கப்பா… எங்கள் கட்சியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டவர் கோவிந்தன். அதனால் எங்கள் கட்சி கொடியைத்தான் பாடையில் கட்ட வேண்டும் என்றான் பொதுவுடைமை கட்சியை சேர்ந்த பொன்னுசாமி.

என்ன ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள், நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்க முடியாது… அவர் பாடை மீது எங்கள் கொடிதான் இருக்க வேண்டும் என்றார் ஜாதிக்கட்சியை சேர்ந்த ஜனார்த்தனன்.

இப்படியே, விவசாய சங்கம், தொழிலாளர் சங்கம் அப்படி இப்படி என்று ஊரில் உள்ள அனைத்து கட்சிக்காரர்களும், ஜாதி சங்கத்தை சேர்ந்தவர்களும், மற்ற அமைப்பை சேர்ந்தவர்களும் ஒருவருக்குள் ஒருவர் வாக்கு வாதம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

அந்த வாக்குவாதம், கைகலப்பாக மாறும் சூழ்நிலையை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

பெண்கள் வைக்கும் ஒப்பாரியையும் தாண்டி, கட்சி கொடி கட்டும் பிரச்சினையின் சண்டை ஊரே கேட்க ஆரம்பித்தது.

அதுவரை பேசாமல் அமைதியாக வெற்றிலைப்பாக்கை குதப்பிக்கொண்டிருந்த பழைய நாட்டாமை, பஞ்சவர்ணம் எழுந்தார்.

எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? என்று கரகரத்த குரலில் சத்தம் போட்டு கத்தினார்.

அப்போதுதான், அங்கு அமைதி திரும்பியது.

பிறகு பேச ஆரம்பித்தார்…

எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. செத்துப்போனவன எந்த பிரச்சினையும் இல்லாம நல்ல மாதிரியா அடக்கம் பண்ணினால்தான் நமக்கும் நல்லது. அவங்க குடும்பத்துக்கும் நல்லது.

ஏற்கனவே சாராயம் குடிச்சி குடல் பாதிக்கப்பட்டு கோவிந்தன் செத்து போயிருக்கான். நீங்கள் இப்படியே சண்டை போட்டுக்கொண்டே இருந்தால், பிணம் எடுக்க தாமதம் ஆகி, அவன் உடம்பு இங்கேயே நார ஆமர்பித்து விடும்.

அதனால், எல்லோரும் அமைதியா இருங்கள் என்று முதலில் அனைவரின் வாயையும் அடைத்தார்.

பின்னர், உள்ளே அழுது கொண்டிருந்த, இறந்து போன கோவிந்தன் மனைவி கோகிலத்தை… வெளியில் வருமாறு அழைத்தார்.

அவளும்.. சொல்லுங்கள் ஐயா.. என்றபடி வெளியே வந்தாள்.

நீ கோவிந்தனோட பொண்டாட்டிதானே… அவன் எந்த கட்சியில் இருந்தான் என்று உனக்கு தெரியும் அல்லவா? அதனால், நீ சொல்லு. கோவிந்தன் எந்த கட்சியில் இருந்தான் என்று கேட்டார்.

அவர் எந்த கட்சியில் இருந்தாருன்னு எனக்கு எந்த விவரமும் தெரியாதுங்க ஐயா… ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கட்சிகாரங்க வீட்டுக்கு வருவாங்க… இவருக்கு சாராயம் குடிக்க ஐம்பது, நூறு கொடுப்பாங்க. அவங்க கூட எங்கேயாவது போயிட்டு வருவாரு.

கொஞ்சநாள் கழித்து வேறு சில கட்சிக்காரங்க வருவாரு, அவங்க ஏதாவது சாராயம் குடிக்க பணம் கொடுத்தால், அவர்கள் கூப்பிடும் இடத்துக்கு போவாரு.

அதனால், அந்த மனுஷன் எந்த கட்சியில இருந்தாருன்னு எனக்கு தெரியாது ஐயா என்று பவ்யமாக சொன்னால் கோகிலம்.

இது என்ன பெரிய குழப்பமாக இருக்கிறதே… என்று தலையை பிய்த்துக்கொண்ட நாட்டமைக்கு அடுத்து ஒரு யோசனை தோன்றியது.

சரிப்பா… கோவிந்தன் எங்க கட்சிய சேர்ந்தவன்னு ஆளாளுக்கு சொல்கிறீர்கள். அவன் பொண்டாட்டி கோகிலத்துக்கோ, தன்னோட புருஷன் எந்த கட்சியை சேர்ந்தவன் என்று சொல்ல தெரியவில்லை.

