கொரோனா கற்றுத்தரும் படிப்பினை!

இயற்கை, தனக்கான பாதையை தானே வகுத்துக்கொள்ளும், வரலாறு தனக்கான தலைமையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்று பலர் அடிக்கடி சொல்வார்கள்.

கொரோனா ஊரடங்கிலும் கிட்டத்தட்ட, இயற்கை நமக்கு சில பாடங்களை கற்றுத் தந்துள்ளது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

முதல் கட்டமாக, நதிகளில் கொட்டப்படும் கழிவுகளும், கலக்கும் தொழிற்சாலை கழிவுகளும் இந்த ஊரடங்கு காரணமாக தடுக்கப்பட்டுள்ளது.

அதனால், நாட்டின் முக்கிய நதிகள் பலவற்றின் நீரும் தூய்மை அடைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த ஊரடங்கு காலத்தில் கங்கை நீரை ஆய்வு செய்த நீர் ஆய்வாளர்கள், நதி நீர் ஓரளவு தூய்மை அடைந்துள்ளது என்று கூறி உள்ளனர்.

ஆனால், கங்கை நீர் குடிக்கும் அளவுக்கு இன்னும் தூய்மை அடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம் காற்று மாசும் தாமாக குறைந்துள்ளது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை, மற்றும் இதர மாசுபாடுகள் குறைந்துள்ளன.

இதனால், பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து இமயமலையை புகைப்படம் எடுக்கும் அளவுக்கு, அது தெளிவாக தெரிகிறது.

உத்திரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, அதை மக்கள் படம் பிடித்துள்ளனர்.

பல ஆயிரம் கோடிகள் செலவு செய்தும், பலனளிக்காத கங்கையை தூய்மை படுத்தும் முயற்சி, இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக ஓரளவு பலன் அளித்துள்ளது.

இதேபோல், பல முக்கிய நகரங்களில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ளது.

இதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமானவை என்பதை இயற்கை நமக்கு உணர்த்தி உள்ளது.

கொரோனா போல மாதக்கணக்கில் மக்கள், முடங்கும் சூழல் உருவானால், அவர்களின் அடிப்படை தேவைக்கு சிக்கல் இல்லாத வகையில், ஒரு சேமிப்பு இருக்க வேண்டும். அரசும் ஒரு நல நிதியை ஒதுக்க வேண்டும் என்பதும் இதன் மூலம் நாம் கற்க வேண்டிய முதல் பாடம்.

ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்த போது, நோய் தடுப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக ஒதுக்கி வைத்திருந்த நிதியை, கேலி செய்த டிரம்ப், தற்போது, அதற்கான விலையை கொடுத்து வருகிறார்.

நாட்டில், பெட்ரோலிய பொருட்களின் விலையை, சீராக வைத்திருக்க, ஆரம்ப காலத்தில் இருந்து மத்திய அரசு, ஒதுக்கி வைத்திருந்த எண்ணெய் தொகுப்பு நிதியை (Oil Pool Account), பொது நிதியில் சேர்த்த சில பொருளாதார மேதைகளால், இன்று நாம் அனைவரும் அதற்கான விலையை கொடுத்து வருகிறோம்.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு, நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்றால், இன்னும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றே பொருள்.

அதற்கான விலையை நாம் மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதை நம்மால் தாங்க முடியுமா? என்பதே இப்போதைய கேள்வி?