அதனால், அவன் பொண்டாட்டி கோகிலத்திடமே இந்த பொறுப்பை ஒப்படைத்து விடுவோம். அது எதுவாக இருந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் நாட்டாமை.

ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்த கட்சிக்காரர்கள்.. சரி, அந்த பொறுப்பு என்ன என்று நீங்களே சொல்லுங்கள் என்றனர்.

சொல்கிறேன் என்ற நாட்டாமை, கோகிலம்… ஒன்னோட புருஷன் ஏதாவது உறுப்பினர் அட்டை வச்சி இருக்கானா? என்று கேட்டார்.

அவளோ, அதெல்லாம் தெரியவில்லை ஐயா, ஏதோ பழைய பேப்பரு, கலர் கலரா படம் போட்ட சின்ன சின்ன அட்டை எல்லாம் வைத்து இருப்பார். அதை அவ்வப்போது எடுத்து எடுத்து பார்ப்பார்.

அதெல்லாம், ஒரு அடுக்கு பானையில் போட்டு வைத்து இருக்கிறேன். வேண்டும் என்றால் பாருங்கள் என்றாள்.

சரி அதை போய் எடுத்துக்கொண்டு வா.. என்றார் நாட்டாமை.

அவளும் வீட்டுக்குள் சென்று ஒரு பழைய மண் பானையை எடுத்து வந்து, அதை எல்லோர் எதிரிலும் தலை கீழாக கவிழ்த்தாள்.

அதில் இருந்து பழைய துண்டு சீட்டுக்களும், பல்வேறு கட்சிகள் மற்றும், சங்கங்களின் உறுப்பினர் அட்டைகளும் கீழே விழுந்தன.

அதைப்பார்த்ததும்… யாருக்கும் எதுவுமே சொல்லத் தோன்றவில்லை.

நாட்டாமை… கீழே குனிந்து அந்த அட்டைகளை எல்லாம் தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டார்.

பின்னர், அதில் இருந்து ஒவ்வொரு உறுப்பினர் அட்டையாக எடுத்து, ஆளும் கட்சி, எதிர் கட்சி, தேசிய கட்சி, பொதுவுடைமை கட்சி, ஜாதி கட்சி, ஜாதி சங்கம், விவசாய சங்கம், தொழிலாளர் சங்கம் என கோவிந்தன் வைத்திருந்த அனைத்து கட்சி உறுப்பினர் அட்டைகளையும் எடுத்து அந்தந்த கட்சிக்காரர்களிடம் கொடுத்தார்.

கொடுக்கும்போதே, நாட்டாமைக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

செத்து போன கோவிந்தன் ரொம்ப நல்லவன்டா… பாரு, யாருக்கும் குறை வைக்காமல் எல்லா கட்சியிலும் உறுப்பினர் அட்டை வாங்கி வைத்திருக்கிறான் என்றார்.

அந்த அட்டைகளை வாங்கி பார்த்த அனைத்து கட்சிக்காரர்களும், சங்கத்தை சேர்ந்தவர்களும் வாய் அடைத்து போய்விட்டனர்.

அவர்களால் எதுவும் பேசவே முடியவில்லை.

மீண்டும் நாட்டாமை பேச ஆரம்பித்தார்.

சண்டை போட்ட எல்லோரும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்… கோவிந்தன்தான் எல்லோருக்கும் பொதுவானவனாக ஆகிவிட்டானே… அதனால், ஆளும் கட்சி, எதிர் கட்சி, தேசிய கட்சி, பொதுவுடைமை கட்சி, ஜாதி கட்சி என்று எந்த வித்தியாசமும் பார்க்காதீர்கள்.

உங்கள் எல்லோருடைய கொடிகளையும் அவனை தூக்கி செல்லும் பாடையில் கட்டுங்கள், செத்த பின்னால், கட்சி, சாதி, அப்படி இப்படின்னு எதுவுமே இல்லை என்று, தமது சாவின் மூலம் ஒரு தத்துவத்தை சொல்லிவிட்டு போயிருக்கிறான் கோவிந்தன் என்று முடித்தார்.

அதன்பிறகு, கட்சிக்காரர்கள், சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று யாரும், தங்கள் கொடியை பாடையில் கட்ட வேண்டும் என்று  வற்புறுத்தவில்லை.

ஆனாலும், ஆளும் கட்சி, எதிர்கட்சி, தேசிய கட்சி, பொதுவுடைமை கட்சி என்று, எந்தவித வேறுபாடும் இல்லாமல் பாடையில் அனைத்து கொடிகளும் பறக்கவிடப்பட்டு, கோவிந்தன் உடல் ஊர்வலமாக சென்று அடக்கம் செய்யப்பட்டது.